`கமலம்' என பெயர் மாற்றப்படும் டிராகன் பழம்: விவசாயிகளுக்கு பயன் உண்டா?

டிராகன் பழம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஜித் காத்வி
    • பதவி, பிபிசி குஜராத்தி சேவைக்காக

குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி டிராகன் பழத்திற்கு `கமலம்` எனப் பெயர் மாற்றப்படும் என அறிவித்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுகுறித்து சமூக ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டது.

இருப்பினும் இந்த பெயர் மாற்றத்தை, குஜராத்தின் கச், செளராஷ்டிரா மற்றும் தெற்கு பகுதியில் இந்த பழத்தைப் பயிரிடும் விவசாயிகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

குஜராத் அரசு இந்த பழம் தாமரை போல காட்சியளிப்பதால் இதை "கமலம்" என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறது. கமலம் என்பது சமஸ்கிருத வார்த்தை. இதற்கு தாமரை என்று பொருள்.

பாஜகவின் தேர்தல் சின்னம் தாமரை. குஜராத் காந்திநகரில் உள்ள பாஜகவின் தலைமையகத்தின் பெயரும் `கமலம்`.

இருப்பினும் இதற்கு பின்பு எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.

விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியில் உள்ள விசாவதார் நகருக்கு அருகில் உள்ள ஜம்புடா கிராமத்தை சேர்ந்த ஜிவ்ராஜ்பாய் வாகாசியா டிராகன் பழத்தை பயிரிட்டுள்ளார்.

ஜிவ்ராஜ்பாய்க்கு 68 வயது. இவர் 5.5 லட்சம் முதலீட்டில் டிராகன் பழத்தை பயிரிட்டுள்ளார். 560 செடிகளை நட்டுள்ளார். மூன்று வருடங்களில் அதற்கான பலன் கிடைக்கும் என அவர் நம்புகிறார். டிராகன் பழம் ஒரு நல்ல லாபம் தரும் பயிர் என்கிறார் ஜிவ்ராஜ்பாய். டிராகன் பழங்களின் விலை சந்தையில் குறைவாக இருந்தாலும், ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம் வரை விவசாயியால் சம்பாதிக்க முடியும் என்கிறார்.

மேலும் இதற்கு அதிக வேலையாட்கள் தேவையில்லை. பூச்சி மருந்தின் விலையும் குறைவு.

இந்த பழத்தில் முதலீடு செய்ய நல்ல பணம் இருந்து, நிறைவான நீர் இருந்தால் இந்த டிராகன் பழம் லாபகரமான பயிர் என்கிறார் ஜிவ்ராஜ்பாய்.

புதிய பெயர்

இதற்கு 'கமலம்' என்று பெயர் மாற்றினாலும், அரசாங்கம் மானியம் வழங்கி ஆதரவளித்தால் டிராகன் பழ விவசாயம் மேலும் லாபகரமானதாக இருக்கும் என்கிறார் ஜிப்ராஜ்பாய்.

குஜராத்தின் நவ்சாரி மாவட்டம் பனாஜ் கிராமத்தைச் சேர்ந்த தர்மேஷ், டிராகன் பழத்தை 12 வருடங்களாகப் பயிரிட்டு வருகிறார். பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய அவர், விவசாயத்தில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பல சோதனை முயற்சிகளை தான் செய்து பார்த்து வருவதாகத் தெரிவித்தார்.

"எனது தந்தை தாய்லாந்திலிருந்து டிராகன் செடிகளை வாங்கிவந்தார். முதலில் சோதனை முயற்சியாக சில செடிகள் வைத்தோம். அதன்பின் மேற்கு வங்கம் மற்றும் புனேவிலிருந்து டிராகன் பழச் செடிகளை வாங்கி ஆராய்ந்தோம். தற்போது சிவப்பு நிற டிராகன் பழங்களை ஒரு ஏக்கரில் பயிரிட்டு வருகிறோம்," என்று தெரிவித்தார் தர்மேஷ்.

டிராகன் பழம்

பட மூலாதாரம், Getty Images

இந்த பழத்தின் விலை அதிகமாக இருப்பதால் கிராமப் புறங்களில் இதன் தேவை குறைவாக இருக்கிறது என்கிறார் தர்மேஷ்.

டெங்கு காலத்தில் ரத்த தட்டுக்களின் (Platelet) எண்ணிக்கை குறையும். இந்த பழம் அதை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. எனவே டெங்கு சமயத்தில் இதன் விலை ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்த பழத்தின் பெயரை கமலம் என மாற்றுவதால் அது விவசாயிகளுக்கு பலனளிக்கும் என தர்மேஷ் நம்புகிறார்.

குஜராத்தின் கச் பகுதியில்தான் இந்த பழம் அதிகம் பயிரிடப்படுகிறது. பாரத்பாய் ராஜ்வானி இரு ஏக்கரில் 900 டிராகன் பழக் கன்றுகளை நட்டுள்ளார். 42 வயதான இவர் அகமதாபாத்தில் கணினி கடை வைத்திருந்தார். 2014ஆம் ஆண்டு விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக டிராகன் பழங்களை பயிரிட தொடங்கினார்.

டிராகன் பழம் எந்த மண்ணிலும் வளரக்கூடியது. மேலும் இதன் அறுவடைக்கு முன்னரே புக்கிங் செய்யப்படுவதால் இதன் விலை குறித்து விவசாயிகள் கவலை கொள்ள தேவையில்லை.

டிராகன் பழத்தின் பெயரை மாற்றியதில் பார்த்பாய்க்கு மகிழ்ச்சியில்லை. அவரின் பார்வையில் இது ஒரு அரசியல் நடவடிக்கை. அரசோ, விவசாயப் பல்கலைக்கழகங்களோ அல்லது அதிகாரிகளோ விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்பாக ஏதும் செய்யவில்லை என்கிறார். மேலும் விவசாயம் வளர்ச்சி பெறத் தொழில்முனைவோரும், புதிய முயற்சிகளும் தேவை என்கிறார்.

டிராகன் பழம் என்றால் என்ன?

இந்த பழம் தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. லத்தின் அமெரிக்க டிராகன் பழங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் வியட்நாமில் பயிரிடப்படுகின்றன. கடந்த சில வருடங்களில் இந்திய விவசாயிகள் குறிப்பாக கச்சில் உள்ள விவசாயிகள் டிராகன் பழ விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகிலேயே வியட்நாமில்தான் அதிகப்படியான பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிரஞ்சு குடியேறிகளால் 19ஆம் நூற்றாண்டில் வியட்நாமிற்கு டிராகன் பழங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. வியட்நாமில் இதை `தான் லாங்` என்று அழைப்பர். அதன்பொருள் `டிராகனின் கண்`.

பிற மாநிலங்களில் டிராகன் பழ விவசாயம்

டிராகன் பழங்கள் இந்தியாவில் 1990களில்தான் பயிரிட தொடங்கப்பட்டன. இந்த பழங்கள் தமிழ்நாடு, குஜராத், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன.

இது எந்த மண்ணிலும் விளையும் என்பதால் இந்த பழத்தை விவசாயிகள் பயிரிட விரும்புகின்றனர். மேலும் எந்த மாதிரியான பருவநிலையிலும் இது வளரும். அதிக தண்ணீர் தேவையில்லை. அறுவடைக்கு முன்பே பயிர்கள் விற்கப்பட்டுவிடும்.

இந்த டிராகன் பழங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் வரும். அதில் சிவப்பு வகை பழத்திற்கு அதிக தேவை உண்டு. இது சீனா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் விளைவிக்கப்படுகின்றன.

டிராகன் பழம்

பட மூலாதாரம், Getty Images

பல காலமாக டிராகன் பழம் என்பது இந்தியப் பெயர் என்று கருதப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மன் கி பாத் நிகழ்ச்சியில் கச் பகுதியில் டிராகன் பழத்தை பயிரிட்டுள்ள விவசாயிகளைப் பாராட்டிப் பேசினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

வறண்ட பாலைவன பகுதியாக கருதப்படும் கச் பகுதியில் தோட்டக்கலை குறித்து விவசாயிகள் பல சோதனைகளை மேற்கொண்டு தற்போது இந்த டிராகன் பழத்தை பயிரிட்டு வருகின்றனர்.

அரசால் பெயர் மாற்றம் செய்ய முடியுமா?

பலர் இந்த பழம் ஒரு சீன பழம் என்று நினைக்கின்றனர். எனவே குஜாராத் அரசாங்கம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அதன் பெயரை கமலம் என்று மாற்ற கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை தற்போது மத்திய விவசாயத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திபடி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இம்மாதிரியான பெயர் மாற்றத்துக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். ஒரு பயிருக்கு பெயரிடுவது, அதை வெளியிடுவது, அதன் தயாரிப்பு ஆகியவை மத்திய விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறையால் மட்டுமே முடிவு செய்யப்படும்.

மேலும் இந்த பரிந்துரை, மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தாவரவியல் ஆய்வு (Botanical Survey of India) மற்றும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும்.

இந்த பழத்தின் பெயர் மாற்றப்படுவதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழலாம். எனவேதான் இந்திய தாவரவியல் ஆய்வு (Botanical Survey of India) மற்றும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் அனுமதி தேவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :