கிரிக்கெட் வீரர் நடராஜன்: "எல்லாம் ஏதோ கனவு போல இருக்கிறது"

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் 2020-ல் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்த தமிழகத்தை சேர்ந்த நடராஜன், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு வலைப் பந்துவீச்சாளராக தேர்வானார்.
அதே சுற்றுப் பயணத்தின் டி20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என எல்லா ரக போட்டிகளிலும் களமிறங்கிய முதல் இந்திய வீரரானதுடன், இந்தியா டி20 தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் பிரமாண்ட வரவேற்புடன் சொந்த ஊர் திரும்பிய நடராஜன் சற்று நேரத்திற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என நினைப்பதாக நடராஜன் அப்போது கூறினார். "என்னை திடீரென ஒரு நாள் போட்டியில் களமிறக்குவதாகக் கூறினார்கள். அதை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே எனக்கு மிகப் பெரிய அழுத்தமாக இருந்தது. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என தோன்றியது. அதாவது, அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தர வேண்டும், என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. மற்றபடி விக்கெட்டுகளை வீழ்த்தியது எல்லாம் ஏதோ கனவு போல இருக்கிறது" என்று கூறினார் நடராஜன்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி வீரர்களின் உடைமாற்று அறையில் சக வீரர்களின் செயல்பாடு குறித்துக் கேட்டதற்கு, "அனைத்து வீரர்களும் மிக அருமையாக நடந்து கொண்டார்கள். பயிற்சியாளர்கள் உட்பட அனைவரும் அவ்வளவு உற்சாகப்படுத்தினார்கள். புதிதாக வந்த ஒருவரைப் போல நடத்தவில்லை. மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் அளித்த ஊக்கமே நான் சிறப்பாகச் செயல்படக் காரணம்" என தன் சக வீரர்களைப் புகழ்ந்தார் நடராஜன்.
வார்னருக்கு எதிராகவே ஆஸ்திரேலியாவில் களமிறங்கியது குறித்த கேள்விக்கு, "டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எனக்கு கேப்டனாக இருந்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில், ஆஸ்திரேயாவில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே, 'உனக்கு மகள் பிறந்திருப்பது தான் உன் அதிர்ஷ்டத்துக்கு எல்லாம் காரணம்' என நட்பாகப் பேசினார். அவர் எப்போதும் போல சாதாரணமாக இருக்கிறார்" என்று கூறினார்.
எதிர்கால திட்டங்கள் மற்றும் கிரிக்கெட்டில் படைக்க விரும்பும் சாதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுவே என் வாழ்வில் நான் செய்த மிகப் பெரிய சாதனை தான். இதற்கு மேல் நான் என்ன சாதிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?" என பதில் கேள்வி கேட்டார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை பொறுத்தவரை, டி20 மற்றும் டெஸ்ட் கோப்பையை இந்திய அணி வென்றவுடன் அதை நடராஜனின் கையில் அணி வீரர்கள் கொடுத்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த நிலையில், இதுகுறித்து பேசிய நடராஜன், "வாய்ப்பே இல்லை, கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. விராட் கோலி போன்ற மிகப் பெரிய வீரர் என்னிடம் கோப்பையைக் கொடுத்தது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சின்னப்பம்பட்டியில் இருந்து வந்த நடராஜனைப் போல ஆக வேண்டும் என நினைபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? என்று கேட்டதற்கு, "கடின உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. உழைப்புக்கான பலன் கிடைத்தே தீரும்" என்றார்.
தனக்கு பேராதரவு கொடுத்த தமிழக மக்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறிய நடராஜன், தனக்கு விளையாட்டில் மொழி ஒரு தடையாக இல்லை என்று தெரிவித்தார்.
மகள் பிறந்த போது ஆஸ்திரேலியாவில் போட்டியில் இருந்தது, "கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. ஆனால் நான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன் என்பது என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மிகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது" என்றார்.
"தமிழகத்துக்கு விளையாட வேண்டும் என்பது தான் என் நோக்கமாக இருந்தது. மற்றவைகள் எல்லாம் அப்படியே படிப்படியாக நடந்துவிட்டது. என் ஆதர்ச நாயகன் சச்சின் டெண்டுல்கர்" என்று சேலத்தில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடராஜன் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












