பாக்ஸிங் க்ளவுஸ் வாங்க காசில்லை; முதல் போட்டியிலேயே தங்கம் - மஞ்சு ராணியின் கதை

மஞ்சு

உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதுதான் உங்கள் இலக்கு என்றால், வெற்றி உங்கள் பாதையை தானாக தேடி வரும்.

மஞ்சு ராணி தனது குழந்தை பருவத்தில் ஒரு விளையாட்டை தேர்வு செய்து அதில் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என விரும்பினார். ஆனால் அவர் எந்த விளையாட்டு என்பதை தேர்வு செய்யவில்லை.

ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள, அவரின் சொந்த கிராமமான ரிதல் போகட் கிராமத்தில் உள்ள பெண்கள் கபடி விளையாடினர். மஞ்சு ராணியும் அதில் இணைந்தார்.

கபடியில் சாதிப்பதற்கான திறனும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக அவர் உணர்ந்தார். சிறிது நாட்களுக்கு கபடி விளையாடி அதில் சிறப்பாகவும் செயல்பட்டார். ஆனால் எதிர்காலம் அவருக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தது.

கனவு பிறந்தது

மஞ்சு

ராணி கபடியில் சிறந்து விளங்குவதை பார்த்த அவரின் பயிற்சியாளர் சாஹாப் சிங் நர்வால், மஞ்சு ராணி தனிநபர் விளையாட்டுப் போட்டிகளுக்கான திறன் பெற்றுள்ளார் என்று உணர்ந்தார்.

அதன்பின் லண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வெண்கலப் பதக்கம் வெல்வதை பார்த்த மஞ்சு ராணிக்கும் குத்துச் சண்டை மீது ஆர்வம் பிறந்தது.

மேர் கோமால் ஏற்பட்ட உத்வேகம் மற்றும் தனது கபடி பயிற்சியாளரின் ஆலோசனையால் குத்துச் சண்டை போட்டியை தேர்வு செய்தார் மஞ்சு ராணி.

இந்த முடிவை எடுக்க எளிதானதாக இருந்தாலும், அதற்கான வசதிகளை பெறுவது அவ்வளவு எளிதானதாக இல்லை.

2010ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்துவந்த மஞ்சு ராணியின் தந்தை உயிரிழந்தார். ராணி மற்றும் உடன் பிறந்த ஆறு பேர் அவரின் தந்தையின் ஓய்வூதிய பணத்தை கொண்டுதான் வளர்ந்தார்கள்.

எனவே குத்துச் சண்டையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மஞ்சு ராணிக்கு அதற்கான பயிற்சியும், உணவும் வழங்குவதற்கு அவரின் தாய் சிரமப்பட்டார்.

அந்த நாட்களில் அவருக்கு க்ளவுஸ் வாங்குவதுகூட சிரமமாகத்தான் இருந்தது.

அவரின் கபடி பயிற்சியாளர் மனதளவில் மட்டும் அவருக்கு பயிற்சி அளிக்கவில்லை. அவரின் முதல் குத்துச் சண்டை பயிற்சியாளராகவும் செயல்பட்டார். மஞ்சு ராணி தனது கிராமத்தில் தனது குத்துச் சண்டை பயிற்சியை தொடங்கினார்.

சிறப்பான தொடக்கம்

மஞ்சு ராணி

பண ரீதியாக ராணிக்கு அவரின் குடும்பத்தால் உதவி செய்ய கடினமாக இருந்தாலும், அவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளித்தனர். எனவே வசதிகள் குறைவாக இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவுடன் 2019ஆம் அண்டு தனது முதல் போட்டியான சீனியர் அளவிலான தேசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ராணியின் முதல் போட்டியே சிறப்பாக இருந்தது. அதே உத்வேகத்துடன் 2019ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற AIBA உலக பெண்கள் குத்துச் சண்டையில் கலந்து கொண்டார். ஆனால் இந்த முறை ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதே ஆண்டு பல்கேரியாவில் நடைபெற்ற ஸ்ட்ராசா நினைவு குத்துச் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தொடக்க போட்டிகளிலேயே சிறப்பாக செயல்பட்ட மஞ்சு ராணி தற்போது 2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே இலக்காக கொண்டுள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை விளையாட்டுத்துறையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால் குடும்பத்தின் முழு ஆதரவு தேவை என்கிறார் ராணி. அவரின் சொந்த அனுபவத்திலிருந்து பேசும் ராணி, ஒரு பெண் தான் விரும்பியதை செய்ய எந்த குடும்பமும் தடை சொல்லக்கூடாது என்கிறார்.

பிபிசிக்கு மஞ்சு ராணி அனுப்பிய மின்னஞ்சலுக்கு கிடைத்த பதில்களை கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: