சசிகலா டிஸ்சார்ஜ்: பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கிளம்பினார் - அதிமுக கொடியால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவுற்று அதிலிருந்து விடுதலை ஆனாலும், தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று (ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
பிப்ரவரி 6ஆம் தேதி வரை சசிகலா பெங்களூருவில்தான் தங்கியிருப்பார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய சசிகலாவின் காரில் அதிமுகவின் கொடி இருந்தது. இது தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார், "சசிகலா அதிமுகவில் எந்த ஒரு பதவியிலும் இல்லை. அவர் அதிமுகவின் கட்சிக் கொடியைப் பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க 50-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு இன்று காலை முதலே கூடி இருந்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி 2017-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கைதான சசிசகலா கர்நாடகத்திலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து, அபராதத் தொகையான 10 கோடி ரூபாயையும் செலுத்தியப் பின்னர், கடந்த ஜனவரி 27, 2021 புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன், சசிகலாவின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் சசிகலா.

அ.தி.மு.க-வின் பொதுச் செயலளாளராக பதவியில் இருந்த சசிகலா, கடந்த ஆகஸ்ட் 2017-ல் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டி.டி.வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தனியே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவுக்கு பிரேமலதா ஆதரவு
சசிகலாவை பார்த்ததில்லை என்ற போதும், ஒரு பெண்ணாக அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ''சசிகலாவை நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் அவருக்கு எனக்கு ஆதரவு உள்ளது. நான் ஒரு பெண் என்பதால் அவருக்கு என் ஆதரவு இருக்கிறது. ஆனால், சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது. இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது,'' என்றார் பிரேமலதா.
ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு வரலாறு
1991-1996: ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்தக் காலகட்டத்தில் தான் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாக அறிவிக்கிறார். விரைவிலேயே ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
ஜூன் 14, 1996: அப்போது ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்கிறார்.
செப்டம்பர் 18, 1996: விசாரணை அதிகாரி நல்லமநாயுடு முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தார்.
டிசம்பர் 7-12: ஜெயலலிதாவின் வீட்டிலும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது.
ஜூன் 4, 1997: தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மே 14, 2001: மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா. ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் 21 தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
நவம்பர் 2002: தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது செல்லாது என்று ஜெயலலிதா தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னர் விசாரணை துவங்குகிறது. தனி நீதிமன்ற நீதிபதியாக ஆர். ராஜமாணிக்கம் செயல்படுகின்றார்.
மார்ச் 2, 2002: மீண்டும் முதலமைச்சராகிறார் ஜெயலலிதா.
நவம்பர் 18, 2003: வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம்
செப்டம்பர் 10, 2004: வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. பப்புசாரே நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
2005: பப்புசாரே ஒய்வுபெற்று மல்லிகார்ஜுனைய்யா நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
2005-2010: இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல்செய்யப்படுகின்றன.
2010 ஜனவரி 22: சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையைத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
டிசம்பர் 2010 - பிப்ரவரி 2011: சாட்சிகளை அரசுத் தரப்பு மறுவிசாரணை செய்கிறது.
மே 16, 2011: ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகிறார்.
அக்டோபர் 20, 21, நவம்பர் 22, 23 2011: பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.
செப்டம்பர் 30, 2012: நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அக்டோபர் 2013: ஜான் மைக்கல் குன்ஹா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
ஆகஸ்ட் 28, 2014: வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்தன என்றும் தீர்ப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வழங்கப்படும் என்றும் நீதிபதி மைக்கல் குன்ஹா அறிவிக்கிறார்.
செப்டம்பர் 16: பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்படுகின்றன. தீர்ப்பு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவிக்கிறார்.
செப்டம்பர் 27, 2014: 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஜெயலலிதா, சசிகலா குற்றவாளி என அறிவிப்பு.
மே 11, 2015: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
டிசம்பர் 5, 2016: முதல்வர் ஜெயலலிதலா மறைவு
பிப்ரவரி 14, 2017: மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












