கொரோனா வைரஸ் தடுப்பூசி: கோவிட்-19 பாதிப்புக்கு எதிராக ஒரே முறை தடுப்பூசி போடுவது எந்த அளவுக்குப் பயன் தரும்?

ஊசி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜரியா கோர்வெட்
    • பதவி, பிபிசி

கோவிட்-19 நோய்க்கு எதிராக எந்த ஒரு தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டாலும், அதை அப்போதே மறந்துவிடுங்கள் என்பது நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது. தடுப்பூசியை முதலில் போட்டுக் கொண்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்கெனவே வெளிப்படத் தொடங்கியுள்ளன.

டான்காஸ்டர் ராயல் இன்பர்மரி மருத்துவமனையில் 85 வயதான கோலின் ஹார்ஸ்மன் கடந்த டிசம்பர் இறுதியில் சேர்க்கப்பட்டபோது, அவருக்கு சிறுநீரகத்தில் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் மருத்துவமனையில் நான்கில் ஒருவருக்கு தொற்றிக் கொண்ட கோவிட் பாதிப்புதான் அவருக்கு ஏற்பட்டுள்ளது என பின்னர் தெரிய வந்தது. அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டார். சில தினங்கள் கழித்து அவர் இறந்துவிட்டார்.

முதலில் பார்ப்பவர்களுக்கு, ஹார்ஸ்மனின் சூழ்நிலை சாதாரணமானதாகத் தோன்றும். ஆனால் சமீபத்தில் அவருடைய மகன் உள்ளூர் பத்திரிகைக்கு அளித்த தகவலின்படி, மூன்று வாரங்களுக்கு முன்பு ஃபைசர் - பயோஎன்டெக் என்ற கோவிட்-19 தடுப்பூசியை முதலில் போட்டுக் கொண்டவர்களில் ஒருவராக ஹார்ஸ்மன் இருந்துள்ளார். மரணத்துக்கு இரண்டு நாள் முன்னதாக அவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதாக இருந்தது.

சொல்லப்போனால், பெரும்பாலான தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட 'பூஸ்டர்' (இரண்டாவது) டோஸ்கள் தேவைப்படுகின்றன.

சிறுகுழந்தைகளின் உயிரைப் பலிவாங்கும் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, மணல்வாரி போன்ற நோய்களுக்கு எதிரான எம்.எம்.ஆர். தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், அதைப் போட்டுக் கொண்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு அந்த மூன்று வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைத்துவிடுவதில்லை.

இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. இரண்டாவது முறை போட்டுக் கொண்டவர்களைக் காட்டிலும், ஒரு முறை மட்டும் போட்டுக் கொண்டவர்களுக்கு தட்டம்மை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

எம்.எம்.ஆர். தடுப்புசி அட்டவணையை பூர்த்தி செய்யாதவர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நோய்த் தொற்று பரவல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

மருந்து

பட மூலாதாரம், Alamy

''நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டில் உங்கள் உடலை முழுக்க புதிய வகையான செயல்பாட்டுக்குத் தயார் செய்வதற்காக, இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நோய் தொற்று சிகிச்சைத் துறை பேராசிரியர் டேன்னி ஆல்ட்மன் தெரிவித்தார்.

பூஸ்டர் அளவுகள் எப்படி செயல்படுகின்றன?

ஒரு தடுப்பு மருந்தை நோய் எதிர்ப்பு மண்டலம் முதல்முறையாக எதிர்கொள்ளும்போது, இரண்டு முக்கிய வகையான வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. நோய் எதிர்ப்புக் கிருமிகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தக் கூடிய பிளாஸ்மா-பி செல்கள் என்பவை முதலாவது வகை.

துரதிருஷ்டவசமாக, இதன் ஆயுள் குறைவானது. எனவே, உங்கள் உடல் முழுக்க நோய் எதிர்ப்புக் கிருமிகள் நிரம்பி வழிந்தாலும், இரண்டாவது முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால், இது வெகுவேகமாகக் குறைந்துவிடும் ஆபத்து உள்ளது.

அடுத்தது டி-செல்கள். குறிப்பிட்ட நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து, கொல்வதற்காகவே உருவாக்கப்படுபவை டி-செல்கள். இதில் சிலவகையான டி-செல்கள், நோய்க் கிருமி எதிர்ப்படாத வரையில் பல தசாப்த காலத்துக்கு வாழக் கூடியவை.

அதாவது தடுப்பூசிகளின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல், சில நேரங்களில் ஆயுள் முழுக்க நீடித்திருக்கும் என்பது அர்த்தம். ஆனால், இரண்டாவது ஊசி போடும் வரையில் இதுமாதிரி நிறைய செல்கள் உற்பத்தி ஆகாது என்பது முக்கியமான விஷயம்.

நோய்க் கிருமிகளுக்கு எதிராக, நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் இரண்டாவது நிலை செயல்பாட்டை தூண்டுவதாக பூஸ்டர் டோஸ் ஊசி இருக்கிறது. ''எனவே, நீங்கள் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டால், நினைவு டி செல்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதிக தரமான நோய் எதிர்ப்புக் கிருமிகள் உற்பத்தியாகும்'' என்று ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

''பி-செல்கள் முதிர்ச்சி அடைதல்'' செயல்பாட்டையும் இரண்டாவது டோஸ் மருந்து தூண்டிவிடுகிறது. அதனால் குறிப்பிட்ட நோய்க் கிருமிகளுக்கு எதிரான பிணைப்புகளை உருவாக்கும் முதிர்ச்சி அடையாத செல்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

ரத்த அணுக்கள், உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜையில் இருக்கும் போதே இது நடைபெறுகிறது. பிறகு அவை மண்ணீரலுக்குச் சென்று வளர்ச்சியை நிறைவு செய்கின்றன. அதாவது, அதன் பிறகு பி செல்கள் எண்ணற்ற அளவுக்கு வளர்கின்றன என்பதுடன் மட்டுமின்றி, அவை உற்பத்தி செய்யும் நோய் எதிர்ப்புக் கிருமிகள் நல்ல செயல்பாடு கொண்டவையாக இருக்கும் என்பது இதன் அர்த்தமாகும்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், நினைவு வைத்துக் கொள்ளும் பி-செல்கள் தீவிரமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். இப்போதைய பெருந்தொற்று சூழலில், தீவிர கோவிட் பாதிப்பு ஏற்படாமல் சிலருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஏற்கெனவே இவை முக்கிய பங்கு ஆற்றியுள்ளதாகக் கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் டிசம்பர் 2019 முதல் உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது என்றாலும், சாதாரண சளியை ஏற்படுத்தும் வகையிலான மற்ற கொரோனா வைரஸ் தடயங்களை ``பார்த்திருப்பதற்கான'' சான்றுகள் உள்ளன. அதனால் கோவிட்-19 பாதிப்பை அறிய முடிகிறது.

எனவே கோவிட்-19 தடுப்பூசி ஒரு முறை மட்டும் போடுவது எந்த அளவுக்குப் பயன் தரும்?

இப்போது ஒப்புதல் அளித்துள்ள கோவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் போடும் காலத்தை 3-4 வாரங்கள் என்பதில் இருந்து 12 வாரங்களுக்கு பிரிட்டன் அரசு தள்ளி வைத்துள்ளது.

ரஷ்ய அரசு ``ஸ்புட்னிக் - லைட்'' என்ற பெயரிலான ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை ஒரு முறை மட்டும் போட்டால் போதுமா என்ற மருத்துவப் பரிசோதனையில் இறங்கியுள்ளது. அது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இதுகுறித்து இதுவரை நமக்கு தெரிந்தவை இவைதான்.

ஃபைசர் - பயோஎன்டெக்

2020 டிசம்பரில் வெளியான ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி குறித்த தகவல்களின்படி, இந்தத் தடுப்பு மருந்து சுமார் 52 சதவீதம் பேருக்கு, ஒரே முறையில் செம்மையான பயன் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையாக 36,523 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இறுதிக்கட்ட பரிசோதனையாக இவர்களுக்கு 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு முழு டோஸ் மருந்துகள் செலுத்தப்பட்டன அல்லது - தடுப்பூசி என்று நம்பவைக்கப்பட்டு (ப்ளேசிபோ) மன நம்பிக்கை முறையிலான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிகிச்சை நடைமுறை தொடங்கிய போது அவர்களுக்குத் தொற்று பாதிப்பு கிடையாது. அதில், உண்மையான தடுப்பூசி செலுத்தப்படாத, ப்ளேசிபோ அணுகுமுறை பிரிவில் 82 பேருக்கும், தடுப்பூசி போட்ட பிரிவில் 39 பேருக்கும் கோவிட்-19 அறிகுறிகள் தோன்றின.

இருந்தபோதிலும், இந்த ஆரம்பகட்ட பாதுகாப்பு சில முக்கியமான நிபந்தனைகளுடன் வந்திருக்கிறது. முதலாவதாக, குறைந்தது 12 நாட்கள் கழித்துதான் பாதுகாப்பு கிடைக்கும். அதுவரையில், இரண்டு குழுக்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

இரண்டாவதாக, இரண்டு டோஸ்கள் போடுவதைக் காட்டிலும், ஒரு டோஸ் மட்டும் போடுவது குறைவான பயனை மட்டுமே தரும். இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்ட ஒரு வாரம் கழித்து 95 சதவீதம் பேருக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

ஆனால், இணையத்தில் வேறொரு தகவலும் பரவி வருகிறது. சில மருத்துவர்களே கூட நோயாளிகளிடம் இதைத் தெரிவிக்கிறார்கள். அதாவது முதலாவது டோஸ் ஊசியே 90 சதவீதம் செயல்திறன் மிக்கதாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில்தான் இந்தப் பிரச்சனை சிக்கலாக மாறுகிறது.

மாறுபட்ட முறையில் தடுப்பு மருந்தின் செயல்திறனை மதிப்பீடு செய்ய முடிவு செய்த பிரிட்டன் தடுப்பூசி கமிட்டியிடம் இருந்துதான் இரண்டாவது கருத்து வந்திருக்கிறது. தொற்று பாதிப்பு எண்ணிக்கைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும், முதலாவது டோஸ் மருந்து செயல்படத் தொடங்குவதற்கு முந்தைய நாட்கள் உள்ளிட்ட தகவல்களையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக 15 முதல் 21 ஆம் நாள் வரையிலான தகவல்கள் மட்டுமே இதில் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த முறையில், தடுப்பூசியின் செயல்திறன் 89 சதவீத அளவுக்கு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி செயல்படத் தொடங்குவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படும் தொற்றுகள் இதில் சேர்க்கப்படுவதில்லை என்பதே இதற்குக் காரணம். இரண்டாவது டோஸ் தரப்பட்ட முதல் ஏழு நாட்களை (21-28 நாட்கள்) கணக்கில் கொண்டால், செயல்திறன் அளவு 92 சதவீதமாக இருந்தது. அங்கு இன்னும் பரவலாக இரண்டாவது டோஸ் ஊசி போடப்படவில்லை.

சுவர்

பட மூலாதாரம், Getty Images

இருந்தபோதிலும், கணக்கீடுகள் சர்ச்சைக்கு உரியவையாக உள்ளன.

``14 நாட்களுக்கு முன்னதாக இயல்பாகவே சில பயன்கள் கிடைக்கும் என்பதைக் காட்டும் வகையில் நியூ இங்கிலாந்து சஞ்சிகையில் வெளியான ஃபைசர் தடுப்பூசி பற்றிய கட்டுரையின் தகவல்களை மக்கள் அதிகம் கவனிக்கின்றனர்'' என்கிறார் ஆல்ட்மன்.

``மன நம்பிக்கை (மருந்து கொடுத்ததாக நம்ப வைத்தல்) அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் தடுப்பூசி போட்ட குழுவினரின் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. மன நம்பிக்கை அடிப்படையிலான குழுவில் பாதிப்புகள் தொடங்குகின்றன. ஆனால் நோய் எதிர்ப்பாற்றல் திறனை நேரடியாக மதிப்பீடு செய்வதற்கு ஏற்ற முறை இது கிடையாது. எவ்வளவு பேருக்குப் பாதிப்பு இருக்கிறது என்பது மட்டும் இதில் கவனிக்கப்படுகிறது'' என்று ஆல்ட்மன் கூறுகிறார்.

தடுப்பூசி போட்ட 14 நாட்கள் வரை யாரும் பாதுகாப்பு பெற்றதாகக் கருதிவிடக் கூடாது என்று அவர் கூறுகிறார்.

ஃபைசர் நிறுவனம் முதலில் கூறியதைப் போல, ஒரு முறை மட்டும் தடுப்பூசி போடுவது போதுமானதாக இருக்காது என்று, இஸ்ரேலில் கோவிட்-19 பாதிப்புக்கு எதிரான செயல்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வியாளர் பேராசிரியர் நச்மன் ஆஷ் கூறியுள்ளார். இருந்தபோதிலும், அவருடைய கருத்துகளுக்கு பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஃபைசர் ஆய்வுடன் கிலாலிட் என்ற சுகாதார அமைப்பு நடத்திய ஆராய்ச்சியை ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது டோஸ் ஊசி போடுவதால், வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தது என்று இஸ்ரேல் ஆய்வில் தெரிய வந்தது.

அதாவது நோய் அறிகுறி தென்படுவதை தங்கள் மருந்து 52 சதவீதம் குறைக்கும் என்று ஃபைசர் நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது 33 சதவீதம் பாதிப்பைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது. அவர்கள் இரண்டு மாறுபட்ட விஷயங்களைக் கவனித்தார்கள்.

கூடுதலாக, கிலாலிட் தகவல் தொகுப்பு வெளியில் பகிர்ந்து, ஆய்வுக்கு உட்படுத்தப் படவில்லை. தடுப்பூசி போட்டு இரண்டு வார காலத்துக்கான தாக்கம் பற்றி மட்டுமே அதில் ஆய்வு செய்யப்பட்டது.

நோய் எதிர்ப்பு மருந்தின் செயல் திறனை மதிப்பிட 3 வார காலம் கவனிக்க வேண்டும் என்ற ஃபைசர் ஆய்வுக்கு மாறாக, இதில் பின்பற்றப்பட்ட இரண்டு வார கால ஆய்வு என்பது போதுமானதல்ல. மேலும் இது முறைப்படியான மருத்துவ ஆய்வகப் பரிசோதனை வகையைச் சேர்ந்தது கிடையாது. கவனிப்பு வகையிலான ஆய்வாக மட்டுமே இருந்தது. அதாவது, இதன் முடிவுகளை கவனத்துடன்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் அர்த்தம்.

ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி

ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்தைப் பொருத்த வரை, அது சற்று மாறுபட்டது. குறைந்தது ஒரு முழுமையான டோஸ் மருந்து செலுத்திய பிறகு 64.1 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது என்று கடந்த ஜனவரியில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையும் முழு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் இது 70.4 சதவீதமாக அதிகரிக்கும். அல்லது அரிதாக முதலாவது முறை முழு டோஸ், இரண்டாவது முறை பாதி டோஸ் போட்டுக் கொண்டால் கூட 90 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் வெளியிடப்படாத இந்தத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், முதலாவது தடுப்பூசி போட்டு 3 வாரங்கள் முதல் 9-12 வாரங்கள் வரையில், 70 சதவீதம் அளவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்று தடுப்பூசி கமிட்டி மதிப்பீடு செய்துள்ளது.

மருந்து

பட மூலாதாரம், Getty Images

முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையில் இரண்டு இடைவெளிகள் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் அடங்கியுள்ளது.

ஆறு வாரங்கள் மற்றும் 12 வாரங்கள் என்ற இடைவெளியாக அது இருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால், பூஸ்டர் டோஸ் போடுவதற்கு முன்னதாக, முதல் டோஸ் மருந்து குறைந்தது சில மாதங்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று ஓரளவுக்கு நிச்சயமாகக் கூற முடியும்.

மாடெர்னா

எப்.டி.ஏ.வுக்கு மாடெர்னா நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு தங்கள் மருந்து 80.2 சதவீத பாதுகாப்பு அளிக்கும் என்றும், இரண்டாவது டோஸ் தந்த பிறகு 95.6 சதவீத பாதுகாப்பு தரும் (18 முதல் 65 வயதுக்கு உள்பட்ட பிரிவினரில் - 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 86.4 சதவீதம்) என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஃபைசர் தடுப்பூசியைப் பொருத்த வரையில், மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வில் பங்கேற்றுள்ளவர்களுக்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது அல்லது நிர்ணயித்த காலக்கட்டத்திற்குள் அவர்களுக்கு மன நம்பிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இப்போது 28 நாட்களில், ஒரு முறை மட்டும் போடும் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பாற்றல் தொடர்ந்து அதிகரிக்குமா அல்லது இந்த கட்டத்திற்குப் பிறகு குறையுமா என்பது தெரியவில்லை.

சினோவாக்

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள நிறுவனமான சினோவாக் நிறுவனம் கொரோனாவாக் என்ற தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. பல நாடுகளில் தனிப்பட்ட முறையில் இது மருத்துவப் பரிசோதனைகளை செய்திருக்கிறது. எல்லாமே வெவ்வேறு மாதிரியான முடிவுகளை அளித்துள்ளன.

துருக்கி ஆராய்ச்சியாளர்கள் தகவலின்படி இந்த மருந்து 91.25 சதவீதம் பாதுகாப்பு தருவதாகக் கூறப்படுகிறது. 65.3 சதவீதம் பாதுகாப்பு தருவதாக இந்தோனீசிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் 50.4 சதவீதம் பேருக்கு இந்த மருந்து பாதுகாப்பு தருகிறது என்று பிரேசிலில் சா பாலோவில் உள்ள புட்டன்டன் இன்ஸ்டிட்டியூட் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு, ஒரு முறை மட்டும் தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து யாரும் தகவல்களை வெளியிடவில்லை. 14 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் போட்டு மேற்கொண்ட ஆய்வு பற்றிய தகவல்களாக இவை உள்ளன.

சில சந்தேகங்களுடன் இந்த முடிவுகளை நிபுணர்கள் பார்க்கிறார்கள். ஏனெனில் ஆய்வு செய்யப்பட்டு சஞ்சிகைகளில் வெளியிடுவதற்குப் பதிலாக, இவை செய்திக் குறிப்புகளாக வெளியானவையாக உள்ளன.

பரிசோதனை நடைமுறைகள், சேகரிக்கப்பட்ட தகவல்கள் பற்றி கூடுதல் தகவல்கள் இல்லாமல், இந்த முடிவுகள் எந்த அளவுக்குச் சரியானவையாக இருக்கும் என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியாது.

சினோபார்ம்

மொத்தத்தில், ஐந்து சீன தடுப்பு மருந்துகள் பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சியில் உள்ளன.

ஷாங்காய் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான சினோபார்ம் என்ற நிறுவனம் "BBIBP-CorV", என்ற மருந்தை தயாரித்துள்ளது. இரண்டு டோஸ்கள் போட்டால் இது 79 சதவீதம் செயல்திறன் மிக்கதாக உள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்குள் அந்த மருந்து சுமார் ஒரு மில்லியன் பேருக்கு அளிக்கப்பட்டு விட்டது. சர்வதேச அமைப்புகளால் இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் இந்தப் பரிசோதனை குறித்த இதர தகவல்கள் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டால், இது எந்த அளவுக்குப் பாதுகாப்பு தரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சீனாவுக்கு வெளியில், உலகம் முழுக்க இந்த தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், செஷல்ஸ், ஐக்கிய அமீரகம் நாடுகளில் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறனை சமீபத்தில் முதல்முறையாக ஐக்கிய அமீரகம் மதிப்பீடு செய்தது. இந்த மருந்து 86 சதவீத பாதுகாப்பு தருவதாக அந்த அரசு கூறியுள்ளது.

ஸ்புட்னிக் - 5

உலகின் முதலாவது செயற்கைக்கோளின் நினைவாக ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் 1957 அக்டோபரில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ``ஸ்புட்னிக் 1'' செயற்கைக்கோள், 3 மாதங்கள் கழித்து அதன் பேட்டரிகளில் மின்சாரம் காலியான பிறகு எரிந்து போனது.

அதன் பெயரிலான மருந்து மாஸ்கோவில் உள்ள காமேலயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மற்ற மருந்துகளைப் போல இதுவும் இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகிறது. இரண்டு டோஸ்கள் தந்தால் 91.4 சதவீத செயல்திறன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு டோஸ் மட்டும் போட்டால் எந்த அளவுக்குப் பயன் தருகிறது என்பதற்கான, வெளியிடப்பட்ட தகவல் எதுவும் இப்போது கிடையாது.

முதல் டோஸ் போட்ட பிறகு பழக்கவழக்கத்தை நீங்கள் மாற்ற முடியுமா?

``நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது மாதிரியேதான் செயல்படுவேன். எந்த வேறுபாட்டையும் நான் ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன்'' என்று ஆல்ட்மன் கூறினார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், சந்தேகத்துக்கு இடமின்றி எப்படி இருக்க வேண்டும் என்று சர்ரே பல்கலைக்கழகத்தில் நோய்த் தடுப்புத் துறை பேராசிரியராக இருக்கும் தேவபோரா டன்-வால்ட்டர்ஸ் கூறியுள்ளார்.

``அதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிடவில்லை என்பது முதலாவது விஷயம். தடுப்பூசி போட்டுக் கொண்டால், உங்களுக்குத் தொற்று வராது என்றோ, உங்களிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவாது என்பதற்கோ ஆதாரம் எதுவும் கிடையாது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு அறிகுறிகள் வராமல் தடுக்கிறதா என்பதைப் பார்த்து மட்டும் தடுப்பு மருந்துகளின் செயல் திறனை மதிப்பிட்டிருக்கிறார்களே தவிர, வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்கிறதா என ஆய்வு செய்யவில்லை'' என்கிறார் அவர். ``தொற்று இருந்து, அறிகுறி தோன்றாமல் இருக்கலாம் என்பது நமக்குத் தெரியும்'' என்று அவர் விளக்குகிறார். இப்போதுள்ள தடுப்பூசிகளை இரண்டு டோஸ் போட்டுக் கொண்டாலும், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்கப்படும் என்பதற்கும் இன்னும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்தப் பேராசிரியை தெரிவிக்கிறார்.

இரண்டாவது டோஸ் போடாமல் தவிர்க்கலாமா?

``ஒரு முறை மட்டும் தடுப்பூசி போடுவதால் போதிய நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும் என்று கருதமுடியாது என்று மருத்துவ ஆய்வக நிலை பரிசோதனைக்கு முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் அவர்கள் இரண்டு டோஸ்களும் போடச் சொல்கிறார்கள்'' என்று டன் வால்ட்டர்ஸ் கூறுகிறார்.

இரண்டாவது டோஸ் ஊசியைப் போட்டுக் கொள்ளாமல் தவிர்ப்பது ``பெரிய தவறாகிவிடும்'' என்று ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆல்பர்ட் பௌர்லா கடந்த டிசம்பர் மாதம் கூறியுள்ளார். இரண்டாவது டோஸ் போடுவது இரு மடங்கு பாதுகாப்பைத் தரும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பு மருந்துகளில் முற்றிலும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பதால், ஒரு டோஸ் மட்டும் போட்டால் எவ்வளவு காலத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறுவதை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றல் உருவாக அவகாசம் தேவை

கடைசியாக, நோய் எதிர்ப்பாற்றல் உருவாக கால அவகாசம் தேவைப்படும் என்று டன்-வால்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட்-19 தடுப்பூசிகள் எதுவாக இருந்தாலும், ஒன்று அல்லது இரண்டு டோஸ்கள் போட்டிருந்தாலும், முதல் இரண்டு வாரங்களுக்கு, நீங்கள் ஆரம்பத்தில் இருந்த நிலையில் தான் இருப்பீர்கள்.

``நோய் எதிர்ப்பு மண்டலத்தில், அமைதியாக இருக்கும் எதிர்ப்பாற்றல் பகுதி என ஒன்று உள்ளது. அது உடனடியாக எதிர்வினையாற்றும்'' என்கிறார் டன்-வால்ட்டர்ஸ்.

இது உங்கள் தோல் மற்றும் சில வகை வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் ரசாயன சிக்னல்கள் அடங்கியதாக இருக்கும். ஆனால், தானாகவே இவை நோயைத் தடுத்துவிடாது என்றும், தடுப்பு மருந்துகளால் இவை பாதிக்கப்படாது என்றும் அவர் விளக்குகிறார். ``எனவே தகவமைப்பு செய்து கொள்ளும் வகையிலான நோய் எதிர்ப்பாற்றல் உங்களுக்குத் தேவை. தனிப்பட்ட நபருக்கு ஏற்பதான் அந்தத் தகவமைப்பு வரும் என்பதுதான் அதில் உள்ள பிரச்சனை'' என்கிறார் அவர்.

மேலும் நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க உடலைத் தூண்டுவதில்தான் தடுப்பு மருந்தின் வெற்றி இருக்கிறது. ``அதற்கு அவகாசம் தேவைப்படும்'' என்று டன்-வால்ட்டர்ஸ் தெரிவித்தார்.

உலக அளவில் புதிய தடுப்பு மருந்துகள் விநியோகம் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :