எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்

மதுரை மாவட்டத்தில் உள்ள டி.குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில், மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்துள்ளனர்.
சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதிதான் சென்னையில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நினைவில்லமாக மாற்றப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் 'வேதா நிலையம்' என்ற இல்லம் அதற்கு மறுநாள் திறக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு ஏழு அடி வெண்கல சிலைகள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கட்டியுள்ள இந்த கோயிலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஏழு அடி வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு, மதுரை விமான நிலையத்தில் இருந்து கோயில் அமைந்திருக்கும் இடம் வரை உள்ள சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயில் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக கோ பூசை மற்றும் யாகசாலை பூசை நடத்தப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மலை அணிவிக்கப்பட்டது.

கோயில் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி அதிமுக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் என சபதம் எடுக்கவேண்டும் என அதிமுக தொண்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். ''
"எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். அவர்களின் இன்றும் மக்களின் உள்ளத்தில் வாழும் தெய்வங்களாக இருக்கிறார்கள். ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக பல திட்டங்களை கொண்டுவந்தார்கள். அவர்களின் ஆசியோடு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நாம் உறுதி எடுக்கவேண்டும்,'' என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












