ராஜீவ் காந்தி கொலை வழக்கு - ஏழு பேர் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர்.
இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்று தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Tndipr
தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூன்று, நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில்தான், ஏழு பேர் விடுதலையை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
(தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.)
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2020-21 நிதியாண்டில் 7.7 சதவீதம் வரை சுருங்கலாம் என்று இந்திய பொருளாதார ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.7 சதவீதம் வீழ்ச்சி காணும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) 2020-21 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அடுத்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம், 'V' வடிவத்தில் வளரும் என்றும் 2021-22 நிதியாண்டில் பொருளாதாரம் 11 சதவீத வளர்ச்சி பெறும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கடுமையான சரிவைக் கண்டு உடனடியாகவும், நீடித்தும் மீண்டும் வளர்ச்சி அடைவதைக் குறிக்கும்.
கொரோனா தடுப்பூசி திட்டம், சேவைகள் துறை நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றில் வலுவான மீட்சி இருக்கும் என நம்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2020-21 நிதியாண்டில் விவசாயத் துறை 3.4 சதவீதம் வளர்ச்சியை பெறும் அதே நேரத்தில், தொழில் மற்றும் சேவைகள் துறைகளின் வளர்ச்சி முறையே, 9.6 சதவீதம் மற்றும் 8.8 சதவீதம் சுருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ள சூழலில், 2021-2022ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிப்பு
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே சிறிய வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
எதனால் இந்த வெடிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தெரிய வரவில்லை. சம்பவ இடத்தில் சில கண்ணாடிகள் உடைந்ததாக தெரிகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சருடன் இந்த சம்பவம் தொடர்பாக தாம் பேசியதாகவும் இஸ்ரேல் தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான எந்த முயற்சியும் தவிர்க்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
குடியரசு தின கொண்டாட்டங்களின் முடிவாக கருதப்படும் முப்படைகளின் 'பாசறை திரும்புதல்' நிகழ்ச்சி நடக்கும் விஜய் சவுக் பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தூதரகம் அமைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












