இந்திய பட்ஜெட் 2021: நிர்மலா சீதாராமன் முன் இருக்கும் மாபெரும் பொருளாதார சவால்கள்

பட மூலாதாரம், Pib india
- எழுதியவர், ஜூபைர் அகமது
- பதவி, பிபிசி இந்தியா
இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், 2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 7.7 சதவீத பொருளாதார சரிவுடன், 2020-21ஆம் நிதியாண்டை நாடு நிறைவு செய்யவிருக்கிறது.
பொருளாதாரத்தில் உலகின் ஆறாவது பெரிய நாடான இந்தியா மெல்ல பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது என்றாலும், பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் வராமல் போனால், பொருளாதார வளர்ச்சியை மீண்டும் பழைய பாதைக்குக் கொண்டு வர முடியாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது ``ஒரு பெரிய அரசு நிர்வாகத்துக்கான நேரம்'' என்று, பல ஆண்டுகளாக பட்ஜெட்களை ஆய்வு செய்து வரும் மூத்த பத்திரிகையாளர் பிரியரஞ்சன் தாஸ் கூறியுள்ளார்.
பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல புதிய எண்ணங்கள் பற்றி விவாதிக்கப் படுகின்றன. கொரோனா செஸ் அல்லது மிகைவரி விதிப்பது பற்றி தீவிர ஆலோசனை நடைபெறுவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ``அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு'' அது விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ``தனி நபர்களைவிட கார்ப்பரேட் துறைகள் அதிகமாக இதில் பணம் செலுத்தும்'' என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பிரச்சனைகள் ஏராளம்
இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் எதிர்கொள்வதைப் போன்ற அதிக அளவிலான பிரச்சனைகளை, சுதந்திர இந்தியாவின் எந்த நிதியமைச்சரும் சந்தித்திருக்க முடியாது.
பட்ஜெட் தயாரிக்கும் போது அவர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பிரச்சனைகளை யோசித்துப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே ஒரு கோடி பேருக்கும் மேல் பாதிப்பு ஏற்படுத்தி, 1.5 லட்சம் பேரை பலி வாங்கிய பெருந்தொற்று நோய் இன்னும் முழுமையாக அகலாத நிலையில் இந்த பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தீவிரமான பணிகளுக்கு ஆட்பட்டுள்ள சுகாதாரத் துறையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்; பட்ஜெட் சமர்ப்பிக்கும் நாளில் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்; சீனாவுடன் எல்லைப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.
முன் எப்போதையும்விட மாறுபட்டதாக, இந்த நூற்றாண்டின் சிறப்பான பட்ஜெட்டாக 2021-22 பட்ஜெட் இருக்கப் போகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சொன்னதை செய்யப் போகிறாரா என்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டும்.
ஆனால், நாடு எதிர்நோக்கி இருக்கும் எல்லா பொருளாதார பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கொண்டுவருவதற்கு பட்ஜெட் என்பது மந்திரக்கோல் போன்ற விஷயம் கிடையாது என்ற பொதுவான கருத்து பொருளாதார நிபுணர்களிடம் காணப்படுகிறது.
பெருந்தொற்று சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஒரு பட்ஜெட் போதுமானதாக இருக்காது என்று மும்பையைச் சேர்ந்த சுரிவாலா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அலோக் சுடிவாலா தெரிவித்தார். ``ஆம், சிதைந்து போயிருக்கும் பொருளாதார நிலையை சீர் செய்வதற்கு நீண்ட காலம் ஆகும். நமது நோக்கம் சரியான வகையில் அமைந்தால், இந்த பட்ஜெட்டிலேயே கூட மீட்சிக்கான பாதை உருவாகிவிடும்'' என்று அவர் கூறினார்.
பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மிகைப்படுத்தப் படுகிறது என்று கருதுவதால், இதில் பெரிதாக தமக்கு நம்பிக்கை இல்லை என்று பிரியரஞ்சன் தாஸ் குறிப்பிடுகிறார்.
``பெரிய நம்பிக்கை தரும் விஷயங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தலைப்புச் செய்திகளுக்கான விஷயங்கள் இருக்கும். நூற்றாண்டின் சிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது சாதாரணமான வார்த்தைகளாகத்தான் தோன்றுகின்றன. பொருளாதார சிக்கலை செம்மையாகக் கையாளுதல் மற்றும் இப்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த அரசின் செயல்பாடு இருக்கும் என்று நான் கருதவில்லை'' என்று அவர் கூறுகிறார்.
பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் தரக் கூடிய எண்ணத்தை வெளிப்படுத்தும் அம்சமாக இருக்கும் என்பதால், பட்ஜெட் என்பது அரசின் அரசியல் அறிக்கையாகத்தான் இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் பல பட்ஜெட் அறிவிப்புகள் நிறைவேற்றப்படுவதில்லை என்பது வழக்கமாகிவிட்டது.
பட்ஜெட்டுக்கு முன்னதாக, அனைத்து அறிவிப்புகளையும் உரத்த குரலில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டுதல், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவளித்தல், வேலைவாய்ப்பு உருவாக்குதல், 2020-ல் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எண்ணங்களை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்கு சிரமமானதாக இருக்கும்? வேறு வகையில் சொல்வதாக இருந்தால், இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் என்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?
வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான வேலைவாய்ப்பின்மை
வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும். 2012-ல் வேலைவாய்ப்பில்லாதோர் அளவு 2 சதவீதமாக இருந்தது. இன்றைக்கு 9.1 சதவீதமாக உள்ளது. உலகம் முழுக்கவே இதே நிலை இருக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு பிரச்சனையை எதிர்கொள்ள பல நாடுகள், பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்குத் தீர்வு காண்பது நிதியமைச்சருக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும் என்று, பொருளாதாரம் குறித்து சுதந்திரமாகக் கருத்து கூறும் பிரியரஞ்சன் தாஸ் கூறுகிறார்.
``வேலைவாய்ப்பின்மையை ஒரு பெரிய சவால் என்றே கொள்கை முடிவு எடுப்பவர்கள் உணரவில்லை என்பதுதான் சவாலான அம்சமாக உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அது அதிகமாக இருக்கிறது. கோவிட்-19 முந்தைய சமயத்தில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை பிரச்சனை உச்சநிலையில் இருந்தது. கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலை மேலும் மோசமாகிவிட்டது'' என்று அந்த நிபுணர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பின்மை என்பது பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனை, அது புதிய பிரச்சனை அல்ல என்று மத்திய அரசு கூறுகிறது.
``இவ்வாறு மறுப்பு கருத்து கூறுவதால், அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு முயற்சிக்கப் போவதில்லை. தீவிர வேலைவாய்ப்பின்மைதான் உண்மையான சவால். ஆமாம், அது பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனைதான். ஆனால், கோவிட் தாக்கத்தால் அது தான் நமக்கு மிகப் பெரிய பிரச்சனை என்றாகிவிட்டது'' என்கிறார் பிரிய ரஞ்சன் தாஸ்.
வேலைவாய்ப்பின்மை தரவுகளையே அரசு வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ.), வேலைவாய்ப்பு நிலைமை குறித்து தோராயமான மதிப்பீடுகளை வெளியிட்டு வருகிறது.
அதன் சமீபத்திய அறிக்கையின்படி, கோவிட்-19 பாதிப்புக்கு முந்தைய காலத்தில், மாதச் சம்பளம் பெறும் 86 மில்லியன் பணிகள் இருந்தது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு (2020 ஆகஸ்ட்டில்), அதில் 21 மில்லியன் வேலைகள் காலியாகிவிட்டன.
அமைப்பு சாரா துறைகளில் பெரிய அளவாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் வேலைகளிலும், 12 கோடி வேலைகள் இல்லாமல் போய்விட்டன என்று தொழில் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் பலர் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்குகின்றனர்.
இந்தியாவின் வேலையில்லா பிரச்சனைக்கு, வளர்ச்சி என்ற விஷயம் மட்டுமே தீர்வாக இருக்கும் என்கிறார் பிரியரஞ்சன் தாஸ். ``21வது நூற்றாண்டில் இரட்டை இலக்க அளவில் வளர்ச்சி விகிதத்தை எட்ட வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சி, பெருந்தொற்று பாதிப்பு முன்பு தடம் மாறிவிட்டது. கோவிட் காரணமாக, பாதிப்பு மேலும் அதிகரித்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். நாம் பொருளாதாரப் பின்னடைவில் இருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.
எப்படி மீட்சி கண்டு, நல்ல வேகத்தில் வளர்ச்சி காண்பது?

பட மூலாதாரம், Getty Images
கோவிட் காரணத்தால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள்வது, வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பது ஆகியவை நிதியமைச்சர் எதிர்கொள்ளப் போகும் இரண்டாவது சவாலாக இருக்கும் என்று பிரியரஞ்சன் தாஸ் கூறினார்.
பெருந்தொற்று மற்றும் முடக்கநிலையால் இந்திய ஜிடிபி 4 சதவீத அளவுக்கு பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டது என்று கிரிசில் என்ற ரேட்டிங் ஏஜென்சி கூறியுள்ளது. ஆண்டுக்கு 8.5 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வளர்ச்சி கண்டால்தான், பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நிர்மலா சீதாராமன் கையில் இவ்வளவு பெரிய பணி இருக்கிறது.
பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் எப்படி கொண்டு வரப் போகிறோம் என்பது தான் நிதியமைச்சர் எதிர்கொள்ளும் பிரதான சவாலாக இருக்கும் என்று அலோக் சுடிவாலா கூறுகிறார். ``அப்படி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதற்கு, பெரிய அளவில் ஊக்குவிப்பு தொகுப்புத் திட்டம் உருவாக்கி, தேவையை பெருமளவில் அதிகரிக்கச் செய்ய வேண்டும்'' என்கிறார் அவர்.
இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான செயல்பாடுகளில் நிதி ரீதியாக அரசு தற்காப்பு நிலையை கடைபிடித்து, கவனமாக செயல்பட்டு வருகிறது. நிதி ஒழுங்கு பற்றி அதிகம் கவலைப்படாமல், ஒரு முறை நிதி சிக்கனம் என்ற அணுகுமுறையை அரசு கைவிட்டு, பெரிய அளவில் செலவுகள் செய்ய முன்வர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
``இது அசாதாரணமான காலகட்டம். சர்வதேச ரேட்டிங் ஏஜென்சிகள் பற்றி கவலைப்படக் கூடாது. செலவு செய்ய வேண்டும், அதிகம் செலவு செய்ய வேண்டும். நிதி ஒழுங்கு விதிகள் பற்றி ரேட்டிங் ஏஜென்சிகள் கேள்வி எழுப்பும். ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் அதுபற்றி கவலைப்படக் கூடாது'' என்று நிதி விவகார பத்திரிகையாளர் அஷீஸ் சக்ரரவர்த்தி கூறியுள்ளார்.
``மற்ற ஆண்டுகளில் இருந்து மாறுபட்டதாக இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் எடுத்துக் கொள்ள வேண்டும். 2020ஆம் ஆண்டில் நாம் மிக சிக்கனமாக இருந்தோம். தேவையை அதிகரிக்கச் செய்ய அது உதவிகரமாக இல்லை. பொருட்கள் நுகர்வில் தேக்கம் ஏற்பட்டுள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
``கண்ணை மூடிக் கொண்டு செலவு செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும், சீக்கிரத்தில் செலவுகள் செய்ய வேண்டும், அப்படி செய்தால் பொருட்களின் தேவைகளை நம்மால் அதிகரிக்கச் செய்ய முடியும். நேர்மறை சூழலை உருவாக்க முடியும். நுகர்வை உருவாக்க முடியும். வரக் கூடிய நிதியாண்டில், செலவிடுதல் அம்சம்தான் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய விஷயமாக இருக்கப் போகிறது'' என்று அவர் கூறினார்.
ரூ.20 லட்சம் கோடி செலவிடப்படும் என்று கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். அது ஊக்கப்படுத்தும் திட்டங்களின் தொகுப்பாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பரம ஏழைகளுக்கு ரொக்கமாக வழங்கும் சில திட்டங்களும் இருந்தன.
பொருளாதாரத்தை மீட்பதற்கு நிதியளிக்கும் திட்டம் சரியாக வராது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சில பெரிய பொருளாதார நாடுகளைப் போல, இங்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முறை கூட பண உதவி கிடைக்கவில்லை. ஆனால் மார்க்கெட்டில் அவர்கள் பணம் திரட்ட அரசு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
``வழங்கல் துறைக்கான கவனம் செலுத்தப்பட்டாலும், தேவைகளை உருவாக்குவதற்குப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மிகுந்த விளம்பரத்துடன் அறிவிக்கப்பட்ட பொருளாதார தொகுப்புத் திட்டத்தில், பொருட்களின் தேவையை ஊக்குவிப்பதற்கான அம்சங்கள் இல்லை என்பதை நீங்கள் காணலாம். தேவையும் நுகர்வும் ஊக்கம் தரும் அளவுக்கு இல்லை. பொருட்களின் தேவையை அதிகரிக்கச் செய்ய நிதியமைச்சர் பெரிய அளவுக்கான முயற்சி எடுக்க வேண்டும்'' என்று சக்ரவர்த்தி கூறினார்.
பணமாக அளிக்கும் ஊக்கம் எதுவும், வேலைவாய்ப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்கிறார் தாஸ். ``தொழில் திறனற்ற தினக்கூலி தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 3 மாதங்கள் வேலை உத்தரவாதம் தருவதைப் போல, பணம் அளிக்கும் திட்டங்களும் வேலைவாய்ப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.
அரசு துணிச்சலாக முடிவு எடுக்க வேண்டும், பல வகையான திறன்கள் கொண்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு சரியான தருணம் இது என்றும் அவர் கூறினார்.
``இது துணிச்சலான முடிவாக இருக்கும். சரியானதாக இருக்கும். பணமாகத் தரக் கூடாது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற திட்டம் போல, இதுவும் வேலைவாய்ப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத் தொகை, பயனாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ``பல நிலைகளில் திறன்கள் கொண்டவர்கள், கிராம மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கு வேலை தருவதாக புதிய திட்டம் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 100 நாட்கள் அளவுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைக்க வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தினார்.

நிதியமைச்சருக்கு அரசியல் உறுதி இருந்தால் இதைச் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ``உலகில் மிகப் பெரியதான வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அமல் செய்வதில் இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது. இதனால் 170 மில்லியன் (17 கோடி) மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழான நிலையில் இருந்து கைதூக்கிவிடப் பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய திட்டத்தை விரிவுபடுத்தலாம்'' என்று அவர் கூறினார்.
நிதி ஆதாரம் தடையாக இருக்குமா?
அப்படி இருக்காது என்று தாஸ் கூறுகிறார். ``நிதி ஆதாரங்களை அரசால் உருவாக்க முடியும். கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் மிகக் குறைவாக உள்ள நிலையில், கூடுதல் கலால் தீர்வைகள் மூலம் அரசு எளிதாக ரூ.20 லட்சம் கோடி திரட்டிவிட்டது. அறிவார்ந்த அணுகுமுறை தேவை. கடந்த காலத்தில் நிதியமைச்சர்களுக்கு, நிதி திரட்டுவது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது கிடையாது. ரூ.20 லட்சம் கோடியிலான தற்சார்பு இந்தியா திட்டத்தைப் பார்த்தால், நிதி ஆதாரங்கள் ஒரு பிரச்சனை கிடையாது என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் எண்ணத்தில் உறுதி இருந்தால், உங்களால் செய்ய முடியும்'' என்று தாஸ் கூறினார்.
தடுப்பு மருந்துகள் கிடைக்கும் சூழலில், ஊக்கத் திட்டம் கொண்டு வருவது சரியான தருணமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஃபிக்கி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி கருத்தரங்கில் பேசிய அவர், நமக்கு ஊக்கம் தரும் திட்டம் `தேவையா' என்ற கேள்விக்கு இடம் இல்லை, ஆனால் அதை `எப்போது' கொண்டு வர வேண்டும் என்பதுதான் கேள்வி என அவர் குறிப்பிட்டார். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் சமயம்தான், ஊக்கத் திட்டத்தை அமல் செய்வதற்கு சரியான தருணமாக இருக்கும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. இந்தியாவில் இப்போது தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் ``பெரிய ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவிக்கலாம்'' என்று சக்ரவர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.
சுகாதாரம், வேளாண்மை போன்ற முக்கிய துறைகளை பலப்படுத்துவதுடன், வளர்ச்சி மற்றும் மீட்சி விஷயங்களில் 2021-22 பட்ஜெட் முதன்மையாக கவனம் செலுத்தும். 2020-ல் குறைவான வருவாய் கிடைத்த நிலையில், வருமான வரித் துறையில் எந்த சலுகைகளையும் அரசு அளிக்க வாய்ப்பில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என பல நிபுணர்கள் கோரியுள்ளனர். சுகாதாரத் துறைக்கு தொழில் துறை அந்தஸ்து தர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். பெருந்தொற்று பாதிப்பு சூழலில், மருந்துகள் குறித்த ஆராய்ச்சி, நோய் கண்காணிப்பு ஆகியவற்றில் கூடுதல் செலவுகள் செய்யப்படலாம்.
பணம் எங்கிருந்து வரும்?

பட மூலாதாரம், Getty Images
அதிகம் செலவு செய்ய வேண்டுமானால், அதிக பணம் வேண்டும், அரசுக்குப் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று அலோக் சுடிவாலா கூறுகிறார்.
``கயிற்றின் மேல் நடக்கும் நிலையில் அரசு உள்ளது. பணம் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. வரிகளை உயர்த்தக் கூடாது. செஸ் விதிக்கப்படலாம். ஏனெனில் நமக்கு நிறைய பணம் தேவை'' என்கிறார் அவர். பணப் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிலையில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி திரட்ட நிதியமைச்சர் சிரமப்படுவார் என பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிவார்ந்த அணுகுமுறையில் பணம் திரட்ட முடியும் என்று பிரியரஞ்சன் தாஸ் கூறுகிறார்.
மத்திய அரசு வருவாய் ஈட்ட நான்கு பிரதான ஆதார வளங்களைக் கொண்டிருக்கிறது. 28.5 சதவீத ஜி.எஸ்.டி; கார்ப்பரேட் வரி 28.1 சதவீதம்; தனிநபர் வருமான வரி 26.3 சதவீதம்; கலால் 11 சதவீதம்; சுங்கம் 5.7 சதவீதம்
கடந்த சில மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் சீராக உயர்ந்து வருகிறது. தனிநபர் வருமான வரி வருவாயைப் பெருக்க, இன்னும் பலருக்குப் பொருந்தும் வகையில் அதை விரிவுபடுத்த வேண்டும்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2018-19 ஆம் ஆண்டில் 5.78 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ``1.46 கோடி பேர் மட்டுமே வரி செலுத்தும் வரம்பில் உள்ளனர். சுமார் 1 கோடி பேர் ரூ.5-10 லட்சம் வரையில் தங்கள் வருமானம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 46 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்'' என அந்த அறிக்கை கூறுகிறது.
135 கோடி மக்கள் வாழும் நாட்டில், வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை, கணக்கில் கொள்ள முடியாத அளவுக்குக் குறைவாக இருக்கிறது. கொரோனா செஸ் விதிக்க அரசு முடிவு செய்தால், இந்த குறைந்த அளவு வரி செலுத்துபவர்களுக்கு தான் அது சுமையாக இருக்கும், அது நியாயமற்றதாக இருக்கும்.
பொதுத் துறை பங்குகளை விற்பது மற்றும் தனியார்மயமாக்கல் இலக்கு

பட மூலாதாரம், Getty Images
இருந்தாலும், எல்லாமே அரசுக்கு பின்னடைவான சூழ்நிலை என்று கூறிவிட முடியாது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமும், அவற்றால் நடத்தப்படும் ஏர் இந்தியா போன்ற சில நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலமும், அரசுக்குச் சொந்தமான முதன்மையான சொத்துகளை விற்பதன் மூலமும் நிர்மலா சீதாராமன் பல லட்சம் கோடிகளை திரட்ட முடியும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 2.15 லட்சம் கோடிகள் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்தது. பெருந்தொற்று பாதிப்பால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, அவற்றால் நடத்தப்படும் ஏர் இந்தியா போன்ற சில நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, அரசுக்குச் சொந்தமான முதன்மையான சொத்துகளை விற்பது ஆகிய அறிவிப்புகள் இடம் பெறும்.
``பொதுத் துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பதில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிர கவனம் செலுத்தப்படும்'' என்று நிதியமைச்சக அதிகாரி ஒருவர் சமீபத்தில் பிபிசியிடம் கூறியுள்ளார். பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் மோதி அரசு தொடர்ந்து இலக்கை எட்ட முடியாத நிலை இருப்பதை அலோக் சுடிவாலா குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
அரசுக்குப் பணம் தேவைப்படுவதாலும், ``மார்க்கரெட் தாட்சர் போன்ற பொதுத் துறை பங்கு விற்பனை மற்றும் தனியார் மயமாக்கல் மாடலை'' பின்பற்றுவதில் அரசியல் உறுதி கொண்டிருப்பதாலும், இந்த ஆண்டு அதற்கான இலக்கு எட்டப்படும்.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் இலக்கு எட்டப்படாமல் போனாலும், பெரிய இலக்கை வைத்துக் கொள்வதில் தவறு ஏதும் கிடையாது என்று பிரியரஞ்சன் தாஸ் கூறுகிறார். ``எந்த அரசும் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனையில் இலக்கை எட்டுவதில்லை. ஆனால், உயர்வான இலக்கை வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆதார வளங்களை ஈட்ட அதுவும் ஒரு வழி. ஆனால் அதுதான் மிக முக்கியமான வழி என்று சொல்ல முடியாது'' என்று அவர் கூறினார்.
50-க்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கலாம் என அரசின் நிடி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
செஸ் வசூலிப்பது பிரச்சனையாக இருக்குமா?
அரசுக்கு நிதி திரட்ட உதவும் முயற்சி எதுவாக இருந்தாலும் அதில் ஆட்சேபம் இல்லை என்கிறார் அலோக் சக்ரவர்த்தி. கோவிட் செஸ் விதித்தால், அதைச் செலுத்துவதற்கு ஆதரவு தருவதாக பிரியரஞ்சன் தாஸ் கூறியுள்ளார்.
``கல்விக்கான செஸ் நல்லபடியாக அமைந்தது. நமது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தவும், தடுப்பூசி போடும் முயற்சிக்கு உதவிடவும் கோவிட் செஸ் உதவியாக இருக்கும். சுகாதார ரீதியில் நெருக்கடியான நிலை இருக்கும்போது, அதற்காக கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்காக, சுகாதாரத் துறையில் அரசு செலவு செய்யும் தொகையை அதிகரிக்க ஒரு செஸ் தேவைப்பட்டால், அதைப் பரிசீலிக்கலாம். நான் அதை ஆதரிப்பேன்'' என்று அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












