ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை இந்திய அரசு விற்க முடியாமல் தவிப்பது ஏன்?

ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிதி ராய்
    • பதவி, வணிக செய்தியாளர்

கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

அப்போதிலிருந்து ஏர் இந்தியாவை வாங்க ஒரு நபரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏர் இந்தியாவுக்கு ஏகப்பட்ட கடன்கள் இருக்கின்றன. கடந்த 2018 - 19 நிதி ஆண்டு தரவுகளின்படி இந்நிறுவனத்துக்கு 70,686.6 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.

கடந்த 2007-ம் ஆண்டு ஏர் இந்தியா, உள்நாட்டு அரசு விமான சேவை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் உடன் இணைக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

2018-ம் ஆண்டு மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்க முயற்சித்தது. அப்போது 24 சதவீத பங்குகளை அரசு வைத்துக் கொள்ள விரும்பியதால், யாரும் வாங்க முன் வரவில்லை.

இறுதியாக கடந்த ஜனவரி 2020-ல் ஏர் இந்தியாவில் முழு பங்கையும் விற்க முன் வந்தது அரசு.

இந்த பொதுத்துறை விமான நிறுவனத்தை வாங்க இதுவரை இரண்டு பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒன்று டாடா சன்ஸ், மற்றொன்று ஏர் இந்தியாவின் விமான சேவை நிறுவன ஊழியர்களோடு இணைந்து இன்டரப்ஸ் என்கிற அமெரிக்க முதலீட்டு நிறுவனம்.

இந்த நிதி ஆண்டின் முடிவுக்குள் ஏர் இந்தியாவை வாங்க வேறு ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.

காங்கிரஸ் & பாஜக தலைமையிலான அரசுகள், ஏர் இந்தியாவை விற்பதற்கான விதிகளை தவறாக வரையறுத்துவிட்டன. ஏர் இந்தியாவை விற்பதற்கு அவர்களின் ஆலோசகர்களை அதிகம் நம்பினார்கள், ஆனால் ஏலம் கேட்பவர்கள் கூறுவதைச் செவி கொடுத்துக் கேட்கவே இல்லை.

அதனால்தான் இத்தனை நாட்களாக ஏர் இந்தியாவை விற்க முடியவில்லை" என்கிறார் க்ளப் ஒன் ஏர் என்கிற சார்டர் விமான சேவை வழங்கும் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி (தொழில்நுட்பம்) கர்னல் சஞ்ஜய் ஜுல்கா.

ஏர் இந்தியாவை ஏலம் கேட்டிருப்பவர் யார் என ஜூன் மாதத்துக்குள் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்துக்குள் உரிமை மாற்றம் நடக்கும் என எதிர்பார்ப்பதாக தெற்காசிய விமான ஆலோசனை நிறுவனமான 'சென்டர் ஃபார் ஏஷியா பசிஃபிக் ஏவியேஷன்' முதன்மைச் செயல் அதிகாரி கபில் கவுல் கூறுகிறார்.

"இந்த முறை ஏர் இந்தியாவை விற்க அரசு உறுதியாக இருக்கிறது. அவர்களால் விற்றுவிட முடியும் என நினைக்கிறேன். ஏர் இந்தியாவின் பல கடன்களை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதோடு ஏர் இந்தியாவை அதன் என்டர்பிரைஸ் மதிப்பில் விற்க சம்மதித்திருக்கிறார்கள்" என்கிறார் கபில்.

சொத்துக்களை விற்கும் முயற்சிகள் தோல்வியா?

ஏர் இந்தியா மட்டுமில்லை, மத்திய அரசு விற்க விரும்பும் பெரும்பாலான சொத்துக்களை விற்க முடியாமல் அரசு தடுமாறுகிறது. பெரும்பாலும் அரசின் முயற்சிகள் தோல்வியில் தான் முடிகின்றன.

மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று திரட்ட வேண்டிய பணத்துக்கு நிர்ணயித்த இலக்கை, கடந்த 12 ஆண்டுகளில், இரண்டு ஆண்டுகளில் மட்டுமே எட்டி இருக்கிறது.

ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்த பங்குகளை விற்று திரட்டும் பணத்தை வைத்து, அரசின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான பற்றாக்குறையை குறைக்க விரும்புகிறது.

இப்படி அரசு தமது பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று பணம் திரட்டுவதற்கு ஆங்கிலத்தில் 'டிஸ்இன்வெஸ்ட்மென்ட்' என்று பெயர். தமிழில் இதனை பங்கு விலக்க நடவடிக்கை அல்லது முதலீட்டு விலக்க நடவடிக்கை எனலாம்.

கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் அரசு 1.05 லட்சம் கோடி ரூபாயை டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இலக்காக வைத்தது. ஆனால் 14,700 கோடி ரூபாயை குறைவாகத் திரட்டியது.

"பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் மோசமாக நிர்வகிக்கப்படும். அரசின் தலையீடுகள் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட அரசு நிறுவனத்தை வாங்கி அதை லாபகரமாக மாற்றுவது மிகவும் கடினம் என்று நினைக்கிறார்கள் முதலீட்டாளர்கள்" என பெயர் குறிப்பிட விரும்பாத ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

மார்ச் 31-ம் தேதியோடு முடியும் இந்த நிதி ஆண்டில் அரசு 2.1 லட்சம் கோடி ரூபாயை பங்கு விலக்கம் மூலம் திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இதுவரை 28,298.26 கோடி ரூபாயை மட்டுமே திரட்டியிருக்கிறது.

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை என்னும் அரசுத் துறை வழங்கியிருக்கும் தரவுகளின் படி, ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ், மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ், ஐ.ஆர்.சி.டி.சி ஆகிய நிறுவனங்களில் இருந்துதான் அரசு தன் பங்குகளை விற்றிருக்கிறது.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2020 ஜூலை காலகட்டத்தில், மத்திய அமைச்சரவை 23 பொதுத் துறை நிறுவனங்களை விற்க அனுமதி கொடுத்திருப்பதாகக் கூறினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் பாரத் பம்ப்ஸ் & கம்ப்ரசர், சிமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஃப்ளோரோகார்பன், பாரத் எர்த் மூவர்ஸ், பவன் ஹன்ஸ் போன்ற நிறுவனங்கள் அடக்கம்.

மத்திய அரசு எல்.ஐ.சி பங்கு வெளியீடு மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்குகளை விற்பதன் மூலம் மட்டும் 90,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது.

சாத்தியப்படாத பெரிய இலக்குகள்

மத்திய அரசு பங்கு விலக்க நடவடிக்கை மூலம் திரட்ட நிர்ணயித்திருக்கும் இலக்குகள் மிகப் பெரியது எனவும், இது எதார்த்தத்தில் சாத்தியமில்லாதது என்றும் கூறுகிறார் மூத்த பொருளாதார வல்லுநர் முனைவர் அருண் குமார். அதோடு மந்தநிலையில் இருக்கும் பொருளாதாரமும் பங்கு விலக்க நடவடிக்கைக்கு பெரும் தடையாக இருப்பதாக கூறுகிறார்.

"கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலையால், அரசால் தன் பங்கு விலக்க இலக்குகளை அடைய முடியவில்லை. பொருளாதார மந்த நிலையில், சொத்துக்களை விற்பது மிகவும் சிரமம். காரணம் சொத்துக்களை வாங்க விரும்புபவர்களிடம் போதுமான வருமானம் இருக்காது. அதோடு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை தாறுமாறாக அதிகரிக்கும். இது அரசின் செலவினங்களில் கடுமையான தாக்கங்களை வெளிப்படுத்தும்" என்கிறார் அருண்.

அரசின் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியைத்தான் நிதிப் பற்றாக்குறை என்கிறோம்.

இந்த இடைவெளியை அரசு நிரப்ப முடியும் என நினைக்கிறீர்களா? எனக் கேட்டதற்கு முடியாது என்கிறார் அருண்.

"மத்திய அரசால் கார்ப்பரேட் வரியை உயர்த்த முடியாது. கடந்த ஆண்டில் தான் அதைக் குறைத்தார்கள். 2020-ம் ஆண்டில் பலரும் தங்களின் வேலை வாய்ப்புகளை இழந்திருப்பதால் வருமான வரி வசூலும் கணிசமாக குறைந்திருக்கிறது. இது போக மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரியையும் அதிகரிக்க முடியாது. அப்படி அதிகரிக்க விரும்பினால் ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த விவகாரம் செல்லும் போது பணவீக்கத்தைக் காரணம் காட்டி, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கும்" என்கிறார் அருண் குமார்.

"மத்திய அரசு செலவினங்களைக் குறைக்கும். இது இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலையை தக்க வைக்கும். இதனால், இழந்த சந்தை தேவைகளை திரும்ப பெற முடியாது" எனவும் குறிப்பிடுகிறார் அவர்.

இந்த நிதி ஆண்டுக்குள் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியத்தை அரசு விற்க முடியாது என கேர் தர மதிப்பீட்டு நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார வல்லுநர் மதன் சப்னாவிஸ் கூறுகிறார். அதோடு அருண் குமாரின் வாதங்களையும் ஆமோதிக்கிறார்.

மத்திய அரசால் பட்ஜெட்டுக்கு முன் ஏர் இந்தியாவை விற்க முடியாது. அவ்வளவு ஏன் மார்ச் 2021-க்குள் கூட விற்க முடியாது. ஏர் இந்தியா நஷ்டத்தை ஈட்டும் நிறுவனம் என்பதால் இது ஒரு சிக்கலான பிரச்சனை. ஆனால் பாரத் பெட்ரோலியம் அப்படி இல்லை. அது லாபம் ஈட்டும் நிறுவனம். ஆனால் அதையே அரசால் விற்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் மதன்.

"பங்கு விலக்க இலக்குகள் எதார்த்தத்தில் ஒத்து வருவதாக இல்லை. எப்போதுமே அரசிடம் பங்கு விலக்கம் குறித்து ஒரு உறுதியான திட்டம் இருந்ததில்லை. அரசு தங்களின் பங்கு விலக்க இலக்கை சாத்தியப்படக் கூடிய அளவில் 50,000 - 80,000 கோடி ரூபாயாக குறைக்க வேண்டும்" என்கிறார் மதன் சப்னாவிஸ்.

"எப்படியும் இந்த ஆண்டும் நிதிப் பற்றாக்குறை இலக்குகளைத் தவறவிட்டுவிடுவார்கள். அரசு சந்தையிலிருந்து அதிகம் கடன் வாங்கும். அரசு எதார்த்தத்தில் சாத்தியப் படக்கூடிய தொகையை பங்கு விலக்க இலக்காக வைக்கும் வரை, நாம் நிதிப் பற்றாக்குறை இலக்குகளை தவறவிட்டுக் கொண்டேதான் இருப்போம்" என்கிறார் பொருளாதார வல்லுநர் மதன் சப்னாவிஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :