கேரள விமான விபத்து: கோழிக்கோடில் பலமுறை விமானம் இயக்கிய தமிழ் விமானியின் அனுபவம்

கேரளா விமான விபத்து
    • எழுதியவர், ஐஸ்வர்யா ரவிசங்கர்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏர் இந்தியா விமானம் இரண்டாகப் பிளந்து விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மோசமான வானிலை, டேபிள் டாப் ஓடுபாதையில் தரையிறங்கியது என விபத்துக்கான காரணங்களாக பல விடயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்தின் டேபிள் டாப் ஓடுபாதையில் இருபதுக்கும் மேற்பட்ட முறை எவ்வித பிரச்சனையுமின்றி விமானத்தை தரையிறக்கிய சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கேப்டன் நீரஜ் ராஜகோபாலிடம் பிபிசி தமிழ் பேசியது.

சவாலான பணியாக பார்க்கப்படும் டேபிள் டாப் ஓடுபாதையில் விமானத்தை இயக்குவது பற்றி பேசிய கேப்டன் நீரஜ் ராஜகோபால், ''விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவது ஒவ்வொரு விமானிக்கும் சவாலான பணிதான். விமானிகளை வழி நடத்தும் ஐஎல்எஸ் எனப்படும் விமானத்தை தரையிறக்கும் முறை, ஓடுபாதையில் எங்கள் பணியை சற்று எளிமையாக்குகிறது" என்றார்.

"குறிப்பாக இதுபோன்ற ஓடுபாதைகளில் விமானத்தை இயக்குவதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக வழிமுறைகள் மற்றும் கணக்கீடுகளை நாங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம்'' என்று கூறும் அவர், "மற்ற ஓடுபாதைகளைவிட டேபிள் டாப் வகை ஓடுபாதையில் கடுமையாக விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்" என்கிறார்.

ஏர்பஸ் நிறுவனத்தின் விமானங்களில் கேப்டனாக 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நீரஜ் ராஜகோபால், 11,000 மணி நேரத்துக்கும் மேல் வணிக விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர்.

டேபிள் டாப் ஓடுபாதை ஆபத்தானதா?

கோழிக்கோடு விமான ஓடுபாதை குறித்து அவர் பேசுகையில், ''போதுமான இட வசதியும் நிதி உதவியும் கிடைக்காததால், காரிபூர் விமான நிலையத்தில் இருப்பது போல் மலைப்பாங்கான அல்லது பீடபூமி பகுதிகளில் கட்டப்படும் டேபிள் டாப் ஓடுபாதைகள் இந்தியாவில் அமைக்கப்படுகின்றன. கோழிக்கோடு விமான நிலையம் மலைமீது இருப்பதால் தரையில் அமைந்திருக்கும் மற்ற விமான நிலைய ஓடுபாதைகளின் நீளத்தைவிட குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

பைலட் நீரஜ் ராஜகோபால்

பட மூலாதாரம், Niraj Rajagopal

மேலும் அவர், ''எல்லா விமானிகளும் டேபிள் டாப் ஓடுபாதையில் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பல ஆண்டுகால அனுபவமும் இந்த ஓடுபாதையில் விமானத்தை இயக்க சில ஆண்டுகால பயிற்சியும் பெற்ற மூத்த விமானிகளான கேப்டன்களுக்கு மட்டுமே இந்த பணி வழங்கப்படும்'' என்று விளக்கினார்.

சர்வதேச சிவில் விமான அமைப்பின் (ICAO) விதிகளின்படி ஓடுபாதை பாதுகாப்பு பகுதி (RESA) எனப்படுவது ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் குறைந்தபட்சம் 90 மீட்டராக இருக்க வேண்டும். இந்த அளவுடனேயே கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதை பாதுகாப்பு பகுதி அமைக்கப்பட்டிருந்தாலும், அதிக அகலம் கொண்ட விமானங்கள்( Wide body aircraft) பயணிக்க வேண்டுமென்றால் இந்த எண்ணிக்கை 240 மீட்டராக இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

முன்னதாக, கோழிக்கோடு சம்பவத்தைப் பொறுத்தவரை போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது விபத்து ஏற்பட காரணம் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கேரளாவில் விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் அதிக அகலம் கொண்ட விமானம் இல்லை என்பதால் ஓடுபாதை பாதுகாப்பு பகுதியின் அளவு 240 மீட்டராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

''அவசரநிலை ஏற்பட்டால் மக்கள் உயிரைக் காப்பதே முக்கியம்''

விமானப் பயணத்தைப் பொறுத்தவரை எப்போதெல்லாம் அவசரநிலை ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த கேப்டன் நீரஜ், ''விமானம் என்பது ஒரு இயந்திரம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் அதில் கோளாறு ஏற்படலாம். ஒரு கேப்டனாக அவற்றை கையாள்வது குறித்து நாங்கள் பலகட்ட பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். விமான இறக்கைகளில் பறவை வந்து மோதினால், எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டால், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால், விமான சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டால் இவையெல்லாம் அவசரநிலையாக கருதப்படுகின்றன.' என்றார்.

விமான விபத்து

இதைத்தொடர்ந்து விமானத்தை இயக்கியபோது தான் சந்தித்த அவசரகால நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

''இப்போதெல்லாம் பறவை மோதும் சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் விமானம் 700 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது ராஜாளிப்பறவை ஒன்று விமான இறக்கை மீது மோதி காயமடைந்தது. பிறகு அது எங்கு விழுந்ததென்று தெரியாதபோதும் பாதுகாப்பு நடவடிக்கையாக உடனே விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது'' என்று கூறுகிறார்.

இதுபோன்ற அவசரநிலைகளின்போது ஒரு விமானியின் மனநிலை எப்படியிருக்கும், அந்த நேரத்தில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்ற கேள்விக்கு பதிலளித்த கேப்டன் நீரஜ் ராஜகோபால், ''அனுபவமும் சமயோசித புத்தியும் இப்படிப்பட்ட நேரங்களில் மிகவும் அவசியம். சூழ்நிலைக்குத் தக்கவாறு நொடிப் பொழுதில் முடிவெடுக்க வேண்டும் என்பதால்தான் ஒரு கேப்டன் மற்றும் ஒரு துணை விமானி என இருவர் பணியமர்த்தப்படுகிறார்கள். அவசர நிலை ஏற்பட்டால் ஒரு கேப்டனுக்கு முதலில் தோன்றுவது மக்களை எப்படி காப்பாற்றலாம் என்றுதான். அவர் எடுத்த முடிவு சரியா, தவறா என்று பின்னர் விவாதங்கள் நடந்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்'' என்கிறார்.

''விமானத்துறையில் உலகில் முன்னிலை வகிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது''

ஐரோப்பா, ஆசியா உட்பட இதுவரை இருபத்து ஐந்து நாடுகளுக்கும் மேல் விமானத்தை இயக்கியுள்ள கேப்டன் நீரஜிடம் இந்திய விமான நிலையங்கள் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கின்றனவா என்றும் மற்ற நாடுகளிடம் இருந்து அவை கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்றும் கேட்டதற்கு, ''இந்தியாவைப் பொருத்தவரை, இடப்பற்றாக்குறை நிலவுவதால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உதாரணமாக வளைகுடா நாடுகளில் இருப்பதுபோல் அதிக பரப்பளவு கொண்ட விமான நிலையங்களை அமைப்பதற்காக வாய்ப்புகள் குறைவு. பெரிய விமான நிலையமாக இருந்தால், விமானங்களை நிறுத்த அதிக இடம் கிடைப்பதோடு நிறைய ஓடுபாதைகள் அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.''

நீரஜ் ராஜகோபால்

பட மூலாதாரம், Niraj Rajagopal

''விமானத்துறையில் உலகளவில் முன்னிலை வகிக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு திறன் உள்ளது. இடப் பற்றாக்குறையை சரி செய்யவும் உலகத் தரத்துடன் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளும் இந்தியாவில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக புறநகர் பகுதிகளில் கட்டப்பட்ட பெங்களுர், ஹைதராபாத் விமான நிலையங்களை சிறப்பாக கட்டமைத்து உள்ளார்கள். இதுபோன்ற முயற்சிகள் தற்போது சென்னை மற்றும் மும்பையிலும் முன்னெடுக்கப்பட உள்ளன"' என்று பதிலளித்த கேப்டன் இந்தியாவிலேயே நாக்பூர் விமான நிலையம் மிகவும் அழகானது என்றும் அங்கு விமானப் போக்குவரத்து சிறப்பாக கையாளப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

மாநில மொழிகளில் அறிவிப்பு அவசியமா?

விமான பயணங்களில் அவரசர காலங்களின்போது உள்ளூர் மொழிகளில் அறிவிப்பு செய்வது குறித்து கேப்டன் ராஜகோபாலின் நிலைப்பாடு குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், ''இதை முக்கியமான ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். இது குறித்து எங்கள் விதிமுறைகளில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது'' என்றார்.

மேலும் அவர், ''பொதுவான அறிவிப்புகளை கூட எந்த மொழியில் எப்படி அறிவிக்கலாம் என்பதை ஒரு கேப்டன் முன்னரே தயார் செய்துகொள்ளலாம். உதாரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் சென்னையில் தரையிறங்கும்போது தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவசர காலத்தில் மக்கள் எளிமையாக புரிந்துகொள்ள உதவுவதுடன் சாதாரண பயணங்களின்போது மக்கள் தங்கள் தாய் மொழியில் அறிவிப்பதை கேட்டால் மகிழ்ச்சியடைவார்கள்தானே'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: