பா.ஜ.க வி.பி. துரைசாமியின் சர்ச்சை பேட்டி: "சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி"

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்திருக்கிறார்.
சென்னை தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் வி.பி துரைசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், கடந்த வாரம்வரை, திமுக VS அதிமுக என இருந்தது. கு.க. செல்வம் இங்கே இணைந்த பிறகு பா.ஜ.க. VS தி.மு.க. என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். எங்களை யார் அனுசரித்துப் போகிறார்களோ, அவர்களோடுதான் கூட்டணி வைப்போம். நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்கட்சிகள் கண்துடைப்பு நாடகத்தை நடத்தி வருவதாகவும், யுபிஎஸ்சி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புனருக்கு அதிக இடங்கள் கிடைத்திருப்பதாக ஸ்டாலின் கூறுவது கற்பனையானது என்றும் அவர் கூறினார்.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் திமுக வழக்காடவில்லையென்றும் தன்னை இணைத்துக்கொள்ள மட்டுமே செய்தது என்றும் வி.பி. துரைசாமி சுட்டிக்காட்டினார்.
நீண்ட காலமாகவே ஜாதி மற்றும் மொழியை சொல்லி திமுக அரசியல் நடத்தி வந்துள்ளதாகவும், இனிமேல் அப்படி செய்ய முடியாது என்றும் துரைசாமி கூறினார்.
விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் ஒருவர், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் இந்தி தெரியாதா? என்று கேட்கப்பட்டதால் எழுந்த சர்ச்சை குறித்து கேட்டதற்கு, "கனிமொழி மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மரியாதை, மதிப்பு உண்டு. 14 ஆண்டுகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி உள்ளார். கனிமொழிக்கு இந்தி தெரியும். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவே வாய்ப்பில்லை, முழுமையாக விசாரித்தால் உண்மை வெளிவரும்" என்று துரைசாமி பதிலளித்தார்.
திருச்சியில் அபின் கடத்தியதில் பாஜகவைச் சேர்ந்தவர் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இந்த விவகாரத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் ஈடுபட்டிருந்தால் பாஜக தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
நடந்து முடிந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜக போட்டியிட்டது. அந்த கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டு, அக்கட்சி தோல்வியடைந்தது. 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜக 2.86 சதவீத வாக்குகளைப் பெற்றது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் தலைமையில்தான் கூட்டணி என துரைசாமி வெளியிட்ட கருத்து, அந்த இரு கட்சிகளின் தற்போதைய அரசியல் மற்றும் தேர்தல் உறவு தொடருமா என்ற புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












