திருச்சி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி (இடமிருந்து 3-ஆவது)
படக்குறிப்பு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி (இடமிருந்து 3-ஆவது)

திருச்சியில் இரு வாகனங்களில் ஓப்பியம் போதைப் பொருளை கார் மூலம் கடத்தியதாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரகசிய தகவல்

திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி-க்கு திருச்சியில் போதைப் பொருள்களான ஓபியம் கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக இது குறித்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை மாவட்ட கண்காணிப்பாளர் காமராஜ், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அதிலிருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். அவர்களது வாகனத்தைப் சோதனை செய்ததில், அதில் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஐவர் கைது

இதையடுத்து காரில் இருந்த பெரம்பலூர் ரோவர்ஸ் சாலையை சேர்ந்த ருவாண்டோ அடைக்கலராஜ் (வயது 42), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மான்பிடி மங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்கிற அத்தடியான் (44), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (40) வெண்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), ஆறுமுகம் (65) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

1.800 கிலோ ஓப்பியமும், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கலவை
படக்குறிப்பு, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கலவை

சித்த மருத்துவரின் வாகனம்

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று, பெரம்பலூர் மாவட்டத்தை சோ்ந்த சித்த மருத்துவர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

அடைக்கலராஜ், மருத்துவரின் நண்பர் என்பதால் வாகனத்தை கொடுத்ததாகவும், ஆனால் அந்த வாகனம் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதால், தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல்கள் கூறுகின்றன.

போலீஸ் கூறுவது என்ன?

போதைப் பொருள் மதுரைக்குக் கடத்தப்படுவதாக எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் வாகன சோதனையில் ஈடுபட்டோம். எங்கிருந்து இந்த போதைப் பொருள் கடத்தப்பட்டது, எங்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது என விசாரித்து வருகிறோம் என போலீஸார் கூறுகின்றனர்.

பாஜக செயற்குழு உறுப்பினர்

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அடைக்கலராஜ் பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :