தமிழ்நாடு அரசு: 52,257 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழக அரசு

பட மூலாதாரம், Tndipr

தமிழ்நாட்டில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 52,257 கோடி ரூபாய் மதிப்பிலான 34 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டிற்கான தமிழக தொழில் கொள்கையை வெளியிடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 52,257 கோடி ரூபாய் மதிப்பிலான 34 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 93,935 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

எலெக்ட்ரானிக்ஸ், மின் வாகனங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், சூரியசக்தி மின்கல உற்பத்தி போன்ற துறைகளில் செய்யப்படவுள்ளன. அதன்படி டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்போன் உதிரி பாக தொழிற்சாலையை 5763 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கவுள்ளது.

தைவானைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம் செங்கல்பட்டில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செல்போன் உற்பத்தி ஆலையையும் அதே நாட்டைச் சேர்ந்த லக்ஷேர் நிறுவனம் 745 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூரில் எலெக்ட்ரானிக்ஸ் ஹார்ட்வேர் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதன் மூலம் செயல்படாமல் இருந்த மோட்டரோலா தொழிற்சாலை மீண்டும் இயங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 52,257 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

பட மூலாதாரம், Tndipr

சூரிய மின் சக்தி உற்பத்தி பொருட்கள் தயாரிப்பில் சன் எடிசன் நிறுவனம் 4629 கோடி ரூபாயையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் மின்வானங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் 2354 கோடி ரூபாய் முதலீட்டையும் செய்ய உள்ளன.

ஜெர்மனியைச் சேர்ந்த Eickhoff Wind Ltd நிறுவனம், சீனாவிலும் ஜெர்மனியிலும் இருந்த தனது திட்டங்களை தமிழ்நாட்டிற்கு மாற்றத் திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 621 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னைக்கு அருகில் ஒரு காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

உலகின் மிகப் பெரிய ரசாயன நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனியைச் சேர்ந்த BASF, லூகாஸ் டிவிஎஸ், ஜப்பானைச் சேர்ந்த டெய்சல் கார்ப்பரேஷன், கொரியாவைச் சேர்ந்த எல்.எஸ். ஆட்டோமேட்டிவ், அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோலிவ் இன்கார்ப், டேடா பேட்டர்ன்ஸ் ஆகியவையும் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.

விரைவில் தமிழ்நாடு தொழில்கொள்கை 2021ஐ வெளியிடவும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: