இந்திய பட்ஜெட் 2021: இந்திய பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி? தீர்வு என்ன?

பட மூலாதாரம், Ani
- எழுதியவர், நிதி ராய்
- பதவி, பிபிசி, மும்பை
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சூழலில் உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியப் பொருளாதாரம் இரண்டாவது இடம் பெற்றிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும், அதிக பாதிப்பில் இந்தியா முதலிடம் பெறும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பொருளாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
முதலாவதா, இரண்டாவதா என்பது இப்போது கேள்வியல்ல. ஏன் இந்த நிலைமைக்கு இந்தியா உள்ளானது என்பதுதான் கேள்வியாக உள்ளது.
பெருந்தொற்று பாதிப்பு, நீண்ட கால மற்றும் கடுமையான முடக்கநிலை அமல் ஆகியவற்றால் பொருளாதார செயல்பாடுகள் திடீரென நின்று போனதுதான் காரணம் என இப்போதைக்கு கூறலாம்.
ஆனால் அனைத்து பிரச்சனைகளுக்கும் கோவிட் பெருந்தொற்றுதான் காரணமா? இல்லை என்பதுதான் இதற்கான பதில்.
பெருந்தொற்றுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் பின்னடைவில்தான் இருந்தது. 2019-20-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2 சதவீதம் என்ற மிகக் குறைவான நிலைக்குச் சென்றிருந்தது.
2018 மார்ச்சில் 8.2 சதவீதம் என்ற நிலையில் இருந்து, மார்ச் 2020-ல் வெறும் 3.1 சதவீதம் என்ற அளவுக்கு சென்றுவிட்டது.
தொடர்ச்சியாக எட்டு காலாண்டுகள் ஜிடிபி சரிந்ததால், வேலைவாய்ப்பில்லாதோர் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18ல் 6.1 சதவீதம் என்ற மோசமான நிலையைத் தொட்டது.
"பெருந்தொற்றுக்கு முன்பே, கடந்த 3 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் பின்னடைவில் இருந்தது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். நீண்டகால நோக்கிலான முயற்சிகள் இருந்தாலும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் அல்லது வங்கிகள் திவால் அறிவிப்புக்கான புதிய விதிகள் அறிமுகம் ஆகியவை ஆரம்ப காலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். பெருந்தொற்றுக்கு முந்தைய சூழலும் பாதிப்புக்குக் காரணமாக உள்ளன. இந்தப் பின்னணியில் பார்த்தால், மார்ச் 2020-க்குப் பிறகு பெருந்தொற்று பரவல் மற்றும் முடக்கநிலை அமல் காரணமாக, பொருட்களுக்கான தேவை மற்றும் வழங்கலில் பாதிப்பு ஏற்பட்டு, நுகர்வு நிலையில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிட்டன'' என்று கொல்கத்தா ஐ.ஐ.எம். பொருளாதார பேராசிரியர் பார்த்தா ராய் பிபிசியிடம் கூறினார்.
பெருந்தொற்றுக்கு முன்னரே இந்திய பொருளாதாரம் எப்படி சரிந்தது?

அரசு திடீரென மேற்கொண்ட கொள்கை மாற்றங்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தை இப்போதுள்ள நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்துவிட்டன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2016ஆம் ஆண்டு அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. அடுத்து 2017-ல் ஜிஎஸ்டி அமல் செய்தது. அதன்பிறகு ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் போன்ற பல கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டன. பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
இந்த மாற்றங்களால் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழில் துறைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அவை ஒருபோதும் மீள முடியாத நிலைக்குச் சென்றன.
"பொருளாதாரத்தில் உற்பத்தித் திறன்களை பாதிப்பதாக மட்டுமின்றி, வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கச் செய்யும் தொடர்ச்சியான பல கொள்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அமைப்புசாரா தொழிலாளர் துறையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தின. இந்தப் பிரிவில் இருந்துதான் கணிசமான அளவுக்கு நுகர்வோர் தேவை வருகிறது. உற்பத்தி தடைபடும்போது, பெரும்பாலானவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாமல் போய், வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது'' என்று இந்தியா ரேட்டிங் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை பொருளாதார வல்லுநர் சுனில்குமார் சின்ஹா பிபிசியிடம் கூறினார்.
"நகர்ப்புற நுகர்வோர் அளவு கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் சூழல் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அவர்களுடைய வருமானம் உயரவில்லை. அவர்களுடைய கடன்கள் அதிகரித்தன. அதனால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.
"கிராமப்புறங்களில் மக்களின் செலவிடும் பாணி, நகர்ப்புற மக்களுடைய பாணிக்கு ஈடாக இருக்காது. பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு வெறும் 15-16 சதவீதம் மட்டுமே'' என்று சின்ஹா கூறினார்.
உற்பத்தி செயல்பாடுகள் அதன் முழு அளவிற்கு இன்னும் திரும்பவில்லை என்பதால், நகர்ப்புற பொருளாதாரம் சீரடைய சில காலம் தேவைப்படும்.

பட மூலாதாரம், Getty Images
"தேவையை அதிகரிக்கச் செய்யக் கூடியவர்கள் கிராம மற்றும் நகர்ப்புற பொருளாதாரங்கலில் இருக்கின்றனர். இந்தப் பிரிவில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் முந்தைய பட்ஜெட்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நேரடியாக உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த விரும்பினால், அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குச் செய்யுங்கள். ஆனால் அவர்கள் கார்ப்பரேட் துறைக்கு பெரிய சலுகைகளை அறிவித்தார்கள். அவர்கள் முதலீடு செய்து, வேலைவாய்ப்பு பெருகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், தங்கள் வரவு செலவு கணக்கை சரி செய்வதற்காக அந்தத் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. அரசின் கையிருப்பு ஏற்கெனவே அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே, பெருந்தொற்று காலத்தில், பொருட்களின் தேவையை அதிகரிக்கச் செய்வதற்கு எதுவுமே செய்யவில்லை'' என்று சின்ஹா விளக்கினார்.
"சில துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பெருந்தொற்று பாதிப்பு காரணம் கிடையாது. தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் அவை தொடர்பான துறைகள் ஏற்கெனவே 2019-ல் சிக்கலில் இருந்தன. பெருந்தொற்று பாதிப்பை அடுத்து, பிரச்சனைகள் பெரிதாகிவிட்டன.அதுதான் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது'' என்று டுன் & பிராட்ஷீட், குளோபல் முதன்மை பொருளாதார நிபுணர் அருண் சிங் கூறினார்.
ஏற்கெனவே பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டிருந்தவர்கள் இப்போது வேலையிழப்பு, சம்பளக் குறைப்பை எதிர்கொண்டுள்ளனர்; எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியுள்ளது. அதனால் மிகுந்த கவனத்துடன் அவர்கள் செலவிடுகிறார்கள்.
"முன்னெச்சரிக்கையான சேமிப்பு அதிகரித்துள்ளது என்பது முதலாவது விஷயம். மோசமான நிலை இன்னும் மாற வேண்டும் என மக்கள் காத்திருக்கிறார்கள். சுமார் 80- 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கும் வரை இதே நிலைதான் தொடரும். அடுத்ததாக, வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. அலுவலகத்தில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு கூட போனஸ் கிடைக்கவில்லை. ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. 2021-ல் ஊதிய உயர்வு கிடையாது. பணப் பட்டுவாடாக்கள் குறைந்துவிட்டன'' என்று சிங் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இந்தியஅரசு இதுவரை என்ன செய்துள்ளது?
பொருளாதாரத்தில் நுகர்வோர் தேவையை ஊக்குவிப்பதற்கு 2020 அக்டோபரில் அரசு இரண்டு அணுகுமுறை நடவடிக்கைகளை எடுத்தது. முதலாவதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு விழாக்காலத்துக்கான முன்பணத்தை அரசு அளித்தது. அவர்கள் அதை செலவு செய்யும் போது தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவர்களுக்கு விடுமுறை பயண சலுகைக்கான வவுச்சர்கள் தரப்பட்டன. 'ப்ரீ-பெய்ட்' ரூபே அட்டையில் ரூ.10 ஆயிரம் அளவுக்கு முன்னதாகவே செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது. 2021 மார்ச் 31 வரையில் இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாநிலங்களுக்கு உதவிட 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன் அளிக்கப்பட்டது. இந்த முன்முயற்சிகளுக்கு ரூ.73 ஆயிரம் கோடி செலவாகும். இதுதவிர மேலும் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு தேவையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன?
உற்பத்தித் துறை ஓரளவுக்கு மீட்சி பெற்றிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் சேவைகள் துறைக்குத்தான் அரசின் உடனடி உதவி தேவை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"உற்பத்தித் துறை மீட்சி பெறுகிறது. மெல்ல வளர்ந்து வருகிறது.சேவைகளுக்கான தேவை அதிகரிக்கவில்லை. அந்தத் துறை மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அது மீள்வதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். பாதிப்பு ஏற்படுவதில் தாங்கள் எந்த வகையிலும் காரணமாக இல்லை என்றாலும், தற்போது சிக்கலில் உள்ள சேவைகள் துறையை மீட்க அரசின் உதவி தேவைப்படுகிறது'' என்று கிரிசில் அமைப்பின் முதன்மைப் பொருளாதார நிபுணர் டி.கே. ஜோஷி கூறியுள்ளார்.
"குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாயில் கீழ்ப்பகுதி பிரிவினருக்கு இந்த உதவி தேவை, குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் உதவி தேவை. ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்குப் பணமாக அளித்து உதவிட வேண்டும். உயர் வருவாய்ப் பிரிவினர் நல்ல நிலைக்கு வந்துவிட்டனர்'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
அரசு இன்னும் அதிகமாக செலவு செய்து, நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்க வேண்டும் என சில பொருளாதார நிபுணர்கள் தீவிரமாக வலியுறுத்துகின்றனர்.
"பொருளாதாரத்தில் அரசு முதலீடு செய்யத் தொடங்கலாம். நிதிப் பற்றாக்குறை பற்றி அரசு கவலைப்படக் கூடாது. நேரடி நுகர்வுக்கு உதவும் வகையில் மக்களின் கைகளில் அரசு பணம் கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் அடுத்தடுத்த நல்ல பயன்கள் கிடைக்கும் வகையில், முதலீடு மற்றும் நுகர்வோர் தேவைகளை அதிகரிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கொள்கை முடிவு எடுத்து நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகும். பொருளாதாரத்தில் ரொக்கம் தேவை'' என்று அருண் சிங் தெரிவித்தார்.
மற்றவர்கள் செலவு செய்து, தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற சூழலை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் இப்போது தாங்களே இதைச் செய்ய வேண்டியுள்ளது.
பிற செய்திகள்:
- பழங்கால தமிழர்கள் கோயில் கோபுர கலசங்களில் தானியம் வைத்தது ஏன்?
- எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் கட்டிய கோயில் திறப்பு
- டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - நடந்தது என்ன?
- ரூ. 52,257 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
- 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் காலடித் தடத்தைக் கண்டுபிடித்த சிறுமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












