கொரோனா வைரஸ் தடுப்பூசி: கோவிட் தடுப்பு மருந்து பற்றிய போலிச் செய்திகளும், அறிவியல் உண்மைகளும்

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

பட மூலாதாரம், Vithun Khamsong

கொரோனா பரவலை தடுக்க முக்கியமான ஒன்றாக தடுப்பூசி கருதப்படுகிறது. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே கொரோனா தடுப்பூசி குறித்த போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.

மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என அரசு மக்களுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக சமீபகாலமாக பரப்பப்பட்டு வரும் சில போலிச் செய்திகள் குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் இங்கு பார்க்கலாம்.

இது தொடர்பாக டெல்லி மேதாந்தா மருத்துவமனையின் மூத்த நோய்த்தொற்று நிபுணர் மருத்துவர் யடின் மேத்தா மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைப்பின் செயலாளரும், மூத்த நோய்த்தொற்று நிபுணர் ஈஸ்வர் கிலாடவிடம் பேசினோம்.

"கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்கும்"

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

யடின் மேத்தா: இது முற்றிலும் தவறானது. கொரோனா தடுப்பூசி ஒருவரின் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்காது.

ஈஸ்வர் கிலாடா: அனைத்து வகையான தடுப்பூசிகள் வரும்போதும், இது போன்ற வதந்திகள் பரவுகின்றன. அது தவறானது என்று பலமுறை நிரூபணமாகி இருக்கிறது. அதே போன்றுதான் தற்போது கொரோனா தடுப்பூசிக்கும் தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அசுதோஷ் சின்ஹா என்பவர் "தடுப்பு மருந்தில் இருக்கும் சில பொருட்கள் நம்மை பாதிக்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம்" எனக் கூறினார். ஆனால், அவர் கருத்தை நிரூபிக்கும் வகையிலான எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.

"தடுப்பூசி குழந்தைப் பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது முற்றிலும் தவறானது" என இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான (டி.சி.ஜி.ஐ) விளக்கமளித்தது. தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் சிலருக்கு மிதமான காய்ச்சல், வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டாலும், இந்த தடுப்பு மருந்துகள் முற்றிலும் பாதுகாப்பானவை எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் தன் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான இந்த வதந்திகளை மறுத்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுவோம் என இந்தியாவில் வதந்திகள் பரவுவது இது முதல் முறையல்ல.

இந்தியாவில் பல தசாப்தங்களுக்கு முன் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது கூட, இதுபோன்ற வதந்திகளால் சில இந்தியர்கள் மருந்தை எடுத்துக் கொள்ள மறுத்தார்கள்.

அப்போதும் சரி, இப்போதும் சரி, தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுவோம் என்பதற்கு ஆதாரமில்லை.

"கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளக்கூடாது"

கொரோனா வைரஸ் தடுப்பூசி: கோவிட் தடுப்பு மருந்து பற்றிய போலிச் செய்திகளும், அறிவியல் உண்மைகளும்

பட மூலாதாரம், NARINDER NANU/AFP via Getty Images)

இந்தியாவில் இன்னும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கும் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

யடின் மேத்தா: இந்தியாவில் இன்னும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. இது இன்னும் பரிசோதனை நிலையில் இருப்பதே இதற்கு காரணம்.

ஈஸ்வர் கிலாடா: கர்ப்பிணிப் பெண்கள் மீது கொரோனா தடுப்பூசி எந்த தாக்கமும் செலுத்தவில்லை என்று இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. எனினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த தொடங்கிவிட்டன. இந்நிலையில், இந்தியாவிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படலாம்.

இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டாலும், தங்களின் மருத்துவர்களின் அறிவுரையை பெற்று அதற்கேற்ப நடக்க வேண்டும்.

அமெரிக்காவின் நோய் தடுப்பு மையத்தின் தகவலின்படி பிறரைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் அதிகமான உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் கருவுற்றிருந்தாலும் கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டால் தீவிரமான பாதிப்பிலிருந்து கர்ப்பிணிப் பெண்களை காப்பாற்ற முடியும் என்கிறது அந்த அமைப்பு.

Banner image reading 'more about coronavirus'

தடுப்பூசி போட்ட பின்னும் கொரோனா தொற்று வருமா?

யடின் மேத்தா: ஒரு சில நேரங்களில் 14 நாட்கள் கழித்துதான் உங்கள் உடலில் கோவிட் தொற்று இருப்பது தெரியவரும். ஒரு வேளை அந்த சமயத்தில் நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், எடுத்துக் கொண்ட பிறகு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், உங்கள் உடலில் ஆண்டிபாடிகள் உருவாக இரண்டு வாரங்கள் ஆகும்.

அதனால் தடுப்பூசி போட்ட பின்னரும் தொற்று வர வாய்ப்புண்டு. ஆனால், உங்கள் உடலிற்கு வைரசை எதிர்த்து போராடும் திறன் இருக்கும். இது ஒருவரின் உடல்நிலையை பொருத்தது.

ஈஸ்வர் கிலாடா: கொரோனா தொற்றில் இருந்து தடுப்பூசி ஒருவரை பாதுகாக்கும். தடுப்பூசி போடுவது ஒருவரின நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு இறப்பு ஏற்படுவதில்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கொரோனா தடுப்பூசி போட்டபின் ரத்தம் உறைதல் மற்றும் இதய பாதிப்பு வருமா?

யடின் மேத்தா: தடுப்பூசி போட்டுக் கொண்டபின் ரத்தம் உறைதல் ஏற்படலாம். ஆனால் இந்தியாவில் இது போன்று நடப்பது மிகக் குறைவு. மிக மிகக்குறைவு. ஸ்கேன்டினேவியன் நாடுகளில் வயதானவர்களிடம் இந்தப் பிரச்னை அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் 10 கோடி பேரில் 0.61 சதவீதம் பேருக்குதான் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுவதாக மத்திய சுகாதாரத்துறையின் ஒரு குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதய நோய் இருப்பவர்களிடம் தான் இந்த பிரச்னை தென்படுகிறது. அதனால் ஏதேனும் இணை நோய்கள் இருந்தால், மருத்துவரிடம் அறிவுரை பெற்ற பின்பு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

ஈஸ்வர் கிலாடா: பல மருந்துகளுக்க பக்க விளைவுகள் உள்ளன. தடுப்பூசிகளும் அப்படிதான். பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் 10 கோடி பேரில் ஒரு சதவீதத்தினருக்கும் குறைவான பேருக்குதான் இது ஏற்படுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் பல லட்சம் பேரில் ஓரிருவருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு இறந்துள்ளதால், அவர்களுக்கு இரண்டாம் டோஸ் வேறு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று சில நாடுகள் கூறியுள்ளன.

இந்தியாவில் கோவிஷீல்டு எனும் பெயரில் வழங்கப்படும் இந்த மருந்தால், ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டதாக இதுவரை எங்கும் பதிவு செய்யபடவில்லை.

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஒருவருக்கு இதய நோய் உண்டானதாக இதுவரை உலகில் எங்கும் நிரூபிக்கப்படவில்லை.

இந்திய தடுப்பூசிகளில் பன்றி இறைச்சி இருக்கிறதா?

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

யடின் மேத்தா: இதெல்லாம் உண்மையல்ல.

ஈஸ்வர் கிலாடா: இதெல்லாம் வதந்திகள்தான்.

"கொரோனா தடுப்பூசியில் பன்றி இறைச்சி இருக்கலாம், எனவே இஸ்லாமியர்கள் யாரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளக் கூடாது" என இந்தியாவில் இருக்கும் சில மதகுருமார்கள் கூறினார்கள்.

(இந்த கட்டுரையை பின்வரும் மொழிகளில் அவற்றின் மீது கிளிக் செய்து படிக்கலாம்: மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி)

பல தடுப்பு மருந்துகளில் போர்க் ஜெலடின்களை நிலைப்படுத்தும் ரசாயனமாகப் பயன்படுத்துவார்கள். இஸ்லாத்தில் பன்றியை உட்கொள்ளக் கூடாது.

இந்தியாவில் கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-v மற்றும் கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமே இதுவரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துகளின் உட்பொருட்களிலும் போர்க் ஜெலடின் இல்லை. ஃபைசர் மற்றும் மாடர்னாவின் கொரோனா தடுப்பு மருந்துகளின் உட்பொருட்களிலும் போர்க் ஜெலடின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி போட்டபின் மீன், இறைச்சி உண்ணக்கூடாதா?

யடின் மேத்தா: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தாராளமாக சாப்பிடலாம்

ஈஸ்வர் கிலாடா: தடுப்பூசி போட்ட பிறகு நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இந்த உணவைத் தான் உண்ண வேண்டும் என்று கட்டுப்பாடுகள் எதையும் உலக சுகாதார நிறுவனமோ, உலக நாடுகளின் அரசாங்க அமைப்புகளோ விதிக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட உணவை உண்பதால் தடுப்பூசி பலனளிக்காமல் போய்விடும் என்பதற்கான

அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை. எனவே கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இறைச்சி உண்பதற்கு தடையில்லை.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபின் மது அருந்தக்கூடாதா?

யடின் மேத்தா: தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, ஒருசில நாட்களுக்கு மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

ஈஸ்வர் கிலாடா: 12 மணி நேரத்திற்கு பிறகு அருந்தலாம். தடுப்பூசி உங்கள் உடலில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும். அனைத்தும் சாதாரணமாக இருந்தால், 12 மணி நேரம் கழித்து மது அருந்தலாம்.

மது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே உடலில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தால் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு செயல்திறன் எதிர்பார்த்த இல்லாமல் போக வாய்ப்புள்ளது. புகைப் பழக்கத்துக்கும் இதே நிலைதான். ஆனால் இவற்றை நிரூபணம் செய்வதற்கான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.

கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள சமயத்தில் மது மற்றும் புகைப் பழக்கம் இருந்தால் அது உடல் நிலையை மேலும் மோசமாக பாதிக்கக்கூடும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாதா?

யடின் மேத்தா: அப்படியில்லை. எடுத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது.

ஈஸ்வர் கிலாடா: மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் எந்த தாக்கமும் இருக்காது. தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் சுழற்சி என்பது உடலில் இயல்பாக நடப்பது. அது எந்த தேதியில் வேண்டுமானாலும் வரும். ஒரு வேளை உங்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் தேதியன்று மாதவிடாய் இருந்தாலும் எடுத்துக் கொள்ளத் தடையில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மாதவிடாய் சுழற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய 5 நாட்களில் குழந்தை தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பறை வரும் செய்தி தவறானது என்று இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவை இல்லையா ?

குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

யடின் மேத்தா: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இன்னும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இரண்டில் இருந்து 18 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் பதின்வயது நபர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த 2 மற்றும் 3ஆம் நிலை பரிசோதனைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. வரும் காலங்களில் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படலாம்.

கொரோனா முதல் அலை போல் அல்லாமல் உருமாறிய கொரோனா இரண்டாம் அலையின்போது இளைஞர்களையும் தாக்குகிறது. அதனால் இளைஞர்களுக்கும் தடுப்பூசி அவசியம். அதனால்தான் 18 வயதைக் கடந்த அனைவர்க்கும் தடுப்பூசி தேவை என்று வலியுறுத்தப்படுகிறது.

ஈஸ்வர் கிலாடா: அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி அவசியம். சிலருக்கு தடுப்பூசி போட்டு, சிலருக்கு போடவில்லை என்றால், தொற்று பரவும் அபாயம் இருக்கும்.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லையா?

யடின் மேத்தா: இல்லை. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு ஒரு சில மாதங்களுக்கே உடலில் ஆண்டிபாடிகள் இருக்கும். இதனால் 2-3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

ஈஸ்வர் கிலாடா: கொரோனாவில் இருந்து மீண்டு உடனடியாக தடுப்பூசி தேவைப்படாது. எப்போது போட்டுக் கொள்ளலாம் என்று உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த சில மாதங்கள் வரை மீண்டும் கோவிட் உண்டாவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் முதலில் கோவிட் உண்டான போது அதற்கு எதிரான நோய் எதிர்ப்பான்களை (antibodies) உடல் உற்பத்தி செய்து விடும்.

இதனால் மீண்டும் தொற்று உண்டாகும் பொழுது இந்த நோய் எதிர்ப்பான்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிட்டு அழிக்கும். ஆனால் இந்த எதிர்ப்பாற்றல் ஆயுள் முழுவதும் நீடிக்காது. அடுத்த சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கபட்டவர்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

ஒருவேளை இரண்டாவது முறை தாக்கும் கொரோனா வைரஸ், மரபணு மாற்றமடைந்த வேறு ஒரு திரிபாக இருந்தால் முதலில் தொற்று உண்டான போது உடலில் உண்டான நோய் எதிர்ப்பான்கள் இரண்டாவது முறை தொற்று வரும் போது உடலுக்குள் வந்த கிருமிகளை எதிர்த்து சிறப்பாக செயல்படும் என்றும் கூற முடியாது.

"தடுப்பூசியில் மைக்ரோசிப் இருக்கிறது"

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

கொரோனா தடுப்பு மருந்தில் மைக்ரோசிப்கள் இருப்பதாக இந்திய சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே தவறான தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

"கொரோனா தடுப்பு மருந்தில் சிப் இருக்கிறது, அது உங்கள் மூளையை கட்டுப்படுத்தும்" என ஒரு சிறிய காணொளியில் ஓர் இஸ்லாமிய மதகுரு பேசியிருக்கிறார். அந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வைரலானது.

எந்த கொரோனா தடுப்பூசியிலும் மைக்ரோசிப்கள் ஒரு பகுதியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"தடுப்பூசி எடுத்துக் கொண்டு பின்பு முக கவசம் அணிதல், சமூக விலகல் கடைபிடிக்க தேவையில்லை"

இது மிகவும் ஆபத்தான போக்கு. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது கோவிட்-19 நோயாக மாறாமல் தடுப்பூசி பாதுகாப்பளிக்கும்.

எனினும் அவர்களது உடலில் இருக்கும் வைரஸ் பிறருக்கு பரவி அவர்களுக்கு நோயை உண்டாக்க வாய்ப்புண்டு. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ளுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: