மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: தேர்தல் நாடகமா?

பட மூலாதாரம், Twitter
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு, அமைச்சர் உதயகுமார் கோயில் கட்டியிருப்பது தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட நாடகமாக காட்சியளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். தென்மாவட்ட மக்களை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வுதான் கோயில் திறப்பு என்கிறார்கள்.
திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், தமிழக வருவாய் துறை அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், மதுரை டி குன்னத்தூர் பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அங்கு இருவரின் ஏழு அடி வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
கோயில் திறப்புவிழாவுக்கு முன்னதாக கோ பூசை மற்றும் யாகசாலை பூசைகள் நடத்தப்பட்டன. விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மதுரை விமான நிலைத்தில் இருந்து கோயில் இருக்கும் இடத்திற்கு வரும் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆடம்பர வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை திறந்துவைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தேர்தெடுக்கப்பட்ட மக்களுக்கு பசு தானமாக வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Facebook
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியுள்ளது பற்றியும் தேர்தல் நேரத்தில் இத்தகைய விழாவை நடத்துவதன் நோக்கம் என்ன என்றும் மூத்த பத்திரிகையாளர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை பற்றி விரிவாக எழுதிவருபவர் மூத்த பத்திரிகையாளர் இளங்கோ.
''மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரை ஈர்ப்பதற்காக இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தினால், அங்குள்ள மக்களிடம் இந்த விவரம் சென்று சேரும் என்பதற்கான விழாதான் இது. ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருக்கிறது. அதோடு, பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் பட்டியலில் இருப்பவர்கள் - தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் உள்ளிட்ட அனைவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அதோடு கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதிமுக கவுண்டர் கட்சியாக மாறிவிட்டதோ என எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனை சரிக்கட்ட இதுபோன்ற விழாவை கையில் எடுத்துள்ளார்கள்,'' என்கிறார் இளங்கோ.
ஜெயலலிதா இருந்த காலத்தில் சசிகலா மூலமாக முக்குலத்தோர் வாக்குகளை பெறமுடிந்தது என்று கூறிய இளங்கோ, சசிகலா வாயிலாக, 2014ல் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் சாத்தி, முக்குலத்தோர் மக்களை ஜெயலலிதா ஈர்த்ததாக கூறுகிறார். "ஜெயலலிதா - சசிகலா நட்பு காரணமாக, முக்குலத்தோர் வாக்குகள் கிடைப்பதில் அதிமுகவுக்கு சிக்கல் இருந்ததில்லை. ஆனால், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அமமுகவிடம் முக்குலத்தோர் வாக்குகள் சென்றுசேர்ந்தன. இதனை தடுக்க கோயில் விழாவை ஒரு அஸ்திரமாக பயன்படுத்துகிறார்கள்,'' என்கிறார் இளங்கோ.
அதோடு, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, கட்சியின் உள்கட்சி பூசல்கள் உள்ளிட்டவை பலவிதங்களில் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் கட்சி மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் அதிமுகவில் தங்களுக்கு உரிய இடங்கள் இல்லை என எண்ணுவதால், இந்த கோயில் விழா அவர்களை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக தெரிகிறது என்கிறார்.

பட மூலாதாரம், Facebook
பத்திரிகையாளர் குபேந்திரன் வேறொரு கோணத்தை முன்வைத்தார். கொரோனா காலத்தில் இதுபோன்ற ஒரு விழாவை அமைச்சர் ஒருவர் முன்நின்று நடத்துகிறார், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கிறார்கள் என்பது வேதனை தருவதாக உள்ளது என்கிறார் அவர்.
''12 ஏக்கர் பரப்பளவில் அமைச்சர் உதயகுமார் கோயிலை கட்டியுள்ளார். வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் என்பதால் கொரோனா காலத்தில் பொருளாதாரம் எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது என்பது அவருக்கு தெளிவாக தெரியும். அவரது தொகுதியான திருமங்கலத்தில் உள்ள மக்கள் பலரும் இதில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த கோயில் கட்டுவதற்கும், விழா நடத்துவதற்கும் கோடிக்கணக்கில் பணம் செலவாகியிருக்கும். அந்த பணத்தை திருமங்கலத்தில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தொழிற்பேட்டை அமைத்து, பல தொழில் முனைவோருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்,'' என்கிறார்.
''குறைந்தபட்சம் வீடு இல்லாத மக்களுக்கு அந்த 12 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டிகொடுத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா நகர் போன்ற பெயரில் அளித்திருந்தால், உதயகுமாரின் உதவியை வாக்காளர்கள் பல காலத்திற்கும் நினைவில் வைத்திருந்திருப்பார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை விரும்பியிருப்பார்களா என்பது ஒருபுறம். அவர்கள் நினைவை கோயில்கட்டிதான் காண்பிக்கவேண்டும் என்ற தேவை எங்கிருந்து பிறக்கிறது என்றும் பார்க்கவேண்டும்,'' என்கிறார் குபேந்திரன்.
ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதார சீர்குலைவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வேளையில், கோயில் கட்டியுள்ளது வேதனை தருவதாக உள்ளது என்கிறார் குபேந்திரன். ''அதிமுகவில் உள்ள அடிமட்ட தொண்டர்களுக்கு பயனளிக்கும் விதமாக கூட அந்த 12 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தியிருக்கலாம். இந்த கோயில் கட்டியுள்ளதால், மதுரையில் உள்ள மக்கள், அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவர்களின் மனக்கணக்கு. அது தேர்தலில் எதிரொலிக்குமா என்பது சந்தேகம்தான். அதற்கான வாய்ப்புகள் குறைவு. சில நாட்களில் இந்த கோயிலை பலரும் மறந்துவிடுவார்கள்,'' என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












