இறந்த தாயின் உடலை 10 ஆண்டுகள் ஃப்ரிட்ஜில் வைத்திருத்த ஜப்பான் பெண் கைது

பட மூலாதாரம், Darrin Klimek via getty images
(தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.)
இறந்து போன தனது தாயின் உடலை 10 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்திருந்த ஒரு பெண்ணை ஜப்பான் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
48 வயதாகும் யூமி யோஷினோ என்னும் அந்தப் பெண், தலைநகர் டோக்கியோவில் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில், பத்தாண்டுகளுக்கும் மேலாக அவரது தாயின் உடலை மறைத்து வைத்துள்ளார்.
அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் வசித்து வந்த அந்த குடியிருப்பில் இருந்து யூமி வெளியேற விரும்பாததால் தனது தாயின் உடலை பத்தாண்டுகளாக மறைத்து வைத்திருந்தார் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உறைந்த நிலையில் இருக்கும் இறந்த உடலில் எந்தவிதமான காயங்களும் தென்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் இறந்த நேரம் மற்றும் இறந்ததற்கான காரணம் ஆகியவற்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அவரது வீட்டுக்கு, யூமி யோஷினோ நீண்ட நாட்களாக வாடகை கொடுக்கவில்லை என்பதால் அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
அதன்பின்பு அந்த வீட்டை தூய்மைப்படுத்தும் போது, அப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவரால் யூமியுடைய தாயின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்து வைப்பதற்கு ஏதுவாக இறந்த உடல் வளைத்து வைக்கப்பட்டிருந்தது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டோக்கியோ அருகே உள்ள சைபா எனும் நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று, (வெள்ளிக்கிழமை) யூமி கைது செய்யப்பட்டார்.
ஜெயலலிதா தோழி சசிகலா எப்போது டிஸ்சார்ஜ்?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வரும் வி.கே. சசிகலாவுக்கு 10 நாட்கள் சிகிச்சை முடிந்துள்ள என்றும் அவருக்கு இப்போது கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் ஆக்சிஜன் இல்லாமல் கடந்த 3 நாட்களாக மூச்சு விட்டு வருகிறார் என்று பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக விதிமுறைகளின்படி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று அந்த மருத்துவமனை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையுடன், சசிகலா நாளை (ஜனவரி 31) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெட்ரா சசிகலா, ஜனவரி 27-ம் தேதி தனது தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி 20 அன்று அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நமச்சிவாயம் நாராயணசாமிக்கு சவால்: 'புதுச்சேரியில் தாமரை மலரும்'

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
"வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும். எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்று துணிச்சலாகச் சொல்ல முடியுமா?அந்த தொகுதியில் உங்களை எதிர்த்து நான் போட்டியிடத் தயார்," என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முதல்வர் நாராயணசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.
நமச்சிவாயம் பேசியது குறித்து பதில் தெரிவித்த புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன், "நமச்சிவாயம் முதல்வருக்கு சவால் விடுவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இதுவரை நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்ற நமச்சிவாயம் வருகின்ற தேர்தலில் சொந்த தொகுதியில் நின்று வெற்றி பெறட்டும். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தாமரையில் முதலில் தனித்து நிற்கட்டும், " எனத் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












