தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்தார் ஜெ.பி. நட்டா - தமிழக அரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021:

அதிமுகவும் பாஜகவும் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா.

மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு வெளிவருவது இதுவே முதல்முறை.

கடந்த நவம்பர் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வந்திருந்தபோது பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

அரசு விழாவில் கூட்டணி குறித்த அறிவிப்பை பன்னீர் செல்வம் வெளியிட்டது அப்போது விமர்சிக்கப்பட்டது.

கூட்டணி குறித்தும், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும் தங்கள் கட்சியின் தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

எடப்பாடி பழனிசாமியை ஏற்கனவே அதிமுக தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே ஜே.பி. நட்டா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டையில் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் நட்டா.

மாநில பாஜக தலைவர் முருகன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இன்றைய மதுரை பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் .

2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :