ஷைலீ சிங்: இந்தியாவின் வருங்கால தடகள நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியாவில் 18 வயதிற்குட்பட்டோருக்கான தடகளப் பிரிவில் முதல் 20 வீராங்கனைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஷைலீ சிங், இந்தியாவின் நீளம் தாண்டுதல் விளையாட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.
உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த, 17 வயதாகும் ஷைலீ, இந்தியாவின் மூத்த வீராங்கனைகளில் ஒருவரான அஞ்சு பாபீ ஜார்ஜ் மற்றும் அவரின் கணவர் ராபர்ட் பாபீ ஜார்ஜ் ஆகியோர் அளிக்கும் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியில் கவனமாக பயின்று வருகிறார்.
தொடர்ந்து ஆறு மீட்டர்களுக்கும் அதிகமாக தாண்டும் ஷைலீ, ஜூனியர்களுக்கான தேசிய அளவிலான சாதனையை தன்வசம் வைத்துள்ளார். தடகளத்திற்கான உலக சாம்பியன்கள் போட்டியில் முதன்முதலில் தங்கம் வென்ற வீராங்கனையான தனது வழிகாட்டி அஞ்சுவுடன் அவர் தொடர்ந்து ஒப்பிடப்படுகிறார்.
2018ஆம் ஆண்டு, 14 வயதான ஷைலீ, ராஞ்சியில் நடந்த தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் ஆட்டத்தில், 5.94மீட்டர் உயரம் தாண்டி, தேசிய அளவிலான சாதனை புரிந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டே, குண்டூரில் நடந்த தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் ஆட்டத்தில், 6.15மீட்டர் உயரம் தாண்டி, தனது சாதனையை தானே முறியடித்தார்.
2020ஆம் ஆண்டுக்கான 20 வயதிற்குட்பட்டவர்களின் IAAF சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற இந்த சாதனை தேவைக்கும் அதிகமாகவே அமைந்தது.
ஷைலீ சிங் பின்னணி:

உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் கடந்த ஜனவரி 7, 2004 ஆம் ஆண்டு பிறந்தார் ஷைலீ சிங். இவரது தாய் வினிதா சிங் இவரை தனி ஆளாக வளர்த்தார்.
தையல் வேலை செய்யும் வினிதா, தனது மகள் ஒரு தடகள வீராங்கனையாக வேண்டும் என்ற கூறியதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்தார்.
விளையாட்டிற்கான அடிப்படை வசதிகளோ, கட்டுமானமோ இல்லாத ஒரு பகுதியில் வாழும் இவர்களுக்கு, இந்த முடிவு கடினமாக ஒன்றாகவே அமைந்தது.
இருப்பினும், ஷைலீயின் விருப்பத்தையும், திறனையும் கருத்தில்கொண்டு, அவரின் மகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க முடிவு செய்தார் வினிதா.
ஷைலீயின் திறனை இளம் வயதிலேயே கண்டறிந்த பாபீ ஜார்ஜ் தம்பதி, அவரை தங்கள் பயிற்சித்திட்டத்துக்குள் கொண்டு வந்தனர். அஞ்சு பாபீ ஜார்ஜின் விளையாட்டு அமைப்பில் சேர்வதற்காக பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தார் ஷைலீ. அப்போது அவருக்கு வயது வெறும் 14 மட்டுமே.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்
இந்தியாவின் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடகள வீரர்கள் பட்டியலில் முதல் 20 இடத்திற்குள் இருக்கும் ஷைலீ சிங், இந்தியாவின் தடகள விளையாட்டில் அடுத்த முக்கிய நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
அஞ்சுவின் கணவரான ராபர்ட் பாபீ ஜார்ஜ், ஷைலீ சிங் விரைவில் இந்தியாவின் நீளம் தாண்டுதல் போட்டியில் ஒரு முக்கிய இடம் வகிப்பார் என்று ஒருமுறை குறிப்பிட்டு இருந்தார். 2024 ஒலிம்பிக்ஸில், இந்தியாவின் சார்பாக, பதக்கம் வெல்லும் ஒரு முக்கிய வீராங்கனையாக ஷைலீ சிங் இருப்பார் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.
ஜார்ஜ் தம்பதியின் சார்பாக கிடைக்கும் பயிற்சி மட்டுமின்றி, அபினவ் பிந்த்ராவின் விளையாட்டு அமைப்பின் சார்பாகவும், ஷைலீக்கு உதவிகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், ஷைலீ போன்ற திறமையான வீராங்கனையை மேம்படுத்த, இன்னும் அதிக உதவிகள் தேவை என்று கூறுகிறார் ஜார்ஜ்.
வேகம் தாண்டுதலில் வெற்றி பெற்ற பிறகு, ஒவ்வொரு முறையும், ஜான்சியில் உள்ள தனது தாயிடம் தொடர்புகொண்டு பேசுகிறார் ஷைலீ. தனது அம்மாவுக்கு எதிரே ஜான்சி அல்லது லக்னோவில் ஒரு பெரிய தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார் ஷைலீ.
தனது திறமையை தொடர்ந்து மேம்படுத்தப் போவதாக கூறும் ஷைலீ, அம்மாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக விளையாடவிருப்பதாக கூறுகிறார்.
(ஷைலீ சிங் மின்னஞ்சலுக்கு பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது).
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












