சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? - பிபிசி கள நிலவரம்

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் களமிறங்கியிருக்கிறார். கட்சியினரை கண்டு கொள்ளவில்லை, தொகுதி மக்களைச் சந்திக்கவில்லை, சீட் கொடுக்க எதிர்ப்பு, அ.தி.முக-பா.ஜ.க எதிர்முனைப் போட்டி எனக் கடும் நெருக்கடியை அவர் சந்திக்கிறார்.
சிவகங்கை மக்கள் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் சிவகங்கை தொகுதி முழுவதும் சுற்றி வாக்காளர்களிடம் பேசியது.
சிவகங்கை மாவட்டம் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைப் பிரதானமாகச் செய்து வருகிறது. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது.
இந்தியாவிற்கு நிதி அமைச்சரைக் கொடுத்த ஒரு நாடாளுமன்ற தொகுதி தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கி இருப்பது ஏன்?
காங்கிரஸ் கட்சியின் வலிமையான தொகுதியா சிவகங்கை?

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984இல் பிரிக்கப்பட்டு சிவகங்கைச் சீமையாக உருவாக்கப்பட்டு, 1997இல் சிவகங்கை எனப் பெயர் மாற்றம் பெற்றது.
இங்கு 1967ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பாக இத்தொகுதியின் கீழ் திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடனை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) மற்றும் புதுக்கோட்டையின் திருமயம், ஆலங்குடி என மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி.
தொடக்கத்தில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில், முதல் இரண்டு முறை திமுகவின் தா.கிருட்டிணன் வெற்றி பெற்றார். பின் அதிமுக ஒரு முறை வென்றது. அதன் பின்னர் 1980லிருந்து 2019 வரையில் நடைபெற்ற 11 தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதில் ப. சிதம்பரம் 1984, 1989, 1991, 2004, 2009 ஆகிய 5 முறை தேசிய காங்கிரஸ் சார்பிலும், 1996, 1998 ஆகிய இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி சார்பிலும் களமிறங்கி வெற்றி பெற்றார். மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு என்ன?

சிவகங்கை தொகுதியில் கடந்த 2019இல் நடைபெற்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகளைப் பெற்று 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 2,33,860 வாக்குகள் மட்டுமே பெற்றார். அமமுக சார்பில் பேட்டியிட்ட வி.பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றார்.
இதற்கு முன்பு 2014இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டி இருந்தது. அப்போது முதன் முறையாக கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.
திமுக வேட்பாளர் துரைராஜ் 2,46,608, பாஜக-வின் ஹெச்.ராஜா 1,33,763 வாக்குகளைப் பெற்றிருந்தார். காங்கிரஸின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட தொகுதியில் நான்காவது இடம்தான் கிடைத்தது. கார்த்தி சிதம்பரம் அந்தத் தேர்தலில் 10,4678 வாக்கை மட்டுமே பெற்றார்.
அதிமுக அல்லது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்போது அந்தக் கட்சிக்கே கொடுக்கப்பட்டதால் சிவகங்கை காங்கிரஸ் தொகுதியாக மாறிப் போனது. இந்தத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார்.
அந்த நேரத்தில் சிவகங்கையில் வங்கிகள் பரவலாகத் திறக்கப்பட்டு, மகளிருக்கு தொழில் செய்ய கடனுதவிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் தொழிற்சாலைகள் கொண்டுவரப்படவில்லை என வாக்காளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.
அதிமுக, பாஜக வேட்பாளர்கள் யார்?

அதிமுக சார்பில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட 40 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனின் ஆதரவாளரான கல்லல் ஒன்றியச் செயலாளரான அ.சேவியர் தாஸ்-க்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புது முகமாக இருந்தாலும் அதிமுக மாவட்டச் செயலாளர் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியைச் செய்து வருவதாகத் தொகுதி மக்கள் கூறுகின்றனர்.
பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் சென்னையைச் சேர்ந்தவர், தனியாக ஓர் அரசியல் அமைப்பை வைத்திருப்பவர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் திருவாடனைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
இந்த முறை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் மீது வெளியூரைச் சேர்ந்தவர் என்ற பார்வை மக்கள் மத்தியில் இருக்கிறது.
சிவகங்கை தொகுதியில் மும்முனைப் போட்டியா?
சிவகங்கைத் தொகுதியில் 15வது முறையாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் நிற்கிறார். அதிமுக சார்பில் கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர் தாஸ், தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார்.
இதில் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி எனக் கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் அதிமுக என இருமுனைப் போட்டியாகவே களம் இருக்கிறது.
காங்கிரஸ் உட்கட்சிப் பூசலால் யாருக்கு ஆதாயம்?

சிவகங்கை காங்கிரஸில் இருக்கும் பலருக்கு கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாட்டில் உடன்பாடில்லை. "அவர் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு தொடர்ச்சியாக எப்படி சீட் வழங்கலாம்" என எதிர்ப்புக் குரல் இருந்தது.
வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன், கங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் மற்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி காங்கிரஸ் தலைமைக்கு கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தனர்.
அதேபோல், திமுக சார்பிலும் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே சிவகங்கைத் தொகுதியைக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டனர். ஆனால் காங்கிரஸ், திமுக-வினரின் எதிர்பார்ப்பை மீறிக் கொடுத்திருப்பதால் எப்படி வேலை செய்து வாக்கை வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.
சமூக வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்குமா?
சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர் முத்திரையிர் பட்டியல் பிரிவினர், உடையர், சிறுபான்மையினர் கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் செட்டியார் சமூக வாக்குகள் இருக்கின்றன.
அதிமுக சார்பில் சேவிர்தாஸ் முக்குலதோர் சமூகத்தைச் சேர்ந்தவர், பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர், பாஜக எதிர்ப்பு வாக்குகளும், கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு வாக்குகளும் அதிமுக நோக்கிச் செல்லும்.
ஓ.பி.எஸ், தினகரன் ஆதரவு வாக்குகள் மட்டுமே பாஜகவிற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இதனால் காங்கிரஸ் அதிமுக-விற்கு இடையே கடுமையான போட்டி சிவகங்கையில் இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.
சிவகங்கையில் இருக்கும் வாக்காளர்களிடம் தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியை முன் வைத்தோம்.
'காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் தான் போட்டி'

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் மானாமதுரையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனப் பணியாளர் வினோத், "பாஜக-விற்கு கடந்த தேர்தலின்போது உட் கட்டமைப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த முறை தொகுதியில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பணியாட்களை அமர்த்தி வேலை செய்து வருகின்றனர். இதனால் இந்த முறை சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் - பாஜக இடையிலான போட்டிதான் இருக்கும்,” என்றார்.
மேலும், “சிவகங்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருப்பதால் அவர்களின் கணிசமான வாக்குகள் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவிற்கு கிடைக்கும்.
மேலும் அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்களும் இங்கே இருப்பதால் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன," என்றார்.
'அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்'

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த தொழிலாளியான கிருஷ்ணன்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திமுகவின் தா.கிருட்டிணன் சிவகங்கை தொகுதியின் வளர்ச்சிக்காகச் செயல்பட்டார் சிவகங்கை சட்டமன்ற வேட்பாளர் குணசேகரன். சிவகங்கையில் மருத்துவக் கல்லூரி அமையத் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
ஆனால், கார்த்தி சிதம்பரம் வேளாண் கல்லூரியையும் சட்டக் கல்லூரியும் அவரது தொகுதியான காரைக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டார். இதனால் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை நகராட்சியாகவும் காரைக்குடி மாநகராட்சி ஆகவும் உயர்த்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,” என்றார்.
இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது சிவகங்கையில் இல்லை, வேலை வாய்ப்பிற்காக காரைக்குடி, மதுரை நோக்கிச் செல்லும் சூழல் உள்ளது, என்கிறார் அவர்.
“அதிமுக வேட்பாளரை எளிதில் சென்று அனுகி தேவையைப் பெற முடியும். ஆனால் கார்த்தி சிதம்பரத்தை அணுகுவது கடினம். அவரை தொகுதியில் காண்பது அரிதாக இருக்கிறது. அதனால் இந்த முறை அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது," என்றார்.

‘மீண்டும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு’
சிவகங்கையில் தேநீர் கடை வைத்திருக்கும் மாரிமுத்து, "மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறும்,” என்கிறார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக காரைக்குடி பகுதிக்கு திட்டங்களை நகர்த்துவதால் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை பின்தங்கிவிட்டது,” என்றார்.
மேலும், முக்கிய அரசு அலுவலகங்களும் காரைக்குடியையே தலைமை இடமாகக் கொண்டு அமைக்கப்படுவதால் மக்கள் அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, என்றார்.
“இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. கள யதார்த்தம் இப்படி இருந்தாலும் அதிமுக, பாஜக தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். ஆனால் கடந்த முறை வென்றது போல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனக் கூறிவிட முடியாது," என்றார்.
'வேட்பாளருக்குத்தான் வாக்கு, கட்சிக்கு இல்லை'

"இந்த முறை காங்கிரஸ், அதிமுக சார்பாகப் போட்டியிடுவது யார் என எங்களுக்கு தெரியும். ஆனால் பாஜக சார்பில் போட்டியிடுபவர் வெளியூரைச் சேர்ந்தவர். கட்சி அடிப்படையில் வாக்குகளைச் செலுத்த மாட்டேன்.
வேட்பாளர் தொகுதிக்காக முன்மொழியும் திட்டத்தின் அடிப்படையில் தான் வாக்கு செலுத்தி வந்தேன். வரும் தேர்தலிலும் அதன்படி எனது வாக்கைச் செலுத்த இருக்கிறேன். கட்சியை விட வேட்பாளரின் செயல்பாடுதான் முக்கியம்," என்கிறார் கோவானுர் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஜெயா.
திருப்பத்தூர் நாகப்பனபட்டியைச் சேர்ந்த மூதாட்டி பூரனம் பிபிசி தமிழிடம் பேசியபோது, "கடந்த காலத்தில் ப.சிதம்பரம் வெற்றிபெற்ற போது எங்களது கிராமத்திற்கு சமுதாய நலக்கூடத்தை கட்டிக் கொடுத்திருகிறார். அதை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். நான் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிப்பேன். அதன் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவதால் அவர்களுக்குத்தான் எனது ஆதரவு,” என்றார்.
சிவகங்கை மக்கள் கூறிய கருத்துகள் பற்றி என்ன நினைக்கிறார் என தற்போதய எம்.பியும் வேட்பாளருமான கார்த்திக் சிதம்பரத்தை நேரில் சந்தித்துக் கேட்டோம்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு செய்தது என்ன? காரைக்குடியில் திட்டம் குவிக்கப்படுகிறதா?

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு கடந்தமுறை தேர்வு செய்யப்பட்ட போது முக்கியமாக மூன்று கோரிக்கைகளைமாநில அரசிடம் முன் வைத்ததாகக் கூறுகிறார் கார்த்தி சிதம்பரம்.
அதில் "வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகிய இரண்டு திட்டங்கள் துவங்கப்பட்டு மாணவர்கள் தற்காலிக கட்டடத்தில் பயின்று வருகின்றனர். கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன."
மேலும், "வேலுநாச்சியார் காவலர் பயிற்சிக் கல்லூரி வேண்டுமெனக் கேட்டிருந்தோம். அதற்கும் அரசு இசைவு கொடுத்திருக்கிறது. இந்த முறை தேர்வு செய்யப்பட்ட பின் அதுவும் கொண்டு வரப்படும். இது தவிர சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
எம்.பியின் தொகுதி நிதி ஐந்து கோடியை 6 சட்டமன்றத்திற்குப் பிரித்து நிழற்கூடை, உயர் கோபுர விளக்கு, சமுதாயக் கூடம் என மக்களின் தேவையை அறிந்து செய்திருக்கிறேன். கொரோனாவால் இரண்டாண்டு நிதியும் கிடைக்கவில்லை.
காரைகுடிக்கு மட்டுமே திட்டங்கள் கொண்டு செல்வதாகத் தவறான தகவல் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. சட்டக் கல்லூரி மட்டுமே காரைக்குடியில் அமைக்கப்படுகிறது, வேளாண் கல்லூரி திருப்பத்தூர் சட்டமன்றத்தில் அமைக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரி சிவகங்கையில்தான் உள்ளது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “எம்.பி மக்களைச் சென்று பார்ப்பது கிடையாது எனத் தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்வது எனது தொகுதியின் தேவையை நாடாளுமன்றத்தில் முன் வைப்பது, மத்திய அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைப் பார்ப்பது என எனது பணிகளை நான் சரியாகச் செய்து வருகிறேன்," என்றார்.
"நான் மக்களின் தேவையை அறியாமல் எப்படி எனது நிதியில் நலத் திட்டங்களைச் செய்திருப்பேன். கொரோனா காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் நிதியைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்”, எனக் கேள்வி எழுப்புகிறார்.
'பாஜக-விற்கு வெற்றி எளிதில் கிடைக்கும்'

சிவகங்கை எம்.பி.யாக கார்த்தி சிதம்பரம் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவில்லை எனக் கூறுகிறார் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ். அதோடு தாங்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்ப்போம் எனக் கூறி வாக்குகளைச் சேகரித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
"கடந்த முறை மோதி எதிர்ப்பை திமுக மக்களிடம் கொண்டு சென்றிருந்தது. அது தேர்தலில் எதிரொலித்ததால் சிவகங்கை தொகுதியில் குறைந்த வாக்குகள் கிடைத்தன. கடந்த தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட்டது.
ஆனால் இந்த முறை மோதிக்கு எதிரான அலை என்பது பெரிய அளவில் இல்லை. மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்த்துள்ளார். எனவே அதிக அளவிலான வாக்குகள் பாஜகவை நோக்கி வரும். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி எளிதாக கிடைக்கும்," ," என்கிறார் தேவநாதன் யாதவ்.
மேலும், "ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அதேபோல அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற அலுவலகம் திறந்து மக்களின் குறைகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படும் எனக் கூறி வாக்குகளைச் சேகரித்து வருகிறேன்,” என்றார்.

தேர்தல் பிரசாரத்தில் கங்கிரஸ் - அதிமுக முக்கிய அம்சங்கள் என்ன?
காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், "பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள், தனிமனித உரிமைகள் பறிக்கப்படும். விலைவாசி உயர்வு ஏற்படும்.
திமுக அரசு கொண்டு வந்திருக்கும் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த இந்தியா கூட்டணிக்கு வாக்கைச் செலுத்த வேண்டும். பாஜக ஒரு விஷக் கட்சி என்றும் அதற்கு நிகழலாக அதிமுக செயல்படுவதாகவும், சிவகங்கை ஒரு பாரம்பரிய கட்டடக் கலை சார்ந்த பகுதி, அதைப் பன்பாட்டுச் சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், விவசாயம் சார்ந்த தொழில்கள் உருவாகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்," எனக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.
அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், “காவிரி வைகை குண்டாறு திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றவில்லை. சிவகங்கைக்கு ரயில் சேவைகளைக் கொண்டு வருவேன். எம்.பி கார்த்தி சிதம்பரம் தொகுதிப் பக்கம் வந்து மக்கள் குறைகளைக் கேட்டு அதைச் சரி செய்வதில்லை.
நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுடன் இணைந்து பணியாற்றி மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வேன், சிவகங்கைக்கு தொழிற்சாலைகள் கொண்டு வருவேன்,” என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வாக்குகளைத் தம்வசப்படுத்திக் கொள்வதற்காக தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












