தங்கம் விலை உயரும் நேரத்தில் நகை வாங்குவது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு சவரனுக்கு 280 ரூபாய் வரை குறைந்தது.ஆனால் இந்த போக்கு மீண்டும் மாறி, தங்கத்தின் தினசரி அதிகரித்து வருகிறது.
சென்னையில் ஏப்ரல் 12-ஆம் தேதி நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 6,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சவரனுக்கு 54,440 ரூபாய் தங்கத்தில் விலை விற்பனை ஆகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 80 ரூபாயும், சவரனுக்கு 640 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சமீபத்திய விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து, மெட்ராஸ் தங்க ஆபரணம் மற்றும் வைர வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் பிபிசி தமிழிடம் பேசினார்.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்?
சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். உலகளவில் முதன்மையான சந்தை வர்த்தக தளமாக அறியப்படும் லண்டன் புல்லியன் சந்தைதான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கிறது. பெரும் சுரங்க அதிபர்கள், பெரும் தொழிலதிபர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். இப்போது, இந்த சர்வதேச சந்தையிலேயே தங்கத்தின் விலை ஏறிக்கொண்டிருக்கிறது.
இங்கு ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் என்பது 31.1 கிராம். ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் இவ்வளவு டாலர் என நிர்ணயிப்பார்கள். ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 1,800-1,900 டாலர்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, இப்போது 2,256 டாலர்களாக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் 2023-ல் முந்தைய சாதனையான 2,135 டாலர்களில் இருந்து 8% அதிகமாகும்.
அதேபோன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.40 ரூபாயாக உள்ளது. இதுவும் இந்தியாவில் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம்.
இதுதவிர, இறக்குமதி வரி, போர்ச்சூழல் போன்ற காரணங்களும் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 800 டன் தங்கம் சராசரியாக இறக்குமதி செய்கிறோம். சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, துபாய் போன்ற இடங்களிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்கிறோம்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முக்கிய காரணமாக இருக்கிறது. அங்கு வேலைவாய்ப்பு குறியீடு மிகவும் கீழே சென்றுவிட்டது. ரியல் எஸ்டேட் துறையும் சரிவைச் சந்தித்துள்ளது. பங்குச்சந்தையிலும் சரியான வளர்ச்சிப்பாதை இல்லை. பணவீக்கம் இருக்கிறது. இப்படி பல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் தங்கம் விலையில் தாக்கத்தை செலுத்துகிறதா?
இந்திய தேர்தலால் இப்போதைக்கு எந்த தாக்கமும் இல்லை.

பட மூலாதாரம், GETTY IMAGES
தங்கம் விலை தொடர்ந்து உயரும் சமயத்தில் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
பணம் இருக்கும்போது தங்கம் வாங்கிவிட வேண்டும் என தொடர்ந்து சொல்கிறோம். குறைந்த கால முதலீடு என்றால் இப்போது தங்கம் வாங்குவது சிறந்த யோசனை அல்ல. ஆனால், திருமணம் போன்ற நீண்ட கால யோசனைகளுக்கு தங்கம் இப்போது நிச்சயமாக வாங்கலாம்.
இந்திய மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். வங்கியில் பணம் செலுத்தினால் அதற்கு வட்டி விகிதம் குறைவாக உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது.
தங்கம் விலை உயர்வு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு ஜி வாங்க்ரூ (G Wonkrew) நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியும் முதலீட்டு ஆலோசகருமான சதீஷ் குமார் பதிலளித்தார்.
”அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம்தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். அமெரிக்காவில் ஜனவரியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பணவீக்க விகிதம் 3.1% ஆக உள்ளது. இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் இலக்கான 2%-ஐ விட இன்னும் அதிகமாக உள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் என்கிறார்” சதீஷ் குமார்.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தாலும் மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது ஏன்?
மக்கள் பாதுகாப்பான முதலீட்டு வழியைத்தான் எதிர்பார்க்கின்றனர். தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பது வரலாற்று ரீதியாகவே நிரூபணமாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தான் தங்கம் ஓர் சொத்தாக பார்க்கப்படுகிறது. ஆனால், மற்ற நாடுகளில் தங்கம் முதலீடாக கருதப்படுகிறது.
விலை உயரும் நேரத்தில் தங்கத்தை விற்கலாமா?
தங்கம் விலை தொடர்ந்து உயரும் சமயத்தில் பலரும் தங்கத்தை விற்க நினைப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது. பங்குச் சந்தையை பொறுத்தவரையில் நாம் வாங்கிய பங்கின் விலை அதிகமாகும்போது விற்கலாம். ஆனால், தங்கத்தை அப்படி கருதக்கூடாது. கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனமானதாக இருக்கும்.

பட மூலாதாரம், GETTY IMAGES
தங்கம் விலை உயர்வு நீடிக்குமா?
கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டாலே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அதற்கு அதன் அதிகரித்துவரும் தேவைதான் காரணம். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறையும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். ஜூன் மாதத்தில் இது நிகழும் என காத்திருக்கின்றனர். அமெரிக்காவில் இது தேர்தல் காலம். ஜோ பைடன் வெற்றி பெறாமல் டொனால்ட் டிரம்ப் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய புவிசார் அரசியல் மாற்றங்களும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது. பணவீக்கம் தொடரும் என்பதால் தங்கம் விலை இன்னும் உயரவே வாய்ப்பிருக்கிறது.
தங்கம் விலை எப்போது குறைய ஆரம்பிக்கும்?
சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான ஜே.பி. மோர்கன் உள்ளிட்ட நிறுவனங்களின் கருத்துப்படி தங்கம் விலை மேலும் உயரும் என்றே கூறியிருக்கின்றன. 2025-ம் ஆண்டு வரை தங்கம் விலை உயரவே செய்யும் என கணித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தங்கத்தில் எந்த வடிவில் முதலீடு செய்வது சிறந்தது?
தங்கப் பத்திரமாக முதலீடு செய்வதையே நான் பரிந்துரைப்பேன். தங்க நகையாகவோ, நாணயமாகவோ வாங்கினால் அதற்கு செய்கூலி, சேதாரம் என அதிலேயே 20% பணம் சென்றுவிடும். உதாரணத்திற்கு நீங்கள் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்குகிறீர்கள் என்றால், அதன் மதிப்பு 80 ரூபாய் மட்டும்தான். அதுவே, பத்திரமாக வாங்கினால் அதன் மதிப்பு 105 ரூபாய். தங்க பத்திரமாக வாங்கினால், ஆண்டுக்கு 2.5% வட்டியும் அளிப்பார்கள். அதேபோன்று, நகைகளை பாதுகாப்பதும் சிரமம். ஆனால், தங்கப் பத்திரம் தொலைந்து போய்விடும் என நாம் பயப்பட வேண்டாம். ஒருவர் அதிகபட்சமாக 4 கிலோ மதிப்பு வரை தங்கப் பத்திரத்தை வாங்க முடியும். வரி விலக்கும் இதற்கு இருக்கிறது. ஆனால், தங்க நகைகளுக்கு வரி உள்ளது. மேலும், 24 காரட் தரத்தில்தான் இதில் தங்கம் இருக்கும். தங்கமாக வாங்குவதைவிட பத்திரமாக வாங்கும்போது கிராமுக்கு 50 ருபாய் குறைவாகவே கிடைக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












