இந்தியாவில் மேலும் ஒரு தங்கச்சுரங்கம் - ஆந்திராவில் டன் கணக்கில் புதைந்து கிடக்கும் தங்கம்

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, 3 கி.மீ. நீளமும் ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட இப்பகுதியில் சுமார் பத்து லட்சம் டன் தங்கத் தாதுக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா, வி. ராமகிருஷ்ணா
    • பதவி, பிபிசி நியூஸ்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் உள்ள சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்கங்களில் இன்னும் 5 ஆண்டுகளில் தங்கம் வெட்டி எடுப்பது துவங்கப்படும் என தேசிய சுரங்க மேம்பாட்டு கழகம் (என்.எம்.டி.சி- National Mining Development Corporation) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் என்.எம்.டி.சி தங்க உற்பத்தியில் இறங்குகிறது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான என்.எம்.டி.சி, தற்போது இந்தச் சுரங்கங்களில் இருந்து இரும்புத் தாது மற்றும் வைரம் போன்றவற்றை எடுத்துவருகிறது.

 சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்கங்களில் இன்னும் 5 ஆண்டுகளில் தங்கம் வெட்டி எடுப்பது துவங்கப்படும் என தேசியச் சுரங்க மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது

கோலாரில் தங்க இருப்பு குறைந்து வருவதால் தொடங்கிய ஆய்வுகள்

1970களில், தங்கத்திற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தங்கம் இருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டது.

கோலார் தங்க வயல்களில் (கே.ஜி.எஃப்) தங்கம் இருப்பு வேகமாக குறைந்து வருவதும் இதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது. மேலும், அரசின் தங்க ஆய்வுக்கான ஐந்தாண்டு திட்டமும் (1980-85) அறிவிக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டில், இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) சித்தூரில் உள்ள சிகுருகுந்தாவில் தங்கம் இருப்பதை முதற்கட்ட ஆய்வுகளில் கண்டுபிடித்தது.

சிகுருகுந்தாவிற்கும் கோலாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30கி.மீ.

3 கிலோமீட்டர் நீளமும் ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சுரங்கங்கள் 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1976-77 ஆம் ஆண்டில், ஜி.எஸ்.ஐ சிகுருகுந்தாவில் 7.56 லட்சம் டன் தங்க தாதுக்களைக் கண்டறிந்தது.

ஜி.எஸ்.ஐ.யின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு நிறுவனமான மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (எம்.இ.சி.எல் - MECL) 1982 ஆம் ஆண்டு சிகுருகுண்டாவில் சோதனை ரீதியாக அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது.

முதற்கட்ட அகழ்வாராய்ச்சியில் 10 லட்சம் டன் தங்க தாதுக்கள் இருப்பதை எம்.இ.சி.எல் கண்டறிந்துள்ளது.

ஒன்னப்பநாயன் கோதூர், தலை அக்ரஹாரம் மற்றும் நாரலப்பள்ளி போன்ற கிராமங்கள் சிகுருகுண்டா சுரங்கங்களின் கீழ் வருகின்றன.

1981 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்த கிராமங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர்.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, மீண்டும் சுரங்கப் பணிகள் தொடங்கினால் உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்படும்

பிசாநத்தம் சுரங்கங்கள்

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பழைய பிசாநத்தம் சுரங்கங்கள் கே.ஜி.எஃப் சுரங்கங்களில் இருந்து சுமார் 8கி.மீ. தொலைவில் உள்ளன.

1894-98க்கு இடைப்பட்டக் காலத்தில் பிசாநத்தம் சுரங்கங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக எம்.இ.சி.எல் அறிக்கைகள் கூறுகின்றன. 1894 முதல் 1902 வரை மைசூர் ரீஃப்ஸ் தங்கச் சுரங்க நிறுவனம் தங்கச் சுரங்க ஆய்வுகளை மேற்கொண்டது.

1894-98க்கு இடையில், பழைய பிசாநத்தம் சுரங்கங்களில் 9,618 டன் தாதுவில் இருந்து சுமார் 140 கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. 1902க்குப் பிறகு பழைய பிசாநத்தம் சுரங்கங்கள் கை மாறின. 1958க்குப் பிறகு இந்த சுரங்கங்களில் அகழ்வாராய்ச்சி நடந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை.

1980களில், பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (பி.ஜி.எம்.எல்) மற்றும் எம்.இ.சி.எல் ஆகியவை இந்தச் சுரங்கங்களில் ஆராய்ச்சி மற்றும் சோதனை அகழாய்வுகளை மேற்கொண்டன. அதன் பிறகு தங்கம் எடுக்க ஆரம்பித்தனர்.

நிதி நெருக்கடி காரணமாக, சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்கங்களின் நிர்வாகம் பி.ஜி.எம்.எல் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. 1990களில் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததாலும், இயக்கச் செலவு அதிகரித்ததாலும் 2001 ஆம் ஆண்டில், BGML இன் செயல்பாடுகளை மையம் நிறுத்தியது. இதையடுத்து சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்கங்கள் மூடப்பட்டன.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணிகள் 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படும்

வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் பி.ஜி.எம்.எல் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து இந்நிறுவனத் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றனர். இதையடுத்து 2006ல், சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும், பிஜிஎம்எல் செயல்பாடுகள் தொடங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையில், பிஜிஎம்எல் இன் சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்க உரிமம் 2008 இல் காலாவதியானது.

கடந்த 2018-ம் ஆண்டு தங்கம் விலை உயர்வால் சிகுருகுந்தா தங்கச் சுரங்கங்களை மீண்டும் திறக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. அதைத் தொடர்ந்து நடந்த ஏலத்தில் என்.எம்.டி.சி நிறுவனம் டெண்டரைப் பெற்றது.

“சுரங்கங்கள் மூடப்பட்ட நேரத்தில், சந்தையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.400 ஆக இருந்தது. அந்த கணக்கின்படி தங்கம் எடுத்திருந்தால் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்று சந்தையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,000க்கு மேல் விற்பனை ஆகிறது. எனவே இப்போது சுரங்கப் பணிகளை மேற்கொள்வது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும்," என்று BGML இன் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய கே.எம்.திவாகரன் தி இந்துவிடம் கூறினார்.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் ஒரு டன் மண்ணில் இருந்து 5.15 கிராம் தங்கம் கிடைக்கும்

சிகுருகுண்டாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையம்

இன்னும் ஐந்து ஆண்டுகளில் சிகுருகுந்தாவில் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என என்று என்.எம்.டி.சி பிபிசியிடம் தெரிவித்தது.

"அக்டோபர் 2022-ல் எங்களுக்கு விருப்பக் கடிதம் கிடைத்தது. இத்திட்டம் தொடர்பான அனைத்து அனுமதிகளையும் பெற்று மூன்றாண்டுகளுக்குள் அரசுடனான உடன்படிக்கையை செய்து முடிப்போம்.

"சிகுருகுந்தா-பிசாநத்தம் ஒரு நிலத்தடி சுரங்கம். இங்கு 18.3 லட்சம் டன் தங்கம் கையிருப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் ஒரு டன் மண்ணில் 5.15 கிராம் தங்கம் கிடைக்கிறது. இங்கு எடுக்கப்படும் தங்கம் சிகுருகுந்தாவில் சுத்திகரிக்கப்படுகிறது. அதன் பின் தங்கம் தயாரிக்கப்படுகிறது.

"முதலில் நாங்கள் இங்குள்ள சுரங்கங்கள் மற்றும் சாலைகளைப் பயன்படுத்தி மூல தங்கத்தைப் பிரித்தெடுப்போம். பின்னர் ஒப்பந்த காலம் தொடங்கி இருண்டு ஆண்டுகளுக்குள் தங்கம் தயாரிக்கப்படும். சுரங்கங்களில் இருந்து நீரை அகற்றுதல், சுரங்கப்பாதைகளுக்குள் வெளிச்சம் மற்றும் காற்று கிடைக்க ஏற்பாடு செய்தல், இயந்திரங்கள் பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

"இந்தச் சுரங்கங்களில் இருந்து மொத்தம் சுமார் 7 டன் தங்கம் எடுக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிகுருகுந்தா-பிசாநத்தம் சுரங்கங்களை மீண்டும் தோண்டினால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் பொருளாதார மேம்பாடும் ஏற்படும். பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்," என்று என்.எம்.டி.சி சார்பில் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தற்போது என்.எம்.டி.சி ரூ.450 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகுருகுந்தா சுரங்கங்களுக்கு அருகில் 650 ஏக்கர் நிலம் என்.எம்.டி.சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பலமனேரு சுரங்க துணை இயக்குநர் வேணுகோபால் பிபிசியிடம் தெரிவித்தார்.

“சிகுருகுந்தா மற்றும் பிசாநத்தத்தில் 650 ஏக்கர் தங்கச் சுரங்கத்திற்காக ஒதுக்கியுள்ளோம். பி.ஜி.எம்.எல்க்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் என்.எம்.டி.சி சுரங்கப் பணிகளைத் தொடரும். வனத்துறை, சுற்றுச்சூழல் அனுமதி, தடையில்லா சான்றிதழ்கள் என அனைத்தும் சமர்ப்பித்த பிறகு அவர்களுக்கு குத்தகை வழங்கப்படும். இதற்கான LOE (லெட்டர் ஆஃப் இன்டென்ட்) 2022ல் வெளியிடப்பட்டுள்ளது," என்று வேணுகோபால் கூறினார்.

குப்பம் தங்கச் சுரங்கத்தை மீண்டும் தோண்ட முடியுமா?

குப்பம் தங்கச் சுரங்கங்களை மீண்டும் தோண்ட வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள 8 சுரங்கப்பாதைகளில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா பணியாளர்கள் பெரிதும் தேவைப்படுவார்கள். அந்த கணக்கீட்டின் அடிப்படையில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுரங்கத்தைச் சுற்றி சுமார் 20 கிராமங்கள் உள்ளன.

‘‘ஏற்கனவே குப்பம் தொகுதியில் இருந்து பத்தாயிரம் இளைஞர்கள் வேலைக்காக பெங்களூருவுக்குச் சென்று வருகிறார்கள். சுரங்கங்கள் தொடங்கினால் இப்பகுதியிலேயே எங்களைப் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த பகுதி பொருளாதா ரீதியாக முன்னேற்றமடையும். குப்பம் நகருக்கு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைக்கும்," என்று தங்கனப்பள்ளியைச் சேர்ந்த ராஜேந்திரபிரசாத் பிபிசியிடம் கூறினார்.

மீண்டும் அகழாய்வு தொடங்கினால் கிராம பஞ்சாயத்துகளின் வருமானம் பெருகும் என சங்கனப்பள்ளி சார்பஞ்ச் அமர்நாத் தெரிவித்தார்.

“சங்கனப்பள்ளி மற்றும் ஓ.என்.கொத்தூர் பஞ்சாயத்துகளுக்கு செஸ் வரிகள் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சுரங்கங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் மேலும் பேசுகையில் கூறினார்.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, மீண்டும் தங்கம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஊராட்சிகளுக்கும் வரி வருவாய் கிடைக்கும்

இழப்பீடு கோரி வழக்கு

சிகுருகுந்தா தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்ட நேரத்தில், கே.ஜி.எஃப் உட்பட மொத்தம் 4,600 தொழிலாளர்கள் சுரங்கங்களில் பணிபுரிந்ததாக சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாரத் கோல்ட் மைன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணப்பா பிபிசியிடம் கூறுகையில், சுரங்கங்களில் பணிபுரிந்த 1,500 ஊழியர்கள் அந்த நேரத்தில் விருப்ப ஓய்வு பெற்றதாகவும், மேலும் 3,100 பேர் சுரங்கங்கள் மூடப்பட்ட நேரத்தில் சுரங்கங்களில் வேலை செய்து வந்ததாகவும் கூறினார்.

சுரங்கங்கள் மூடப்பட்டதால், அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் வேலைகளை இழந்ததாகவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய 50% இழப்பீடு இன்னும் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பாக சட்டப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, 20 ஆண்டு காலம் சுரங்கத்தில் பணிபுரிந்த ஓ.என்.கொத்துகுருவைச் சேர்ந்த ராஜப்பா, மீண்டும் சுரங்கத் தொழில் தொடங்கினால் தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என நம்புகிறார்.

"ஆயிரம் பேர் இருந்தால் நிறுவனத்தைத் தொடர்வோம் என்றார்கள். வேலையை விட்டு யார் செல்வது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் 3,100 பேர் சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். 2001ல் சுரங்கங்கள் மூடப்பட்ட நிலையில், 2007ல் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஸ்பெஷல் டெர்மினல் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (எஸ்டிபிபி) குஜராத் பேக்கேஜ் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் கீழ் வழங்கப்பட்ட சேவைக்கு ஆண்டுக்கு 35 நாட்கள் வீதமும், மற்றும் மீதமுள்ள சேவைக்கு ஆண்டுக்கு 25 நாட்கள் வீதமும் இழப்பீடு அளிக்கப்பட்டது. அதுவும் 50 சதவீதம்தான் வழங்கப்பட்டது. இதனால், பத்து ஆண்டு பணிக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.

அப்போது மாதச் சம்பளம் ரூ.4,300. மீதமுள்ள 50 சதவீதம் சொத்தை விற்ற பின் தரப்படும் என்றனர். ஆனால் இன்னும் தீர்வு காணவில்லை. நீதிமன்றம் சென்றோம். இந்த வழக்கு பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது,'' என்று ராமகிருஷ்ணப்பா தெரிவித்தார்.

20 ஆண்டுகளாக சுரங்கத்தில் பணிபுரிந்த ஓ.என்.கொத்துகுருவைச் சேர்ந்த ராஜப்பா, மீண்டும் சுரங்கத் தொழில் தொடங்கினால் தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்றும், தங்களுக்கு நியாயமான இழப்பீடும் கிடைக்கும் என்றும் நம்புகிறார்.

“நான் நிரந்தரம் ஆவதற்கு முன்பு சிகுருகுண்டாவில் ஐந்து வருடங்கள் வேலை செய்தேன். நிரந்தரமான பின்னரும் 15 வருடங்கள் செய்தேன். கடைசியில் முழுமையான இழப்பீடும் அளிக்காமல் நிறுத்திவிட்டனர். இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. அது கிடைக்குமா, கிடைக்காதா என்று காத்திருக்கிறோம். எனக்கு 63 வயதாகிறது. சுரங்கங்கள் திறக்கப்பட்ட பிறகு எனக்கு வேலை கொடுத்தால் செய்வேன். ஆனால் அந்த வேலையை என் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் வயதாகிவிட்டது, அவர்கள் அதைச் செய்வார்கள். அப்போது எனது சம்பளம் ரூ.4,500. மூடப்பட்ட பிறகு, இழப்பீடாக இரண்டு லட்சம் வழங்கப்பட்டது. 23 ஆண்டுகளாக முழு இழப்பீடு கேட்டால், இன்று நாளை என அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது," என்றார் ராஜப்பா.

சுரங்கங்களில் பணிகள் நடந்து வரும் நிலையில், மூன்று ஷிப்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் நடந்ததாக அவர் கூறினார். குழிபறித்தல், தோண்டுதல் போன்ற வேலைகளை செய்து வந்ததாகத் தெரிவித்தார்.

தரையில் இருந்து 400 அடி ஆழத்தில் நடக்கும் பணி மிகவும் ஆபத்தானது என்று கூறிய ராஜப்பா, உள்ளே மிஷின் மூலம் துளையிட்டு, குண்டுவெடிப்பு நடத்தி மூல தாதுவை அங்கிருந்து பெட்டியில் போட்டு அனுப்புவார்கள்.

ஒருமுறை பூமிக்கு அடியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கண்கள் இருண்டு விட்டதாக ராஜப்பா கூறினார்.

"நாங்கள் 8 அடி அகலம் மற்றும் 8 அடி உயரத்தில் வெடி வைப்போம். அது வெடிக்கும் போது உள்ளே மிக அதிகமான வெப்பம் பரவும். அங்கே காற்றோட்ட வசதியும் இருக்காது. 400 அடி ஆழத்தில், காற்று புகாத இடத்தில் இருப்பது பெரிய பிரச்னை. அதனால் ஏற்படும் விளைவுகளின் போது எதுவும் செய்ய முடியாத நிலையே இருக்கும். நானும் ஒரு முறை கண்கண் இருட்டி கீழே விழுந்தேன். பின்னர் என்னை அங்கிருந்து எடுத்து வெளியில் கொண்டு வந்தனர். அதன் பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான் 15 ஆண்டுகளுக்கு இதுபோன்ற அனைத்து வேலைகளையும் செய்தேன், ”என்று அவர் நினைவு கூர்ந்தார்.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, சுரங்கம் தோண்ட தனது நிலத்தைக் கொடுத்துவிட்டு பின்னர் அதே சுரங்கத்தில் கூலி வேலை செய்த முனிசாமி

நில உரிமையாளர்களாக இருந்தவர்கள் அந்த நிலங்களை ஒப்படைத்து விட்டு கூலித் தொழிலாளர்களாக மாறினர்

இதே சிகுருகுண்டா சுரங்கத்திற்காக தனது நிலத்தைக் கொடுத்த ஓ.என்.கொத்தூரைச் சேர்ந்த முனிசாமி, அதே சுரங்கத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

சுரங்கம் மூடப்படுவதற்கு முன் 1000 ரூபாய் சம்பளத்திற்கு மூன்று மாதங்கள் வேலை செய்த அவருக்கு, உடல் நலக்குறைவால் கால் அகற்றப்பட்டது. சுரங்கங்கள் திறக்கப்பட்டு, தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் கால் அகற்றப்பட்டதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக முனிசாமி கூறுகிறார்

இதே சிகுருகுண்டா சுரங்கத்திற்காக தனது நிலத்தைக் கொடுத்த ஓ.என்.கொத்தூரைச் சேர்ந்த முனிசாமி, அதே சுரங்கத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

சுரங்கம் மூடப்படுவதற்கு முன் 1000 ரூபாய் சம்பளத்திற்கு மூன்று மாதங்கள் வேலை செய்த அவருக்கு, உடல் நலக்குறைவால் கால் அகற்றப்பட்டது. சுரங்கங்கள் திறக்கப்பட்டு, தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

“எங்கள் நிலங்களை சுரங்கங்களுக்காக கொடுத்தோம். அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டது. நான் ஒப்பந்தத்தின் கீழ் வேலை செய்தேன். நாங்கள் 1981 இல் பணியில் அமர்த்தப்பட்டோம். ஆனால் இந்த சுரங்கப் பணிகள் 2001 இல் நிறுத்தப்பட்டன. பிறகு அவர்கள் நிறைய வேலைகளை அளித்தனர். இந்த வேலைகளைச் செய்ய ஒரு நாளைக்கு பத்து ரூபாய் 50 பைசா கொடுப்பார்கள்.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, முனிசாமி பணியாற்றிய போது வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையை காட்டி பழைய நினைவுகளை அசைபோட்டார்

சுரங்கங்களை மூடுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, எனக்கு மாதம் ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, சுரங்கங்கள் மூடப்பட்டன. அனைத்து நிலுவைத் தொகையும் ஒரே நேரத்தில் ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது. அங்கே ஜெனரேட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தேன். ஆனால் அதே வேலைகள் தான் வழங்கப்படும் எனக்கருத முடியாது. நான் இப்போது ஊனமுற்றவன். அதனால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்,'' என்றார் முனிசாமி.

சித்தூர் தங்கச் சுரங்கங்களின் வரலாறு என்ன?
படக்குறிப்பு, சுரங்கப் பணிகளைச் சார்ந்திருந்த அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்கிறார் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்

'தீர்வில்லாமல் அகழ்வுப் பணியா?'

சுரங்கத் தொழிலாளர்களின் ஹெல்மெட்கள் அனைத்தும் இருண்ட நிலத்தடியில் நன்றாகப் பார்க்க உதவும் விளக்குகளைக் கொண்டுள்ளன. அவற்றின் பேட்டரிகள் இடுப்புக்கு அருகில் உள்ள பெல்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சிகுருகுண்டா சுரங்கத் தொழிலாளர்களும் இத்தகைய விளக்குகளைப் பயன்படுத்தினர். சீனிவாசபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மின்வாரியத்தில் தங்கி தொழிலாளர்களின் ஹெல்மெட் விளக்குகளின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் ஆவதை உறுதி செய்து வந்தார்.

இந்த சுரங்கங்களை மீண்டும் திறக்கும் முன், இது போன்ற பணிகளை நம்பியிருந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்கிறார் அவர்.

“பேட்டரி எட்டு மணி நேரம் எரியும் உத்தரவாதம் கொண்டது. இடுப்பில் பேட்டரி பெல்ட்டை அணிந்துகொண்டு அதிலிருந்து ஹெல்மெட்டில் உள்ள மின் விளக்கை இணைக்கவேண்டும். எங்கு பார்த்தாலும் தெரியும் வகையில் வெளியிலும், உள்ளும் பார்க்கும் வகையில் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். எனக்கு ரூ.4,000 சம்பளம் கிடைத்தது. முதலில் நாளொன்றுக்கு ரூ.7- வீதம் தினக்கூலியாக எனது பணியைத் தொடங்கினேன்.

தொடர்ந்து தினக்கூலி வேலை செய்துவந்த நிலையில், பின்னர் நிலையான பணி வழங்கப்பட்டது. . விருப்ப ஓய்வுக்கு ரூ. 5-6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. நான் விருப்ப ஓய்வு பெறவில்லை. சுரங்கங்கள் மூடப்பட்ட பின் முழுமையான இழப்பீடு வழங்கப்படாததால் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. எங்களை வேலைக்கு அமர்த்தாமல் எப்படி மீண்டும் சுரங்கம் தோண்டுவார்கள்? எங்கள் வழக்கு 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் உள்ளது. இன்னும் முடிவு கிடைக்கவில்லை. 12 வருடங்கள் வேலை செய்த என்னை நிறுத்திவிட்டார்கள். நானாக பணியில் இருந்து நிற்கவில்லை,'' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: