அரசுப் பணியில் சேர பெண்களுக்கும் மார்பளவு நிர்ணயம் - அளவெடுப்பது எப்படி? ஹரியானா அரசு என்ன சொல்கிறது?

ஹரியானா, வனத்துறை, அரசுப் பணி, பெண்கள், மார்பளவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சத் சிங்
    • பதவி, பிபிசிக்காக

ஹரியானா வனத்துறையில் சரகர், துணை சரகர், வனவர் பதவிகளுக்கு ஆள் எடுப்பதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

ஹரியானா பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடல் தகுதி தேர்வில் பெண் தேர்வர்களின் மார்பளவு வேண்டும் என்ற விதி குறிப்பிடப்பட்டுள்ளது.

சரகர், துணை சரகர் மற்றும் வனவர் பதவிகளுக்கு பெண் தேர்வர்களின் மார்பகங்கள் விரியாத நிலையில் 74 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 79 செ.மீ. அளவும் இருக்க வேண்டும் என ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோகர் லால் கட்டார் அரசின் எதேச்சதிகார செயல் இது என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இந்த அறிவிப்பில் ஆண்களோடு பெண்களுக்கும் மார்பளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு மார்பளவு விரியாத நிலையில் 79 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 84 செ.மீ. அளவும் இருக்க வேண்டும்.

மற்ற பதவிகளுக்கு வெவ்வேறு அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சை

ஹரியானா, வனத்துறை, அரசுப் பணி, பெண்கள், மார்பகங்கள்

பட மூலாதாரம், Randeep Singh Surjewala twitter

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜெவாலா இதை எதிர்த்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநிலத்தில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இந்த அறிவிப்பை பெண்களுக்கு எதிரானது என கூறுகின்றனர். மாநிலத்தின் பெரிய தலைவர்களும் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜெவாலா இதை எதிர்த்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பெண்களின் கண்ணியத்தோடு விளையாடுகிறது என்றார்.

தனது டிவிட்டர் பக்கத்தில், “கட்டார் அரசின் புதிய துக்ளக் ஆணை. வன சரகர், துணை சரகர் பதவிகளுக்கு ஹரியானா மகள்களின் மார்பகங்கள் அளவிடப்படும்,” என்று சுர்ஜெவாலா பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அவர், “பெண் காவலர்களை, காவல் ஆய்வாளர்களை பணியமர்த்தும் போது கூட ஹரியானாவில் பெண் தேர்வர்களுக்கு மார்பளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பது கட்டாருக்கும் - துஷ்யந்த் சவுத்தாலாவுக்கும் தெரியாதா? மத்திய காவல் அமைப்பிலும் கூட பெண்களுக்கு மார்பளவை அளவிட எந்த விதியும் கிடையாது என கட்டார் அவர்களுக்கும், துஷ்யந்த் சவுத்தாலாவுக்கும் தெரியாதா? பிறகு ஏன் வன சரகர், துணை சரகர் பதவிகளுக்கு ஆள் எடுக்கும் போது, ஹரியானாவின் மகள்களை அவமானப்படுத்தும் இந்த கொடூர, சிறுபிள்ளைத்தனமான, முட்டாள்தனமான விதி?”என்று பதிவிட்டிருக்கிறார்.

சுர்ஜெவாலா , “கட்டார் உடனடியாக ஹரியானாவின் மகள்களிடம் மன்னிப்பு கேட்டு இந்த விதியை திரும்ப பெற வேண்டும். இதை ஹரியானா இளைஞர்களின் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்திருக்கிறார்.

ஹரியானா, வனத்துறை, அரசுப் பணி, பெண்கள், மார்பளவு

பட மூலாதாரம், Getty Images

இந்திய தேசிய லோக் தல் கட்சியின் பொதுச் செயலாளர் அபே சவுத்தாலா இந்த அறிவிப்பை சிறுபிள்ளைத்தனமானது, பெண்களுக்கு எதிரானது, அவமானமானது என்று கூறியுள்ளார்.

“இது நமது மகள்களை அவமதிப்பதாகும். பாஜக அரசு இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.

ஹரியானா, வனத்துறை, அரசுப் பணி, பெண்கள், மார்பகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய தேசிய லோக் தல் கட்சியின் பொதுச் செயலாளர் அபே சவுத்தாலா இந்த அறிவிப்பு பெண்களுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

ஹரியானா அரசின் அறிவிப்பு என்ன சொல்கிறது?

வனத்துறையின் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஆண்களைப் போல பெண்களுக்கும் மார்பளவை அளவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு மார்பளவு விரியாத நிலையில் 79 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 84 செ.மீ அளவும் இருக்க வேண்டும்.

பெண் தேர்வர்களுக்கு மார்பளவு விரியாத நிலையில் 74 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 79 செ.மீ. அளவும் இருக்க வேண்டும்.

மற்ற பதவிகளுக்கு வெவ்வேறு அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன

ஹரியானா, வனத்துறை, அரசுப் பணி, பெண்கள், மார்பகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வனத்துறையின் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பெண் தேர்வர்களின் மார்பகங்கள் விரியாத நிலையில் 74 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 79 செ.மீ. அளவும் இருக்க வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறியுள்ளது.

குரூப்-சி ( பகுதி -2) பதவிகளுக்கு உடல் தகுதி தேர்வு மூலம் ஆள் எடுப்பதற்கான அறிவிப்பை ஹரியானா பணியாளர் தேர்வாணையம் ஜூலை 7-ம் தேதி வெளியிட்டது.

இதில் அனைத்து தேர்வுகளும் ஜூலை 13-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் பக்கத்தில் உடல் அளவுகள் குறித்த பிரிவில், ஆண் வன சரகர்கள் மற்றும் பெண் வன சரகர்களுக்கான மார்பவுகள் குறிக்கப்பட்டுள்ளன. மார்பு விரிந்த நிலையிலும் விரியாத நிலையிலும் இருக்க வேண்டிய அளவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பை எதிர்க்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள்

ஹரியானா, வனத்துறை, அரசுப் பணி, பெண்கள், மார்பகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமூகச் செயற்பாட்டாளர் சுவேதா துல், இந்த அறிவிப்பு 'பெண்களை துன்புறுத்தும் செயல்' என்கிறார்.

ஹரியானாவில் கடந்த பல ஆண்டுகளாக கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் குரல் கொடுத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் சுவேதா துல், இந்த அறிவிப்பினால் வனத்துறைக்கு விண்ணப்பிக்கும் பல பெண்கள் அச்சப்படுவதாக கூறுகிறார். மார்பளவு எப்படி அளவிடப்படும் என்பது பெண்களுக்கு தெரியவில்லை என்கிறார் அவர்.

“பெண்களின் உடல்களை பரிசோதனை செய்ய அவர்களின் கணவர்கள் மறுக்கிறார்கள். எதற்காக இதை செய்கிறார்கள் என கேட்டால் அதற்கு அவர்களின் பதில் என்ன? இவை எதுவுமே புரியவில்லை. இவை எல்லாமே பெண்களை துன்புறுத்தும் செயல்,” என்கிறார் அவர்.

சுவேதா, “மத்திய பிரதேசத்தில் 2017-ல் இதே போன்ற தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்ப்புகள் காரணமாக அரசு அதை திரும்பப் பெற வேண்டியிருந்தது,” என்கிறார்.

ஹரியானாவில் காவல்துறை பணியிடங்களுக்கு இதுபோன்ற தேர்வுகள் அவசியம் இல்லை என்றும் கூறும் அவர், “மத்திய படைகளில் சேர்வதற்கு இது போன்ற உடல் தகுதிகள் பெண்களுக்கு விதிக்கப்படவில்லை,” என்கிறார். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் கூட இது போன்ற விதியோ சட்டமோ இல்லை,” என்கிறார்.

“பெண்களின் நுரையீரல் திறனை அரசு அளக்க வேண்டும் என்றால் ஸ்பைரோமீட்டர் எனும் கருவி கொண்டு அளக்கலாம். ஆனால் விரிந்த, விரியாத மார்பகங்களை அளவிடுவது ஏன் என புரியவில்லை,” என்கிறார்.

ஹரியானா அரசின் அறிவிப்புக்கு பின், ஜம்மு காஷ்மீரில் பெண் வன சரகர்களை பணி அமர்த்தும் விதிகளை கவனித்ததாகக் கூறுகிறார்.

“அங்கு பெண்களின் மார்பளவை அளவிட வேண்டும் என எந்த விதியும் இல்லை. ஹரியானாவோ சமவெளி பகுதியாகும். இங்கு அப்படி ஒரு விதிக்கான அவசியமே இல்லை," என்கிறார்.

அரசின் விளக்கம் என்ன?

ஹரியானா, வனத்துறை, அரசுப் பணி, பெண்கள், மார்பகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பணி அமர்த்துவதில் ஏற்கெனவே என்ன நடைமுறைகள் உள்ளனவோ அவையே தான் பின்பற்றப்படுவதாக ஹரியானா வனத்துறை அமைச்சர் கன்வர்பால் குஜ்ஜார் கூறினார்

ஹரியானா பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, ஹரியானாவின் கல்வி மற்றும் வனத்துறை அமைச்சர் கன்வர்பால் குஜ்ஜார் அப்படி எதுவும் தன் கவனத்துக்கு வரவில்லை என்றார்.

“பணி அமர்த்துவதில் ஏற்கெனவே என்ன நடைமுறைகள் உள்ளனவோ அவையே தான் பின்பற்றப்படுகின்றன. இது குறித்து வேறு எதுவும் தெரியாது. சட்டப்படி எது சரியான நடவடிக்கையோ அது செய்யப்படும்," என்று வனத்துறை அமைச்சர் கூறினார்.

இது குறித்து ஹரியானா பணியாளர் தேர்வாணையத் தலைவர் போபால் சிங் கட்ரி கூறும் போது, “இந்த பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடும் போதே இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை பெண் மருத்துவர்களும் பெண் பயிற்சியாளர்களும் மட்டுமே மேற்கொள்வர்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: