புதிதாக தொழில் தொடங்க ரூ.1.5 கோடி வரை கடன் வழங்கும் தமிழ்நாடு அரசு - எப்படி பெறுவது?

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் புதிதாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சமீபத்தில் ஒரு கடன் மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் குறித்து நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 55 வயதுக்கு உட்பட்டவர்கள், புதிதாகத் தொழில் தொடங்க, 1.5 கோடி ரூபாய் வரை கடன் பெறாலாம். இது என்ன திட்டம்? இதன் மூலம் எப்படி கடன் பெறுவது?

அம்பேத்கர் பெயரில் புதிய திட்டம்

தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் அறிவித்த இந்தத் திட்டத்திற்கு, ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ (Annal Ambedkar Business Champions Scheme) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது, பிரத்யேகமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமுதாயங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்குக் கடன் வழங்கும் திட்டம்.

இதை தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை (MSME Department) செயல்படுத்துகிறது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உற்பத்தி, வணிகம், மற்றும் சேவை சார்ந்த எந்தவித புதிய தொழில் தொடங்கவும் இதன் மூலம் கடன் பெறலாம்

இதன் மூலம் என்ன பயன்கள் கிடைக்கும்?

நேரடி வேளாண்மைக்காக இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. அதை தவிர்த்து, உற்பத்தி, வணிகம், மற்றும் சேவை சார்ந்த எந்த வித புதிய தொழில் துவங்கவும் இதன் மூலம் கடன் பெறலாம்.

புதிய தொழில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35% முதலீட்டு மானியம் (capital subsidy) வழங்கப்படும். அதிகபட்சத் தொகையாக 1.5 கோடி ரூபாய் வரை கடன் பெறாலாம்.

மொத்த திட்டத்தில் 65 % வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்படும். மீதமுள்ள 35 % அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். இதுபோக தொழில் தொடங்க வங்கியில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 6% வட்டியை அரசே வங்கியில் செலுத்திவிடும்.

இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது

கடன் பெறத் தகுதியானவர்கள் யார்?

பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறத் தகுதியானவர்கள்.

தனி நபர்கள் மட்டுமல்லாது, முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

பயனாளிகளின் வயது 18 முதல் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லை.

புதிய தொழில்கள் மற்றும் ஏற்கெனவே இருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் இரண்டுக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய தொழில்கள் மற்றும் ஏற்கெனவே இருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் இரண்டுக்கும் இத்திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம்

விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட ஆவணங்கள் தேவை:

  • பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் /பள்ளி பதிவுத்தாள் (இரு நகல்கள்)
  • குடும்ப அட்டை (இரு நகல்கள்)
  • குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை (இரு நகல்கள்)
  • தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்) அசல் மற்றும் நகல்
  • விலைப்பட்டியல் (Quotation) அசல் மற்றும் நகல் (GST எண்ணுடன் உள்ள விலைப்பட்டியல்)
  • சாதிச் சான்றிதழ் (இரு நகல்கள்)
  • உறுதிமொழிப் பத்திரம் நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கியது

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டத்தின் கீழ் கடன் மானியம் பெறுவதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

https://msmeonline.tn.gov.in/aabcs/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் (Apply Online) என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் புதிய விண்ணப்பம் என்ற தேர்வில் சென்று, தங்கள் தகவல்களைக் கொடுத்து புதிய கணக்கைத் தொடங்க வேண்டும்.

அதன்பின் தங்கள் ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: