மகளிர் உரிமைத் தொகை: அரசின் தகுதி வரையறை சரியானதா?

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 07) வெளியிட்டுள்ளது.
    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயனடைய முடியும் என்பதற்கான வரையறை ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு உதவித் தொகை கிடையாது என்பன போன்ற வரையறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆனபோதும் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று குறிப்பிட்டார்.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதியானவர்கள் யார், பயன்பெற தகுதி இல்லாதவர்கள் யார் போன்ற வரையறைகள் குறித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்துக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்

இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு கீழ்கண்ட வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன;

குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது

யாரெல்லாம் பயன்பெற தகுதி இல்லாதவர்கள்?

ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது.

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது.

சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.

ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கிடைக்காது.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.

ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது.

விதிவிலக்காக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை எழுப்பியுள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது.

அடுத்த தகுதி, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று, சென்ற ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்தது. இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என்ற விசித்திரமான நிபந்தனையை இட்டுவிட்டு, ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என்று எப்படிக் கூறுகிறார் முதலமைச்சர்?

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்கிறார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது பல்வேறு வரையறைகளை வகுப்பது ஏன்? அப்போதே, தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருக்கலாமே,” என கேள்வி எழுப்புகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “தகுதியுள்ள குடும்பத் தலைவிகளை சமூக தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்போம் என்று கூறுகிறார்கள். அப்படி கணக்கெடுத்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள திமுகவினர் மூலம் அவர்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே சேர்க்க தன்னார்வலர்களுக்கு அழுத்தம் தரப்படலாம். ஆவணங்கள் தாக்கல் செய்ய தேவையில்லை என்பது குளறுபடிக்கே வழிவகுக்கும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி அனைத்து குடும்ப தலைவிகளுக்குமே மகளிர் உரிமைத் தொகையை கொடுத்துவிட்டு போய்விடலாமே? Ballot is powerfull than Bullet என்று கூறுவார்கள். திமுகவின் இந்த செயல்கள் எல்லாம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்.” என்றார்.

மகளிர் உரிமைத் தொகை
படக்குறிப்பு, தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது பல்வேறு வரையறைகளை வகுப்பது ஏன் என அதிமுகவின் ஜெயகுமார் கேள்வி எழுப்புகிறார்.

எப்படி செயல்படுத்துவார்கள் என்பதில் தெளிவில்லை

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் இதுகுறித்து பேசும்போது, “சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்றவற்றை வைத்திருப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்பது நல்ல விசயம், அதேபோல், மக்கள் பிரதிநிதிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் என்பது எந்தளவு சரியாக இருக்கும் என தெரியவில்லை.

இத்திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியானபோது, தங்களுக்கும் 1000 ரூபாய் கிடைக்கும் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் மனநிலையாக இருந்தது. தற்போது இந்த வரையறைகள் காரணமாக சிலர் ஏமாற்றம் அடையலாம். இது அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதனால் திமுகவினர் மட்டுமே பலன் அடைவார்கள் என்ற எண்ணமும் மக்களிடம் ஏற்படக்கூடும்.” என்றார்.

வருமான உச்ச வரம்பு 2.5 லட்சம் ரூபாய் என்பது சரியானதுதான். ஆனால் ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் உரிமைத் தொகை பெற முடியாது என்பது தேவையில்லாதது என்று மூத்த செய்தியாளர் ப்ரியன் கூறுகிறார்.

“பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று தேவையில்லை என்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். `வருமான சான்றிதழோ, நிலம் சம்பந்தமான ஆவணங்களோ சமர்ப்பிக்காமல் ஒருவர் தகுதியானவர் என்பதை எப்படி அடையாளம் காணமுடியும்? உண்மையான பயனர்களுக்கு உரிமைத் தொகை போய் சேர வேண்டும் என்றுதான் முதல்வர் கூறுகிறார். அப்படியிருக்கும்போது ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை என்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை” என்றும் கேள்வி எழுப்புகிறார்.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் உரிமைத் தொகை பெற முடியாது என்பது தேவையில்லாதது என்று மூத்த செய்தியாளர் ப்ரியன் கூறுகிறார்

கணவரின் வருவாயை வைத்து மனைவியின் தகுதியை எப்படி முடிவு செய்ய முடியும்?

ஆணின் வருவாயை வைத்து மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதியை எப்படி வரையறை செய்ய முடியும் என கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இல்லை என்று கூறுகிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் கணவர்கள் தங்கள் மனைவியிடம் செலவுக்கு பணத்தை தருவதே இல்லை.

எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டில் கணவர் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் உள்ள மனைவி இத்திட்டத்திற்கு தகுதி பெற முடியாது. அந்த கணவர் தனது மனைவிக்கு செலவுக்கு பணமே தராமல் இருந்தால், அப்பெண் தனது தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்வார். கணவரின் வருவாயை வைத்து மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதி இல்லை என்று ஒரு பெண்ணை எப்படி நிராகரிக்க முடியும்.” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதேபோல், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள பெண்கள், விவாகரத்தான பெண்கள் தொடர்பாகவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: