இந்திய தூதரகங்களை குறி வைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டம் - கனடாவை எச்சரித்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் இன்று(ஜூலை 8) பேரணி மேற்கொள்கின்றனர்.
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜூலை 8ஆம் தேதி காலிஸ்தான் சுதந்திரப் பேரணியை ஏற்பாடு செய்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு சுவரொட்டி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சுவரொட்டிகளில், `இந்தியாவை கொல்` என்ற வாசகம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. 'நீதிக்கான சீக்கியர்கள்' என்ற பிரிவினைவாத அமைப்பு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, பர்மிங்ஹாமில் உள்ள கன்சல் ஜெனரல் ஷஷாங்க் விக்ரம் ஆகியோரது புகைப்படங்களும் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இதேபோன்ற பிற சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜூலை 8ஆம் தேதி இந்தப் பேரணியைத் தொடங்கி, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்திய தூதரகங்களை முற்றுகையிடுவது நோக்கமாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில் ஒரு சிலர் பதிவிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பதிவுகளில் அமெரிக்காவை சேர்ந்த முக்கிய காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசுவது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது. வீடியோவில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் போன்ற முக்கிய தலைவர்களை இந்திய அரசு கொன்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பிய நாடுகளில் என எங்கு இருந்தாலும் சரி நிஜ்ஜாரின் படுகொலைக்கு அனைத்து இந்திய தூதரக அதிகாரிகளுமே பொறுப்பாவார்கள்.
ஏனென்றால் வன்முறையைப் பயன்படுத்தும் தற்போதைய இந்திய அரசின் பிரதிநிதிகள் அவர்கள்,” என்று பன்னுன் வீடியோவில் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் இந்தப் பேரணிகள் அமைதியான முறையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தூதரகங்கள் குறிவைக்கப்படுவது ஏன்?
காலிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கு நாடுகளில் போராட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் புதிதல்ல. பலமுறை அவர்கள் இவ்வாறு நடத்தியுள்ளனர்.
எனினும் இன்று திட்டமிடப்பட்டுள்ள பேரணிகளுக்கு முக்கிய காரணம், கடந்த ஜூன் 19ஆம் தேதி கனடாவின் வான்குவாரில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம்.
சமீப மாதங்களில் உயிரிழந்த 4 முக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்களில் நிஜ்ஜாரும் ஒருவர். இவர்களின் மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஜூன் 15ஆம் தேதி பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள மருத்துவமனையில் கே.எல்.எஃப் தலைவர் அவதார் சிங் கண்டா மர்மமான முறையில் உயிரிழந்தார். விஷத்தின் காரணமாக அவரின் மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், FB/VIRSA SINGH VALTOHA
பாகிஸ்தானின் லாகூரில் கடந்த மே 6ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய 2 நபர்கள் காலிஸ்தான் கமெண்டோ ஃபோர்ஸ் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் என்பவரை சுட்டுக்கொன்றனர்.
இதேபோல், லாகூரில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி கே.எல்.எஃப் அமைப்பைச் சேர்ந்த ஹர்மீத் சிங் என்பவர் கொல்லப்பட்டார். உள்ளூர் குழுவால் இவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு நாடுகளிலும் இந்திய அரசுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீவிர போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அம்ரித் சிங்கிற்கு எதிராக மார்ச் மாதத்தில் இந்திய விசாரணை அமைப்புகள் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
பிரிவினைவாத நபர்களின் மரணத்திற்கு இந்திய அரசின் நடவடிக்கைதான் முக்கிய காரணம் என்று இந்திய ஊடகங்கள் கூறவில்லை என்றாலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு எதிரான தாக்குதல்களில் டெல்லி காலிஸ்தானியர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக சில விமர்சகர்கள் ஊகிக்கின்றனர்.
பிரபல ஹிந்தி செய்தி சேனலான ஜீ நியூஸ், இந்தியாவின் வெளிப்புற புலனாய்வு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) ரகசிய பணியின் விளைவாக இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கலாம் என்று சில சமூக ஊடக பயனர்கள் நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு எப்படி எதிர்வினையாற்றுகிறது?
காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் மரணத்தில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அரசு மௌனமாகவே இருக்கிறது.
அதேநேரத்தில் பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் தொடர்பாக அந்நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக இந்திய அரசு பேசியுள்ளது.
இந்திய தூதரகம், தூதர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் சுவரொட்டிகள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்திய தூதர்களின் பாதுகாப்பில் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லியின் சமீபத்திய அர்ப்பணிப்பை இந்திய அரசு கவனித்ததாக குறிப்பிட்ட அவர், எனினும், என்ன நடக்கிறது என்பதை வைத்துதான் அவரை மதிப்பிட முடியும் என்றும் தெர்வித்தார்.
ஜூலை 3ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற எங்கள் நட்பு நாடுகளிடம் இந்த காலிஸ்தானிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். இந்த பயங்கரவாத சித்தாந்தங்கள் நமக்கோ, அவர்களுக்கோ அல்லது நமது பந்தத்திற்கோ நல்லதல்ல. (நாங்கள்) இந்த சுவரொட்டிகள் குறித்த பிரச்னையை எழுப்புவோம்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கான கனடாவின் தூதர் கேமரூன் மேக்கேவை நேரில் அழைத்து தங்களது கவலையையை இந்திய அரசு பதிவு செய்தது.
பயங்கரவாதம் குறித்து விசாரணை நடத்தும் தேசிய புலனாய்வு அமைப்பு, ஏற்கனவே லண்டன், ஒட்டாவாவில் இந்திய தூதரகங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மார்ச் மாதம் ஏற்படுத்தப்பட்ட சேதம் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள தூதரகத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதம், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் ஃபிப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட சேதம் ஆகியவை தொடர்பான வழக்குகளைக் கவனித்து வருகிறது.
இதற்கிடையே, ஜூலை 2ஆம் தேதி இரண்டாவது முறையாக சான் ஃபிரான்ஸிஸ்கோ தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. காலிஸ்தான் ஆதரவாளர்கள், வளாகத்துக்கு தீவைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்திய ஊடகங்கள் என்ன கூறுகின்றன?
தூதரகங்களைக் குறிவைத்து பேரணிகளை நடத்துவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், இந்திய தூதர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்திய ஊடகங்கள் கவலை எழுப்பியுள்ளன.
கனடா உள்ளிட்ட சில நாடுகள் பிரிவினைவாதிகளைக் கட்டுப்படுத்த விரும்பாதது குறித்துப் பல முன்னணி ஊடகங்களும் விமர்சகர்களும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே, காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு தவறிவிட்டார் என்றும் அதற்கு பதிலாக இந்தியா மீது தவறு எனக் கூறுகிறார் என்றும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்துள்ளது.
ஆங்கில செய்தித்தாளான தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, `இந்த விவகாரத்தில் கனடிய அதிகாரிகள் உடனடியாகச் செயல்படத் தவறிவிட்டனர்` என்று தலையங்கத்தில் குறிப்பிட்டது.

பட மூலாதாரம், INDIA TODAY TELEVISION
இந்தியாவின் கண்டனத்தைப் புறந்தள்ளிய கனடா
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் எதிர்ப்புகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் விரிசல் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
ஜூலை 8ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்களால் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் கருத்து சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்த அது பயன்படுகிறது என்றும் இந்தியா தெரிவித்தது.
கனடாவின் வாக்கு வங்கி அரசியலில் ஒரு பகுதியாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதால்தான் அவர்களுடைய செயல்பாடுகள் கனடாவில் அதிகரித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு வியாழனன்று பதிலளித்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “பயங்கரவாதம் தொடர்பாக மென்மையான போக்கைக் கையாளவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக கனடா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எங்கள் நாடு மிகவும் பன்முகத்தன்மை கொண்டது, கருத்து சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் அனைத்து வகையான வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை நாங்கள் எப்போதும் உறுதி செய்வோம்,” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கனடா அரசியலில் அதிகரித்துவரும் சீக்கியர்களின் முக்கியத்துவம்
கனடாவின் கடந்த 1981ஆம் ஆண்டு சிறுபான்மையினரின் எண்ணிக்கை 4.7% ஆக இருந்தது. ஆனால், 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அவர்களுடைய எண்ணிக்கை 22.3% ஆக அதிகரித்துள்ளது. 2036இல் இது 33% சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தரவுகள் கூறுகின்றன.
கனடாவில் சீக்கியர்களின் மக்கள் தொகை அதிகமாகவே உள்ளது. தற்போது தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய வாக்கு வங்கியாகவும் அவர்கள் திகழ்கிறார்கள். உள்ளூர் கவுன்சில்களிலும் சரி, கனடிய நாடாளுமன்றத்திலும் சரி ஏராளமான சீக்கியர்கள் பதவியில் உள்ளனர்.
அதேநேரத்தில், அங்கு நீண்ட காலமாகவே காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்பாடுகளும் இருந்து வருகிறது. 1985இல், காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஏர் இந்திய விமானத்தை வெடிக்கச் செய்தனர். இதில், 268 கனடிய மக்கள் உட்பட 329 பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு தொடர்பாக உறுதியளித்த பிரிட்டன்
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி, இந்த விவகாரத்தில் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார். ஜூலை 8ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்களால் முக்கிய நகரங்களில் நடத்தப்படும் பேரணி தொடர்பாக இந்திய தூதரகங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்திய தூதரகத்தில் நேரடியாகத் தாக்குதல் நடத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
தூதரகத்திற்குப் பாதுகாப்பு வழங்குவது எங்களுடய முதன்மையான கடமை என்பதை இந்திய அரசுக்கும் அதன் தூதர் விக்ரம் துரைசாமிக்கும் தெரிவித்துவிட்டோம்,” என்று ஜேம்ஸ் க்ளெவர்லி குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












