தமிழ்நாடு டி.ஐ.ஜி விஜயகுமார் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கையின் முக்கிய தகவல்கள் - முழு விவரம்

- எழுதியவர், மோகன், பி.சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஜூலை 7ஆம் தேதியன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிஐஜி விஜயகுமார் அதற்கு முந்தைய நாள் இரவே தற்கொலைக்கு தயாரானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கோவை மாநகர காவல் ஆணையர் நேற்று தெரிவித்தார்.
அதோடு, அவரது மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கையில், அவர் நீண்ட நாட்களாக தூக்க மாத்திரையைப் பயன்படுத்தி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நேரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும் விளக்கியுள்ளது.
கோவை மாநகர் ரேஸ் கோர்ஸ் சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. ஜூலை 7ஆம் தேதி அதிகாலை அங்கு பணியிலிருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்

டிஐஜி விஜயகுமார் மரணம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தூக்கம் வரவில்லை என்பதற்காக நீண்ட நாட்களாகவே விஜயகுமார் தூக்க மாத்திரையை உட்கொண்டு வந்ததாக அவரது பாதுகாவலர் ரவிச்சந்திரன் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "தான் தங்கியிருந்த அறைக்கு காலை 6.40 மணிக்கெல்லாம் வந்த விஜயகுமார், தன்னுடைய தூப்பாக்கியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்துக் கேட்டார்.
பின்னர், துப்பாக்கியுடன் அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும்" ரவிச்சந்திரன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் வெளியே வந்து பார்த்தபோது விஜயகுமார் தலையில் ரத்தக் காயத்துடன் கிடந்ததாகக் கூறியுள்ள ரவிச்சந்திரன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, "வரும் வழியிலேயே விஜயக்குமார் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றும் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய நாளே ஏற்பட்ட தற்கொலை எண்ணம்

டிஐஜி விஜயகுமார் முந்தைய நாள் இரவே தற்கொலைக்குத் தயாரானதாக விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது என்று கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் கோவை மாவட்ட காவல் ஆணையர் வெ.பாலகிருஷ்ணன்.
அப்போது, டிஐஜி விஜயகுமாரின் மரணம் தொடர்பாக போலீசாரின் விசாரணையில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
விஜயகுமார் மன அழுத்தத்தில் இருப்பது குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர் சமீபத்தில் டிஐஜியையும் அவரது மனைவியையும் அழைத்து ஐஜி அலுவலகத்தில் வைத்து இரண்டு மணிநேரம் பேசியுள்ளார்.
அப்போது மன அழுத்தம் குறித்துக் கேட்டறிந்த அவர் அதிலிருந்து மீள்வது குறித்து சில வழிமுறைகளைத் தெரிவித்து, ஆலோசனைகளையும் வழங்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் டிஐஜியிடம் பேசியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக ஓசிடி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் அதற்கு அவர் ஒரே மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், மாற்றி மாற்றி வெவ்வேறு மருந்துகளை எடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், “இதுதொடர்பாக இணையதளத்தில் நிறைய குறிப்புகளை எடுத்து ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துள்ளார். அவருடைய மகளை மருத்துவப் படிப்புக்குத் தயார் செய்துவிட்டதாகவும் அதுகுறித்து சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக, காவல்துறைக்கு வெளியிலுள்ள நண்பர்களிடம் அவர் கூறியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
டிஐஜி தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவு, பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியபோது தனது தனிப் பாதுகாவலரிடம் ‘துப்பாக்கியெல்லாம் எங்கே வைப்பீர்கள், பத்திரமாக உள்ளதா’ எனக் கேட்டு, வைத்திருந்த இடத்தையும் பார்வையிட்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை கூறுகிறது என்றும் காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறினார்.
துப்பாக்கியை டிஐஜியிடம் எடுத்துக் கொடுத்த காவலர் மீது எந்தக் குற்றமும் இல்லை, அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது என்றும் காவல் ஆணையர் குறிப்பிட்டார்.
டி.ஐ.ஜி.யின் தாயார் வேதனை

டிஐஜி விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டபோது, அவரது தாயார், தன் மகன் காவல்துறையில் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்ததாகக் கூறி கதறி அழுதார்.
அவரது இறுதி ஊர்வலம் ஜூலை 7ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல் நடைபெறக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அவரது உடலுக்கு காவல்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகுமார் மறைவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவருடைய உடலுக்கு காவல்துறை இயக்குநர் அஞ்சலி செலுத்தினார். காவல்துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் தனது மகன் பணியாற்றியதாகக் கூறியபடி டிஐஜி விஜயகுமாரின் தாயார் கண்ணீர்விட்டுத் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
ஒரேயொரு பிள்ளையும் என்னை விட்டுச் சென்றுவிட்டார். என் மகனை எந்தத் தெய்வமும் காப்பாற்றவில்லையே,” என்று டிஐஜியின் தாயார் கதறி அழுதார்.

“என் மகனை இழந்து நிற்கிறேன். அவன் ஒரு துரும்புக்கூட தீங்கு நினைக்காத என் மகனை இழந்துவிட்டு நிற்கிறேனே!” என்று விஜய்குமாரின் தாயார் ஆறுதல் கூற வந்த டிஜிபி சங்கர் ஜிவாலிடம் கண்ணீருடன் பேசினார்.
அவரின் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்ட விஜயகுமாரின் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் ஏராளமான அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகுமார் ஐபிஎஸ் நெருங்கிய நண்பர்கள் ஆன காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகுமாரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம் தேனி மாவட்டம் ரத்தினம் நகரில் நடைபெற்றது.
ரத்தினம் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் காவல்துறையினர் கால்நடையாகப் பங்கேற்றனர்.
டிஐஜியின் உடலை அலங்கார வாகனத்தில், டிஜிபி சங்கர் திவால் உட்பட பல காவல்துறை உயரதிகாரிகளே சுமந்து சென்று வைத்தனர்.

பொதுமக்களும் ஊர்வலத்தில் ஆங்காங்கே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வழிநெடுக, டிஐஜியின் உடலம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்துடனேயே அனைத்து காவல்துறையினரும் நடந்து சென்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், இறுதிச்சடங்கின்போது காவலர்கள் வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க துப்பாக்கிச்சூடு நடத்தி மரியாதை செலுத்தினர்.
யார் இந்த டி.ஐ.ஜி. விஜயகுமார்?
தேனியை பூர்விகமாக கொண்ட விஜயகுமார் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு முன்பு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். அந்த பணியிலிருந்த போதே ஐ.பி.எஸ். தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் சென்னையில் அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்தார். அதைத் தொடர்ந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கோவை சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஆறு மாதங்களாக கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது சொந்த ஊரான தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
ஜூலை 7ஆம் தேதி காலை நடைப்பயிற்சி முடித்த பிறகு முகாம் அலுவலகத்துக்கு வந்த பிறகு, தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேற்றைய தினம் இரவு காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார்.
கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக சக அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு கோவை மேற்கு மண்டல காவக் துறை தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மற்றும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார்.
விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான தேனியில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு ஜூலை 7ஆம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

பட மூலாதாரம், M K Stalin
விஜயகுமார் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் ஜூலை 7ஆம் தேதி அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்." என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐ விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
"காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே திரு.விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை தூண்டப்பட்டதா? - அண்ணாமலை கேள்வி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் பாஜக சார்பாக டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
"கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் மறைவு அனைவருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் 9 ஆண்டுகள் காவல்துறையில் இருந்தேன் என்பதால் எனக்கு கூடுதல் துக்கம். காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரிடமும் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் பெற்றவர்,” என்று தெரிவித்தார்.
வேறு மாநிலத்தில் நடப்பது தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது என்று கூறிய அவர், “மத்திய பாதுகாப்புப் படைகளில் அதிகாரிகள் தற்கொலையை பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் இது நடப்பது முதல்முறை. காவல்துறையில் உச்சகட்ட மன அழுத்தம் உள்ளது.
உயர் அதிகாரிகளுக்கு வேறு மாதிரியான மன அழுத்தம் இருக்கும். காவல்துறையை முதலில் சீரமைக்க வேண்டும். தமிழ்நாடு அதில் முன்னோடியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். காவல்துறையின் அழுத்தத்தை குறைக்க வேண்டும்,” என்று கூறினார்.

மேற்கொண்டு பேசியவர், “திமுக அரசு முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் அறிக்கையை பொது வெளியில் வைத்து அதில் உள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.
விஜயகுமார் அவர்களின் மரணத்தை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்தத் தற்கொலை தூண்டப்பட்டதா என்பது உட்பட அனைத்தையும் விசாரிக்க வேண்டும்,” என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
காவல்துறையினரின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதோடு சேர்த்து குடும்பத்தின் தனியுரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த அண்ணாமலை, ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரியின் மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் கூறுவது சரியாக இருக்காது என்றும் கூறினார்.
“அதிகாரிகள் மீது உச்சபட்ச மன அழுத்தம் இருக்கிறது. காவலர்களுக்கு உடல் அழுத்தம் இருக்கும். உயர் அதிகாரிகளுக்கு அரசியல் உள்ளிட்ட அழுத்தம்தான் இருக்கும். தூண்டுதல் என்னவென்பதை விசாரிக்க வேண்டும்," என்றார்.
முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகுமார் தற்கொலை பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழ்நாடு துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
"தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், RAMDOSS
பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்
விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை." என்று கூறியுள்ளார்.
"அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பொதுவாகவே காவல் பணி என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது தான். காவல் அதிகாரிகள் மன அழுத்தத்தை வென்றெடுக்க வேண்டுமே தவிர, அதற்கு இரையாகி விடக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"வைராக்கியத்துடன் ஐபிஎஸ் தேர்வுக்கு தயாரானவர்"
ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் கருணாநிதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "விஜயகுமார் தமிழ்நாடு காவல் பணியில் இருந்த காலத்தில் இருந்தே எனக்கு அவரை தெரியும். சின்ன விஷயங்களை கூட சென்சிடிவ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடிய நபர். ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என வைராக்கியத்தோடு பணியிலிருந்து விடுப்பு பெற்று ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகினார். நல்ல முறையில் பணியாற்றக் கூடிய அதிகாரி. ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
"காவல்துறையில் அனைத்து நிலையில் பணி செய்பவர்களுக்கும் அழுத்தம் இருப்பது உண்மைதான் என்றாலும் விசாரணை அதிகாரிக்கு உள்ள அளவிலான பணி அழுத்தம் உயர் அதிகாரிகளுக்கு இருக்காது." என்றும் அவர் கூறியுள்ளார்.
குடும்பமோ, பணியோ காரணமில்லை - ஏடிஜிபி

சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண் கோவை அரசு மருத்துவமனை வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "2009ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்படுவதற்கு முன் 6 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் பணியில் வேலை செய்துள்ளார். எனக்கு நன்கு தெரிந்த அதிகாரி. பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றியவர். அவர் கடந்த சில வருடங்களாகவே மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரின் மருத்துவரிடமும் நான் பேசினேன். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கூட மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக அவரிடம் கூறியுள்ளார்.
இதனால் தான் அவரின் குடும்பத்தினரும் நான்கு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்து அவருடன் இருந்துள்ளனர். மன அழுத்தத்தினால்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இதில் வேறு எந்த காரணமும் இல்லை. இதை அரசியல் செய்ய வேண்டாம். காவல் துறையில் கீழ் நிலையில் இருந்து உயர் அதிகாரிகள் வரை உள்ளவர்களுக்கு மன உளைச்சலை போக்க கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
மன உளைச்சல் என்பது வேறு மன அழுத்தம் என்பது வேறு. அழுத்தம் என்பது தனியாக சிகிச்சை பெற வேண்டியது. இவர் அதற்கான சிகிச்சையும் மருத்துவமும் பெற்றுள்ளார். அதையும் மீறி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்த வகையில் அவருக்கு குடும்ப பிரச்சனையும் பணி சிக்கலோ எதுவுமில்லை. மருத்துவ காரணங்களால் தான் இவ்வாறு செய்துள்ளார். அவர் சிகிச்சையில் இருந்தார் என்பது தான் தற்போது தான் எங்களுக்கு தெரியவந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி, காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரும் அவருடன் பேசியுள்ளனர். தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தனிப்பட்ட ஒரு மரணம் தான். மற்ற காரணங்களை விசாரணைக்குப் பிறகு தெரிவிக்கிறோம்," என்றார்.
தற்கொலை தீர்வல்ல
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












