ஹிட்லரின் யூத இன அழிப்பு நடவடிக்கையில் இந்த 'மூன்று சிறுமிகள்' தப்பியது எப்படி?

 மூன்று யூத சிறுமிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீண்டகாலமாக 'மூன்று சிறுமிகள்' என்றே பொதுவாக அழைக்கப்பட்டு வந்த ரூத் (இடது), இன்கே ஆடமெக்ஸ் மற்றும் ஹன்னா கோன்
    • எழுதியவர், ஜோ லான்ஸ்டேல் & ஜேன் டவுன்ஸ்
    • பதவி, பிபிசி ரேடியோ நியூகேஸில்

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலமான 1939 இல் ஜெர்மனியின் நாஜி அரசாங்கம், அந்த நாட்டில் இருந்த யூத இன மக்களை அழிக்கும் கொடூரமான செயலை மேற்கொண்டது. ஜெர்மனியின் இந்த மோசமான நடவடிக்கையில் இருந்து யூத மதத்தை சேர்ந்த குழந்தைகளை காப்பாற்றும் திட்டத்தை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் (Kindertransport) செயல்படுத்தின.

அந்த மோசமான தருணத்தில் உயிர் பிழைக்கும் நோக்கில் ஜெர்மனியில் இருந்து வெளியேறிய யூத இனத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளின் புகைப்படம், யூத இன அழிப்பின் ஒரு நினைவுச் சின்னமாக உலகெங்கும் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள் மற்றும் புத்தகங்களில் இடம்பெறும் அளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லண்டனின் லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமிகள் யார் என்பது குறித்த மர்மம் 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருந்தது.

மூன்று யூத சிறுமிகள்

பட மூலாதாரம், ADAMECZ FAMILY

படக்குறிப்பு, ரூத் மற்றும் இன்கே ஆடமெக்ஸ் (நடுவே மற்றும் வலது) ஜெர்மனியை விட்டு வெளியேறினர், ஆனால் அவர்களது தங்கை கிரெட்டல் (இடது) ஆஷ்விட்ஸில் இறந்தார்.

ரயிலில் நிகழ்ந்த சிறுமிகளின் சந்திப்பு

அடமெக்ஸ் எனும் இயற்பெயர் கொண்ட இன்கே ஹாமில்டன் என்ற மூதாட்டிக்கு தற்போது 89 வயதாகிறது. தெற்கு லண்டனில் வாழ்ந்து வரும் யூத குலத்தைச் சேர்ந்த இவர் 1939 இல் ஜெர்மனியில் நாஜி அரசாங்கத்தின் இன அழிப்பில் இருந்து தப்பிக்க, தனது 5 ஆவது வயதில், 10 வயதான தன் மூத்த சகோதரி ரூத் உடன் ஜெர்மனியின் ப்ரெஸ்லாவ் நகரில் இருந்த தனது வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் இன்கேவின் இளைய சகோதரியும், அவரது தாயும் நாட்டை விட்டு வெளியேறாததால், ஜெர்மனி அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்தபோது கொல்லப்பட்டனர்.

பிரிட்டன் நோக்கிய தனது சகோதரி உடனான இன்கேவின் ரயில் பயணத்தில் அவர்களுடன் ஜெர்மனியின் ஹாலே நகரைச் சேர்ந்த மற்றொரு சிறுமி சேர்ந்து கொண்டாள். தனது இரட்டை சகோதரனான ஹன்ஸ் உடன் பயணித்த அவளுக்கு அப்போது 10 வயது. ஹன்னா கோன் என்ற அந்த சிறுமி தனது கையில் பொம்மை ஒன்றை வைத்திருந்தாள்.

மூன்று சிறுமிகளும் பிரிட்டனின் லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு மூவரும் ஒன்றாக வீற்றிருந்தபோது புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது.

ஆனால் அந்த புகைப்படம் எதற்கு, யாரால் எடுக்கப்பட்டது என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மூன்று சிறுமிகளும் தங்களது முதுமைப் பருவம் வரை அறியாமலேயே இருந்தனர்.

மூன்று யூத சிறுமிகள்
படக்குறிப்பு, ஹல்டன் ஆவணக் காப்பகத்தில் உள்ள கண்ணாடி ஃபிரேம் போடப்பட்ட கெட்டி இமேஜின் சிறுமிகளின் புகைப்படம்

லண்டன் பல்கலைக்கழகத்தில் ஹன்னா கோன்

ஜெர்மனியில் இருந்து பிரிட்டனுக்கு ஒன்றாக வந்த மூன்று சிறுமிகளில் ஹன்னா கோன் கடந்த 2018 இல் மரணடைந்தார். அதற்கு முன் ஒரு முறை அவர், ஜெர்மனியில் இருந்து சிறு வயதில் தாங்கள் தப்பித்து பிரிட்டன் வந்தடைந்தது குறித்து லண்டன் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின் போது நினைவுகூர்ந்தார்.

அப்போது அவர், “நாங்கள் ஹாலந்து வழியாக பிரிட்டனுக்கு பயணித்தபோது அங்கிருந்த பெண்கள் எங்களுக்கு ரொட்டியும், எலுமிச்சை பழங்களையும் அளித்து அன்பு பாராட்டினர். ஜெர்மனியின் ஹார்விச்சிலிருந்து பிரிட்டனின் லிவர்பூல் ஸ்ட்ரீட்டுக்கு ரயிலில் நாங்கள் பயணித்த பெட்டியில் இருந்த இருக்கைகள் மரத்தால் செய்யப்பட்டவையாக இல்லை. அதில் இருந்தே நாங்கள் முதல் வகுப்பு பெட்டியில் தவறாக ஏறிவிட்டோம் என்பதை அறிந்து கலக்கம் அடைந்தேன்.

முதலில் லண்டனுக்கு பயணிப்பதாக எண்ணியிருந்த நிலையில், பின்னர் லிவர்பூலுக்கு பயணிப்பதாக அறிந்ததும் அதுகுறித்து வருத்தமடைந்தேன். லிவர்பூல் பிரிட்டனில் இல்லாமல் வேறு எங்கோ இருப்பதாக எண்ணியிருந்தேன். எனது பயணம் முழுவதும் கையில் ஒரு பொம்மையை வைத்திருந்தேன். அதற்கு ஈவ்லின் என்றும் பெயரும் இட்டிருந்தேன்” என்று சிறுவயதிலேயே தான் அகதியான துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்திருந்தார் ஹன்னா கோன்.

மூன்று யூத சிறுமிகள்
படக்குறிப்பு, ஜெர்மனியின் நாசி அரசிடம் இருந்து யூத குழந்தைகளை காப்பாற்றும் திட்டத்தின்கீழ் நாட்டைவிட்டு வெளியேறிய இன்கே

லண்டன் கண்காட்சியில் காணக்கிடைத்த அரிய புகைப்படம்

இந்த நிலையில் தான், ஜெர்மனியின் யூத இன அழிப்பில் இருந்து தப்பித்து பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள், அங்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், லண்டனில் உள்ள கேம்டன் நூலகத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் ஹன்னாவின் சகோதரர் ஹன்ஸ், அந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அந்த அதிசய புகைப்படத்தை முதல் முறையாக கண்டு வியந்தார். அதில் தனது தங்கை சிறுமியாக இருந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த தருணத்தை வியப்புடன் அவரிடம் விவரித்தார்.

தன் சகோதரர் சொன்னதை கேட்டதும் இருப்பு கொள்ளாத ஹன்னா, தனது இரட்டை மகள்களுடன் கண்காட்சிக்கு சென்று அந்த அரிய புகைப்படத்தை கண்டு அதிசயித்தார்.

“அந்த புகைப்படத்தில் எங்களின் அம்மா, இரட்டை ஜடையுடன் கையில் ஓர் பொம்மையுடன் குட்டிப் பெண்ணாக வீற்றிருந்தார். அதில் அவருக்கு அருகே இருந்த மற்ற இரண்டு சிறுமிகள் யார் என்பதையும், அவர்கள் தற்போது எங்கு, எப்படி இருக்கின்றனர் என்பது குறித்து அறியும் ஆவல் எங்கள் தாய்க்கு மேலோங்கியது” என்கிறார் ஹன்னாவின் மகளான டெபி.

மூன்று யூத சிறுமிகள்

பட மூலாதாரம், SINGER FAMILY

படக்குறிப்பு, 2018 இல் இறந்த ஹன்னா கோன்

பிபிசியில் பேசிய ஹன்னாவின் மகள்கள்

அதையடுத்து, அந்த ஆண்டு ஜனவரி மாதம் The Girls: A Holocaust Safe House என்ற தலைப்பில் பிபிசியில் ஆடியோ தொடரில், 80 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு, தற்போது கேம்டன் நூலகத்தில் உள்ள புகைப்படம் குறித்து ஹன்னாவின் மகள்கள் பேசினர். அதன் பயனாக, அந்த புகைப்படத்தின் பின்னணி குறித்த தகவல் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

ஜெர்மனியின் வதை முகாம்களில் வைத்து யூத மக்கள் அழிக்கப்பட்டதன் நினைவு நாள் அன்று, அது தொடர்பாக பிபிசி இணையதளத்தில் இடம்பெற்றிருந்த செய்திக்கான இணைப்பை (லிங்க்) ஹென்னாவின் மகளான ஹெலனின் தோழி ஒருத்தர் அவருக்கு அனுப்பி இருந்தார்.

“இதை ஏன் அவள் எனக்கு அனுப்பி இருக்கிறாள் என்று எண்ணியவாறு அதை திறந்து பார்த்தபோது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் அம்மாவின் சிறுவயது புகைப்படத்தில் அவருடன் இருந்த மற்ற இரண்டு சிறுமிகளில் ஒருவரின் பெயர் ரூத் என்றும், மற்றொருவரின் பெயர் இன்கே என்று குறிப்பிடப்பட்டிருந்தை கண்டு நாங்கள் மிகவும் வியப்படைந்தோம். உடனே அந்த சந்தோஷமான தகவலை எனது சகோதரி டெபிக்கு தெரியப்படுத்தினேன்” என்கிறார் ஹெலன் உணர்ச்சி ததும்ப.

மூன்று யூத சிறுமிகள்
படக்குறிப்பு, தனது தாய் ஹன்னாவின் ரயில் சிநேகிதியை சந்தித்த அவரது மகள்கள் ஹெலன் மற்றும் டெபி

தாயின் ரயில் சிநேகிதியை சந்தித்த மகள்கள்

இறுதியில், சில மாதங்களுக்கு பின் ஏப்ரலில் இன்கே மற்றும் ஹன்னா மகள்களின் சந்திப்பு லண்டனில் உள்ள இம்பீரியல் போர் நினைவு அருங்காட்சியகத்தில் நிகழ்ந்தது. அங்கு ஹன்னா, ரூத் மற்றும் இன்கே சிறுமிகளாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று பேரின் குடும்பங்கள் குறித்து விவரிப்பதாகவும், அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை பற்றியும் விவரிக்கும் சாசனமாக அந்த புகைப்படம் திகழ்ந்தது.

“எங்கள் அம்மா உங்களை பற்றியும், ரூத் குறித்தும் எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். உங்களை நாங்கள் இன்று கண்டுபிடித்ததை அறிந்து அவரின் ஆன்மா எங்களை பெருமையாக கருதும். நீங்கள் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர்” என்று டெபி இன்கேவிடம் பூரிப்புடன் தெரிவித்தார்.

 மூன்று யூத சிறுமிகள்

பட மூலாதாரம், STEVENSON FAMILY

படக்குறிப்பு, ஜான் எஃப் ஸ்டீவன்சனாக அறியப்படும் புகைப்பட கலைஞர்

அந்த புகைப்பட கலைஞர் யார்?

சிறுமியாக இருந்தபோது ஜெர்மனியில் இருந்து தப்பித்து பிரிட்டனுக்கு வந்த இன்கேயை பல தசாப்தங்களுக்கு பிறகு ஹன்னாவின் மகள்கள் சந்தித்தனர். இந்த சிறப்புமிக்க சந்திப்புக்கு காரணமாக விளங்கிய அந்த அரிய புகைப்படத்தை எடுத்தவர் யார் என்ற கேள்வி, அனைவரின் மனதிலும் எழுந்தது.

ஹல்டன் ஆவணக் காப்பகத்தில் கிடைக்கப்பெற்ற பதிவுகளின் மூலம், இன்கே, ஹென்னா மற்றும் ரூத் சிறுமிகளாக இருந்தபோது அவர்களின் புகைப்படத்தை எடுத்த கலைஞர் ஸ்டீபன்சன் என்பதும், அவர் 1000க்கும் மேற்பட்ட புகைப்பட நிருபர்கள் பணியாற்றிய டாப்பிக்கல் பிரஸ் ஏஜென்சியில் ( Topical Press Agency) பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்தது.

1930 களில் பிரபலமான புகைப்பட கலைஞராக திகழ்ந்த ஜான் எஃப் ஸ்டீவன்சன்

பட மூலாதாரம், STEVENSON FAMILY

படக்குறிப்பு, 1930 களில் பிரபலமான புகைப்பட கலைஞராக திகழ்ந்த ஜான் எஃப் ஸ்டீவன்சன்

அத்துடன், 1939 ஜுலை 5 ஆம் தேதி அன்று, அவருடைய பணி குறித்த பதிவேட்டில் "Three little children waiting at Liverpool Street Station" என்ற விளக்கத்துடன் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டதாகவும் அதை எடுத்தவர் ஸ்டீபன்சன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தி நியூஸ் க்ரோனிக்கல்’ (The News Chronicle) எனும் பிரிட்டனின் தேசிய நாளிதழில் அப்புகைப்படம் மறுநாளே வெளியானது. அதன் பிறகு பல்வேறு நாளிதழ்கள், கண்காட்சிகளிலும் அப்புகைப்படம் இடம்பெற்றது.

மூன்று சிறுமிகளின் புகைப்படத்தை எடுத்தவர் ஸ்டீபன்சன் தான் என்பதை உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும். பணி பதிவேட்டில் இருந்த குறிப்புகளின் படி ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் எஃப் ஸ்டீபன்சன் என்ற முழு பெயரை கொண்ட புகைப்பட கலைஞர் தான் அந்த புகைப்படத்தை எடுத்திருந்த அதிக வாய்ப்பு உள்ளது என்பதும், அவர் பிரிட்டனில் ஒரு காலத்தில் பிரபலமான ‘ear Old Glasgow Toon’ என்ற பாடலை எழுதியவர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்பதும் தெரிய வந்தது. அதற்காக, டாப்பிக்கல் பிரஸ் ஏஜென்சி கிளாஸ்கோவில் அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தியது

புகைப்பட கலைஞரின் பேரன் சொன்னது என்ன?

அதையடுத்து, ஸ்காட்லாந்தின் பொது தகவல் அலுவலக பதிவேட்டில் இடம்பெற்றிருந்த ஸ்டீபன்சனின் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் அவரது குடும்பத்தினரை பிபிசி தேடி கண்டறிந்தது.

1930களில் வெற்றிகரமான புகைப்பட கலைஞராக வலம் வந்த ஸ்டீபன்சனின் வாழ்க்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவரின் பேரன் கோர்டன் ஸ்டீபன்சன் பத்திரிகையாளராக இருக்கிறார் என்பதும் அப்போது தெரிய வந்தது.

“எனது தாத்தா அவரது வாழ்நாளில் நிறைய புகைப்படங்களை எடுத்துள்ளார். அவற்றில் பலவற்றை காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அது அவரது வாழ்வில் சிறந்த தருணம்,” என்று உணர்ச்சி ததும்ப கூறினார் கோர்டன்.

“அதேநேரம், 1930களில் தனது வாழ்வின் பிற்பகுதியில் சிறந்த புகைப்பட கலைஞராக திகழ்ந்த அவர், நாட்டின் தெற்கு எல்லை பகுதிகளில் எடுத்த புகைப்படங்கள் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவரால் எடுக்கப்பட்டதாக அறியப்படும் வரலாற்று சிறப்புமிக்க இந்த புகைப்படம் மிகவும் அழகானது.” என்று கூறினார் கோர்டன்.

மூன்று யூத சிறுமிகள்
படக்குறிப்பு, 1939 ஜூலை 6 ஆம் தேதி, நியூஸ் குராேனிக்கல் நாளிதழில் முதல்முறையாக வெளியான சிறுமிகளின் புகைப்படம்

காலத்தின் சாட்சியான புகைப்படம்

சிறுமிகளின் புகைப்படம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட ஆவணத்தில் அவர்களது பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“எனது தாய் எங்கிருந்து வந்தார் என்பதும், அவருக்கும் ரூத் மற்றும் இன்கேவுக்கான தொடர்பு குறித்தும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நன்றாக அறிய முடிகிறது. அவர்கள் மூவரும் ஏதோ பெயர் அறியப்படாத குழந்தைகள் அல்ல” என்று கண்ணீர் மல்க கூறினார் ஹன்னாவின் மகள் டெபி.

“அவர்கள் மூவரும் வெறும் குழந்தைகளாக இருந்திருக்கவில்லை. அவர்களின் பெயரும், வாழ்க்கையும் வரலாற்று முக்கியத்துவம் வாயந்தவை. அவர்கள் தங்கள் பெயருக்கு தகுதியானவர்கள். இதுகுறித்து எங்களின் தாயார் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பார் என்று எண்ணுகிறோம்” என்றார் ஹெலன் தழுதழுத்த குரலில்.

தற்போது 89 வயதாகும் இன்கே ஹாமில்டன் லண்டனின் தெற்கு பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் தனது சிறு வயது புகைப்படத்தில், பொம்மையுடன் தன்னுடன் இருந்த அன்பான சிறுமியின் பெயரை அறிய 80 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியதானது. தற்போது அவர் இந்த புகைப்படம் குறித்து நிறைய அறிந்திருக்கிறார்.

”இந்தப் புகைப்படத்துக்கு பின்னால் ஓர் நீண்ட வரலாறு இருப்பதாக கூறும் அவர், அது மக்களை ஈர்க்கும் விதத்தில் உள்ளது” என்றார் பெருமிதத்துடன்.

முன்னதாக, வரலாற்று ஆசிரியரான மார்ட்டின் கில்பர்ட்டின் ‘நெவர் ஏகைன்’ என்ற புத்தகத்தில், தான் மற்ற இரு சிறுமிகளுடன் இருந்த புகைப்படத்தை கண்டு வியந்து போனார் இன்கே.

அந்த புத்தகத்தில் சிறுமிகளின் புகைப்படத்துக்கு கீழ் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல், ‘மூன்று சிறுமிகள்’ (Three Little Girls) என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை கவனித்த இன்கே, நாங்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கிறோம் எனக் கூறி, நூலாசிரியரான மார்ட்டின் கில்பர்டுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: