மகளிர் உரிமைத் தொகை: மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன?

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், TWITTER/MK STALIN

படக்குறிப்பு, தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தருமபுரி மாவட்டம் தொப்பூரில் இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தருமபுரியில் தொடங்கிவைத்த மகளிர் சுயஉதவிக் குழு திட்டத்தின் வெற்றியைக் குறிப்பிட்ட ஸ்டாலின், தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் முளைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மகளிருக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அங்கே தொடங்கி வைத்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் என யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவைப்படுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும், செப்டம்பர் 15 ம் தேதி பெண்களுகளின் கைகளுக்கு உரிமை தொகை வழங்கபடும்.

கலைஞர் மகளி்ர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் வாங்க சிறப்பு முகாம்கள் தொடங்கபட்டிருக்கின்றன. விடுமுறை தினமான சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. தகுதியுள்ள பயனாளிகள் யாரும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கின்றன. அனைத்து சமூக வளர்ச்சிக்கு அடையாளம் தான் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இதன் மூலமாக தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பெண்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களின் குடும்பங்களில் வளம் பெருகும்" என்று கூறினார்.

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உரிமைத் தொகை யார், யாருக்கெல்லாம் கிடைக்கும், என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் யாரெல்லாம் பயனடைய முடியும்?

மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுடைய குடும்பத் தலைவிகள் யார்?

  • குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
  • குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
  • திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
  • ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் பயனடைவதற்கான பொருளாதாரத் தகுதிகள் என்ன?

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, இந்த உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.

  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழே உள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
  • ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
  • ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவராகக் கருதப்படுவார்.

கீழ்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறத் தகுதியில்லை.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது
  • ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது
  • குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
  • மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.
  • ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது.
  • சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.
  • ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கிடைக்காது.
  • ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது.
மகளிர் உதவித் தொகை

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

இந்த வகைப்பாட்டின்கீழ் வருவோர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை என்றால், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதாவது, 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாகப் பிறந்தவர்கள் விண்ணபிக்கலாம்.

இந்தத் திட்டத்திற்கு நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்துள்ள விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: