உயர்நீதிமன்ற நீதிபதிகளில் உயர் சாதியினரே அதிகம் - நீதித்துறையில் இட ஒதுக்கீடு இல்லையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 2018ஆம் ஆண்டுக்குப் பின் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 75 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் என மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, கடந்த 5 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் சாதிவாரியான கணக்கை கடந்த ஜூலை 21ஆம் தேதி மக்களவையில் எழுப்பியிருந்தார். அதில், கீழ்காணும் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
- பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய பிரிதிநிதித்துவம் அளிக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள 79% நீதிபதிகள் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் என்பது உண்மையா?
- ஆம் என்றால், என்ன காரணம்?
- 2018-ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில் 2.6% பேர் மட்டுமே உயர் வகுப்பினர் அல்லாதவர்கள் என்பது உண்மையா? ஆம் என்றால், அதன் விவரங்கள் என்ன?
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடம் சமூக பன்முகத்தன்மை மற்றும் சமூக நீதி தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதா? ஆம் என்றால், அதன் விபரங்கள் என்ன?
- நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக, 90களின் பிற்பகுதியில் கொலீஜியம் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நிலைமை மோசமாகிவிட்டதா?
- ஆம் என்றால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுடன் ஆலோசித்து இது தொடர்பாக எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் பதில் என்ன?
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் இந்தக் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையாளர்கள் வழங்கிய தகவலின்படி 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 458 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோக, 18 நீதிபதிகள் பட்டியல் பிரிவையும், 9 பேர் பழங்குடியின வகுப்பையும் சேர்ந்தவர்கள் என்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 72 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 34 நீதிபதிகள் சிறுபான்மையினர் என்றும் 13 நீதிபதிகள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இல்லை என்றும் அர்ஜுன் ராம் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 124, 217 மற்றும் 224-ன் கீழ் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதில், எந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம், "அதேநேரத்தில், நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக முன்மொழிவுகளை அனுப்பும்போது சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் குறித்தும் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது," என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறை குறிப்பாணையின்படி, உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கும் நபர்களை மட்டுமே அரசு நியமிக்கிறது என்றும் தனது பதிலில் அர்ஜுன் ராம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கொலீஜியம் முறையும் இந்திய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையமும்
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம், பணி இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை கொலீஜியம் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் கொலீஜியம் செயல்படுகிறது. கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஏற்ப நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார். தற்போதைய கொலீஜியத்தின் உறுப்பினர்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சன் கிஷான் கௌல், சஞ்ஜீவ் கண்ணா, சூர்யகாந்த், பூஷண் ராமகிருஷ்ண கவாய் ஆகியோர் உள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தைப் பொறுத்தவரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் நீதிபதிகளின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான கொலீஜியத்துக்கு பரிந்துரைக்கும்.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் கொலீஜியம் முறையை மாற்றி, மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் இரண்டு முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 6 பேரை உள்ளடக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்று கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசு கொண்டு வந்திருந்த புதிய நீதிபதிகள் நியமன முறை, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதாக உள்ளது என்று குறிப்பிட்டதோடு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. கொலீஜியம் முறையே தொடரும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

பழங்குடியினர் ஒருவர் கூட உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனதில்லை
கொலீஜியம் முறைக்கு முன்பாக இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்.
"உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி , உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில அரசு, ஆளுநர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசு நியமிக்கிறது," என்றார் அவர்.
"உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமனம் செய்யப்படுபவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எந்த மாநிலத்தில் இருந்து நியமனம் செய்யப்படுகிறாரோ அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசு நியமித்தது.
தற்போது கூடுதலாக என்ன செய்துள்ளார்கள் என்றால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்பதற்கு பதிலாக கொலீஜியம் (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள இரு நீதிபதிகள்) என்று கொண்டு வந்துள்ளார்கள். இவர்கள்தான் பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம் தொடர்பாக மாநில அரசு, ஆளுநர், மத்திய அரசு, மாநில உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் அறிக்கைகளை கொலீஜியம் ஆராய்கிறது. கொலீஜியம் முறை வருவதற்கு முன்பாக, உயர் நீதிமன்ற நீதிபதியின் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசே ஆய்வு செய்து நீதிபதிகளை நியமிக்கும். தற்போது கொலீஜியம் முறையால் அது தடைபட்டுள்ளது. " என்றார்.
நீதிமன்றங்களில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே அதிகளவில் நீதிபதியாக நியமிக்கப்படுவது தொடர்பாக அரிபரந்தாமனிடம் கேட்டப்போது, "கொலீஜியம் முறைக்கு முன்பாகவும் சரி, கொலீஜியம் முறை நடைமுறைக்கு வந்த பின்னரும் சரி உயர் சாதியை சேர்ந்தவர்களே அதிகளவில் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், நியமனம் சம்பந்தமான அனைத்து இடங்களில் இருப்பவர்களும் உயர் சாதியை சார்ந்தவர்களே என்பதுதான்," என்கிறார் அவர்.
மேலும் பேசிய அவர், "உச்ச நீதிமன்றத்தை எடுத்துகொண்டால் தற்போதுள்ள மொத்த நீதிபதிகளில் 2 பேர் மட்டுமே பட்டியலினத்தவர்கள். அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள் ஒன்றிரண்டு பேர் நீதிபதிகளாக இருப்பார்கள். மற்றப்படி அனைவருமே உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். கொலீஜியத்திலும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்," என்றார்.

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சரின் பதில் தொடர்பாக பா.ம.க செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவருமான வழக்கறிஞர் பாலு நம்மிடம் பேசும்போது, நீதிபதிகள் நியமனத்தில் முதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றார்.
“நீதிமன்றங்களில் கடைநிலை ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டுமென்றால் கூட முதலில் அறிவிப்பு வெளியிட வேண்டும், இரண்டாவது விண்ணப்பிப்பது, மூன்றாவது விண்ணப்பங்களை சரிபார்ப்பது, இறுதியாக நியமனம் ஆகிய நிலைகள் உள்ளன. ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் இது எதுவுமே கிடையாது. நீதிபதிகளை எப்போது பரிந்துரைத்தார்கள், யாரையெல்லாம் பரிந்துரைத்தார்கள், எந்த அடிப்படையில் பரிந்துரைத்தார்கள், மொத்த காலியிடம் எவ்வளவு போன்ற விவரங்கள் எதுவுமே கிடையாது.
"ஒருவர் எப்படி வாதிடுகிறார், அவரது பணி தொடர்பான சாதனைகள் போன்றவற்றின் அடிப்படையில் பரிந்துரைக்கலாம். ஆனால் அப்படி நடப்பது இல்லை, ஒருமுறைகூட ஆஜராகாதவர்கள்கூட நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த ஒருவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக சென்னை கொலீஜியம் நியமித்ததாகவும் ஒரு சம்பவத்தை பாலு நினைவுக்கூர்கிறார்.
“சென்னை உயர் நீதிமன்றத்திலேயே ஆஜராகாத ஒருவரை எதன் அடிப்படையில் சென்னை நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருக்க முடியும். இதன் பின்னணியில் சிபாரிசு தான் உள்ளது," என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது நாடாளுமன்றத்தில் நீதிபதிகளின் சாதி குறித்து பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்த 604 பேரில் எத்தனை பேர் நீதித்துறை பின்னணியை கொண்டவர்கள் என்பதை ஆராய வேண்டும் என வலியுறுத்துகிறார். நீதிபதியின் மகன், நீதிபதியின் குடும்பத்தை சார்ந்தவர்கள், நீதிபதி உடன் பணியாற்றியவர்கள் போன்றவர்களே பெரும்பாலும் சிபாரிசு செய்யப்படுவார்கள் என்றும் பாலு தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
“சமூக பன்முகத்தன்மையுடன் நீதிபதிகள் நியமனப் பரிந்துரையை அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் கோரியதாக மத்திய அரசு கூறுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 604 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், சமூக பன்முகத்தன்மை இல்லை என்று ஏன் மத்திய அரசு பரிந்துரைகளை நிராகரிக்கவில்லை. சமூக ஊடகத்தில் ஒரு பதிவிட்டார் என்பதற்காக ஜான் சத்யனை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசு நிறுத்திவைத்தது. அப்படி இருக்கும்போது, சமூக பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறாரா இல்லையா என்பதை ஏன் ஆராயவில்லை?" என்று பாலு கேள்வி எழுப்புகிறார்.
எனவே, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தைப் பொறுத்தவரை அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறையையும் சமூக பன்முகத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
நீதிபதிகள் நியமனமும் இடஒதுக்கீடும்
நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்படுவது குறித்து நீதிபதி அரிபரந்தாமன் பேசும்போது, "நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பொருந்தாது என்று கூறமுடியாது. உச்ச நீதிமன்றம்தான் அப்படி இல்லை என்பதுபோல் பேசி வருகிறது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 16(4) இது தொடர்பாக தெளிவாக கூறுகிறது. நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறிய சட்டப்பிரிவுகள் என்பது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மட்டுமே கூறுகின்றன," என்றார்.
"ஆனால், சட்டப்பிரிவு 16(4) - பொது வேலைவாய்ப்பில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்- அனைத்து பணி நியமனங்கள் குறித்தும் பேசுகிறது. சட்டப்பிரிவு 124, 217களில் இடஒதுக்கீடு வேண்டும் என்றோ அல்லது வேண்டாம் என்றோ எதுவும் கூறப்படவில்லை. அப்படியிருக்கும்போது, சட்டப்பிரிவு 16(4) இயல்பாகவே இதற்கு பொருந்தும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு பொருந்தும்போது நீதிபதிகளுக்கு ஏன் பொருந்தாது," என்று கேள்வி எழுப்புகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












