மணிப்பூர் வன்முறை: அந்த பெண்களுக்கான நீதி எது? மோதி பேச்சு பற்றி 'குகி' பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், கீர்த்தி தூபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வன்முறைத் தீ எரிந்துகொண்டே இருக்கிறது. அங்கு நடக்கும் மனிதத்தன்மையற்ற செயல்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோதியும் மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன.
கடந்த வியாழன்று வெளியான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோதி கடைபிடித்து வந்த மௌனத்தை கலைத்தார்.
"மணிப்பூரின் வைரலான வீடியோ சம்பவத்தால் என் இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் அவமானத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்த மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன், குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம்," என்றார்.
தனது பேச்சில், குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் வீடியோவை பற்றி மட்டுமே பிரதமர் மோதி பேசினார். அந்த கும்பல் இரண்டு பெண்களையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதோடு, அவர்களில் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோதி தனது பேச்சில் மணிப்பூர் குறித்து எதுவுமே பேசவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் இந்தச் சம்பவம் தொடர்பாக , "தற்போது வைரலாகி வரும் வீடியோ மூலம் சில குற்றவாளிகள் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார்கள், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
மனதில் எழும் கேள்விகள்
இந்த விவகாரம் தொடர்பாகப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவம் 80 நாட்களுக்கு முன்பு நடந்ததாகவும் இது தொடர்பாக 62 நாட்களுக்கு முன்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியிருக்கும்போது, வீடியோ வைரலானதற்கு பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஏன்?
வீடியோ வைரலான இரண்டு நாட்களுக்குள், இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்தாவது குற்றவாளியை கைது செய்வது குறித்தும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோதி மௌனம் காத்து வருகிறது. இந்தப் பெண்கள் தாக்கல் செய்த எஃப்ஐஆர்கள் மீது இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை குறித்து எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தௌபல் மாவட்டத்தில் குகி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வீடியோ வெளியானதை அடுத்து, வியாழன் அன்று குகி ஆதிக்கம் நிறைந்த மாவட்டமான சுராசந்த்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோதி, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் பேச்சை குகி சமூகத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய விரும்பினோம்.
சுராசந்த்பூரில் வசிக்கும் குகி சமூகத்தினருடன் பேசினோம்.

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கொடூரத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீதி என்ன?
மணிப்பூர் குகி சமூகத்தின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேரி ஜோன் பிபிசியிடம் தொலைபேசியில் பேசினார்.
இந்தச் சம்பவம் குறித்து வீடியோ மூலம் தனக்குத் தெரிய வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். மாநிலத்தின் முதலமைச்சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் உள்ள அவர், தனது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.
"அந்த வீடியோவை நான் பார்த்தேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவையும் சந்தித்தேன். அந்த வீடியோவை பார்த்ததில் இருந்து எனக்குத் தூக்கம் வரவில்லை, இரவில் திடீரென கண் விழித்து என் உடலில் ஆடைகள் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்வேன். அந்த வீடியோ என்னை எந்த அளவு உலுக்கியுள்ளது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்ல," என்றார்.
அதோடு, குகி மக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ வெளியாகி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கூறும் மேரி ஜோன், அதில் சற்று அடைவதாகவும் கூறுகிறார்.
"உண்மை என்ன என்று தற்போது உலகம் அறிந்துகொண்டது. சர்வதேச ஊடகங்களும் உண்மையைக் காட்டுகின்றன," எனக் கூறினார்.
பிரதமரின் பேச்சு ஒரு வலுவான செய்தியைக் காட்டுகிறது என்று கூறும் மேரி ஜோன், “மணிப்பூரில் எதுவுமே சரியாக இல்லை என்பதை பிரதமர் முதன்முறையாக ஒப்புக்கொண்டார். அதேநேரத்தில் அவரது பேச்சில் இருந்த தீவிரம் செயலிலும் இருக்குமா என்பதே அரசு எங்களை எந்த அளவு முக்கியமாகக் கருதுகிறது என்பதைத் தீர்மானிக்கும்," எனக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சம்பவத்திற்கு எது நீதியாக இருக்கும் என்ற என் கேள்விக்குப் பிறகு தொலைபேசி இணைப்பின் இருபுறமும் அமைதி நிலவியது.
சில நொடிகளுக்குப் பிறகு அவர் கரகரப்பான குரலில், “அந்தப் பெண்கள் சந்தித்த மன சித்திரவதைகள், அவர்கள் பார்த்த பயங்கரம், அவர்கள் தங்கள் மானத்துக்காகக் கெஞ்சியது ஆகிய அனைத்தையும் பார்க்கும்போது நீதி அமைப்பாலும் அதற்கு ஈடான நீதியைக் கொடுத்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
ஆனால், மிகக் கடுமையான தண்டனை எதுவோ அதை குற்றம் செய்தவர்கள் அனுபவிக்க வேண்டும்," என்று தீர்க்கமாகக் கூறுகிறார்.
குகி சமூகம் இந்தப் போராட்டத்தில் தமக்கான புதிய நிர்வாகத்தைக் கோருகிறது. அவர்கள் தங்கள் பகுதி மற்றும் நிர்வாகம் இரண்டையும் மெய்தேய் சமூகத்தினரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
எந்தவொரு சக மனிதருக்கும் செய்யவே முடியாத காரியத்தைச் செய்தவர்களுடன், எங்களை மனிதர்களாகவே கருதாதவர்களுடன் நாங்கள் எப்படி வாழ முடியும்?" என்று மேரி ஜோன் கேள்வியெழுப்புகிறார்.
பிரதமர் ஒருவேளை முன்பே மணிப்பூர் குறித்துப் பேசியிருந்தால்...
தி டெலிகிராப், வெள்ளிக்கிழமையன்று 'மிக தாமதம் (Too Late)' என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்கத்தில், "பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூரில் உள்ள நிலைமையை முன்னரே கண்டித்து, வன்முறையைத் தூண்டுபவர்களை எச்சரித்திருந்தால், இன்று மணிப்பூரில் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது. உலக அரங்கில் இந்தியா 'அவமானம்' அடையாமல் காப்பாற்றி இருக்கலாம்," என்று குறிப்பிட்டது.
மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை, மணிப்பூரும் இந்தியாவும் அதற்கான விலையைக் கொடுத்து வருகின்றன.
மணிப்பூரிலும் மத்தியிலும் பாஜக அரசாங்கம் உள்ளது, ஆனால் மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகள் 'இரட்டை இயந்திர அரசாங்கம்' என்ற கூற்றைப் பொய்யாக்குகிறது. உண்மை என்னவென்றால், மணிப்பூர் மக்கள் நீண்டகாலமாக வேதனையில் உள்ளனர்.
முதலில் பணமதிப்பிழப்பு துயரம், பின்னர் கொரோனா தொற்றுநோய் தற்போது வன்முறையின் வலி. அவர்களின் வலிக்கு நிவாரணம் வழங்குவதில் பிரதமரின் நல்லாட்சி தோல்வி அடைந்துள்ளது," என்று விமர்சித்துள்ளது.
சுராசந்த்பூர் மாவட்டத்தில் வசிக்கும் குகி சமூகத்தைச் சேர்ந்த முங் டூமிங் கூறுகையில், "மாநில அரசு மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஆனால் பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சு எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இப்போது எங்களைக் காப்பாற்ற மத்திய அரசிடம் மன்றாடுகிறோம்," என்கிறார்.
“மத்தியில் பாஜக அரசு உள்ளது, மாநிலத்திலும் அவர்கள் ஆட்சியில் உள்ளனர். அதனால், தனது அரசாங்கம் எங்களைப் பாதுகாக்கத் தவறுகிறது என்று பிரதமர் இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
நாங்கள் இந்திய மக்கள், எனவே இந்திய அரசுதான் எங்களின் கடைசி நம்பிக்கை. அவர்கள் இப்போதே நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வன்முறையில் நாங்கள் இழந்தது ஏராளம். இப்போது எங்கள் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதையும், எங்கள் சகோதரர்கள் கொல்லப்படுவதையும் பார்க்க முடியவில்லை," என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார் முங் டூமிங்.
“பிரதமரின் பேச்சுக்குப் பிறகு, நாங்கள் எந்த மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம் என்று பேசப்படும் என நம்புகிறோம். கடந்த இரண்டு நாட்களாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால், பெண்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது.
மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோக்கள் மட்டுமே வந்துள்ளன. ஆனால், இங்குள்ள நிலைமை அதைவிடக் கோரமாக உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஏராளமான பெண்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்," என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
வகுப்புவாத வண்ணம் கொடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
குகி பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் பெயர் முகமது இபுங்கோ என்ற அப்துல் ஹலீம் என்று சமூக ஊடகங்களில் பலரும் கூறத் தொடங்கினர்.
வலதுசாரிகள் பலரும் தங்கள் ட்விட்டரில் இந்தக் கருத்தை பதிவிட்டிருந்தனர்.
'முக்கிய குற்றவாளி அப்துல் ஹலீம் என்பதால் இதுவரை இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயலாற்றியவர்கள் இனி எதுவும் பேச மாட்டார்கள்' என்று ஷெஃபாலி வைத்யா என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எட்டு மணி நேரம் கழித்து அந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் தேஜிந்தர் சிங் பக்காவும் ட்விட்டரில், 'மணிப்பூர் வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கான் கைது செய்யப்பட்டுள்ளார்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
செய்தி முகமையான ஏ.என்.ஐ. வெளியிட்ட தவறான ட்வீட் காரணமாக இந்தத் தவறான பேச்சு தொடங்கியது.
ஜூலை 20 அன்று ஏ.என்.ஐ. மணிப்பூர் காவல்துறையை மேற்கோள் காட்டி, “மணிப்பூர் வைரல் வழக்கு – காங்லீபாக் மக்கள் புரட்சி கட்சியைச் சேர்ந்த முகமது இபுங்கோ என்ற அப்துல் ஹலீம் (38) கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று ட்வீட் செய்தது.
சிறிது நேரம் கழித்து ஏ.என்.ஐ. இந்த ட்வீட்டை நீக்கியது. ஆனால் அதற்குள் என்.டி.டி.வி உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்கள் இந்தத் தகவலை ட்வீட் செய்தன. இந்த ட்வீட்கள் நீக்கப்பட்டாலும், பலரும் இந்தத் தவறான ட்வீட்டை சமூக ஊடகங்களில் தகவலாக பரப்பத் தொடங்கினர்.
இந்தத் தவறான ட்வீட்டுக்கு மன்னிப்பு கேட்டு, 12 மணி நேரத்திற்குப் பிறகு ஜூலை 21 அன்று இரவு 10.29 மணிக்கு ஏ.என்.ஐ. ட்வீட் செய்தது.
அதில், “நேற்று மாலை ஏ.என்.ஐ. மணிப்பூர் காவல்துறையின் கைது தொடர்பாக தவறான ட்வீட் செய்திருந்தது. மணிப்பூர் காவல்துறையின் ட்வீட்டை நாங்கள் தவறாகப் படித்து, காவல்துறையின் முந்தைய ட்வீட்டுடன் இணைத்துவிட்டோம். தவறு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ட்வீட் உடனடியாக நீக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டிருந்தது.

பட மூலாதாரம், EPA
மணிப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வைரலான வீடியோ வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குற்றவாளிகளையும் கைது செய்ய காவல்துறை முயன்று வருவதாகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட வழக்கைக் குறிப்பிட்டு, மணிப்பூர் காவல்துறை அதன் செய்திக் குறிப்பில், ஜூலை 20 அன்று, இபுங்கோ என்கிற அப்துல் ஹலீம் கைது செய்யப்பட்டதாகக் கூறியது.
இந்தக் கைது வைரலான வீடியோவுடன் தொடர்புடையது அல்ல.
இந்த விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கை கேள்வியெழுப்பி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தலையங்கம் எழுதியது.
“இந்த விவகாரத்தில் இத்தனை நாட்களாக மாநில போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன், 70 நாட்களாக குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டது ஏன் என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும்.
இதுவொரு சாதாரண குற்றம் இல்லை. மாநில அரசு தனது குடிமக்களைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான வீடியோ வெளியான பின்னர் பல்வேறு தலைவர்களும் தங்களின் கருத்துகளைக் கூறி வருகின்றனர். ஆனால், தற்போதும் அங்குள்ள பெண்கள் முகாம்களில் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








