இரான் சிறையில் பெண் கைதிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த அதிகாரிகள்

இரான், ஹிஜாப், இஸ்லாம், பெண்கள், பாலியல் சித்திரவதை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பர்ஹாம் கொபாடி
    • பதவி, பிபிசி உலக சேவை

இரான் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த பெண்களை, சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி அதிகாரிகள் படம் பிடித்ததாக விடுதலையான பிறகு பிபிசியிடம் தெரிவித்தனர்.

மாதவிடாய் காலத்தின்போது தங்களுடைய சானிட்டரி நேப்கின்களை கூட அகற்றுமாறு கூறப்பட்டதாகவும் சில பெண்கள் கூறுகின்றனர்.

மேலும் அவற்றை அகற்றிவிட்டு உடற்பயிற்சி செய்வதைப் போல் அமர்ந்து எழுமாறு கூறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பெண் கைதிகளை அவமானப்படுத்தவே நிர்வாணமாக்கினார்களா?

"அவர்கள் எங்களை அவமானப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார்கள்," என்கிறார் முன்னாள் பெண் அரசியல் கைதியான மொஸ்கன் கேஷவர்ஸ்.

இவர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். தனது சிறைக் காலத்தை பெரும்பாலும் டெஹ்ரான் மாகாணத்தில் மிக மோசமான சிறைகளான எவின் மற்றும் கர்ச்சக் சிறையில் கழித்தவர்.

இவரது சிறைவாசம் ஜனவரி 2022ஆம் ஆண்டு முடிவடைந்தது. தனது சிறைவாசத்தின்போது பாதுகாப்பு கேமராக்களுக்கு முன்பாக மூன்று முறை ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி அவரைச் சோதனை செய்ததாகக் கூறுகிறார்.

மூன்றாவது முறை, ஒரு பெண் சிறைக்காவலர் தன்னை நிர்வாணமாக்கி அதைப் புகைப்படமும் எடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார் கேஷவர்ஸ். அப்போது கேஷவர்ஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக எதிர்காலத்தில் எழக்கூடிய புகார்களை எதிர்கொள்ளவே அவ்வாறு செய்யப்படுவதாக அவருக்கு பதிலளிக்கப்பட்டது.

"இந்த வீடியோக்களை யார் பார்ப்பார்கள்? எதிர்காலத்தில் எங்களை ஒடுக்க அரசாங்கம் இவற்றைப் பயன்படுத்துமா?” என்று கேட்கிறார் கேஷவர்ஸ். தனது சிறைத்தண்டனை நிறைவடைந்தாலும் இந்த வீடியோக்களை வைத்து தான் மிரட்டப்படும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இரான், ஹிஜாப், இஸ்லாம், பெண்கள், பாலியல் சித்திரவதை

பட மூலாதாரம், MOZHGAN KESHAVARZ/INSTAGRAM

படக்குறிப்பு, கேஷவர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹிஜாப் அணியாமல் அவர் பல்வேறு பொது இடங்களில் எடுத்துக்கொண்ட கலைநயமிக்கப் படங்களை பகிர்ந்திருக்கிறார்

கேஷவர்ஸ் ஒரு பெண்ணுரிமைப் போராளி. அவர் கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹிஜாப் அணியாமல் பல்வேறு பொது இடங்களில் எடுத்துக்கொண்ட கலைநயமிக்கப் படங்களை பகிர்ந்துள்ளார்.

‘தேசிய பாதுகாப்பிற்கு எதிராக சதி செய்தது, இஸ்லாத்தை அவமதித்தது, இரானின் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராகப் பரப்புரை செய்தது, ஆபாசத்தை ஊக்குவித்தது’ ஆகிய குற்றங்களுக்காக இவருக்கு 12 ஆண்டுகள், ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மிகச் சமீபத்தில், இவர் மீது ‘பூமியில் சீர்கேட்டைப் பரப்புதல்’ என்ற குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படும். இவர் இப்போது இரானில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் வாழ்கிறார். அங்கிருந்து பிபிசியிடம் பேசினார்.

அரசியல் கைதிகளை நிர்வாணமாக்கும் செயல் வழக்கமான ஒன்றா?

காணொளிக் குறிப்பு, இரானிய பெண்கள் போராட்டம்: பிபிசியிடம் போராட்டக்குழு பகிர்ந்து கொண்ட நாட்குறிப்பு தகவல்கள்

இரானில் போதைப்பொருள் வழக்கில் கைதாகும் நபர்களின் ஆடைகளை அவிழ்த்து, அவர்கள் போதைபொருட்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வது நீண்டகால வழக்கமாக இருந்து வருவதாக பெண் கைதிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு முன்பு அரசியல் கைதிகள் இதுபோல நிர்வாணமாக்கிச் சோதிக்கப்பட்டதில்லை, அதுவும் கேமரா முன்பு நிச்சயமாகச் சோதிக்கப்பட்டதில்லை.

கடந்த ஜூன் மாதத் துவக்கத்தில், இரானின் நீதித்துறை கைதிகளை நிர்வாணமாக்கிப் படம்பிடித்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. இத்தகைய குற்றச்சாட்டுகளை ‘இரானுக்கு எதிரான ஒரு போர்’ மற்றும் ‘இரானுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பரப்புரை’ என்று நிராகரித்தது.

இருப்பினும், ஜூன் மாத மத்தியில், இரானிய நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவர், "பெண் காவலர்கள் மட்டுமே பெண் கைதிகளின் வீடியோ காட்சிகளைப் பார்ப்பார்கள்," என்று கூறினார். இப்படிக் கூறி, பெண் கைதிகள் படமாக்கப்பட்டதை அவரே ஒப்புக்கொண்டார்.

இரான், ஹிஜாப், இஸ்லாம், பெண்கள், பாலியல் சித்திரவதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் பெண் போராளிகள் சிறைச்சாலையில் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன

நிர்வாண சோதனைகள் நடந்ததை உறுதி செய்யும் ஆவணங்கள்

சட்டப்படி கேமராக்கள் இருக்கக்கூடாத சிறைப் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

"சிறை விதிமுறைகளின்படி, கைதிகள் நடமாடும் தாழ்வாரங்கள் போன்ற இடங்களில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் கூறினார், தெஹ்ரானில் பணிபுரியும் வழக்கறிஞரான முகமது ஹொசைன் அகாசி.

கைதிகளை நிர்வாணமாக்கிச் சோதிப்பது இரானில் மட்டுமே நடக்கும் விஷயமல்ல. ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் நடந்த பிரபலமான ஒரு வழக்கிலும் இதுபோன்று நடந்துள்ளது. அங்கு தகவல் அறியும் உரிமையின் கீழ் கோரிப் பெறப்பட்ட ஆவணங்களின்படி, இத்தகைய சோதனைகள் நடத்தப்படும்போது அதிகாரிகள் படம் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

ஆனால், இரானில் நடப்பது வேறு வகையானது, சங்கடப்படுத்தக்கூடியது. ஏனெனில், பிபிசியிடம் பேசிய பலரும் இது திட்டமிடப்பட்டு, உள்நோக்கத்தோடு செய்யப்படும் நடைமுறை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஐந்து முறை நிர்வாணமாக்கப்பட்ட பெண் போராளி

இரான் ஹிஜாப் போராட்டம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இரானில் பெண்கள் 'ஹிஜாப்' அணிகிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. (கோப்புப் படம்)

எடாலத் அலி என்ற ஹேக்கிங் குழுவிடமிருந்து பிபிசி சில ரகசிய ஆவணங்களைப் பெற்றது. அதில், நவம்பர் 2021 தேதியிட்ட ஓர் ஆவணத்தில் இரானிய நீதித்துறையின் கடிதம் ஒன்று கைதிகளை நிர்வாணமாக்கித் தேடியதை உறுதி செய்தது.

குர்திஷ் இன சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் மொஜ்கன் கவூசி, கராஜ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதை அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

இந்த வழக்கை நன்கு அறிந்த, இரானில் இருக்கும் ஒருவர், பிபிசியிடம், கவூசி ஐந்து முறை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகாக் கூறினார்.

மனித உரிமைச் செய்தி நிறுவனமான ஹ்ரானா, இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து, இரானின் அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மொஜ்கன் கவூசி இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

'நிர்வாணமாக்கி சிகரெட்டால் சூடு வைத்தனர்'

இரான் ஹிஜாப் போராட்டம்

பட மூலாதாரம், MAHSA AMINI FAMILY

படக்குறிப்பு, மாசா அமினி என்ற குர்திஷ் இன இளம்பெண் போலீஸ் காவலில் உயிரிழந்தார்.

பலூச் இன சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் எலாஹே எஜ்பாரி, "நான் கைது செய்யப்பட்ட இரண்டு முறையும் நிர்வாணமாக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டேன். அப்போது அதிகாரிகள் என் உடலைக் கேலி செய்தனர்," என்று பிபிசியிடம் கூறினார்.

தன்னை விசாரணை செய்த அதிகாரி ஒரு சிகரெட்டால் தனக்குச் சூடு வைத்ததாகக் கூறி தனது கையில் ஒரு வடுவையும் காட்டினார்.

எஜ்பாரி முதன்முதலில் செப்டம்பர் 2020இல் தெஹ்ரானில் ‘இரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்ததாகக்’ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆறு வாரங்களை எவின் சிறையில் கழித்தார்.

அவர் நவம்பர் 2022இல் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் அடையாளம் தெரியாத ஓரிடத்தில் சிறை வைக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்படப் போவதாகப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புகள் வந்ததையடுத்து, அவர் இரானில் இருந்து தப்பிச் சென்றார்.

இரான், ஹிஜாப், இஸ்லாம், பெண்கள், பாலியல் சித்திரவதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹிஜாப் அணியாத்தற்காகக் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம்பெண் காவல்துறை கட்டுப்பாட்டில் உயிரிழந்ததையடுத்து சென்ற ஆண்டு இரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் வெடித்தது

‘இனிமேல், என்ன வேண்டுமானாலும் நடக்கும்’

நசிபே ஷம்செய் என்ற மற்றொரு இரானிய பெண்ணுரிமை செயற்பாட்டாளர், தாம் மூன்று முறை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தபட்டதாகக் கூறுகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இரானில் கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்த்துப் போராடிய ‘Girls of Revolution Street’ என்ற புரட்சிக் குழுவில் இவர் ஓர் உறுப்பினர். அப்போது பலர் கைது செய்யப்பட்டனர்.

‘பொது இடங்களில் ஹிஜாபை அகற்றுவதன் மூலம் இரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான பரப்புரை செய்தல், இரான் இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மற்றும் தலைவரை அவமரியாதை செய்தல்’ உட்படப் பல குற்றங்கள் சாட்டப்பட்டு ஷம்சாய்க்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கர்ச்சக் சிறையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களைக் கழித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இப்போது இரானில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் வசிக்கிறார்.

சிசிடிவி கேமராக்களின் முன்பாக நிர்வாணப்படுத்தப்பட்டதைப் பற்றி அவர் புகார் செய்தபோது, ஒரு சிறைக் காவலர் இப்படி பதிலளித்துள்ளார்: "இனிமேல், என்ன வேண்டுமானாலும் நடக்கும்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: