இந்து கடவுள் பெயரில் முஸ்லிம்கள் உணவகம் நடத்தக் கூடாதா? உ.பி.யில் எதிர்ப்பு ஏன்?

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, எந்த ஒரு மதத்தினரும், அவர்களின் சொந்த அடையாளத்தைப் பயன்படுத்தித் தான் தங்கள் தொழிலகங்களுக்குப் பெயரிடவேண்டும் என கணபதி டூரிஸ்ட் தாபா நம்பர் 1 உரிமையளர் குப்தாஜி கூறுகிறார்.
    • எழுதியவர், அமித் ஷைனி & தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி நியூஸ்

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் கன்வர் யாத்திரை நடைபெற்ற போது, அதில் பங்கேற்றவர்கள் சென்ற பாதையில் இருந்த முஸ்லின்களின் சைவ, அசைவ உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கன்வர் யாத்திரை நடைபெற்ற பாதையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அல்லது அவர்கள் பணியாற்றும் உணவகங்கள் மற்றும் தாபாக்கள் அனைத்தும் 15 நாட்களுக்கு இவ்வாறு மூடப்பட்டிருந்தன. தற்பொழுது இந்த உணவகங்கள் அனைத்தும் மெதுவாகத் திறக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது.

முசாஃபர் நகரில் உள்ள ஒரு இந்து மத துறைவி அவர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் அவற்றின் உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதையில், அந்த யாத்திரையின் போது இறைச்சிக்கடைகளும், மீன் விற்பனையகங்களும் மூடப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு முஸ்லிம்களின் சைவ உணவகங்களும் மூடப்பட்டிருந்தன.

இது தொடர்பாகப் பேசிய முசாஃபர்நகர நீதிபதி விகாஸ் கஷ்யப், "கடந்த முறை இந்த யாத்திரை நடைபெற்ற போது சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்தது. இந்த ஆண்டு முஸ்லிம்களின் உணவகங்கள் அனைத்துக்கும் இந்து கடவுள்களின் பெயர் சூட்டுமாறு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டதால் இப்படி அனைத்து உணவகங்களும் மூடப்பட்டன," என்றார்.

மறுபுறம் முசாஃபர்நகர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். எந்தப் பிரச்சினையும் இன்றி யாத்திரை நிறைவு பெற்ற நிலையில் அதைப் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.

கவர் மார்க்கில் முஸ்லிம்களின் சைவ, அசைவ உணவகங்களும், தாபாக்களும் ஏன் மூடப்பட்டன? அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டன, என்ன மாதிரியான பொருளாதார இழப்பு ஏற்பட்டது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க நாங்கள் முசாஃபர்நகரில் உள்ள பல்வேறு தாபாக்களின் உரிமையாளர்களிடம் பேசினோம்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலை-58 இல் அமைந்துள்ள சண்டிகர் டா தாபா, ஒரு முஸ்லீமுக்கு சொந்தமானது.

கன்வர் யாத்திரை நடைபெற்ற பிரதான வழியான தேசிய நெடுஞ்சாலை 58-ல் பாக் வாலி சௌரகா பகுதியில் செயல்படும் பஞ்சாபி நியூ ஸ்டார் ஷுத் தாபாவில் சோனு பால் மற்றும் சாதிக் தியாகி ஆகிய இருவரையும் நாங்கள் சந்தித்துப் பேசினோம்.

"இந்த உணவகத்தின் உரிமையாளர் நான் தான். என்னுடன் பங்குதாரராக முகமது யூசுஃப் என்கிற குட்டு இருந்துவருகிறார். இந்த இடமும் ஆலம் என்ற முஸ்லிம் நபருக்குச் சொந்தமானது," என சோனு பால் தெரிவித்தார்.

மேலும், "கன்வர் யாத்திரை நடைபெற்றபோது எனது உணவகத்தை மூடச் சொல்லி நிர்வாகம் கூறியது. உணவகத்தின் உரிமம் எனது பெயரில் தான் உள்ளது," என்றார் அவர்.

"எனது உணவகத்தில் 30 - 35 ஆண்கள் வேலை செய்கின்றனர். யாத்திரை காரணமாக முன்பே அதிக அளவில் நான் பொருட்களை வாங்கி வைத்திருந்தேன். ஆனால் உணவகத்தை மூடியதால் அனைத்தும் கெட்டுவிட்டன. மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது," என சோனு தெரிவித்தார்.

"கடைகளை மூடுவது தொர்பாக எந்த வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. இரண்டு அல்லது நான்கு காவலர்கள் வந்து கடைகளை மூடுமாறு வலியுறுத்தினார்கள். ஏன் உணவகத்தை மூட வேண்டும் என நான் கேட்டேன். நான் ஒரு முஸ்லிம் என்றும், ஆனால் எனது உணவகத்துக்கு இந்து மத பெயரை வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்," என்றும் சோனு தெரிவித்தார்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, கன்வர் யாத்திரையின் போது உணவகத்தை மூட போலீசர் வலியுறுத்தியதாக பஞ்சாபி நியூ ஸ்டார் ஷுத் தாபாவின் உரிமையாளர் சோனு பால்.

இது போல் உணவகங்களை மூடுவது தொடர்பாக முசாஃபர்நகர நிர்வாகம் முறையான உத்தரவு எதையும் வழங்கவில்லை.

இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், முஸ்லிம்களின் பெயர்களில் இருந்த உணவகங்களும், இந்துப் பெயர்களில் செயல்பட்ட உணவகங்களும் மூடப்பட்டன என்றும், இது தவிர வேறு தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கன்வர் யாத்திரை தொடங்குவதற்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை 58-ல் உள்ள 'வெல்கம் டு பிக்னிக் பாயின்ட் டூரிஸ்ட் தாபா' என்ற உணவகத்தின் பெயர் 'ஓம் சிவா வைஷ்ணவ் தாபா' எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கன்வர் யாத்திரையின் போது நடந்த போராட்டத்துக்குப் பின்னர் தற்போது அந்த உணவகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

"கன்வர்பால் என்பவர் தான் இந்த தாபாவை 'ஓம் சிவா வைஷ்ணவ்' என்ற பெயரில் முன்பு நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் அதை வாடகைக்கு எடுத்து அதே பெயரில் தொடர்ந்து நடத்தினோம்," என அந்த தாபாவின் உரிமையாளர் அடில் ரத்தோர் கூறுகிறார்.

மேலும் விளக்கிய அடில், "நாங்கள் சைவ உணவுகளை மட்டும் தயாரிக்கிறோம். இங்கு வேலை செய்யும் மின்ட்டு, அமன், சோனு, பிஜேந்திரா மற்றும் விக்கி என அனைவரும் இந்துக்கள் தான். நாங்கள் முட்டைகள், வெங்காயம் மற்றும் பூண்டு கூடப் பயன்படுத்துவதில்லை. இருந்தும் நான்காம் தேதி எங்கள் உணவகம் மூடப்பட்டது. அதன் பின் இன்று தான் திறக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது," என்கிறார்.

அவர் மேலும் பேசுகையில், "எங்கள் தாபாவில் வேலை செய்யும் பணியாளர்களில் சிலர் குழந்தைகளுடன் இங்கேயே வசிக்கின்றனர். தாபா மூடப்பட்டிருந்த காலங்களில் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. 30 கிலோ மீட்டர் தொலைவில் கடௌலிக்கு அருகே உள்ள கோக்கினியில் இருந்து எனது சகோதரர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இங்கே கொண்டுவந்தார்," என்று தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், "வாடகை, மின் கட்டணம் செலுத்துவது மற்றும் கூலி அளித்தல் குறித்த கவலைகள் எனக்கு இன்னும் தொடர்கின்றன," என்கிறார் அடில்.

இதே போல், "ஒரு இந்து பெயரில் செயல்படும் உணவகத்துக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்படும் என் ஒருநாளும் தெரியவில்லை. மிராபூரில் அம்ரிஸ்டர் பெயரில் ஒரு தாபாவை பாபா பல ஆண்டுகள் நடத்திய போது கூட இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதில்லை," என்றும் அடில் கூறுகிறார்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, ஓம் சிவா வைஷ்ணவ் தபா என்ற உணவகத்தின் பெயர் வெல்கம் டு பிக்னிக் பாயின்ட் டூரிஸ்ட் தாபா என மாற்றப்பட்டுள்ளது.

"கன்வர் பால் நடத்திய இந்த உணவகத்தின் பெயர் முன்னர் ஓம் சிவா வைஷ்ணவ் தாபா என்றிருந்தது. நாங்களும் அதே பெயரில் தான் இதை நடத்திவந்தோம். அதனால் எங்கள் உணவகத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது," என்கிறார் அடிலின் தந்தை சனவ்வார் ரத்தோர்.

ரத்தோர் தொடர்ந்து பேசுகையில், "நாங்கள் முஸ்லிம் ராஜபுத்திரர்கள். இந்து கடவுள்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். தாபாவைத் தொடங்கியது முதல் நாங்கள் சைவ உணவுகளை மட்டுமே தயாரித்து வருகிறோம். இனிமேலும் சைவ உணவுகளை மட்டுமே தயாரிப்போம்," என்கிறார்.

மேலும், "நாங்கள் விரும்பியிருந்தால் ஒரு முஸ்லிம் பெயரில் தாபாவை நடத்தியிருக்க முடியும். ஆனால் சைவ உணவுகளை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில், எங்களது தாபாவின் பெயரை மாற்ற வேண்டும் என ஒருவர் கூறும் போது, நாங்கள் 'வெல்கம் டு பிக்னிக் பாயின்ட் டூரிஸ்ட் தாபா' எனப் பெயர் மாற்றம் செய்தோம். இனிமேல் இந்தப் பெயரில் தான் இந்த தாபாவை நடத்தப்போகிறோம்," என்கிறார் ரத்தோர்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, இந்து கடவுள்களையும், இந்துக்களின் நம்பிக்கையையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்கிறார், வெல்கம் டு பிக்னிக் பாயின்ட் டூரிஸ்ட் தாபாவின் முஸ்லிம் உரிமையாளர் அடில் ரத்தோர்.

நாங்கள் தொடர்ந்து அந்த வழியே பயணித்த போது, சண்டிகார் டா தாபா என்ற உணவகம் தேசிய நெடுஞ்சாலையின் போபா பைபாஸ் அருகே இருந்தது. அங்கே சென்ற போது அஸ்ரஃப் அலியை நாங்கள் சந்தித்தோம்.

அவர் பேசும் போது, "நான் இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறேன். வேறு ஒருவர் தான் உரிமையாளராக உள்ளார். இங்கே வேலை செய்யும் இரண்டு பேர் முஸ்லிம்கள். அவர்கள் இருவரும் ரசீது தயாரிப்பது மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். பிற அனைத்துப் பணிகளும் இந்துக்களால் மட்டுமே செய்யப்படுகிறது," என்கிறார்.

மேலும், "கொரோனா பரவத் தொடங்கிய பின் உணவகத் தொழில் மிகவும் நசிந்துவிட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடை மற்றும் கன்வர் யாத்திரை போன்ற முக்கிய சீசன்களில் தான் எங்களுக்கு சிறிய லாபம் கிடைக்கிறது. ஓராண்டில் செலவு செய்யப்படும் பணத்தை அப்போது தான் சம்பாதிக்க முடியும். எங்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலவு ஆவதோடு, இங்கே வேலை செய்பவர்களுக்குக் கூட பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன," என்கிறார் அஸ்ரஃப் அலி.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAIN

படக்குறிப்பு, கொரோனா பாதிப்புக்குப் பின்னர் உணவகம் நடத்துவது மிகுந்த சிரமமாக இருப்பதாக சண்டிகர் டா தாபாவின் முஸ்லிம் மேலாளர் அஃப்சர் அலி கூறுகிறார்.

மேலும், "இது ஒரு முழு சைவ உணவகம். இங்கே முட்டைகள் கூட சமைக்கப்படுவதில்லை. இது ஹரித்துவாருக்குச் செல்லும் வழி என்பதால் தான் இது போல் சைவ உணவகமாக நாங்கள் நடத்துகிறோம். நாங்கள் இந்துக்களின் நம்பிக்கையை மதிக்கிறோம்," என்கிறார் அஸ்ரஃப் அலி.

இந்து பெயர்களை வைப்பதால் அடையாளம் மறைக்கப்படுவது குறித்து அவரிடம் பேசும் போது, "சண்டிகார் என்ற பெயரால் ஈர்க்கப்பட்டதால் அப்பெயரை நாங்கள் வைத்தோம். எந்த அடையாளத்தையும் நாங்கள் மறைக்கவில்லை," என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசும் அவர், "காவல் துறையில் இருந்து வந்த ஒருவர் வந்த போது, கன்வர் யாத்திரை சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு உணவகத்தை மூடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதனால் நாங்கள் அதை மூடினோம்," என்கிறார்.

இருப்பினும், நகர நிர்வாகம் அளித்த எந்த உத்தரவையும் அந்த காவல் துறை அதிகாரி அளிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

முஸ்லிம்களின் உணவகங்களில் உணவுப் பொருட்களுடன் இறைச்சி உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் கலக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் குறித்துக் கேட்கும்போது, அவற்றிற்கு அவர் உறுதியான மறுப்பைத் தெரிவித்தார்.

"இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அனைவரும் இதுபோல் தவறு செய்கிறார்கள் என்பது முற்றிலும் தவறானது."

முஸ்லிம் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களிலும் இதுபோன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன.

சண்டிகார் டா தாபாவில் சமையல் பணிகளில் இடுபட்டுள்ள போஜ்ராம் பேசுகையில், "நான் இங்கே வேலைக்குச் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இறைச்சி, முட்டை, மீன் போன்ற உணவுவகைகள் இங்கே சமைக்கப்படுவதில்லை. இது முழுக்க முழுக்க ஒரு சைவ உணவகம். சமூக வலைதளங்களில் காட்டப்படுவது போன்ற தவறுகள் இங்கே நடப்பதில்லை," என்கிறார்.

லலித் தீக்ஷித் இந்த உணவகத்திற்கு தொடர்ந்து வருபவர். தினமும் அவர் இங்கே உணவு உண்கிறார். அவர் பேசுகையில், "நானும் எனது நண்பர்களும் இந்த உணவகத்தில் தான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக உணவு உண்டுவருகிறோம். பெரும்பாலான நேரங்களில் எங்களுக்கு மதிய உணவு இங்கேதான். நாங்கள் பண்டிட்டுகள். இந்த உணவகம் ஒரு சைவ உணவகம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். இங்கே பணியாற்றுபவர்களும் இந்துக்களாக உள்ளனர். உணவகத்தின் உரிமையாளராக முஸ்லிம் இருக்கிறார் என்பது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை," என்கிறார்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சமைக்கப்படுவதில்லை என சண்டிகர் டா தாபாவில் பணியாற்றும் சமையல்காரர் போஜ்ராம் கூறுகிறார்.

நாங்கள் ஹரித்துவாருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விநாயகர் படத்துடன் இருந்த 'நியூ கனபதி டூரிஸ்ட் தாபா நம்பர் 1' என்ற உணவகத்தின் மீது எங்கள் கவனம் பதிந்தது. இங்கே நான் வாசிம் என்பவரைச் சந்தித்தேன். இங்கே மேலாளராகப் பணியாற்றும் அவர் பஜேதி கிராமத்திலிருந்து வேலைக்கு வருகிறார்.

வாசிம் பேசும் போது, "இதே பெயரில் இந்த உணவகம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உணவகம் அமைந்துள்ள இடம் ஓர்ச்சார்டைச் சேர்ந்த நசீம் அகமது என்பவருக்குச் சொந்தமானது. எங்களுக்கு முன் இந்த உணவகத்தை வீரபால் என்பவர் நடத்திவந்தார். அவரிடமிருந்து நாங்கள் இந்த உணவகத்தை வாங்கி நடத்திவந்தோம். கடன் சுமை அதிகமானதால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் புஷ்பராஜ் சிங் என்ற சோனுவுக்கு விற்றுவிட்டோம்," என்கிறார்.

மேலும், "நான் புஷ்பராஜ் என்ன சொல்கிறாரோ, அதற்கேற்றவாறு மட்டுமே முழுக்க முழுக்க செயல்படுகிறேன். அவர் தான் இந்த தாபாவின் உரிமையாளர். கன்வர் யாத்திரையின் போது இதில் ஒரு சர்ச்சை எழுந்தது. நகர நிர்வாகத்திலிருந்து வந்தவர்கள், நான் ஒரு முஸ்லிம் என்பதால் உணவகத்தை மூடச் சொன்னார்கள். நான் முஸ்லிமாக இருப்பதால் இந்த விநாயகர் படமும், பெயரும் இருக்கக்கூடாது என்றனர்," எனக்கூறுகிறார்.

இதுமட்டுமின்றி, "இந்த வெறுப்புணர்வு காரணமாக எங்களது உணவகம் மூடப்பட்டது. இங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்கள். கன்வார் யாத்திரையின் போது, இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலை இருந்தது. ஆனால், உணவகத்தை மூடியதால் அந்த வருமானம் வரவில்லை. இதில் தாபா உரிமையாளருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்," என்கிறார்.

"இங்கே பணியாற்றிய சந்தோஷ் என்ற பணியாளர் ஒருவர் இந்த உணவகம் மூடப்பட்ட போது உணவகத்துக்கு வெளியே ஒரு டீ கடையை நடத்தினார். ஆனால் அதையும் மூடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது," என்றும், "இங்கே பணியாற்றும் அனைவரும் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் எப்படி உணவில் இதுபோல் கலப்படம் செய்வார்கள் எனத்தெரியவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் முட்டாள் தனமானவை என்பது மட்டுமின்றி அடிப்படை ஆதாரமற்றதும் கூட. அதுபோல் எப்போதும் நடக்காது," என்றும் கூறுகிறார்.

உணவகத்தின் பெயர் மாற்றம் மற்றும் அங்கிருந்த படத்தை மாற்றுவது பற்றி பேசும் போது, "நான் ஒரு பணியாளர். அது பற்றி உரிமையாளர் தான் முடிவெடுக்கமுடியும். பெயரை அவர் மாற்ற மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் பெயர் இப்படியே நீடிக்கும். உரிமையாளரும் ஒரு இந்து தான். அவர் ஒரு இந்துக் கடவுளின் பெயரைப் பயன்படுத்த உரிமை இல்லையா?" எனக்கேட்கிறார்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, கன்வர் யாத்திரையின் போது உணவகத்தை மூடியதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விற்பனை பாதிக்கப்பட்டதாக நியூ கனபதி டூரிஸ்ட் தாபா நம்பர் 1 மேலாளர் முகமது வாசிம் கூறுகிறார்.

கணபதி டூரிஸ்ட் தாபா நம்பர் 1 என்ற பெயரில் இந்த சாலையில் மற்றொரு உணவகமும் இருக்கிறது. அங்கே மிகப்பெரிய அளவில் பெயர் எழுதப்பட்டுள்ளது. குப்தாஜியின் படம் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த உணவக உரிமையாளரான குப்தாவிடம் பேசும் போது, "என்னுடைய கருத்தின்படி, முஸ்லிம்கள் அவர்களுடைய அடையாளங்களைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். இந்துக்களின் பெயரில் முஸ்லிம்கள் உணவகங்களைத் திறந்துள்ளனர். நீங்கள் உங்கள் பெயரை வைக்கவேண்டும். என்ன பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்துகளின் பெயரில் முஸ்லிம்கள் உணவகங்களை நடத்துவது தவறானது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்கிறார்.

"கணபதி ஹோட்டல் எங்களுடையது. முஸ்லிம்களும் இதே பெயரைப் பயன்படுத்துகின்றனர். இது போல் ஏராளமான உணவகங்கள் உள்ளன," என்கிறார் குப்தாஜி.

முழுப்பெயரையும் சொல்ல மறுக்கும் குப்தாஜி, "இந்துகளை வேலைக்கு வைத்திருப்பது மட்டும் எந்த மாற்றத்தையும் தராது. நீங்கள் உங்கள் பெயரை வைக்கவேண்டும். அல்லது உரிமையாளர் பெயர் என்கிற இடத்திலாவது உங்களுடைய பெயரை எழுதுங்கள். இது உங்கள் அடையாளத்தை பொதுமக்களுக்குக் காட்டும். அப்படி எழுதினால் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை," என்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தின் படி அனைவருக்கும் சம உரிமை உள்ளது. அனைவரும் தொழில் செய்யமுடியும். பின்னர் எப்படி ஒருவருடைய தொழில் குறித்து பிரச்னைகளைக் கிளப்பமுடியும்?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் குப்தாஜி, "முஸ்லிம்கள் கடைப் பெயர்களை மாற்றி வைத்துக்கொள்வது மட்டுமின்றி உணவுப்பொருட்களை எச்சிலாக்கி பறிமாறுவதாகவும்," குற்றம் சாட்டுகிறார். மேலும், அப்படிப்பட்ட உணவகங்கள் மூடப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் அவை திறக்கப்பட்டன என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், அவருடைய குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை அளிக்கவில்லை. பிபிசியினால் இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இது போன்ற குற்றச்சாட்டுகளுடன் கூடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் பரவுவதாக தெரிவிக்கின்றனர்.

"ஒவ்வொருவரும் அவருடைய சொந்த அடையாளத்திலேயே ஒரு தொழிலை நடத்தவேண்டும். எல்லோருக்கும் தங்களது வாழ்க்கையை நடத்த பணம் சம்பாதிக்கும் தேவை உள்ளது. ஆனால் இப்படி அடையாளத்தை மாற்றிச் செயல்படுவது தவறானது. எங்கள் கடவுள்களின் பெயரில் ஏன் இது போன்ற செயல்கள் செய்யப்படுகின்றன? நாங்கள் எங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெயர்களை வைக்கிறோம். அப்படி வைத்துக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்கிறார் அவர்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, இந்து கடவுள்களின் படங்கள் மற்றும் பெயர்களுடன் செயல்படும் மாற்று மதத்தினரின் உணவகங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பக்ராவில் ஆஸ்ரமம் ஒன்றை நடத்திவரும் சுவாமி யாஷ்வீர் என்பவர் முஸ்லிம்களின் சைவ உணவகங்களுக்கு எதிரான பிரசாரத்தை நடத்திவருகிறார்.

அவர் பேசும் போது, "நிறைய முஸ்லிம்கள் இந்துப் பெயரில் அல்லது இந்து கடவுள்களின் பெயர்களில் உணவகங்களை நடத்துகின்றனர். அந்தப் பெயர்களையும், படங்களையும் பார்த்துவிட்டு இந்துகள் அந்த உணவகங்களில் உணவு உண்கின்றனர்," என்கிறார்.

அதற்கு பல உதாரணங்களை அளிக்கும் சுவாமி யாஷ்வீர், "உணவு உண்ணும் போது இவர்கள் எச்சில் செய்வது மட்டுமின்றி சிறுநீர் கழிக்கின்றனர். அதனால் இதுபோன்ற ஜிகாதிகளை நாங்கள் நம்பமுடியாது," என்கிறார்.

இதுமட்டுமின்றி, உணவில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மாட்டிறைச்சியைக் கலப்பது போன்ற செயல்கள் இந்த உணவகங்களில் நடப்பதாக குற்றம்சாட்டுகிறார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "அதனால் தான் நாங்கள் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த அடையாளங்களைப் பயன்படுத்தி தொழில் செய்தால் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. அவர்கள் அவர்களுடைய மதத்தின் பெயர்களைப் பயன்படுத்து தான் சரியாக இருக்கும்," என்கிறார்.

இந்துகள் பணியாற்றிய உணவகங்களும் மூடப்பட்டது தொடர்பாக அவர் கூறும் போது, "இந்துகள் பணியாற்றும் உணவகங்களும் மூடப்பட்டன என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த முஸ்லிம்களின் உணவகங்களில் பணியாற்றியவர்களும் முஸ்லிம்கள் தான்," என்கிறார்.

கன்வர் யாத்திரையின் போது ஏற்படும் சர்ச்சை

பட மூலாதாரம், AMIT SAINI

படக்குறிப்பு, இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயரில் முஸ்லிம் ஹோட்டல்கள் மற்றும் தாபாக்கள் செயல்படுவதாக பிரச்சினையை எழுப்பி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் சுவாமி யஷ்வீர் மகராஜ்.

கன்வர் யாத்திரையின் போது மூடிவிட்டு பின்னர் திறக்கப்பட்ட உணவகங்கள் பற்றிப் பேசும் போது, "அவர்கள் பெயரை மாற்றவில்லை என்றால், அந்த உணவகங்களுக்கு முன் நாங்கள் அமைதி வழியில் போராட்டங்களை நடத்துவோம்," என்று சுவாமி யஷ்வீர் மஹராஜ் கூறுகிறார்.

எந்த உணவகத்தில் சாப்பிட வேண்டும் என முடிவெடுப்பதில் வாடிக்கையாளர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், முசாஃபர் நகரில் இது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பலர் தங்களது தொழில்களை மூடும் ஆபத்து இருக்கிறது. இது குறித்து முஸ்லிம் உணவக உரிமையாளர்களிடம் கவலை எழுந்துள்ளது.

"நாங்கள் இங்கே பல ஆண்டுகளாக தொழில் செய்துவருகிறோம். எங்கள் உணவகங்கள் மூடப்பட்டால் நாங்கள் வேறு என்ன செய்யமுடியும்? தொழில் செய்ய எங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் எங்கள் மீது ஏன் இப்படி வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது," என அடில் கவலை தெரிவிக்கிறார்.

ஆனால், கன்வர் யாத்திரையின் போது மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்ட உணவகங்களுக்கு எதிராக சுவாமி யஷ்வீர் மஹராஜ் மீண்டும் தமது ஆதரவாளர்களுடன் முசாஃபர் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: