'கொலை' விமர்சனம்: விஜய் ஆண்டனி துப்பறியும் விதம் ரசிகர்களை சீட் நுனிக்கு வர வைத்ததா?

'கொலை' பட விமர்சனம்

பட மூலாதாரம், Ritika Singh/Twitter

ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி நடந்தது என்பதைத் துப்பற்றிய வேண்டும். இதுதான் 'கொலை' திரைப்படத்தின் கதை என்பதை படத்தின் தலைப்பிலேயே நீங்கள் யூகித்திருப்பீர்கள்.

தமிழ் சினிமாவில் அடித்துத் துவைக்கப்பட்ட கதைக்களம்தான். இருப்பினும், இந்த வகையறா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலான ஈர்ப்பு குறைந்ததே இல்லை.

இத்தகைய படங்களின் கதைக்களமும் நாயகனின் நடிப்புமே அவற்றின் வெற்றிக்கு அடிநாதம். அதை ஹீரோவாக விஜய் ஆன்டனியும் இயக்குநராக பாலாஜி கே குமாரும் சிறப்பாகச் செய்துள்ளார்களா?

நான், சலீம், சைத்தான் என த்ரில்லர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த விஜய் ஆண்டனியும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விடியும் முன் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் பாலாஜி கே குமாரும் இணைந்துள்ள திரைப்படம்தான் கொலை.

ஒரு கொலை நடக்கிறது, அது எப்படி நிகழ்ந்தது என்பதை துப்பறிய வேண்டும் என்பதுதான் `கொலை`யின் கதை என்பதை படத்தின் டிரைலரிலேயே ஊகிக்க முடிந்தது. இன்று திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், ஊடக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

'கொலை' பட விமர்சனம்

பட மூலாதாரம், Think Music/Twitter

ஹாலிவுட் தரத்தில் படத்தை கொடுக்கும் முயற்சி

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையை சுற்றி போடப்படும் முடிச்சுகள் தளர்ந்து சுவாரஸ்யமற்று இருப்பது படத்தின் சிக்கலாக உள்ளது என்று இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

"அட்டகாசமான காட்சி அமைப்புகளால் ஹாலிவுட் தரத்தில் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே குமார். அவரது எண்ணத்துக்கு தனது கேமரா லென்ஸ் வழியே உயிர் கொடுத்திருக்கிறார் சிவகுமார் விஜயன்.

ஷார்ட்ஸ் கம்போஸிங், லைட்டிங், கேமரா ஆங்கிள் என ஒளிப்பதிவு ஒருபுறமும் அதற்கேற்ற ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பு மறுபுறமும், இடையில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், கலை ஆக்கமும் படத்தின் தரத்தை கூட்டுகின்றன. படத்தின் முடிச்சுகள் ஆரம்பத்தில் வலுவாக இருந்தாலும், துப்பறியும் தருணங்களின் அதன் இறுக்கம் தளர்ந்து சுவாரஸ்யமற்றிருப்பது படத்தின் பெரும் சிக்கல்.

'கொலை' பட விமர்சனம்

பட மூலாதாரம், vijayantony/Twitter

தொடக்கத்தில் இந்த வழக்கு விசாரணையை துப்பறிய மறுக்கும் விஜய் ஆண்டனி பின்பு ஒப்புகொள்வதற்கான காரணமே ஏற்றுகொள்ளும்படியாக இல்லை. மேலும், அவருக்கான பின்கதை படத்துக்கு எந்த வகையிலும் உறுதுணையாக இல்லை. அப்படியிருக்கும்போது அதற்காக எழுதப்பட்ட காட்சிகள் நேரத்தை வீண்டித்து இழுக்கின்றன" என குறிப்பிட்டுள்ளது.

கொலைகாரனை விஜய் ஆண்டனி நெருங்கும் காட்சிகள் எந்தவித விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இல்லாமலிருப்பது பலவீனம் என்று கூறியுள்ள இந்து தமிழ் திசை விமர்சனம், இறுதியில் கொலைகாரன் கொலைக்கு சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லாதது பலவீனம் என்றும் தெரிவித்துள்ளது.

கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா?

சீரற்ற தன்மையாலும் லாஜிக் ஓட்டைகளாலும் படம் பாதிக்கப்படுகிறது என்று இந்தியா டுடே விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

"மாடலும் பாடகியுமான லைலா( மீனாட்சி சௌத்ரி) அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டி ஐபிஎஸ் அதிகாரியான சந்தியா மோகன்ராஜ் (ரித்திகா சிங்) முன்னாள் புலனாய்வு அதிகாரியான வினாயக்கின் (விஜய் ஆண்டனி) உதவியை நாடுகிறார்.

'கொலை' பட விமர்சனம்

பட மூலாதாரம், Think Music/Youtube

படத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில சுவார்ஸ்யமான காட்சிகள் இருந்தாலும் மொத்தமாக பார்க்கும்போது படத்தில் ஜீவன் இல்லை" என்று இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிடுகிறது.

விநாயக் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையேயான காட்சிகள் எவ்வித உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அந்த காட்சிகள் படத்தில் இல்லையென்றாலும் கதையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது என்றும் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவக்குமாரின் கேமரா ஹாலிவுட் திரைப்படங்கள் போன்ற தரத்தை படத்துக்கு தருகிறது. கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் மேற்கத்திய பாணியில் நன்றாக உள்ளது.

இது இரண்டுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை கதைக்கும் திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் கொலை இன்னும் சிறப்பான க்ரைம் திரில்லராக வந்திருக்கும் என்று இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.

கொலை - சுவாரஸ்யமாக உள்ளதா?

உயர்தர காட்சியமைப்புடன் கூடிய கொலை மர்மம் குறித்த படங்களை விரும்புபவர்களுக்கு கொலை சரியான தேர்வாக இருக்கும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.

"சந்தேகம் மற்றும் சூழ்ச்சியின் ஒரு சிக்கலான வலையை இந்தத் திரைப்படம் திறமையாக உருவாக்கி, விசாரணையின் குழப்பமான உலகத்திற்கு பார்வையாளர்களை ஈர்க்கிறது.

ஆனால், அதை தாண்டி படத்தில் எதுவும் இல்லை. படத்தின் இரண்டாம் பாதி மெதுவாக இருக்கிறது. கொலைக்காரன் யார் என்பது நமக்கு தெரிந்த பின்னர் நீண்ட நேரம் இயக்குநர் காக்க வைக்கிறார்.

கொலைகாரனின் பின்னணியும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை. மொத்தமாக படம் சுவாரஸ்யமானது, ஆனால், இதுபோன்ற படங்களுக்கு தேவைப்படும் வழக்கத்திற்கு மாறான எழுத்தை அது எங்கோ தவறவிடுகிறது" என டைம்ஸ் ஆஃப் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: