சென்னை: காரில் இருந்தே படம் பார்க்கும் பழமையான திரையரங்கம் இடிக்கப்படுவது ஏன்?

டிரைவின் தியேட்டர்
படக்குறிப்பு, பல கோடி மக்களின் நினைவலைகளைச் சுமந்து நிற்கும் பல சினிமா தியேட்டர்கள் ஒடிடி வருகையால் அழிந்து வருகின்றன
    • எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னையின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டரான பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேடியோவின் வருகையால் செய்தித்தாள் அழிந்தது, தொலைக்காட்சியின் வருகையால் ரேடியோ அழிந்தது, அதேபோல், ஓடிடி வருகையால் இப்போது சினிமா திரையரங்குகள் அழிகின்றன.

தொழில் நுட்ப வளர்ச்சியாலும், காலத்தின் மாற்றத்தாலும் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஏதாவதொன்று எப்போதும் காலப் போக்கில் இருந்த சுவடே இல்லாமல் மறைந்து விடும்.

அப்படித்தான் இன்று பல கோடி மக்களின் நினைவலைகளைச் சுமந்து நிற்கும் பல சினிமா தியேட்டர்கள் அழிந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்களின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.

அதிலும் குறிப்பாக, சினிமாவின் தலைநகரமான சென்னையில் அன்றைய காலகட்டத்தில், காமதேனு தியேட்டர், கிருஷ்ணவேணி தியேட்டர், மினர்வா, அலங்கார், பிரபாத், மகாலட்சுமி, கெயிட்டி, வெலிங்டன், ராக்ஸி, சயானி, மேகலா, கேசினோ, உமா ராக்சி, சபையர், ஆனந்த் உள்ளிட்டவை மிகவும் பிரபலமாக இருந்தன.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திருவிழா போல் தியேட்டருக்கு வருவது வழக்கமாக இருந்தது. இதில், ஒரு நாளில் காலை முதல் காட்சியில் ஆரம்பித்து, இரவு கடைசி நேரக் காட்சி வரை பார்த்துச் சென்ற சினிமா பிரியர்களின் கணக்குத் தனி.

இதில், ஏறக்குறைய அத்தனை தியேட்டர்களும் வணிக வளாகங்களாகவோ, அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ மாறிவிட்டன.

அந்த வரிசையில் தற்போது, சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள மிகப் பிரபலமான பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டரும் இடிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வொரு காருக்கும் அருகில் ஸ்பீக்கர் அமைக்கப்பட்டிருக்கும். இதே வளாகத்தில் ஆராதனா என்ற தியேட்டரும் செயல்பட்டு வந்தது. அதில், திறந்த வெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்

காணாமல் போன தியேட்டர்களின் பட்டியலில் இணையும் பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர்

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தேவநாதன் கடந்த 1991இல் பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டரை துவங்கினார். இந்த தியேட்டரின் முக்கிய அம்சமே நீங்கள் உங்கள் காரில் இருந்தபடியே திறந்த வெளியில் திரையிடப்படும் படங்களைக் கண்டு ரசிக்கலாம் என்பதுதான்.

ஒவ்வொரு காருக்கும் அருகில் ஸ்பீக்கர் அமைக்கப்பட்டிருக்கும். இதே வளாகத்தில் ஆராதனா என்ற தியேட்டரும் செயல்பட்டு வந்தது. அதில், திறந்த வெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த தியேட்டர் 2021இல் சில நிர்வாக காரணங்களுக்காகவும், கொரோனா முன்னெச்செரிக்கைகளுக்காகவும் மூடப்பட்டது.

பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் இடிக்கப்படவுள்ளது என்ற தகவல் வெளியானவுடன், பிபிசி குழு அங்கு சென்று அங்குள்ள குடியிருப்பு வாசிகளை விசாரித்துப் பார்த்ததில், சென்னையைச் சேர்ந்த “பாஷ்யம்” கட்டுமான நிறுவனத்திடம், தியேட்டர் கைமாறியுள்ளதாகவும், அங்கு 29 ஏக்கர் பரப்பளவில், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா வகை வீடுகள் கட்ட, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது.

இதற்காக, பிரார்த்தனா, ஆராதனா தியேட்டர்களை இடிக்கும் பணிகளை, கட்டுமான நிறுவனம் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆராதனா தியேட்டர்
படக்குறிப்பு, ஆராதனா தியேட்டர்

நினைவுகளைச் சுமந்து நின்ற திரையரங்கம்

பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் இடிக்கப்படுவது தொடர்பாக இயக்குநரும், எழுத்தாளருமான அஜயன் பாலாவை பிபிசி தமிழுக்காகத் தொடர்பு கொண்டு பேசினோம்.

இது குறித்துப் பேசிய அவர், “சினிமா தியேட்டர் என்பது மக்கள் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் பார்க்காமல் ஒன்றாகக் கூடும் பண்பாட்டுத் தளம். ஒரு திரைப்படம் பார்ப்பது என்பது 100 புத்தகங்களைப் படிப்பதற்குச் சமம். படம் பார்ப்பது என்பது பாடம் படிப்பது போல; அது உணர்வுரீதியாக ரசிகனை செதுக்கும், வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கும்," என்றார்.

"கடந்த 2021இல் பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டது. ஆனால், தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவிருப்பதால் நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நான் பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டரில் தொழில்முறை நண்பரகள் பலருடனும், குடும்பத்துடனும் நிறைய திரைப்படங்கள் பார்த்துள்ளேன்,” என்று தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

அஜயன் பாலா
படக்குறிப்பு, அஜயன் பாலா, எழுத்தாளர்

''உதவி இயக்குனர்களுடன் சென்று படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்'': இயக்குனர் ஏ. எல். விஜய்

அடுத்ததாக பிரார்த்தனா டிரைவ்-இன் திரையரங்கம் இடிக்கப்படுவது குறித்து பிரபல இயக்குநர் ஏ. எல். விஜய்யிடம் பேசினோம்.

அவர், “சென்னையின் முதல் ட்ரைவ்-இன் தியேட்டரான பிரார்த்தனா இடிக்கப்படுவது மிகவும் வருத்தத்திற்குரியது. பிரார்த்தனா உரிமையாளர் அதை மறுசீரமைப்பு செய்து மீண்டும் ரசிகர்களை படம் பார்க்க வைத்திருக்கலாம்.

ஆனால், வணிகரீதியாக பிரார்த்தனா, ஆராதனா தியேட்டர்கள் அவருக்கு என்ன லாபத்தைக் கொடுத்தது எனத் தெரியாது. நான் எனது உதவி இயக்குநர்களுடன் சென்று பிரார்த்தனா டிரைவ்-இன் திரையரங்கில் அடிக்கடி படங்கள் பார்ப்பேன்.

ஒரு படைப்பாளியாக நான் அந்தத் திரையரங்கை மிகவும் ரசித்தேன்," எனத் தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

பிரார்த்தனா டிரைவின் தியேட்டர்
படக்குறிப்பு, பிரார்த்தனா திரையரங்கின் சிறப்பம்சமே அது ஈ.சி.ஆர் சாலையில் இருப்பதுதான் என்றார் நடிகர் லிங்கேஷ்

''மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் பிரார்த்தனா டிரைவின் திறக்கப்படலாம்'' - நடிகர் லிங்கேஷ்

இது குறித்துப் பேசிய நடிகர் லிங்கேஷ், "சமீபமாக நிறைய நியூ ஜென் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் லேசர் தொழில்நுட்ப அம்சங்களுடன் பிராட்வே என்ற திரையரங்கம் திறக்கப்பட்டது குறித்து நாம் அனைவரும் அறிவோம். இப்படிப் பல்வேறு வசதிகளுடனும், ரசிகர்களின் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைப் பரவசமாக்கவும் பல்வேறு வசதிகளுடன் புதிய தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன.

மக்கள் அனைவரும் மிகப் பெரிய நுகர்வு கலாசாரத்திற்கு அடிமையாகிவிட்டனர். ஒரு கடையில் டீ குடிக்கச் செல்ல வேண்டுமென்றால்கூட அந்தக் கடையில் இருக்கும் நாற்காலிகள் எப்படி இருக்கின்றன; அங்குள்ள இன்டீரியர் வேலைப்பாடுகள் எப்படி இருக்கிறது எனப் பார்த்துச் செல்கிறார்கள். அதனாலேயே முதலாளிகள் மக்களைக் கவர அனைத்து வகையிலும் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

அதனால், பல சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள் சிறிய ஊர்களில் மூடப்படுகின்றன. அதேபோல், பலரும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்கவே விரும்புகிறார்கள். இதுபோன்ற, சில காரணங்களுக்காக கூட பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டரும் மூடப்பட்டிருக்கலாம்.

அதன் உரிமையாளர் மீண்டும் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அதைத் திறக்கலாம்; நமக்குத் தெரியாது. பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டரில் நான் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதன் சிறப்பம்சமே அது ஈ.சி.ஆர் சாலையில் இருப்பதுதான். எனக்கு அங்கு இரவுநேரக் காட்சிகள் பார்ப்பது மிகவும் விருப்பம்,” என்றார்.

''இது வருத்தத்திற்குரியது'' - நடிகர் ஜீவா

”லொள்ளு சபா” பிரபலமும், தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஜீவாவிடம் பிரார்த்தனா டிரைவ்-இன் இடிக்கப்படுவது குறித்துக் கேட்டபோது அவர், “நான் அங்கு நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 'படையப்பா' திரைப்படத்தை நான் அங்குதான் பார்த்தேன்.

தியேட்டர்களில்கூட டீ, காஃபி, பாப்கார்ன் தான் கிடைக்கும். ஆனால், பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டரில் நாம் தோசை கேட்டால்கூட கிடைக்கும். அங்கு படம் பார்ப்பதென்பது மனதிற்கு மிகவும் நெருக்கமான நினைவு.

அனைத்து தியேட்டர்களும் பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் போல் திறந்த வெளியில் இயங்கினால் மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் தங்களை குடும்பம் குடும்பமாக தனிமைப்படுத்திக் கொள்ளலாமே என்றுதான், கடந்த 2021இல், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் மூடப்பட்ட போது எனக்குத் தோன்றியது.

ஆனால், அந்த நேரத்தில் பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டரே மூடப்பட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது, பிரார்த்தனா இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு வரப் போகிறது என்ற செய்தி நான் எதிர்பாராதது,” என்றார்.

நடிகர் ஜீவா
படக்குறிப்பு, ஜீவா, நடிகர்

''கதை விவாதத்திற்கு மகாபலிபுரம் சென்றால் அங்கு சென்று படம் பார்ப்பது வழக்கம்'' - இயக்குநர் சந்தோஷ்

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், ஓவியராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் சந்தோஷிடம் பேசும்போது, “நான் இயக்கிய 'மனசெல்லாம்' திரைப்படம் பிரார்த்தனா டிரைவ்-இன்னில் வெளியானபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். திறந்த வெளியில் படங்கள் திரையிடப்படும்போது அங்குள்ள நட்சத்திரங்களையெல்லாம் எத்தனையோ நாட்கள் ரசித்திருக்கிறேன்," என்று கூறினார்.

மேலும், "நான் ஓவியனாகவும் இருப்பதால் பல நாட்கள் அங்கு அந்த இருட்டுக்காவும், நட்சத்திரங்களுக்காகவும், நிலப்பரப்புக்காகவும் சென்று ரசித்திருக்கிறேன்.

எங்கள் தலைமுறை இயக்குநர்கள் மகாபாலிபுரத்திற்கு கதை விவாதத்திற்கு எனச் சென்றாலே, இறுதியாக பிரார்த்தனாவில் படம் பார்ப்பது வழக்கம்.

இயக்குநர் சசியின் முதல் படமான 'சொல்லாமலே' திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் லிவிங்ஸ்டன் தனது நாக்கை வெட்டிக் கொள்வது போன்ற காட்சி வைக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் எழுந்தது.

அப்போது, இயக்குநர் சசி மற்றும் உதவி இயக்குனர்கள் அனைவரும் இணைந்து மகாபலிபுரத்திற்கு சென்று கதை விவாதம் செய்துவிட்டு, பின்னர் பிரார்த்தனா டிரைவினில் படம் பார்த்தோம். அது மறக்க முடியாத நிகழ்வு,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: