மிஷன் இம்பாசிபிள் வரிசையில் வெளியாகும் படங்களின் வெற்றி ரகசியம் என்ன?

மிஷன் இம்பாசிபிள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 290 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், 163 நிமிடங்கள் ஓடக்கூடியது.

மிஷன் இம்பாசிபிள் (Mission: Impossible) பட வரிசையில் ஏழாவது படமான மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் (Mission: Impossible: Dead Reckoning) வெளியாகியுள்ளது. இந்த வரிசையின் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையே பெற்றிருக்கின்றன என்ன காரணம்?

உலகம் முழுவதும் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங். முந்தைய மிஷன் இம்பாசிபிள் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் டாம் க்ரூஸ்தான் நாயகன். இதற்கு முந்தைய மிஷன் இம்பாசிபிள் படமான மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளியாகிறது.

290 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், 163 நிமிடங்கள் ஓடக்கூடியது.

எல்லா மிஷின் இம்பாசிபிள் படங்களையும் போலவே, இந்தப் படத்திலும் நாயகனுக்கு ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. அதை பல பிரச்சனைகளையும் தாண்டி அவர் எப்படி சாதிக்கிறார் என்பதுதான் கதை.

மிஷன் இம்பாசிபிள்

பட மூலாதாரம், MISSION IMPOSSIBLE/TWITTER

படத்தின் துவக்கத்தில், நாயகன் ஈதன் ஹன்ட்டுக்கு (டாம் க்ரூஸ்) ஒரு பணி கொடுக்கப்படுகிறது. நமீப் பாலைவனத்தில் ஈதன் ஹன்ட் தனது கூட்டாளியான இல்ஸா ஃபாஸ்டைச் சந்தித்து ஒரு சாவியின் பாதிப் பகுதியைப் பெற்றுவர வேண்டும். சாவியின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்கிறான்.

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கக்கூடிய என்டிடி என்ற ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். இந்த என்டிடி, எந்த கம்ப்யூட்டருக்குள்ளும் சென்று, அதில் உள்ள தகவல்களைச் சேகரிக்கவும், அதனைச் சேதப்படுத்தவும்கூடியது. ஒரு கட்டத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு என்டிடி, கண்டுபிடித்த நாடுகளின் கைமீறி வளர்ந்துவிடுகிறது. இதனைக் கட்டுப்படுத்த நினைக்கின்றன அரசுகள். ஆனால், என்டிடியை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவுசெய்கிறான் ஈதன் ஹன்ட். அதற்குத்தான் அந்த சாவி தேவை.

சாவியின் ஒரு பகுதி இல்ஸா ஃபாஸ்டிமிருந்து கிடைத்த நிலையில், மற்றொரு பகுதியைப் பெறுவதில் சந்திக்கும் அபாயங்கள்தான் இந்தப் படம்.

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், நேர்மறையான விமர்சனங்களையே அளித்துவருகிறார்கள். ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படங்களின் உச்சம் என்றும் இந்தப் படம் குறித்து பாராட்டி வருகின்றனர்.

மிஷன் இம்பாசிபிள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், நேர்மறையான விமர்சனங்களையே அளித்துவருகிறார்கள். ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படங்களின் உச்சம் என்றும் இந்தப் படம் குறித்து பாராட்டி வருகின்றனர்.

மிஷன் இம்பாசிபிள் படங்களின் வரலாறு

அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் 1966லிருந்து 1973வரை மிஷன் இம்பாசிபிள் என்ற பெயரில் ஒரு உளவு த்ரில்லர் தொடராக வெளியானது. ப்ரூஸ் கெல்லர் என்பவர் இந்தத் தொடரை உருவாக்கியிருந்தார். மிஷன் இம்பாசிபிள் ஃபோர்ஸ் என்ற ஒரு சிறிய உளவுக் குழுவின் சாகஸங்கள்தான் இந்தத் தொடர். இரும்புத் திரை நாடுகளின் அதிபர்கள், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள சர்வாதிகாரிகள், கார்ப்பரேட்கள், குற்றக்குழுக்களின் தலைவர்கள் ஆகியோரை இந்த உளவுக் குழு எதிர்கொள்ளும்.

இந்தத் தொடர் வெகுவாக ரசிக்கப்பட்ட நிலையில், ஏபிசி தொலைக்காட்சியில் இந்தத் தொடரின் இரண்டு சீசன்கள் வெளியாயின. இதற்குப் பிறகு 1996ல் இந்தத் தொடரின் அடிப்படையை வைத்து திரைப்படம் எடுக்க முடிவுசெய்தனர்.

மிஷன் இம்பாசிபிள்

பட மூலாதாரம், Mission: Impossible/Twitter

படக்குறிப்பு, மிஷன் இம்பாசிபிள்

1996ல் முதல் மிஷின் இம்பாசிபிள் திரைப்படம் டாம் க்ரூஸை நாயகனாகக் கொண்டு வெளியானது. படத்தில் நாயகனின் பெயர் ஈதன் ஹன்ட். அவனுக்குக் கீழ் இயங்கும் ஒரு சிறிய குழு, உலகை அச்சுறுத்தும் அபாயத்தை எதிர்கொண்டு, உலகைக் காப்பாற்றும்.

இந்த முதல் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. ஹாலிவுட்டின் ஆக்ஷன் திரைப்படங்களில் மிகச் சிறந்த ஆக்ஷன் திரைப்படங்களில் ஒன்றாக இது பேசப்பட்டது. இதையடுத்து இதன் அடுத்த பாகத்தை உருவாக்க முடிவுசெய்யப்பட்டது. அடுத்த பாகம் மிஷின் இம்பாசிபிள் - 2, 2000வது ஆண்டில் வெளியானது.

இந்த பட வரிசையின் ஆறாவது பாகம் Mission: Impossible – Fallout 2018ல் வெளியானது. அந்தப் படமும் சூப்பர் ஹிட்தான். இதற்கு அடுத்த படத்தை Impossible: Dead Reckoning Part One மற்றும் Impossible: Dead Reckoning Two என இரு பாகங்களாக எடுக்க முடிவுசெய்தனர். இந்த முதல் பாகம்தான் தற்போது வெளியாகிறது. அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: