கே.பாலசந்தர்: வசனகர்த்தாவாக திரைவாழ்வை தொடங்கி நட்சத்திரங்களை உருவாக்கிய 'சிகரம்'

கே.பாலசந்தர்

பட மூலாதாரம், Kavithalayaa/Facebook

படக்குறிப்பு, கே.பாலசந்தர் உடன் நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த்

தமிழ்த் திரையுலகில் தனது புதுமையான படைப்புகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். தற்போது மாபெரும் ஆளுமைகளாக இருக்கும் பல்வேறு நட்சத்திரங்களை அடையாளம் கண்டவர். கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரரான இயக்குநர் கே.பாலச்சந்தரின் பிறந்த நாள் இன்று.

தமிழ்த் திரையுலகில் பல புதுமைகள், மாறுதல்கள், அறிமுகங்கள், தயாரிப்புகள், விருதுகள் என கைலாசம் பாலசந்தரின் பங்களிப்பு நீண்டுகொண்டே போகும்.

திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வந்த கே.பி. என்றும் இயக்குநர் சிகரம் என்றும் அழைக்கப்பட்ட பாலச்சந்தர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.

கடந்த 1930ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த பாலசந்தர், திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னதாக, நாடகத் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

கே.பாலசந்தர்

பட மூலாதாரம், NIKKIL MURUGAN

படக்குறிப்பு, இயக்குநர் கே.பாலச்சந்தர்

வசனகர்த்தாவாக தொடங்கிய திரை வாழ்க்கை

கே.பாலசந்தரின் திரைவாழ்க்கை 59 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தில் வசனகர்த்தாவாகத் தொடங்கியது.

நாகேஷ் நடிப்பில், 1965ஆம் ஆண்டு அவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமான நீர்க்குமிழி பெரும் வெற்றி பெற்றது.

திரையுலகில் பலர் வாழ்வதும், வீழ்வதும், பின்னர் மீண்டு வருவதும் புதிதல்ல என்பதற்கு பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல. 1970ல் நவக்கிரகம் திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது அதீத மன அழுத்தம் ஏற்பட்டு அவரது இதயத்திலும் பெரிய ஓட்டை விழுந்தது.

இந்த பிரச்னையிலிருந்து அவர் வெளிவந்து பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்தியாவில் திரைப்படத்துறைக்கான மிக உயர்ந்த விருதான தாதே சாஹிப் பால்கே விருது உட்பட ஏராளாமான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் நாடக எழுத்தாளர் இயக்குநராக இருந்த பாலச்சந்தரின் ஆரம்ப காலப் படங்கள், அப்படியே அவரது நாடங்கள் திரை வடிவம் பெற்றவை போல அமைந்தன. குறைவான செலவில் நிறைவான படத்தைக் கொடுக்கும் ஒரு படைப்பாளி என்று திரையுலகம் அவரைப் பாராட்டியது. நீர்க்குழிமி, பாமா விஜயம், எதிர்நீச்சல் போன்ற பல படங்களை இதற்கு சான்றாகச் சொல்லலாம்.

எந்தக் கலைஞரிடம் என்ன திறமை ஒளிந்துள்ளது அதை எப்படி சினிமா சூழலுக்கு ஏற்ப வெளிக் கொண்டு வரலாம் என்ற கலையை அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டார்.

கே.பாலசந்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2010ஆம் ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடம் பெறும் கே.பாலசந்தர்

நடிகர்களைவிட கதைதான் முக்கியம்

காலஞ்சென்ற நடிகர்கள் நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் ஸ்ரீகாந்த் உட்பட பலரை இதற்கு மேற்கோள் காட்டலாம்.

இந்தியத் திரையுலகில் வண்ணப் படங்கள் ஆழமாகக் காலூன்றிய பிறகும்கூட கருப்பு வெள்ளைப் படங்களில் படங்களை எடுக்கும் துணிச்சல் பாலச்சந்தர் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே இருந்தது. அந்த வகையில் கமல்ஹாசன், சரிதா நடித்து அவர் தெலுங்கில் இயக்கிய மரோ சரித்ரா பெரும் வெற்றியைப் பெற்றது.

திரைப்படத்துறையில் பல வகையில் ஆளுமை செலுத்திய அவர் பலரது வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பலர் அவரை ஒரு குரு எனும் நிலைக்கு மேலாகவும் வைத்து இன்றளவும் போற்றி வருகின்றனர்.

அழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை. குறிப்பாக இவர் இயக்கிய எந்தப் படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை. அதேபோல் நடிகர் சிவாஜியும்கூட எதிரொலி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடித்திருந்தார்.

பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. நகைச்சுவைக்கான முக்கியத்துவத்தைத் தனது படங்களில் சிறப்பாகக் கையாண்ட பாலச்சந்தர், குடும்ப சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுக பிரச்னைகள் என்று பலதரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் எடுக்கவும் தயங்கவில்லை.

திரைப்பட இயக்குநராக வெற்றிபெற்ற பின்பும்கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். சின்னத்திரைகளில் தற்போது பிரபலமாக இருக்கும் நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர்தான் அறிமுகம் செய்தார்.

கே.பாலசந்தர்

பட மூலாதாரம், Kavithalayaa/Facebook

படக்குறிப்பு, கே.பாலச்சந்தர் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ராகுமான், கவிஞர் வைரமுத்து

நட்சத்திரங்களை உருவாக்கியவர்

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கமல்ஹாசனுக்கு தனது அரங்கேற்றம் திரைப்படம் மூலம் நாயகனாக திரையுலக அரங்கேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் பாலச்சந்தர்.

இதேபோல், தமிழில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கதவை திறப்பது போன்ற காட்சியில் நடிக்க காரணமாக இருந்தது பாலச்சந்தர். அதன்மூலம் அவருக்கான சினிமாவின் கதவுகளையும் திறந்து வைத்தார்.

நடிகை சுஜாதாவை தனது 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. ஷோபா, சரத்பாபு, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் என பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர்களின் பட்டியல் நீளும். தனது இசைக்காக கோல்டன் க்ளோப், ஆஸ்கர் போன்ற சர்வதேச விருதுகளைப் பெற்ற ஏ.ஆர். ரகுமான், பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பான ரோஜா திரைப்படம் மூலம்தான் அறிமுகமானார்.

எல்லாருக்கும் ஈடேறாத கனவுகள் உள்ளது போல பாலச்சந்தருக்கும் கமல், ரஜினி இருவரையும் ஒன்றாக வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலேயே போனது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: