செயற்கை நுண்ணறிவு வரவால் ஒரே நிறுவனத்தில் 90% பேர் பணிநீக்கம் - இதுவே இனி தொடர்கதையாகுமா?

வேலையை ஆக்கிரமிக்கும் செயற்கை நுண்ணறிவு
    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக தனது வாடிக்கையாளர் சேவை பணியாளர்களில் 90 சதவீதம் பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான் (Dukaan) இ.காமர்ஸ் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனமும் சி.இ.ஒ.வுமான சுமித் ஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஒரு செய்தி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், “செயற்கை நுண்ணறிவு சாட்போட் காரணமாக எங்களது வாடிக்கையாளர் சேவை குழுவைச் சேர்ந்த 90 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம். இது கடினமானதாக இருந்தாலும் அவசியமானதும் கூட.

இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கக் கூடிய நேரம் என்பது 1.44 நிமிடங்கள் என்பதில் இருந்து உடனடியாக மாறியது. அவர்களின் குறைகளை தீர்க்கும் கால அளவு என்பது 2 மணி நேரம் 13 நிமிடங்களில் இருந்து 3 நிமிடங்கள் 12 நொடிகளாக குறைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவைக்கான செலவின் அளவு 85 சதவீதம் குறைந்துள்ளது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக தனது வாடிக்கையாளர் சேவை பணியாளர்களில் 90 சதவீதம் பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது

பொருளாதாரத்தை வைத்து பார்க்கும்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களை பெருநிறுவனங்களாக வளர்த்துக்கொள்வதை விட லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதைதான் நாங்களும் செய்தோம் என்றும் தனது செயலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவையை பொறுத்தவரை தங்களது நிறுவனம் நீண்ட காலமாக திணறிவந்ததாகவும் அதனை மேம்படுத்த விரும்பியதாகவும் கூறியுள்ள சுமித் ஷா, இதன் காரணமாகவே செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சாட்போட் விரைவாகவும் சரியாகவும் பதிலளிப்பதாகவும் துக்கான் நிறுவனம் கூறுகிறது.

எனினும், சுமித் ஷாவின் செயலுக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சுமித் ஷாவின் இந்த கடினமான முடிவால் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னைகள் அதிகரித்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவின் அபரிமித வளர்ச்சி

AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது. Chat GPT, Google Bard போன்ற சாட்பாட்(Chatbot) உதவியால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதனைப் போலவே சிந்தித்து பதில் கூறும் திறன் உடைய இந்த மென்பொருளுக்கு தெரியாதது என்று எதுவுமே இல்லை என பலரும் வியந்து கூறுகின்றனர்.

அதே நேரத்தில் , மனிதனுக்கு உதவி செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அவர்களின் வேலைக்கே பெரும் அச்சுறுத்தல் இருப்பதான ஒரு அச்சமும் மக்களிடம் நிலவுகிறது. குறிப்பாக சேவைத் துறையில் இருப்பவர்களின் வேலைவாய்ப்பு பெருமளவில் பறிபோக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வணிக ரீதியாக என்றால் இது சரிதான். ஆனால், இதனை கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

`உங்களின் ஊழியர்களில் 90 சதவீதம் பேரின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளீர்கள்` என்று மற்றொரு பயனர் இதனை விமர்சித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் பதிலளிக்கப்படுவது ஒரு வாடிக்கையாளராக தங்களுக்கு பிடிக்கவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

90 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் வழங்கப்பட்டன என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து சுமித் ஷா, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரத்தை லிங்க்ட்-இன் தளத்தில் பதிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் பெருகி மேலும் அணுகக்கூடியதாகிவிட்டன. செலவைக் குறைக்கும் அதே வேளையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க நிறுவனங்கள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதாக அறிக்கைகள் வந்துள்ளன. இதனால் தொழில் நுட்பத்தால் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில், பல நிறுவனங்கள் தயாரிப்புகளை உருவாக்க AI இல் முதலீடு செய்கின்றன. இதுவும் வேலை இழப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளது.

AI-ஐ தான் இனி உலகம்

மார்ச் மாதத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் 30 கோடி முழு நேர வேலையில் ஈடுபடுபவர்கள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், பல நிறுவனங்கள் தயாரிப்புகளை உருவாக்க AI இல் முதலீடு செய்கின்றன. இதுவும் வேலை இழப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளது.

அண்மையில், ஒடிசாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் லிசா என்ற செய்தி வாசிப்பாளரை தொலைக்காட்சி ஒன்று அறிமுகப்படுத்தியது. அச்சு அசல் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ரோபோ செய்திகளையும் பிழையின்றி வாசிக்கிறது.

இவ்வாறு, செயற்கை நுண்ணறிவுகள் ஒவ்வொரு துறையில் அறிமுகப்படுத்தப்படுவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூகுள் ஆப் ஸ்கேல் அகாடமியில் பயிற்சி பெற்றவரும் கணினி வல்லுநருமான செல்வ முரளியிடம் கேட்டோம்.

அவர், “எந்த தளத்துக்கு சென்றாலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற விசயங்கள் உள்ளன. அதேபோல், அதிகம் கேட்கப்படும் கேள்விகள் (FAQ) என்பதும் உள்ளது. இவை இரண்டையும் சாட்பாட் போன்ற இயந்திரங்கள் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டால் , 100க்கு 40 சதவீதம் சந்தேகங்களை அவை தீர்த்துவைத்து விடும். ஒருவேளை அவற்றால் தீர்வு காண முடியவில்லை என்றால், குழுவினர் தொடர்புகொள்வார்கள் என்று பதிலளித்துவிடலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர் சேவை இனி எளிதாகும்” என்று குறிப்பிட்டார்.

இனி செயற்கை தொழில்நுட்பம்தான் உலகம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவற்றை இணைந்து வேலை செய்வதற்கு யார்யாரெல்லாம் தயராக இருக்கிறார்களோ அவர்களுக்கு பிரச்னை இல்லை என்றும் செல்வ முரளி நம்மிடம் தெரிவித்தார்.

“ சாட் ஜிபிடி, பாட், போன்றவை எல்லாம் தனிப்பட்ட உதவியாளர்கள் என்ன வேலையை செய்வார்களோ அந்த வேலையை செய்கின்றன. அப்படியிருக்கும்போது, தனி உதவியாளர்களுக்கான(பி.ஏ) தேவை இல்லாமல் போகிறது. இதேபோல், ஒரு வாக்கியத்தை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிந்த ஆளை நாம் வேலைக்கு வைத்திருப்போம். இப்போது, அந்த வேலையை செயற்கை நுண்ணறிவு குறைந்த நேரத்தில் தரமாக செய்து முடிக்கின்றன. கூகுளின் செயற்கை நுண்ணறிவான பார்டு (Google Bard), தற்போது 40 மொழிகளில் உரையாடும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சேவை துறையில் இருப்பவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு காரணமாக நிச்சயம் பாதிப்பு ஏற்படும். குறைந்த அளவில் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு உள்ளது. எனவே, சேவைத்துறையில் உள்ளவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, AI-யின் செயலுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சட்ட ரீதியிலான சிக்கல்களும் இருப்பதாக கார்த்திகேயன் கூறுகிறார்.

'AI-ஐ முழுவதும் சார்ந்து இருப்பது சாத்தியமில்லாதது'

செயற்கை தொழில்நுட்பம் மூலம் வேலையை திறன்பட செய்ய முடிகிறது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அவற்றால் என்றைக்கும் மனிதர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று கூறுகிறார் சைபர் குற்றவியல் நிபுணரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வேலைசார்ந்தது என்ற கூற்று ஒரு புறம் இருக்கட்டும், AI என்பது ரிமோட்டாக எங்கிருந்தும் கட்டுப்படுத்தும் வகையிலான ஒரு கருவிதான். இணையத்துடன் அவை இணைந்துள்ளது. அப்படியிருக்கும்போது, எங்கேயோ உள்ள ஒரு ஹேக்கர் உங்கள் AI-ஐ ஹேக் செய்து உங்களுக்கு எதிராகவே செயல்பட வைக்க முடியும். நிறுவனத்தின் மொத்த தரவுகளும் AI வசம் இருக்கும்போது அவற்றை ஹேக் செய்து உங்களுக்கு போட்டி நிறுவனங்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியும்,” என்றார்.

இ.காமர்ஸ் போன்ற போட்டிகள் நிறைந்த துறையில் இத்தகைய செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அவரது கூற்றின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

AI-யின் செயலுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சட்ட ரீதியிலான சிக்கல்களும் இருப்பதாக கார்த்திகேயன் கூறுகிறார். “AI மூலம் இயங்கும் கார்களும் வரப்போவதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் இல்லாத தானாக இயங்கும் கார்கள் விபத்தில் சிக்கும்போது, அந்த விபத்துக்கு யார் பொறுப்பாக முடியும்? காரின் உரிமையாளரா அல்லது காரை தயாரித்தவர்களா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முழுதும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இருக்காமல், மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து பணியாற்றும் COBOT முறை சரியானதாக இருக்கும் என்ற வாதத்தையும் கார்த்திகேயன் முன்வைக்கிறார்

அதே நேரத்தில் ஊழியர்களிடம் விசுவாசம் குறைந்துள்ளதும் நிறுவனங்கள் செயற்கை தொழில்நுட்பத்தை அதிகம் நாடுவதற்கு காரணமாக உள்ளன என்று அவர் கூறுகிறார். “ ஒரு நிறுவனம் தனது ஊழியரை 6 மாதம், 1 ஆண்டு என காலமெடுத்து நன்றாக பயிற்சிகளை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக நிறைய அவர்கள் செலவழிப்பார்கள். பயிற்சி பெற்றப்பின்னர், அதிக ஊதியம் கிடைக்கிறது என்று அந்த ஊழியர் வேறு நிறுவனத்துக்கு செல்லும்போது முந்தைய நிறுவனத்துக்கு அது இழப்பை ஏற்படுத்துகிறது. இதுவே AI பயன்படுத்தும்போது நமக்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை” என்றார்.

COBOT முறை சரியானதாக இருக்கும்

எனவே, முழுதும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இருக்காமல், மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து பணியாற்றும் COBOT முறை சரியானதாக இருக்கும் என்ற வாதத்தையும் கார்த்திகேயன் முன்வைக்கிறார். “மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து வேலை செய்வதை collaborative robot அல்லது COBOT என்று அழைக்கிறோம். ஒருசில நிறுவனங்கள் இந்த முறையை பின்பற்றுகின்றன. AI எதாவது தவறு செய்தாலும் உடன் இருக்கும் மனிதர்களால் அதை உடனடியாக சரி செய்ய முடியும். பொதுவான வேலைகள் அனைத்தையும் ரோபோ செய்துவிடும். அதிலேயே திறன் தேவைப்படும் வேலைகளை மனிதர்கள் செய்வார்கள். இது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.” என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: