நிலவில் கொடி 'பறந்தது' ஏன்? ஆம்ஸ்ட்ராங் தரையிறங்கும் காட்சி ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டதா?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா 1969-ம் ஆண்டு முதன்முதலில் அப்போலோ 11 எனும் விண்வெளி விமானத்தின் மூலம் நிலவில் மனிதர்களை தரையிறங்கியது.

அப்போதிருந்தே இது நிகழவே இல்லையென்றும், நிலவில் தரையிறங்குவது போன்ற காட்சிகள் போலியாகச் சித்தரிக்கப்பட்டவை என்றும் பலரும் சொல்லி வந்தனர்.

ஆனால் அது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிந்துகொள்வது?

அமெரிக்கா நிலவில் தரையிறங்கிய 1969-ம் ஆண்டு அதனைச் சித்தரிப்பதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை, என்கிறார் அறிவியல் எழுத்தாளரான டலாஸ் கேம்ப்பெல். “ஆனால் நிலவுக்குச் செல்லும் தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தது,” என்கிறார்.

நட்சத்திரங்கள் ஏன் தெரியவில்லை?

அப்போலோ 11 நிலவில் தரையிறங்கியது போலி என்று சொல்பவர்கள், அதற்காக முதலில் சொல்லும் காரணம், ‘அக்காட்சிகளில், பின்னணியில் நட்சத்திரங்கள் தெரியவில்லை,’ என்பதுதான்.

இதற்குக் காரணம், ‘High Contrast’ எனப்படும் ஒளியில் இருக்கும் உச்சபட்ச மாறுபாடு என்கிறார் திரைப்படம் மற்றும் புகைப்பட தொழில்நுட்பங்களின் நிபுணரான மார்க் ஷூபின்.

“மிகவும் வெளிச்சமாக இருக்கும் பட்டப்பகலில், ஒரு வீட்டின் கதவைத்திறந்து உள்ளே பார்த்தால், அங்கு இருப்பவற்றை நம்மால் சரியாகப் பார்க்க முடியாது. இது ஏனெனில் நாம் நிற்கும் இடத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதனால்,” என்கிறார் ஷூபின்.

இதே விளைவினால்தான் நிலாவில் தரையிறங்கும் காட்சிகளிலும் நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை என்கிறார் அவர்.

இது ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டதா?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம், Getty Images

நிலவில் தரையிறங்கியதை பொய் என்று சொல்வபர்கள், முக்கியமாக முன்வைக்கும் இன்னொரு விளக்கம், அக்காட்சிகள் ஹாலிவுட்டில் இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு எடுக்கப்பட்டன என்பது.

ஆனால், நிபுணர்கள் இக்கருத்தில் மாறுபடுகிறார்கள். நிலவில் இருக்கும் குறைந்த புவியீர்ப்பினைப் போன்று ஒரு படப்பிடிப்பு ஸ்டூடியோவுக்குள் உருவாக்குவது சாத்தியமற்ற ஒன்று என்கிறார்கள்.

“காற்று இருக்குமிடத்தில் தூசியும் மண்ணும் ஒரு வகையில் நடந்துகொள்ளும். அதுவே நிலவைப்போல சுத்தமாக காற்றே இல்லாத இடத்தில் அவை முற்றிலும் வேறு மாதிரி நடந்துகொள்ளும். அதனால், அக்காட்சிகளை ஒரு ஸ்டூடியோவில் ‘செட்’ அமைத்து காட்சிப்படுத்தியிருக்க வேண்டுமென்றால், அங்கு இருக்கும் காற்றை முழுதுமாக வெளியேற்றி, அங்கு ஒரு வெற்றிடத்தை (vacuum) உருவாக்க வேண்டும்,” என்கிறார் ஷூபின்.

சோவியத் ஒன்றியம் என்ன செய்துகொண்டிருந்தது?

அமெரிக்கா நிலவில் தரையிறங்கிய 1969-ம் ஆண்டு அமெரிக்க-சோவியத் பனிப்போர் உச்சத்திலிருந்த காலகட்டம்.

அக்கால கட்டத்திலேயே சோவியத் யூனியனிடம் மேம்பட்ட கண்காணிப்புத் தொழில்நுட்பம் இருந்தது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தில், சர்வதேச ராஜீய உறவுகள் துறையின் மூத்த பேராசிரியர் அந்த்வான் பூஸ்கே.

“அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சோவியத் யூனியனால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் கண்காணித்திருக்க முடியும். எனவே, அமெரிக்கா நிலவில் தரையிறங்கியது போலியானதாக இருந்தால், சோவியத் யூனியனால் அதனை கண்டறிந்திருக்க முடியும். மேலும், அவர்கள் அப்படியொரு விஷயத்தைக் கண்டறிந்தால், அதனை வெளிப்படுத்தி அமெரிக்காவுக்கு எதிரான ஒரு பிரசாரத்தைச் செய்திருப்பார்கள்,” என்கிறார் பூஸ்கே.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறார் பூஸ்கே.

நிலவிலிருந்து என்ன கொண்டு வரப்பட்டது?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம், Getty Images

நிலவில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டன. இவை முக்கியமான சான்றுகள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கற்கள் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன என்கிறார், இங்கிலாந்து விண்வெளி அமைப்பின் இயற்பியலாளரான லிப்பி ஜாக்சன்.

“அவற்றில் சில கற்கள் இன்றளவும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. யாரும் அவற்றைத் தொட்டதுகூட இல்லை,” என்கிறார்.

1960கள், 1970களிலேயே எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மேம்படும் என்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர், என்கிறார் ஜாக்சன்.

நிலவில் மனிதர்கள் விட்டு வந்த அடையாளம்

நிலவில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் அங்கு சில ரிஃப்ளெக்டர்களைப் பொருத்தியிருக்கின்றனர்.

பூமியில் இருந்து லேசர் ஒளிக்கற்றைகளை நிலவின்மீது பாய்ச்சினால், அந்த ரிஃப்ளெக்டரிகளில் பட்டுப் பிரதிபலிக்கும், என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதன் மூலம்தான் நிலவின் சுழற்சியில் நிகழும் மாற்றங்கள் ஆராயப்படுவதாகச் சொல்கிறார்.

கொடி எப்படி அசைந்தது? கால் தடம் எப்படிப் பதிந்தது?

நிலா, அமெரிக்கா, சந்திரயான்

பட மூலாதாரம், Getty Images

இவற்றுக்குமேல், காற்றில்லாத நிலவில், கொடி எப்படி அசைந்தது, நீரில்லாத போது கால்தடம் எப்படிப் பதிந்தது போன்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.

இவற்றுக்கான விடையை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனுடன் பேசியது.

அதற்கு அவர், இவற்றுக்கு எளிய அறிவியல் விளக்கங்கள் உள்ளன என்று கூறினார்.

கொடி அசைந்ததை, inertia எனும் விளைவின் மூலம் விளக்கலாம் என்றார்.

“அதாவது, ஓடும் பேருந்தில் திடீரென ப்ரேக் செலுத்தப்பட்டால், நின்றுகொண்டிருப்பவரகள் முன்னால் தள்ளப்படுவார்கள் அல்லவா, அதேபோல்தான் உராய்வு இல்லாத இடத்தில் சுருட்டிவைத்திருந்த கொடியைப் பிரித்த போது அந்த உந்துவிசையால் கொடி படபடத்தது,” என்றார்.

அதேபோல் நிலவில் பதிந்த கால்தடம் பற்றிச் சொல்லும்போது, பூமிக்கு இருப்பதுபோல் வளிமண்டலம் இல்லாததால், நிலவில் விண்கற்கள் மோதியவண்ணம் இருக்கும் என்றார்.

“இப்படி மோதிக்கொண்டே இருப்பதால், அவை பொடியாகி, நிலவின் பரப்பு முழுவதும் ஒரு அடிக்கு குவிந்திருக்கிறது. இது regolith எனப்படுகிறது. இதில் கால் வைத்ததால்தான் கால்தடம் பதிந்தது,” என்றார்.

மேலும், 1969-ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில் நிலவில் மனிதர்களை தரையிறக்கியபோது குறிப்பிட்ட ஒரு சிறிய குழு மட்டுமே அதனைச் சந்தேகித்தது, அதனால் அமெரிக்கா அதைப்பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றார். “மேலும் இதுபோன்ற எளிய அறிவியல் விளக்கங்களின் மூலம் அவற்றை எதிர்கொண்டனர்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: