ஓலா, ஊபர் செயலியில் பயணம் புக் ஆன பிறகு ஓட்டுநர்கள் ரத்து செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
ஆட்டோ மற்றும் டாக்சி சேவையை பயணிகள் முன்பதிவு செய்த பிறகு ரத்து செய்யும் ஒட்டுனர்கள் மீது புகார் பெற்று அபராதம் விதிக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மயில்வாகனன், டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளை ஏற்க மறுத்தாலோ அல்லது புக்கிங்கை கேன்சல் செய்தாலோ அருகில் உள்ள போக்குவரத்து போலீசிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ புகார் தெரிவிக்கலாம் என்றார்.
“இதுதொடர்பாக வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வளவு புகார்கள் வந்துள்ளன, எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பன போன்ற தரவுகள் இல்லை,” என்றார் மயில்வாகனன்.
''தாமாக முன் வந்து அபராதம் விதிக்க முடியாது''
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், கடந்த மாதம் மட்டும் பயணிகளின் சவாரிகளை ஏற்க மறுத்த ஐந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
“இது மற்ற சாலை போக்குவரத்து குற்றங்களைப் போல இல்லை என்பதால், பயணிகள் காவல் நிலையத்திலோ அல்லது போக்குவரத்து காவல்துறையினரிடமோ எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக அபராதம் விதிக்க முடியாது,” என்றார் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகர்.
மேலும் பேசிய அவர், “ஆட்டோ ஓட்டுநர்களைப் பொருத்தவரையில் வாகன திருத்த சட்டத்திற்கு முன்பும்கூட பயணிகளை ஏற்க மறுத்தால் அபராதம் விதிக்கலாம். ஏனென்றால், அவர்கள் பயணிகள் ஆட்டோவுக்கான உரிமம் பெறும்போதே, பயணிகளை ஏற்போம் என்று ஒப்புக்கொண்டே உரிமம் பெறுகின்றனர்,” என்றார்.

எப்படி புகாரளிப்பது?
மோட்டார் வாகன திருத்த சட்டம் – 2019இன் படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அபராதத் தொகையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
அதன்படி, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்க மறுக்கும் ஓட்டுநருக்கு மோட்டார் வாகன திருத்தச் சட்டம் பிரிவு 178(3)(a)-இன் படி ரூ.50 அபராதமும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்ற மறுக்கும் ஓட்டுநருக்கு மோட்டர் வாகன திருத்தச்சட்டம் பிரிவு 178(3)(b)-இன் படி ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறையினரிடம் புகாரளிக்க கட்டணமில்லா சேவை எண் 1800 425 5430 தொடர்புகொள்ளலாம் அல்லது www.tnsta.gov.in என்ற போக்குவரத்து துறையின் இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.
அதேபோல சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரிடம் புகாரளிக்க, காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 9003130103 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
மக்கள் நிம்மதி
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
“சென்னை பல்லாவரத்தில் இருந்து தினமும் நகர் பகுதிகளில் பயணிக்க பெரும்பாடாக உள்ளது. ஒரு முறை பயணிக்க குறைந்தது ஐந்து முறை புக் செய்ய வேண்டியுள்ளது. ஆறாவது முறையாகத்தான் புக்கிங்கை ஓட்டுநர்கள் ஏற்கிறார்கள்.
சில நேரங்களில், அவர்கள் கேட்கும் அதிக கட்டணம், ஆன்லைனில் செலுத்தாமல் நேரில் கட்டணத்தைக் கொடுப்பது என அவர்களின் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டாலும், சில நேரங்களில் ஓட்டுநர்கள் புக்கிங்கை ஏற்பதில்லை,” என்கிறார் பல்லாவரத்திலிருந்து நுங்கம்பாக்கம் வரை தினமும் பயணிக்கும் வி.புவனா.
மேலும் பேசிய அவர், “இந்தப் புதிய நடைமுறையால், ஓட்டுநர்கள் இனி புக்கிங்கை கேன்சல் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
ஏன் புக்கிங்கை கேன்சல் செய்கின்றனர்?
சென்னையைச் சேர்ந்த வாடகை டாக்சி ஓட்டுநர் உதயா, சுயாதீனமாகவும் ஓலா, உபர் போன்ற போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறார்.
அவரிடம் இதுகுறித்துப் பேசியபோது, போக்குவரத்து சேவை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணம் கட்டுப்படியாகாததால்தான் புக்கிங்கை கேன்சல் செய்வதாகக் கூறினார்.
“போக்குவரத்து சேவை நிறுவனங்களிடம் குறைந்தபட்ச கட்டணம் என்பதே கிடையாது. எடுத்துக்காட்டாக, ஐந்து கிலோமீட்டருக்கு ரூ.150 கட்டணத்திற்குக்கூட சொகுசு கார் இயக்க வேண்டும் என்பார்கள்.
நாங்கள் புக்கிங்கை கேன்சல் செய்தால்தான் அடுத்து வரும் புக்கிங்கில் எங்களுக்கான கட்டணத்தை அதிகப்படுத்தி தருவார்கள். சில நேரங்களில், போக்குவரத்து சேவை நிறுவனங்களால், எங்கள் புக்கிங் ஐடி(ID) தற்காலிகமாக நீக்கப்படுவதும் உண்டு,” என்றார் உதயா.
அதேபோல, இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியூ ஆட்டோ ரிக்ஷா ஒட்டுநர்கள் சங்கத் தவைர் பாலசுப்பிரமணியன், சில போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயிப்பதால்தான் ஓட்டுநர்கள் சவாரிகளை ஏற்பதில்லை என்கிறார்.

“தமிழ்நாடு அரசு 10 ஆண்டுகளாக கட்டணத்தை திருத்தி அமைக்காமலும், போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்காததுமே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். எந்த ஒரு வேலை செய்யும் நபராவது 2013இல் வாங்கும் சம்பளத்திற்கு 2023இல் வேலை செய்வாரா,” எனக் கேள்வி எழுப்பினார் பாலசுப்பிரமணியன்.
இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு கடந்த 2013இல் ஆட்டோக்களுக்கான பயணக் கட்டணத்தை நிர்ணயித்தது. அதன்பின், அப்போதிருந்த 82,635 ஆட்டோக்களுக்கு இலவசமாக மீட்டர் வழங்கி, மீட்டர் கட்டணத்தில்தான் ஆட்டோவை இயக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இப்போதுவரை ஆட்டோக்களுக்கான மீட்டர் முழுமையாக வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40 மற்றும் அதன்பிறகு கிலோ மீட்டருக்கு ரூ.18 என நிர்ணயித்தனர். ஆனால், அதை நாங்கள் ஏற்கவில்லை," என்று கூறுகிறார்.
அதற்கு பிறகு, "எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. இந்த 10 ஆண்டுகளில், போக்குவரத்துத்துறைக்கு நான்கு புதிய செயலாளர்கள் மாறிவிட்டனர், ஆனால், ஆட்டோ மீட்டரும் வரவில்லை, ஆட்டோ கட்டணமும் மறுசீரமைப்பு செய்து நிர்ணயிக்கப்படவில்லை.
இதனால், போக்குவரத்து சேவை நிறுவனங்கள், தங்கள் லாபத்திற்காக மிகக் குறைந்த கட்டணத்திற்கு ஆட்டோவை இயக்க நிர்பந்திக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
இதனால்தான், நெடுந்தூரம் வரும் சவாரிகளையும், சில நேரங்களில் அருகிலுள்ள சவாரிகளையும்கூட கட்டணம் கட்டுப்படியாகாமல் ரத்து செய்யவேண்டிய நிலைக்கு ஒட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்,” என்றார்.
''மீட்டர் கட்டண மறுசீரமைப்பு வேண்டும்''
தமிழ்நாடு அரசு விரைவாக போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறு சீரமைக்கவும், போக்குவரத்து சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறை வரைவு ஆவணம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
“இந்த இரண்டு கோப்புகளும் உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரிடம் ஆலோசித்து ஒப்புதல் பெற்ற பிறகு, அது அமல்படுத்தப்படும்,” என்றார் அந்த மூத்த அதிகாரி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












