சந்திரயான் 3: ராக்கெட் ஏவுவதற்கான 'முகூர்த்த' நேரம் எப்படி முடிவு செய்யப்படுகிறது?

பட மூலாதாரம், TWITTER/ISRO
- எழுதியவர், ஸ்ரீகாந்த் பாக்ஷி
- பதவி, பிபிசி செய்தியாளர்
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு நேரம் குறிப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மதங்களிலும் கலாசாரங்களிலும் தற்போதும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாக உள்ளது.
பஞ்சாங்கம், நாட்காட்டிகள் போன்றவை பொதுவாக சந்திரனின் அசைவை வைத்துக் கணிக்கப்படுகின்றன. அதாவது, அனைத்து 'முகூர்த்தங்களும்' சந்திரனை சுற்றியே உள்ளது.
சந்திரயான் 3 எந்த நேரத்தில் விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 'முகூர்த்த' நேரம் எப்படி முடிவு செய்யப்பட்டது?
சந்திரயான் 3 ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. ஜூலை 14 மதியம் 2:35 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் அறிவித்துள்ளார்.
ஜூலை 13 -19ஆம் தேதிக்குள் சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், NASA/TWITTER
பூமியில் செய்யப்படும் பயணம்... விண்வெளி பயணம் ஒன்றல்ல
பூமியில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால் எதையெல்லாம் கருத்தில் கொள்வோம்
எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு எப்படி செல்வீர்கள்?
பேருந்திலோ, ரயிலிலோ அல்லது காரிலோ சென்னையில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலியை சென்றடைவீர்கள். நீங்கள் பயணிக்கும் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறதோ அதைப் பொறுத்து உங்களின் பயண நேரம் அமையும்.
அதாவது, குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்குச் செல்வது என்பது வேகம், தூரம் ஆகியவற்றைப் பொறுத்தது.
அதேநேரத்தில், உங்களின் உறவினர் ஒருவர் பேருந்தில் சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்கிறார். அவரிடம் ஒரு முக்கியமான பொருளை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
இதற்காக நீங்கள் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் செல்கிறீர்கள். எப்போது திருநெல்வேலி சென்று சேர்வீர்கள் என்று நீங்கள் அவரிடம் கேட்கும்போது தோராயமாக ஒரு நேரத்தைச் சொல்லுவார்.
நீங்கள் பேருந்தைவிட வேகமாகச் சென்றால் அதைவிட வேகமாக திருநெல்வேலியை அடைந்துவிட முடியும். ஒருவேளை, பேருந்து வேகமாகச் சென்றால் அது முதலில் சென்று திருநெல்வேலியை அடையும்.
அதாவது, ஒரு நிலையான இடத்தில் இருந்து நகரும் இடத்திற்குச் செல்லும்போது, நகரும் இடத்தின் வேகம், உங்களின் வேகம் போன்றவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டும்.
இதுதான் ஒப்பீட்டு வேகம்.

பட மூலாதாரம், NASA
விண்வெளிக்குp பயணம் செல்லும்போது பூமியின் ஈர்ப்பு விசையையும் தாண்டி பயணித்து மேலே செல்ல வேண்டும்.
செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் ராக்கெட்டுகள், ஏவுதளத்தில் இருந்து வானத்தை நோக்கி வட்டப்பாதையில் சென்று குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் அவற்றைச் செலுத்துகின்றன.
மேலும் வேறு கிரகங்களையோ, நிலவையோ ஆய்வு செய்ய செயற்கைக்கோள்களை ஏவுவது என்பது இவை அனைத்திலிருந்தும் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், பூமி அசையாமல் நிலையாக ஒரே இடத்தில் இருப்பது போன்று நமக்குத் தோன்றலாம். ஆனால் பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. நிலாவும் பூமியை அவ்வாறே சுற்றி வருகிறது.
சந்திரயான் 3 நிலாவை ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்றடைய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நிலாவும் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. எனவே, இப்போதே சந்திரயான் தனது பயணத்தைத் தொடங்கினால்தான் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலா இருக்கும் பகுதியை அதனால் அடைய முடியும்.
பூமியில் இருந்து விண்வெளியில் உள்ள பூமியின் சுற்றுப்பாதைக்குச் செல்ல சில நிபந்தனைகள் உள்ளன.
செயற்கைக்கோள் ஏவப்படும் தேதியின் வானிலையைக் கவனிப்பது முக்கியம். அதேபோல், சூரிய குடும்பத்தில் பூமி எந்த இடத்தில் உள்ளது, நிலா எந்த இடத்தில் உள்ளது ஆகியவற்றை வானியல் தொலைவின் அடிப்படையில் கணக்கிட வேண்டும்.
சந்திரயான் 3, பூமியைச் சுற்றி வந்து அதன் உயரே செல்லும் நிலையை படிப்படியாக அதிகரிக்கிறது. பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி நிலவை நோக்கி எப்போது பயணிக்கத் தொடங்க வேண்டும் என்பதை நிலவின் நிலையும் தீர்மானிக்கிறது.
இதையெல்லாம் வானியல் அடிப்படையில் கணக்கிட்ட பிறகு, சந்திரயான் 3 மீண்டும் வேகமெடுத்து நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைகிறது.

பட மூலாதாரம், ISRO
ஒரு நாள் தாமதத்திற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்
ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3, சூழலைப் பொறுத்து ஆகஸ்ட் 23ஆம் தேதியோ அல்லது ஆகஸ்ட் 24ஆம் தேதியோ நிலவில் லேண்டரை செலுத்தும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
நிலவில் தரையிறங்குவதற்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறக்கப்படும் என்றும் இல்லையென்றால் ஒரு மாதம் கழித்து தரையிறக்க முயற்சி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏனெனில் நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை வேலை செய்ய மின்சாரம் தேவை.
லேண்டர்கள் மற்றும் ரோவர்கள் அந்த மின்சாரத்தை சூரிய ஒளித் தகடுகளில் இருந்து மட்டுமே பெற முடியும். அதாவது லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் சூரிய ஒளி இருக்க வேண்டும். நிலவில் பகல் நேரத்தில் தரையிறக்கம் நடக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

பட மூலாதாரம், ESA
நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 29 நாட்கள்
நிலவு தானாக ஒளிருவது இல்லை. சூரிய ஒளி நிலவு மீது படும்போது, ஒளி பிரதிபலிக்கிறது. இது நிலவு பிரகாசமாக இருப்பது போன்ற தோற்றத்தை நமக்குத் தருகிறது. இதேபோல், ஒரு நாள் என்பதற்கு பூமியிலும் நிலவிலும் பெரிய வேறுபாடு உள்ளது. பூமியில் ஒரு நாள் என்பது பகலையும் இரவையும் சேர்த்து 24 மணிநேரம் ஆகும். ஆனால், நிலவில் ஒருநாள் என்பது பூமியின் ஏறக்குறைய 29 நாட்களுக்கு சமமானது.
அதன்படி, நிலவில் ஒரு பகல் என்பது பூமியின் 14 பகல்களுக்கு ஒப்பானது. அந்த 14 பகல்களில் மட்டும்தான் நிலவில் சூரிய வெளிச்சம் இருக்கும். அதாவது, அந்த 14 நாட்களில் மட்டும்தான் லேண்டர் மற்றும் ரோவரால் தேவையான சூரிய சக்தியைப் பெற முடியும்.
அதனால்தான் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3இல் உள்ள லேண்டர் மற்றும் ரோவர்களின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே என்று இஸ்ரோ தெரிவித்தது.
சந்திரயான் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது. நிலவின் அந்தப் பகுதியில் ஆகஸ்ட் 24 அன்று பகல் தொடங்கும்.
எனவே, அன்றைய தினம் லேண்டர் தரையிக்கப்பட்டால், அங்கு விழும் சூரிய ஒளியின் அடிப்படையில் அதனால் 14 நாட்களுக்கு இயங்க முடியும். ஒரு நாள் தாமதமானாலும் லேண்டர் வேலை செய்யும் வாய்ப்பு குறையும்.

பட மூலாதாரம், ISRO
சந்திரயான் விண்கலம் 615 கோடி ரூபாய் செலவில் நிலவுக்கு அனுப்பப்படுகிறது. அப்படியிருக்கும்போது, இந்த ஆராய்ச்சியின் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது.
அதனால்தான், ஆகஸ்ட் 24ஆம் தேதி தரையிறங்க முடியாவிட்டால், மீண்டும் நிலவில் பகல் தொடங்கும் வரை, அதாவது செப்டம்பர் 23 வரை இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறினார்.
சந்திரயான் திட்டத்தில் லேண்டரும் ரோவரும் நீண்ட நேரம் இயங்க வேண்டிய தேவையுள்ளது. அதனால்தான் சூரிய ஒளி நீண்ட நேரம் இருக்கும் பகுதியில் அவை தரையிறக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் சந்திரயான் நிலவின் மேற்பரப்பில் 100 கி.மீ உயரத்தில் தரையிறங்க வேண்டும் என்றால் அதற்கேற்ப, பூமியிலிருந்து ராக்கெட் புறப்படும் நேரத்தையும் வானியல்ரீதியாக நிர்ணயிக்க வேண்டும்.
எனவே, வானியல் விதிகள், பூமி மற்றும் நிலாவின் அசைவுகள், அவற்றின் வேகம், லேண்டர் இறங்கும் நேரம் போன்ற அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு சந்திரயான் போன்ற திட்டங்களில் ராக்கெட் ஏவும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












