இளம்பருவத்துக் காதலில் ஒரு தரப்பை குற்றவாளியாக்குவது சரியா? - நீதிமன்றத்தின் முடிவால் எழும் புதிய சர்ச்சைகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள், 18 வயதுக்குக் குறைவான சிறுமியருடன் மனமொத்த பாலியல் உறவு கொண்டிருந்தாலோ, அவர்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினாலோ அவர்கள் மீது பதிவுசெய்யப்படும் கிரிமினல் வழக்குகளை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.
இதன் தாக்கமும் விளைவுகளும் என்னவாக இருக்கும்?
என்ன வழக்கு?
2022-ம் ஆண்டில் சிறுமி ஒருவர் காணாமல் போனார். அந்தச் சிறுமியைக் கண்டுபிடித்துத் தர வேண்டுமென ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை, அந்தச் சிறுமி மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதைக் கண்டறிந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்து வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக சிறார் நீதிக் குழுமத்திடம் வழக்கை முடித்து வைப்பது பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இதனை நீதிபதிகள் பதிவுசெய்துகொண்டனர்.
இதற்குப் பிறகு தர்மபுரியில் நடந்த இதே போன்ற ஒரு விவகாரம் குறித்து நீதிபதிகள் குறிப்பிட்டனர். அந்த விவகாரத்தில் தர்மபுரியைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியும் சிறுவனும் சென்னைக்கு ஓடி வந்தனர். இந்த விவகாரத்தை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், அந்தச் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்.

அதற்குப் பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று ஒரு தனியார் இல்லத்தில் தங்க வைத்தார். அந்தப் பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் பெற்றோருடன் போகவும் அனுமதிக்கப்படவில்லை. அந்தச் சிறுவனும் ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இருவருமே குழந்தைகள் என்ற வரையறைக்குள் வரும்போது, பெண்ணை பாதிக்கப்பட்டவராகவும் ஆணை சட்டத்துடன் முரண்பட்டவராகவும் கருதி செயல்பட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். "இது போல எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வேண்டும்," என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, தான்தான் வீட்டைவிட்டு வெளியேற அந்தச் சிறுவனை வலியுறுத்தியதாக அந்தச் சிறுமி அளித்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்தச் சிறுவனுக்கு எதிராக வழக்கைத் தொடர சிறுமியின் பெற்றோர் விரும்பவில்லை என்று கூறியதையும் பதிவுசெய்தனர். இதையடுத்து இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கை ரத்துசெய்யப்பட்டது.
தடைசெய்யப்பட்ட ‘இருவிரல்’ பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images
2010-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுவரை தமிழ்நாட்டில் 1,728 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அதில் 1,274 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர். இந்த 1,274 வழக்குகளில் இரு தரப்பும் விரும்பி மேற்கொண்ட உறவுகளை தனியாகப் பிரித்து, பட்டியலிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யும்படி தமிழக காவல்துறை தலைவருக்கு நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதேபோல புதுச்சேரி காவல்துறை தலைவருக்கும் உத்தரவிடப்பட்டது.
இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும்போது, அந்த விசாரணை அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனத் தெரியவந்தால், அவற்றை ரத்துசெய்யவும் நீதிமன்றத்தால் முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோல, பாலியல் வழக்குகளில் பெண்களுக்கு நடத்தப்படும் இருவிரல் பரிசோதனையை நிறுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த ஆண்டு அப்படி சோதனைகள் ஏதும் நடத்தப்பட்டிருந்தால் அதனை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும்படியும் உத்தரவிட்டனர்.
இருவிரல் பரிசோதனையைப் பொறுத்தவரை, ஏற்கனவே அந்த சோதனையை உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.
‘ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டம் ஏன்?’

பட மூலாதாரம், Devaneyan
இந்த விவகாரத்தில் இரண்டுவிதமான சிக்கல்கள் இருக்கின்றன, என்கிறார் குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக செயல்பட்டுவரும் தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன்.
“முதலாவது, 18 வயதுக்குட்பட்டோர் திருமணம் செய்துகொள்வதால் அது குழந்தைத் திருமணமாக பார்க்கப்படும். இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட பெண் 18 வயதுக்குக் கீழ் இருந்தால், அந்த ஆண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. உதாரணமாக, 16 வயதுச் சிறுமி, 17 வயது சிறுவனுடன் காதல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி பிறகு மீட்கப்பட்டால், அந்த பெண் குழந்தையை பெற்றோரோடு அனுப்புவார்கள். ஆனால், அந்த 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்படும். அதற்குப் பிறகு அந்தச் சிறுவனின் வாழ்க்கையே நாசமாகிவிடும்,” என்கிறார்.
மேலும் பேசிய அவர், குடும்ப வழக்கம், குடும்பச் சூழல், மத ரீதியான, ஜாதி ரீதியான காரணங்கள் ஆகியவற்றால் நடக்கும் குழந்தைத் திருமணம் என்பது வேறு, 18 வயதுக்குட்பட்ட பெண்களை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவது என்பது வேறு, மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஆணும் பெண்ணும் காதலித்து, வீட்டிற்குப் பயந்து ஓடிப்போவது என்பது வேறு, என்கிறார்.
“நாடு முழுவதுமே பதின் வயதினர் திருமணம் செய்துகொள்வது, 18 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பமடைவது ஆகியவை அதிகரித்திருக்கின்றன. இதன் காரணமாக, 2022 டிசம்பரில் யுனிசெஃப்போடு சேர்ந்து உச்ச நீதிமன்றம் ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தியது,” என்கிறார் தேவநேயன்.
மேலும் பேசிய அவர், போக்சோ மிகத் தேவையான சட்டமானாலும், பதின்வயதினரில் உள்ள ஆணும் பெண்ணும் காதலித்து வெளியேறும்போது, அந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, என்கிறார்.
“கடந்த சில ஆண்டுகளில் இந்த மாதிரியான விவாகரத்தில் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டில் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆகவே இந்த விவகாரத்தை நீதித் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை, சட்டத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து மிகத் தீவிரமாக விவாதிக்க வேண்டும்," என்கிறார் தேவநேயன்.
‘ஒருவரை மட்டும் குற்றவாளியாக கருத முடியாது’
இந்தக் குறிப்பிட்ட வழக்கு கவனிக்கத்தக்கதுதான் என்றாலும், இதில் நிறைய நுணுக்கமான அம்சங்கள் இருக்கின்றன என்கிறார் சிறார் நீதிச் சட்டத்தின் குழுமையின் தலைவராக இருந்தவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான விமலா.
"இந்த விவகாரத்தில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஒப்புதலுடன் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இணைந்து இதில் ஈடுபட்டார்கள் என்றால், இந்த விவகாரத்தை வேறு மாதிரி பார்க்க வேண்டுமென்பது சரிதான். ஆனால், அந்த ஒப்புதல் என்பது குடும்பத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், கர்ப்பம், குழந்தைப் பேறு போன்ற எல்லா பின்விளைவுகளையும் அறிந்து, அந்தப் பெண் குழந்தையால் அளிக்கப்பட்ட ஒப்புதலா என்பதை கவனிக்க வேண்டும்,” என்கிறார்.
மேலும் பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றையும் அறிந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். எதுவுமே தெரியாத குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதையும் மனதில்கொண்டு இந்த விவகாரத்தை அணுக வேண்டும். அதே நேரம், இதுபோல இரு சிறார்கள் ஈடுபடும்போது ஒருவரை பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மற்றொருவரைக் குற்றவாளியாகவும் கருத முடியாது. ஆகவே ஒப்புதல் வயதை 18லிருந்து 16ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து முன்வைத்துவருகிறோம்," என்கிறார் நீதிபதி விமலா.
ஒருமித்த உறவுக்கான ஒப்புதல் வயது குறித்த மாறுபட்ட கருத்துகள்
ஒருமித்த பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதைக் குறைக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
இன்றைய சூழலில் ஒருமித்த பாலியல் உறவுக்கான வயதைக் குறைக்க வேண்டும் என ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால், மற்றொரு சாரர் இதனால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
பெண்கள் விவகாரத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் வழக்கறிஞர் சோனாலி கட்வாசரா, ஒருமித்த பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதைக் குறைக்க வேண்டும் என்கிறார்.
''இதை நாம் ஏற்கிறோமோ அல்லது தர்மசங்கடமாக உணர்கிறோமோ என்பதைத் தாண்டி உண்மை என்னவென்றால் நம் சமூகத்தில் 18 வயதிற்கு உள்ளாகவே ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்கின்றனர்'’ என்கிறார் சோனாலி கட்வாசரா.
தொடர்ந்து பேசிய அவர், குடும்ப மரியாதை என்ற பெயரில் சிறுவர்கள் மீது போக்ஸோ வழக்கு தொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார்.
''போக்ஸோ சட்டம் வருவதற்கு முன்பாக 15 வயது சிறுவனும் சிறுமியும் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படாது. ஆனால், போக்ஸோ சட்டத்திற்கு பிறகு இந்த முறை மாறிவிட்டது'' என்கிறார் சோனாலி கட்வாசரா.

பட மூலாதாரம், Getty Images
எதிர்ப்பவர்களின் கருத்து
ஆனால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சத்யம் சிங், சோனாலியின் கருத்தை நிராகரிக்கிறார்.
இளம் வயதினர் பாலியல் உறவில் ஈடுபடுகிறார்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே ஒருமித்த உறவுக்கான வயதைக் குறைக்க கூடாது என்கிறார் அவர்.
''உடலில் அந்த வயதில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பது ஏற்க கூடியதுதான். ஆனால், சிறுமி கர்ப்பமடைந்தால் அதனால் உடலில் ஏற்படும் மாற்றம், மனதளவில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை குழந்தை பிறந்தால் அது சமூக ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தும்'' என்கிறார் வழக்கறிஞர் சத்யம் சிங்.
உளவியல் ரீதியான ஆலோசனை தேவை

பட மூலாதாரம், Sunil Kumar
உளவியலாளர்கள் இந்தத் தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். பதின் பருவத்தில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, இம்மாதிரியான சூழலில் அவர்களுக்குத் தேவைப்படுவது உளவியல் ரீதியில் ஆலோசனை அளித்து, இயல்பான வாழ்வுக்கு மீட்டெடுப்பதே சரியானதாக இருக்கும் என்கிறார் உளவியல் நிபுணரான டாக்டர் சுனில் குமார்.
"ஒருவர் 18 வயதைத் தாண்டிவிட்டாலே, அவரால் தனியாக முடிவெடுக்க முடியும் என சட்டம் நம்புகிறது. அதனால்தான் வாக்களிப்பதற்கான வயது 18ஆக வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. அந்த முடிவுகள் தவறானதாகவும் இருக்கலாம். அல்லது முழுமையாக அறிந்து எடுக்கப்படாததாக இருந்திருக்கலாம்.
ஆக, அதைவிடக் குறைவான வயதில் எடுக்கும் முடிவுகள் எல்லாம் உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளாக இருக்கலாம்,” என்கிறார்.
மேலும் பேசிய அவர், 18 வயதுக்குக் குறைந்த பெண்ணை, 18 வயதைவிட அதிகமான ஆண், அழைத்துச் சென்றால் அதைக் குற்றமாகப் பார்க்கலாம். ஆனால், ஆணும் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால், குற்றவாளியாகப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். இதில் ஆணையோ, பெண்ணையோ குற்றவாளியாகக் கருதக்கூடாது. அவர்களுக்குத் தேவை உளவியல் ரீதியான ஆலோசனைதான், என்கிறார்.
18 வயதுக்குக் குறைவான ஒருவர், விளையாட்டாக இம்மாதிரி விஷயங்களில் ஈடுபடும்போது அது விபரீதமாக முடிந்த தருணங்களும் உண்டு. அம்மாதிரி சூழலில் ஒரு தரப்பை மட்டும் குற்றவாளியாகக் கருத முடியாது என்கிறார் தேவநேயன்.
அவர் ஒரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டுகிறார். 2022 அக்டோபரில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டுவதைப் போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்குப் பிறகு, அந்த மாணவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க காவல்துறை முடிவுசெய்தது. ஆனால், வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலையீட்டில் தடுக்கப்பட்டது.
மேலும் சில சிக்கலான விஷயங்களையும் தேவநேயன் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணம் தொடர்பாக 72 வழக்குகளே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனால்,மாநிலத்தில் பதிவாகியுள்ள பதின்மவயது கர்ப்பங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது எப்படி நடந்தது என்பது குறித்து ஆராய வேண்டும் என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












