திருப்பத்தூர்: மக்களை வாட்டும் புதுப்புது நோய்கள் - தோல் கழிவுகளால் பாலாறு பாழாகிறதா? - கள நிலவரம்

- எழுதியவர், சுஜாதா
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட தோல் நிறுவனங்கள் உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தோல் தொழிற்சாலைகள் மற்றும் கைமுறை தொழிற்சாலைகளில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடியில் இருந்து ராணிப்பேட்டை வரை செல்லும் பாலாற்றுக் கரையோரம் உள்ள சுமார் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு பணிபுரிவோர் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீர் காரணமாக பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுவது குறித்து வாணிடெக் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் கே இக்பால் அகமதை சந்தித்துப் பேசியபோது, சுத்தகரிப்பு செய்த பிறகு கழிவுகளை வெளியேற்றுவதில்லை எனத் தெரிவித்தார்.
நுரையீரல் மற்றும் இதய பிரச்னை
தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஏராளமானோரில் அம்முவின் குடும்பமும் ஒன்று.
வாணியம்பாடி தாலுகா வலையாம்பட்டில் உள்ள அம்முவின் குடும்பம் இந்தத் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதை அறிந்து, அவர்களை நேரில் சந்தித்தோம்.
அப்போது அம்மு கூறுகையில், “நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வாணிடெக் நிறுவனத்தின் அருகாமையில் குடியிருந்து வருகிறோம். அந்தத் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழுவுநீர் மற்றும் புகை நச்சு காரணமாக எனக்கும் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் நுரையீரல் மற்றும் இதய பிரச்னைகள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது,“ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது பிள்ளைகளுக்கு 25 வயதுகூட இன்னும் பூர்த்தியாகாத நிலையில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறினார்.
வானிடெக் நிறுவனம் என்பது சுத்தீகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அந்த நிறுவனங்களுக்கே அனுப்ப வேண்டும்.
ஆனால் அந்த நிறுவனத்தால் கழிவுகள் சுத்தீகரிப்பு செய்யப்படாமல் பாலாற்றில் கலக்கப்படுவதாகவும் இதனால் பாலாற்றின் ஆரோக்கியம் பாழாகி வருவதாகவும் சுற்றுவட்டார மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவரைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பேசுகையில், வாணிடெக் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் கண் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறினார்.
மாணவியைத் தொடர்ந்து 15 ஆண்டு காலமாக அதே பகுதியில் வசித்து வரும் மைதிலியின் குடும்பத்தைச் சந்தித்தோம்.
அப்போது எங்களிடம் தானாகப் பேச முன்வந்த மைதிலி, “எனக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இங்கே வந்தேன். அப்போதிருந்து இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை காரணமாகப் பலரும் கண் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எனக்கும் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, என்னுடைய மகனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் குடும்பத்தில் ஒருவருக்கு சிறுநீரகம், நுரையீரல், இதயம், தோலில் பாதிப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

தோல் நோய் பாதிப்பு
இதேபோல் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள வடச்சேரி கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில், பலரும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் பற்றித் தெரிந்துகொள்ள நேரில் சென்று விவரங்களைக் கேட்டோம்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், கார்த்திகேயன் இருவருமே, தங்கள் கிராமத்தில் ஒரு சிலரைத் தவிர பலரும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும் குடிநீர் கடல்நீரைப் போல் உப்பாக மாறியுள்ளதாகவும், இதனால் குடிநீர் இன்றித் தவித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
தோல் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் நோய்கள்

வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு மருத்துவர் நேதாஜியிடம் கேட்டபோது, “தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களுக்கு உடலில் அடிக்கடி தோல் குறித்த உபாதைகள் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது,” எனத் தெரிவித்தார்.
தோல் தொழிற்சாலைகள் மூலமாகப் பலவிதமான நோய்கள் வருகின்றன என்று கூறிய அவர், அதில் எக்ஸிமா என்று சொல்லக்கூடிய தேம்பல், கேட்மியம் என்று சொல்லக்கூடிய சொறி, சிரங்கு மற்றும் கெமிக்கல் படுவதால் வரக்கூடிய அரிப்பு ஆகியவை அதிகப்படியாக வரக்கூடிய நோய்கள் என்றார்.
மேலும் பேசிய அவர், “இதிலிருந்து பாதுகாக்க கையுறை, பூட்ஸ் அணியலாம். மேலும் தோல் தொழிற்சாலைகளில் அதிக அளவு கெமிக்கலை உபயோகப்படுத்துகின்றனர். அரசாங்கம் சுத்திகரிப்பு செய்த தண்ணீரைத்தான் வெளியே விட வேண்டும் என்று நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு குறிப்பிட்ட நபர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு சில அறிகுறிகள் வரலாம். ஒவ்வொரு கெமிக்கல் உபயோகப்படுத்தும் பொழுதும் ஒவ்வொரு பிரச்னை வரும். மெர்குரி என்றால் நரம்பு பிரச்னை வரும், கேட்மியம் இருந்தால் இதயப் பிரச்னை வரும், ஈயம் இருந்தால் நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளும் வரலாம்,” என்று கூறினார் மருத்துவர் நேதாஜி.
மோசமான நிலத்தடி நீர்
தோல் தொழிற்சாலை கழிவுகளால் மனிதர்கள் மட்டுமல்ல, 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாக அந்த வட்டார விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய விவசாய சங்க மாவட்ட தலைவர் முல்லை, “வாணிடெக் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், நிலங்கள் பாதித்து, விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போகும் நிலையில் உள்ளது. மேலும் நிலத்தடி நீரின் தரமும் கேள்விக்குறியாக உள்ளது,” என்றார்.
வாணியம்பாடியில் இருந்து ராணிப்பேட்டை வரை செல்லும் பாலாற்றுக் கரையோரம் உள்ள சுமார் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மண் விவசாயத்திற்கு ஏற்ற சூழலில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதோடு, "பல குடும்பங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால், பிழைப்பிற்காக அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களை நோக்கி புலம் பெயர்ந்து செல்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
என்ன சொல்கிறது வாணிடெக் நிறுவனம்?

பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுவது குறித்து வாணிடெக் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் கே இக்பால் அகமதை சந்தித்துப் பேசியபோது, சுத்தகரிப்பு செய்த பிறகு கழிவுகளை வெளியேற்றுவதில்லை எனத் தெரிவித்தார்.
வாணியம்பாடியில் 130 கம்பெனிகளின் கழிவு நீரை பைப் லைன் மூலமாக வாணிடெக் நிறுவனத்திற்குக் கொண்டு வருவதாகவும், ‘ஜீரோ லிக்விட் டிசார்ஜ்’ மூலமாக இதை சுத்திகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்துவிட்டு அதன்பிறகு பிஓடி, சிஓடி, ரெட்யூஸ் செய்து ஆர்வோவின் மூலமாக இணைத்துக்கொண்டு எவாப்ரேட்டர் மூலமாக எவாபரேட்டட் செய்துகொண்டு சுத்திகரிப்பு செய்த தண்ணீரை மீண்டும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும், மறு பயன்பாட்டிற்காக அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
வாணியம்பாடியில் நகராட்சிக்கென தனி சுத்திகரிப்பு நிலையம் எதுவும் இல்லை, கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. அதனால் அனைத்து கழிவுகளும் பாலாற்றில் கலந்து விடுகின்றன. இதன் காரணமாகவே மழைக்காலங்களில் மாரப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் நுரை போலப் பொங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
“இந்த நுரையை அனைத்து ஆய்வுக்கூடங்களிலும் கொடுத்து பரிசோதித்துள்ளோம். சல்பேட் மற்றும் பாஸ்ஃபேட் கலந்திருப்பதாகத் தெரிவித்தனர். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலம் முழுவதும் பரவி, இளஞசிவப்பு நிறத்தில் மாறுவதாகவும், இதனால் தொற்று ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர். ஆனால், இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எப்போது வேண்டுமானாலும் இதைப் பரிசோதிக்கத் தயாராக உள்ளேன்," என்றார் இக்பால் அகமது.

பதில் அளிக்க மறுத்த மாவட்ட ஆட்சியர்
கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து பிபிசி தமிழ் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது, இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனம் மீது பொதுமக்கள் யாரும் இதுவரை புகார் தரவில்லை. மேலும் பாலாற்றில் நுரை ஏற்படும்போது அங்கு சென்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கையை எடுப்போம் என்று கூறினார்.
மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்துக் கேட்டபோது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இதுகுறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
அமைச்சரின் பதில்
இதுகுறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், “எந்தெந்த நிறுவனங்கள் குறித்து மக்களிடமிருந்து புகார் வருகிறதோ அதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்படும் என்றும் தேவைப்பட்டால் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கலந்தாலோசிக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












