ஸ்மார்ட் வாட்ச் இருந்தால் போதும், பார்கின்சன் நோயை 7 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அன்னபெல் ரக்காம்
- பதவி, பிபிசி நியூஸ்
பார்கின்சன் எனும் நடுக்குவாத நோய் வருவதற்கான அறிகுறிகளை அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்டறிய முடியும் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிமென்ஷியா ஆராய்ச்சி நிறுவனம், 103,712 ஸ்மார்ட்வாட்ச் அணிந்தவர்களின் தரவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்தது.
2013 மற்றும் 2016 காலகட்டத்திற்கு இடையில், அவர்களின் ஒரு வார இயக்க வேகத்தைக் கண்காணிப்பதன் மூலம், பர்கின்சனின் வருவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கணிக்க முடிந்தது.
இந்தத் தரவுகள் நோயின் அறிகுறிகளைக் கணிக்க உதவும் என நம்பப்படுகிறது.
ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் எவ்வளவு துல்லியமானது என்பதை சரிபார்க்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்று நேச்சர் மெடிசின் சஞ்சிகையில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூளை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருக்கும்.
நடுக்கம், மெதுவான இயக்கம், நெகிழ்வற்ற தசை இறுக்கம் ஆகியவை பார்கின்சனின் அறிகுறிகள்.
பார்கின்சனின் முதல் அறிகுறியை நாம் கண்டறியும் போதே சரிசெய்ய முடியாத அளவிற்கு நம் மூளை செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும்.
பிரிட்டனின் 30 சதவீத மக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதால் பர்கின்சனின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டறிய இது எளிய வழியாக இருக்கும் என்கிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட சிந்தியா சாண்டோர்.
"ஒரு வார தரவுகளை வைத்து பார்கின்சன் அறிகுறிகளை ஏழு ஆண்டுகள் முன்கூட்டியே கண்டறியலாம் என்பதை இந்த ஆய்வில் நாங்கள் செய்துகாட்டியுள்ளோம்" என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த முடிவுகளை வைத்து பார்கின்சன் அறிகுறிகளைக் கண்டறிவதற்கான பயனுள்ள கருவியை நம்மால் உருவாக்க முடியும் எனக் கூறும் அவர், இது ஆரம்பக்கட்டத்திலேயே நோயாளி சிகிச்சையை நாட வழிவகை செய்யும் என்கிறார்.
பிரிட்டனின் பயோ பேங்க் (Biobank) தரவை கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது. பயோ பேங்க்கில் 5 லட்சத்திற்கும் அதிகமானோரின் விரிவான மருத்துவ தரவுகள் உள்ளன.
இந்த ஆய்வில் ஈடுபட்ட கேத்ரின் பெல் பிபிசியிடம் கூறுகையில், ''இது துல்லியமானது என்றும் பலவீனம் மற்றும் முதுமையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பர்கின்சன் அறிகுறிகளை வேறுபடுத்தி காட்டும்’’ என்றார்.
’’எங்கள் சோதனை முறையை மற்ற நரம்பியல் குறைபாடுகள் மற்றும் கீல்வாத பிரச்னை உட்பட இயக்கம் தொடர்பான பல குறைபாடு நிலையுடன் ஒப்பிட்டோம். பர்கின்சன் பாதிக்கப்பட்டவர்களின் ஆய்வு முடிவுகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு இருந்தன'' என்றும் கேத்ரின் பெல் கூறுகிறார்.
ஆனால், அறிகுறிகள் தெரிவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பர்கின்சன் நோய் இருப்பதாக சொல்ல வேண்டுமா என்றால் அது தனி நபரின் விருப்பம் சார்ந்தது.
''பார்கின்சன் நோய் முற்றுவதை மெதுவாக்க புதிய சிகிச்சை முறைகள் கிடைக்கும் என்று நாம் நம்பிக்கை கொள்ளும் இடத்தில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது'' என்கிறார் கேத்ரின் பெல்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












