இறந்த மனிதனுக்கு உயிர் கொடுப்பது சாத்தியமா? 'இந்த தொழில்நுட்பத்திற்கு' அமெரிக்காவில் எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செசீலியா பாரியா
- பதவி, பிபிசி நியூஸ்
மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புரட்சியாக அமைந்தது. அதனால் நாள்தோறும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது அதில் உருவாக்கப்பட்டுள்ள புதுமையான ஒரு தொழில்நுட்பம் இயற்கை நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்று கூறி எதிர்க்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒருவரது இதயம் வேறு நபருக்கு தானமாக அளிக்கப்படுகிறது என்றால், இறந்தவரின் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்து, அது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்படையதா என்பதை ஆராய்ந்து பிறகு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம், 'இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. இது இயற்கைக்கு விரோதமானது' என்று கூறி எதிர்க்கப்படுகிறது.
உயிர் பிழைக்க வைத்த உறுப்பு மாற்று சிகிச்சை
வெறும் 41 வயதில், அந்தோனி டொனாடெல்லி ஒரு மருத்துவமனை படுக்கையில் உறுப்பு தானம் செய்பவருக்காகக் காத்திருந்தார்.
இது ஒரு வேதனையான கனவு போல, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நிமிடமும் கடந்து சென்றது. இதைத் தவிர்க்க முடியாத நிலையில் அவர் இருந்தார் என்பதே உண்மை.
எல்லாவற்றையும் தாண்டி, தம்மால் உயிர் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் இழக்கவில்லை.
கலிஃபோர்னியாவின் சான் டியாகோவை சேர்ந்த அமெரிக்கரான அவர், பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "என் குழந்தைகளை நினைத்து நான் எனது நம்பிக்கையைக் காத்து வந்தேன்," என்றார்.
அவருக்கு அமிலாய்டோசிஸ் நோய் இருந்தது. இது, வழக்கத்திற்கு மாறான புரதங்கள் உடலில் உருவாகி படிவுகளை ஏற்படுத்தும்போது தொடங்கும் ஓர் அரிய நோயாகும். அவருக்குத் தேவையான மூன்று உறுப்புகளை வழங்கும் ஒரு நன்கொடையாளரின் தேவை மட்டுமே அவருக்கு இருந்த ஒரே ஒரு வாய்ப்பாக இருந்தது.
அப்படி ஒரு நாள் வந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், பி.ஆர்.என். (நார்மோதெர்மிக் ரீஜினல் பெர்ஃப்யூஷன் ) என்ற நுட்பத்தில், இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையை டொனாடெல்லி பெற்றார்.
இன்று அவர் தனது குடும்பத்தினருடன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வருகிறார். சில நாட்கள் மற்றவர்களைவிட கடினமாக இருந்தாலும், அட்லாண்டிக் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது, அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது எனத் தனது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டுள்ளார்.
"நான் இப்போதுதான் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்," என்று டொனாடெல்லி கூறுகிறார். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது வரை அவர் குடும்பத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
வாழ்க்கை மற்றும் இறப்பு குறித்து அமெரிக்க மருத்துவ சமூகத்தில் நீளும் விவாதம்
ஆனால், எல்லோரும் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.
சில மருத்துவர்கள் பி.ஆர்.என். நுட்பத்தை எதிர்க்கின்றனர். குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்த நுட்பத்தின்படி, இறந்த நபரின் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தம் இதயத் துடிப்பை மீண்டும் தொடங்குவதற்காக அந்த நபரின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.
மீளமுடியாத மூளைப் பாதிப்பைக் கொண்ட நபர்கள் பல்வேறு உபகரணங்களின் உதவியுடன் உயிருடன் வைக்கப்பட்டிருப்பார்கள். இது போன்ற நபர்களின் உறுப்புகளை தானமாகப் பெறும்போது அவர்களுடைய குடும்பத்தினரின் சம்மதத்துடன் பி.ஆர்.என். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மருத்துவர் அந்த உயிர் காக்கும் உபகரணங்களை அணைத்து வைக்கிறார்.
இதையடுத்து, அந்த நபரின் இதயமும், நுரையீரலும் செயல் இழக்கின்றன. அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
பின்னர், ஓர் இயந்திரத்தின் உதவியுடன், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மீண்டும் தொடங்கும் முயற்சியில் மருத்துவர்கள் அவருடைய ரத்தத்தை பம்ப் செய்கிறார்கள். இதன்மூலம் அந்த இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததா என்பதை மதிப்பிடுவதோடு, அது கெட்டுப்போவதும் தடுக்கப்படுகிறது.
இந்தப் பணி குறித்த நேரத்தில் குறித்த வேலைகளைச் செய்யப்பட வேண்டியது என்பதால் மருத்துவ நடவடிக்கைகள் முடிந்த வரைக்கும் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்த பி.ஆர்.என். தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, ஸ்வீடன் நாடுகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அமெரிக்காவில் "தார்மீக நெறிமுறை காரணங்களுக்காக" இந்தத் தொழில்நுட்பத்திற்கு எதிரான விவாதம் தொடங்கியுள்ளது.
இந்த நுட்பத்தை எதிர்ப்பவர்களின் கூற்றுப்படி, இறந்த நபருடைய இதய செயல்பாட்டை மீண்டும் தொடங்குவது இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பது போன்றது.
பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஃபிசிசியன்ஸ் (American College of Physicians), 2021 ஏப்ரலில் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டது. "இறப்பை நிர்ணயிப்பது தொடர்பான ஆழமான இயற்கை நெறிமுறை குறித்த கேள்விகளை" எழுப்புவதன் காரணமாக பி.ஆர்.என். தொழில்நுட்பத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அந்த அறிக்கை கோரியது.
"பி.ஆர்.என். தொழில்நுட்பம் உயிரிழந்த நோயாளியை மீண்டும் உயிர்ப்பிக்கிறது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஒருவர் இறந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டதாகவே அறிவிக்கப்படுகிறது. இந்த இறப்பை மாற்றி மீண்டும் அந்த நபருக்கு உயிர் கொடுக்க முடியாது என்பது இயற்கை நியதி என்ற நிலையில், உயிரிழந்த நபரின் இதயத்தை மீண்டும் செயல்பட வைப்பது இயற்கை நெறிமுறைகளைக் கடுமையாகப் பாதிக்கும் செயல் என இந்த அறிக்கை வாதிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உடல் உறுப்புகளை வாங்கிப் பாதுகாக்கும் நிறுவனங்களின் சில அமைப்புகள் இந்த நிலைப்பாட்டை ஒப்புக்கொள்கின்றன.
இந்த அமைப்புகளில் ஒன்றின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அலெக்ஸாண்ட்ரா கிளாசியர் பிபிசி முண்டோவிடம் பேசுகையில், இறந்த நன்கொடையாளரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது இன்றியமையாத நோக்கம் என்று கூறினார்.
அவரது அமைப்பான, நியூ இங்கிலாந்து டோனர் சர்வீசஸ், தற்போது வயிற்றுப்பகுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு மட்டுமே பி.ஆர்.என். நுட்பத்தைச் செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"உறுப்பு தானம் செய்பவரின் உடலில் மீண்டும் ரத்த ஓட்டம் ஏற்படுவதைத் தடுப்பது, இதயம் மீண்டும் செயல்படத் தொடங்குவதைத் தடுப்பது" ஆகிய விஷயங்களே தங்களது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"இறந்தவர்களை உயிர்ப்பிக்க யாராலும் முடியாது"
நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களான பிரெண்டன் பேரன்ட், நாடெர் மோஸாமி, ஆர்தர் கப்லான் மற்றும் ராபர்ட் மான்ட்கோமெரி ஆகியோர் 2022இல் வெளியிட்ட அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் டிரான்ஸ்பிளான்டேஷன் என்ற இதழில், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஃபிசிசியன்ஸ் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் அவர்கள், நெஞ்சக உறுப்புகளுக்கு ரத்தத்தைச் செலுத்தும் நடைமுறை, இதயம் தானாகவே மீண்டும் இயங்காது என்ற உண்மையை எந்த நிலையிலும் மாற்றாது என்று குறிப்பிடுகின்றனர்.
இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மூளைச் சாவு அடைந்த நோயாளி பி.ஆர்.என். நுட்பம் மூலம் மீண்டும் உயிர்த்தொழுந்து விட்டார் என வாதிடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவரது வாழ்வுக்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை என மருத்துவ உலகமும், குடும்பத்தினரும் எடுத்த முடிவை இந்தத் தொழில்நுட்பம் எந்த வகையிலும் மாற்றாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பி.ஆர்.என். நுட்பம் "நோயாளிக்கு புத்துயிர் அளிக்காது", என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் செயல்முறை இறந்த நன்கொடையாளரின் உறுப்புகளுக்கு ரத்தத்தைச் செலுத்துகிறது, ஆனால் அவரை உயிர்ப்பிக்காது.
இது ஒரு "நேர்மையான, வெளிப்படையான மற்றும் மரியாதைக்குரிய" உறுப்பு மீட்பு நடவடிக்கை. ஏனெனில் மரணம் "இயற்கை நெறிமுறைக்கு உட்பட்டு" அறிவிக்கப்பட்டது.
பிபிசி முண்டோவுடனான உரையாடலில், மருத்துவர் நாடெர் மோஸாமி, இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒருவர் இறந்தால், அவரது இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததா என்பதை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி, இதயம் அவரது உடலுக்குள் இருக்கும்போதே அதைச் செயல்படுத்துவதுதான் என்றார்.
என்.ஒய்.யூ. லாங்கோன் மருத்துவமனையின் இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மெக்கானிக்கல் சர்குலேட்டரி சப்போர்ட்டின் அறுவை சிகிச்சைத் துறையின் இயக்குநரான, மொஸாமி, 2020ஆம் ஆண்டில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, அதற்கு முன்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சாத்தியமில்லாதவை என நிராகரிக்கப்பட்ட சூழ்நிலைகளில் இருந்த இதயங்கள்கூட மீட்கப்பட்டன என்று விளக்குகிறார்.
இதய செயல்பாட்டை மீட்டெடுப்பது, அதை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான நடைமுறையாகும் என்று அவர் கூறுகிறார்.
"உயிரிழந்த ஒரு நோயாளியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது உறுப்பு தானம் செய்பவரை மீண்டும் உயிர்ப்பிப்பதில்லை. ஏனென்றால் இயற்கை வரையறையின்படி, நீங்கள் நீண்ட ஆயுளை அல்லது தரமான வாழ்க்கையை மீட்டெடுப்பதே உயிர்ப்பித்தல் ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
நோயாளியின் மரணம், அவரது உயிர் காக்கும் உபகரணங்களை அணைத்து வைக்க குடும்பத்தினர் ஒப்புதல் கொடுக்கும்போது நிகழ்கிறது.
“இறந்தவர் எப்போதும் உயிர்ப்பிக்கப்படுவதில்லை. வார்த்தைகளின் சரியான அர்த்தங்களைக் கொண்டு அதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் நபர்கள் எதிர்மறையான வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால் அது அப்படி இல்லை. பி.ஆர்.என். முற்றிலும் இயற்கை நெறிமுறைகளுக்கு உட்பட்டது."
அமெரிக்காவில் இந்த விவாதங்கள் தொடர்ந்தாலும், வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, நார்வே மற்றும் கனடா போன்ற நாடுகளில் தற்போது இந்த மருத்துவ முறையில் பைலட் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின்படி, தென்னமெரிக்க நாடுகளில் இதுவரை இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












