அனகோண்டா பாம்பு கலவி முடிந்ததும் ஆண் பாம்பை விழுங்கி விடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள், பறவைகள், பாம்புகள் என ஒவ்வோர் உயிரினத்திற்கும் மனப்பான்மை, உணவு, உடலுறவு என்று தனிப்பட்ட வாழ்க்கை முறை மாறுபடும்.
அதில் உடலுறவு என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகவே நீடித்து வருகிறது.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், உடலுறவை பொருத்தவரை பல்வேறு உயிரினங்களில் சில விந்தையான பழக்கங்களும் உண்டு. அதில் ஒன்றுதான், இனச்சேர்க்கை முடிந்ததும் தன் ஆண் துணையைச் சாப்பிட்டுவிடுவது.
ஒவ்வொரு முறையும் உடலுறவு குறித்து அதிக ஆராய்ச்சி செய்யும்போது, மேலும் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
ஜீசஸ் ரிவாஸ், அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ ஹைலேண்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பூச்சியியலாளராக உள்ளார்.
தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத அனகோண்டா பாம்பின் பாலியல் வாழ்க்கை குறித்த அதிர்ச்சித் தகவல் இவருடைய ஆராய்ச்சியில் வெளியாகியுள்ளது. இந்த அனகோண்டாவில், இனச்சேர்க்கைக்குப் பிறகு, ஆண் பாம்பை பெண் பாம்பு சாப்பிட்டுவிடுகிறது.
ஏன் தெரியுமா? இங்கு விரிவாகப் பார்ப்போம்...
உடலுறவில் பெண் பாம்பின் ஆதிக்கம்
இனச்சேர்க்கையின்போது பெண் பாம்புகளின் மீது ஆண் பாம்புகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஆணின் குறிப்புகளுக்கு மட்டுமே பதில் அளிக்கும் விதத்தில் பெண் பாம்புகள் செயல்படுவதாகவும் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆனால் அனகோண்டா பற்றிய இந்த விசித்திரமான உண்மை அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனச்சேர்க்கையில் ஈடுபடும் பாம்புகளில், பெண்ணின் வயது அதிகமாக இருந்தால் அதன் உடலில் சுரக்கும் ரசாயனங்களின் அளவும் அதிகமாக இருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொதுவாக உயிரினங்களில் ஆண்களின் உருவ அமைப்பு பெரிதாகவும், பெண்களின் உருவ அமைப்பு சிறிதாகவும் இருக்கும் நிலையில், பாம்புகளைப் பொறுத்தளவில் பல இடங்களில் இந்த அளவு மாறுபடுகிறது. ஆண்களின் உருவ அமைப்பு சிறிதாகவும், பெண்களின் உருவ அமைப்பு பெரிதாகவும் இருக்கிறது. மேலும், இனச்சேர்க்கைக்குப் பின்னர் ஆண் பாம்புகளை பெண் பாம்புகள் விழுங்கி விடுவது பல சந்தர்ப்பங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனகோண்டா இனங்களில், பெண் பாம்புகள் ஆண் பாம்புகளை விட ஐந்து மடங்கு பெரிதாக உள்ளன. அதனால் பெண் பாம்புகள் எளிதில் ஆண் பாம்புகளை விழுங்க முடிகிறது.
பல்லிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் பொதுவாக பெண்களை விட ஆண்களின் உருவம் பெரிதாக இருக்கும் நிலையில், பாம்புகளில் இது போல் மாறுபட்ட உருவ அமைப்பு காணப்படுவது ஆச்சரிமளிக்கும் விதத்தில் உள்ளது.
இனச்சேர்க்கையின் போது, ஆண் பாம்பு தனது வாலால் பெண் துணையைத் தள்ளி பெண்ணின் பிறப்புறுப்பை அடைகிறது. எனவே, பாம்புகளைப் பொறுத்தளவில் உருவ பெண்களின் உருவத்தை விட ஆண்களின் உருவம் பெரிதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
பெண்ணால் வெளிப்படுத்தப்படும் இனச்சேர்க்கைக்கான ஆர்வம்

பட மூலாதாரம், Getty Images
ஒரு பெண் பாம்பின் பெரிய உருவ அமைப்பு, அதிக முட்டைகளை இட்டு குஞ்சுகளைப் பெற்றெடுக்கும் நன்மையைத் தருகிறது. இதனால் பொதுவாகவே சிறிய உருவ அமைப்பைக் கொண்டுள்ள ஆண் பாம்புகள் இனச்சேர்க்கையின் போது பெரிய உருவ அமைப்பைக் கொண்டுள்ள பெண் பாம்புகளை நாடுகின்றன.
ஆனால் பாம்புகளால் நன்றாகப் பார்க்க முடியாத நேரத்தில், அவை எப்படி பெரிய பெண்களை இனச்சேர்க்கைக்குக் கண்டுபிடிக்கின்றன?
பாம்பு இனங்களில், இனச்சேர்க்கைக்கான ஆசை முதலில் பெண்களால் வெளிப்படுத்தப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு பெண் பாம்பு குளிர் அல்லது வெப்பமான காலநிலையில் உறக்கநிலையிலிருந்து வெளியே வரும்போது, அது தன் தோலை உதிர்க்கிறது.
இந்த காலகட்டத்தில், பெண் ஃபெரோமோன் என்ற ஹார்மோனையும் வெளியிடுகிறது.
அதன் வாசனையால் ஆண் பாம்புகள் ஈர்க்கப்படுகின்றன. அதே ஹார்மோனின் உதவியுடன், ஆண் பாம்புகள் பெண்ணின் உருவ அளவைப் பற்றியும் அறிந்து கொள்கிறது.
ஆண் பாம்புகள் இளம் பெண்களை ஈர்க்க முயற்சிப்பதில்லை. இது அரிதாகவே நடக்கும். ஒரு பெரிய பெண் பாம்பு அருகில் இருந்தால், ஆண் பாம்பு விரைவாக அதை நோக்கியே நகர்கிறது.
பாம்புகளைப் பற்றிய பொதுவான தவறான கருத்து என்னவென்றால், ஆண் பாம்புகள் பல பெண்களுடன் இணைகின்றன என நம்பப்பட்டு வரும் நிலையில், புதிய ஆராய்ச்சி எதிர்மாறான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஒற்றைப் பெண்ணிடம் மட்டுமே உறவு கொள்ளும் ஆண் அனகோண்டாக்கள்
அனகோண்டா இனங்களில், பெண் பாம்புகள் ஆண்களை விட ஐந்து மடங்கு உருவத்தில் பெரிதாக இருக்கின்றன. இதனால் ஆண் பாம்புகளை பெண் பாம்புகள் எளிதில் விழுங்கி விடுகின்றன.
பிரிட்டனில் உள்ள வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஓஷியா, மலேசியாவில் காணப்படும் தங்க மரப் பாம்பு சற்று வித்தியாசமாக நடந்து கொள்வதைக் கண்டறிந்தார்.
இந்த பாம்புகளில், பல ஆண்கள் ஒரு பெண்ணை கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
கொல்லி-வயிறு பாம்பு இனத்தில், ஆண் பாம்பு ஒரு குழுவை உருவாக்கி பெண்ணை ஈர்க்க முயற்சிக்கிறது.
ஒரே இடத்தில் பல கூட்டாளிகளுடன் இனச்சேர்க்கை செய்வதும் சில வகை பாம்பு இனங்களில் காணப்படுகிறது.
உதாரணமாக, அனகோண்டாவில், பெண் பாம்பு சேற்றில் துளையிடுகிறது. ஆண் அனகோண்டாக்கள் அதைச் சுற்றி வரத் தொடங்குகின்றன. அதை நெருங்கி தங்களிடம் ஈர்க்க முயல்கின்றன. இந்த பாம்புகளின் இனச்சேர்க்கை காலம் சில மாதங்கள் நீடிக்கும்.
ஜீசஸ் ரிவாஸ் ஒரு வித்தியாசமான கதையைச் சொன்னார். ஒருமுறை அவருடைய ஆராய்ச்சிக்குழுவினர் ஒரு ஆண் பச்சை அனகோண்டா பாம்பு ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்ததைக் கண்டார்கள். அந்த நேரத்தில் அங்கு மற்ற பெண் அனகோண்டாக்களும் இருந்தன. அவற்றிடம் கூட அந்த அனகோண்டா தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க முடியும். இருப்பினும், அது அந்த குறிப்பிட்ட பெண் மீது ஆர்வமாக இருந்திருக்கலாம். அந்த ஆண் அனகோண்டா, குறிப்பிட்ட அந்த பெண் அனகோண்டாவை உண்மையிலேயே காதலித்திருக்க வேண்டும்.
ஒரு பெண் பாம்பை ஈர்க்க முயன்ற 100 ஆண் பாம்புகள்
கனடாவில் காணப்படும் கார்டர் பாம்புகள் பெண் பாம்புகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டியை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் 100 ஆண் பாம்புகள் இணைந்து ஒரு பெண் பாம்பைத் துரத்துகின்றன.
கனடாவின் மனிடோபா காடுகளில் பாம்புகள் இனச்சேர்க்கையின் போது இதுபோன்ற காட்சி அடிக்கடி காணப்படுகிறது.
இருப்பினும், இந்த வகை பாம்புகள் அமெரிக்காவின் பிற பகுதிகளில் இதைச் செய்வதைக் காண முடிவதில்லை. பாலியல் நடத்தை பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடும் என்பதே இதன் மூலம் நமக்குத் தெரியவருகிறது. உதாரணமாக, நியூ மெக்சிகோவில் காணப்படும் கார்டர் பாம்புகள் கனடாவில் உள்ள கார்டர் பாம்புகளைப் போல நடந்து கொள்வதில்லை.
பாம்புகளின் இந்த 'ஸ்வயம்வரத்தில்' பொதுவாக பெண் தான் தன் துணையை தேர்ந்தெடுக்கிறது. இனச்சேர்க்கை செயல்முறை முழுவதிலும் பெண் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறது. துணையைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து அனைத்தும் இனச்சேர்க்கை காலத்தில் பெண் பாம்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
திருப்தி இல்லை என்றால் மற்றொரு கூட்டாளரைத் தேர்ந்தெடுக்கும் பாம்பு
உடலுறவின் போது ஆண் பாம்பின் செயல்பாட்டில் திருப்தி அடையவில்லை என்றால், பெண் பாம்பு உடனடியாக அந்த ஆண் பாம்பை ஒதுக்கிவிட்டு வேறு துணையைத் தேடுகிறது.
ஒரு பெண் தனக்கு எந்த ஆண் பொருத்தமானவர் என்பதை எப்படி தீர்மானிப்பது? இதுதான் கேள்வி நமக்கு இப்போது எழும் ஒரு கேள்வி.
இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் தெளிவான பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. இது ஆண் பாம்பின் திறன் மற்றும் காம உணர்வுகளின் அளவைப் பொறுத்து இருக்கலாம். அல்லது பெண் பாம்பு ஆணுடன் இணையும் போது அதன் வலிமையை யூகிக்க முடியும்.
ஒரு பெண் அதே ஆண் பாம்புடன் இரண்டாவது முறையாக இணைவது அவசியமில்லை. பெண் பாம்புகள் வெவ்வேறு ஆண்களுடன் இனச்சேர்க்கை செய்வதைக் வழக்கமாகக் காணமுடிகிறது.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், மிகவும் நம்பிக்கைக்குரிய ஆண் பாம்பு இருக்கும் போது அதனுடன் இணையவே பெண் பாம்பு மிகவும் ஆர்வம் காட்டுகிறது. அந்த ஆண் பாம்பு, பெண் தூங்கும் போது கூட அதைச் சுற்றி சுற்றிக்கொண்டே இருக்கும்.
ஒரு பெண் பாம்பு ஏன் ஒரே நேரத்தில் பல ஆண்களை தேர்வு செய்கிறது?
ஒருவேளை பெண்ணுக்கு உடலுறவில் அதிக விருப்பம் இருக்கலாம் அல்லது பல ஆண்களுடன் இனச்சேர்க்கைக்குப் பிறகு தான் குட்டிகளை பெற்றெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என அது நம்பலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உடலுறவின் நோக்கம் அடுத்த தலைமுறையைப் பெற்றெடுப்பதாகும்.
ஆண் பாம்பின் விந்தணுவை சில நாட்களுக்குத் தன் உடலில் சேமித்து வைக்கும் திறன் பெண் பாம்புகளுக்கு உண்டு. ஒருவேளை அதனால்தான் அது பல ஆண் பாம்புகளுடன் இணைந்து ஆவற்றின் விந்தணுவைப் பாதுகாத்து ஆரோக்கியமான குட்டிகளைப் பெற்றெடுக்கவும் முயற்சிக்க வாய்ப்புள்ளது.
பெண் பாம்புகள் உடலுறவுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட வகை ஃபெரோமோன் ஹார்மோனை அடிக்கடி வெளியிடுகின்றன. இனி இனச்சேர்க்கை இருக்காது என்பதை ஆண் பாம்புக்கு உணர்த்தும் ஒரு செய்தியாகவே பெண் பாம்பு இப்படிச் செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
விஞ்ஞானிகள் இதை 'இனச்சேர்க்கை முடிவு' என்று அழைக்கிறார்கள். அதாவது, பெண் பாம்பு தனது பிறப்புறுப்பைச் சுருக்கிக் கொள்கிறது. அதன் பின் ஆண் பாம்பு விரும்பினாலும், இனச்சேர்க்கை செய்து குட்டிகளைப் பெற்றெடுக்க முடியாது. ஏனெனில் அதன் விந்தணு பெண் பிறப்புறுப்புக்குள் நுழைய முடியாது.
ஆனால் இந்த இனச்சேர்க்கை முடிவு எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை. பெண் பாம்பு பிறப்புறுப்பை சுருக்கிவைத்தாலும், அதை மீறி தனது விந்தணுக்களை பெண் பாம்பின் கருப்பைக்குள் அனுப்ப ஆண்க பாம்புகளுக்கு முடிகிறது. அதாவது ஆணும் தன் இனத்தை பெருக்க அதீத ஆர்வம் காட்டுகிறது.
அனகோண்டாக்களைப் பொறுத்தளவில் பெண் அனகோண்டா இனச்சேர்க்கைக்குப் பிறகு ஆணை விழுங்குவதால், ஆண் பாம்புகள் இனச்சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக தப்பிக்க முயற்சிக்கின்றன.
இனச்சேர்க்கை முடிந்தவுடன் ஆணை விழுங்கும் பெண்
பெண் அனகோண்டா இனச்சேர்க்கைக்குப் பிறகு ஆண் எனகோண்டாவை எப்போது சாப்பிடுகிறது என்பது சரியாகத் தெரியவில்லை. மேலும், இது ஒவ்வொரு முறையும் நடக்கும் என்றும் கருதமுடியாது.
ஆனால் ஆண் இந்த முயற்சியின் போது ஆண் பாம்பு இறந்துவிட்டால் பெண்ணுக்கு சத்தான உணவு கிடைத்திருக்கலாம். ஏனெனில் ஒரு பெண் அனகோண்டா கர்ப்பம் தரித்த ஏழு மாதங்கள் வரை எதையும் சாப்பிடுவதில்லை. தண்ணீர் கூட குடிப்பதில்லை.
பாம்புகள் மற்றும் சிலந்திகளின் பாலியல் முறைகள் ஒன்றுக்கு ஒன்று ஒத்தவையாக இருக்கின்றன. சிலந்திகளில் ஆண்கள் பெரிய உருவத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. பெண்களை ஈர்ப்பதில் ஆண்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இனச்சேர்க்கையின் போது பெண் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் சிலந்தி ஆண் சிலந்தியை சாப்பிட்டுவிடுகிறது.
உண்மையில், சிலந்திகளும் பாம்புகளும் ஒத்த இனங்கள் போலவே இல்லை. பூமியில் உயிர் வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியின் போது மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த இரு இனங்களும் வேறுபட்டிருந்தன. இருப்பினும் அவர்களின் பாலுறவு முறைகள் ஏன் ஒரே மாதிரியாக இருக்கின்றன?
இந்தக் கேள்விக்கு விடை தேடும் முயற்சி நடந்து வருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, செக்ஸ் என்பது உலகில் மிகவும் சிக்கலான விஷயம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












