அரிய குறைபாடு: வலது பக்கம் இருந்த பெண்ணின் இதயம் - இந்திய மருத்துவர்கள் சரிசெய்தது எப்படி?

அறுவை சிகிச்சைக்குப் பின் வங்கதேசத்தைச் சேர்ந்த மோனாராணி தாஸ்

பட மூலாதாரம், MANIPAL HOSPITAL BROADWAY

படக்குறிப்பு, மோனாராணி தாஸ் டெக்ஸ்ட்ரோகார்டியா எனும் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்
    • எழுதியவர், அமிதாப் பட்டாசாலி & அஹ்மென் கவாஜா
    • பதவி, பிபிசி பங்களா & பிபிசி உலக சேவை

வங்கதேசத்தைச் சேர்ந்த மோனாராணி தாஸ் என்ற பெண்ணுக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மார்பின் வலது பக்கத்தில் வலி வரத் தொடங்கியபோது, அவருக்கு அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

ஆனால் 52 வயதான அவருக்கு வலியின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு அரிய மற்றும் அசாதாரண பிரச்னை கண்டறியப்பட்டு, அது அவரது நாட்டிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வரை அழைத்து செல்லும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பிபிசி பங்களா உடனான சமீபத்திய நேர்காணலில், மோனாராணி தனது உடல் அறிகுறிகள் எவ்வாறு தொடங்கியது என்பதை நினைவு கூர்ந்தார்.

வாட்ஸ் ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"என் மார்பின் வலது பக்கத்தில் வலி தொடங்கியது. சில நாட்களுக்குப் பிறகு, எனக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது." என்று விவரித்தார்.

அதன் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போதுதான், அவரது இதயத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

"என் இதயம் மார்பின் வலது பக்கத்தில் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்" என்கிறார் மோனாராணி தாஸ்.

அவரது சொந்த ஊர் வங்கதேசத்தின் தென்மேற்கு நகரமான சத்கிரா ஆகும். அங்கு உள்ள மருத்துவர்கள், அவருக்கு `டெக்ஸ்ட்ரோகார்டியா’ (dextrocardia) எனப்படும் பிறவியிலேயே இதயக் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தனர், இந்த நிலையில், இதயம் இடது பக்கத்திற்குப் பதிலாக மார்பின் வலது பக்கத்தை நோக்கி இருக்கும்.

டெக்ஸ்ட்ரோகார்டியா பிரச்னை மட்டுமின்றி, மோனாராணி தாஸுக்கு "சிட்டஸ் இன்வெர்சஸ்" (situs inversus) என்னும் அரிய குறைபாடும் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வகை பாதிப்பில், முக்கிய உறுப்புகள் இயல்பான இடத்தில் இருந்து மாறி தலைகீழாக அமைந்திருக்கும்.

அவரது கல்லீரல், நுரையீரல், மண்ணீரல் மற்றும் வயிறு ஆகியவை அவற்றின் வழக்கமான வலது-இடது அமைப்பிலிருந்து மாறுபட்டு எதிர் பக்கத்தில் அமைந்திருக்கும். அவரது உடல் உறுப்புகள் வழக்கமான மனித உடற்கூறியல் அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

ஆய்வுகளின்படி, ஒவ்வொரு 12,000 கர்ப்பங்களில், ஒரு கர்ப்பத்திற்கு டெக்ஸ்ட்ரோகார்டியா பாதிப்பு ஏற்படலாம்.

டெக்ஸ்ட்ரோகார்டியா

மோனாராணி தாஸ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கண்டு, அவரது குடும்பத்தினர் இந்தியாவில் கொல்கத்தாவில் உள்ள இருதய நோய் நிபுணரிடம் மருத்துவ ஆலோசனை பெற முடிவு செய்தனர்.

பல வங்கதேச குடிமக்கள் இந்தியாவில் மருத்துவ வசதிகள் சிறப்பாக இருப்பதாக நம்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். அதனால் தாஸ் குடும்பம் மோனாராணி தாஸை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தது.

கொல்கத்தாவில் உள்ள மணிபால் மருத்துவமனை பிராட்வேயின் டாக்டர் சித்தார்த் முகர்ஜியை அவர்கள் சந்தித்தனர். மருத்துவர் சித்தார்த் 2024 ஆம் ஆண்டு மே மாதம் மோனாராணி தாஸூக்கு அறுவை சிகிச்சை செய்தார்.

"டெக்ஸ்ட்ரோகார்டியா குறைபாட்டுடன் வரும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம், ஏனெனில் நாங்கள் பொதுவாக வலது கை பழக்கமுடையவர்களாக இருப்போம் மற்றும் நோயாளியின் வலது பக்கத்தில் நின்று தான் அறுவை சிகிச்சை செய்வது வழக்கம்.”

"டெக்ஸ்ட்ரோகார்டியா பாதிப்பு உள்ள நோயாளியின் இடது பக்கத்தில் நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, இது சற்று புதியது, ஆனால் எங்கள் முழு குழுவும் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டனர்" என்கிறார் சித்தார்த் முகர்ஜி.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, மோனாராணி தாஸ் இப்போது வங்கதேசத்துக்கு திரும்பிச் சென்றுவிட்டார், ஆனால் பரிசோதனைக்காக விரைவில் இந்தியா திரும்புவார்.

இடம் மாறிய இதயம்

மற்றொரு அசாதாரண மருத்துவ பாதிப்பும் சமீபத்தில் இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

ஒரு இந்தியருக்கு இதயம் வழக்கமான இடதுபுறத்தை நோக்கி அமைந்திருந்தாலும், நீண்ட கால இருமல் பிரச்னை காரணமாக காலப்போக்கில் நகர்ந்தது

மேற்கு வங்க மாநிலத்தில் வசிக்கும் 66 வயதான ரெசா-உல் கரீம், சிறு வயதில் இருந்தே சுவாசிப்பதில் சிரமப்பட்டார்.

“நான் சிறுவயதில் இருந்தே விளையாட்டில் கவனம் செலுத்துவேன். அப்படி விளையாடுகையில் சில சமயங்களில் மூச்சு விடுவது கடினமாக இருந்தது மற்றும் இருமல் அதிகமாக இருந்தது", என்று கரீம் பிபிசி பங்களாவிடம் கூறினார்.

"பின்னர், நான் சுமார் 25 ஆண்டுகள் அரசியலில் இருந்தேன், அதனால், நான் ஓய்வில்லாமல் வேலைக்காக என்றே ஓடிக்கொண்டே இருந்தேன். உள்ளூர் மருத்துவரைப் பார்த்து, அவர் கொடுத்த மருந்தைத் தவறாமல் சாப்பிட்டு வந்தேன்" என்றார்

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் பலவீனமாக உணர தொடங்கியதாக கரீம் கூறுகிறார்.

மருத்துவமனையில் காத்திருக்கும் ரெசா-உல் கரீம்

பட மூலாதாரம், MEDICA SUPERSPECIALITY HOSPITAL

படக்குறிப்பு, குழந்தை பருவத்தில் காசநோய்க்குப் பிறகு ரெசா-உல் கரீமின் இதயம் வலது பக்கமாக மாறியதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்

அதன்பிறகு கரீமின் மகள் அவரை கொல்கத்தாவிற்கு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற அழைத்துச் சென்றார்.

"எனக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது, தொழுகையின் போது மண்டியிட்டு எழுந்து நிற்க சிரமப்பட்டேன். நான் பிரார்த்தனை செய்யும் போது சில சமயம் மயக்கமடைந்தேன்." என்று கரீம் கூறினார்.

சிறு வயதில் அவருக்கு காசநோய் ஏற்பட்ட பிறகு அவரது இதயம் இடது புறத்தில் இருந்து வலது பக்கமாக நகர்ந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அவரது இதயம் சரியாகச் செயல்பட உதவுவதற்கும், மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை அளிக்கவும் அவருக்கு பேஸ்மேக்கர் (pacemaker) தேவை என்று அவர்கள் முடிவு செய்தனர்.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கரீம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் தகவல் எதுவும் வழங்கப்படாமல், "உடனடி அறுவை சிகிச்சை" அவசியம் என்று கூறப்பட்டது.

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேஸ்மேக்கர்கள் வழக்கமாக இடதுபுறம் இதயம் உள்ள நோயாளிகளிடையே மட்டும் செய்யப்படுவதால், கரீமுக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை அரிதானது என மருத்துவர்கள் தெரிவித்தனர்

மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு பேஸ்மேக்கர் வைக்கப்பட்டதும், இந்த அறுவை சிகிச்சை எவ்வளவு அரிதானது என்று அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதய துடிப்பை ஒழுங்குபடுத்த வைக்கப்படும் ஒரு சிறிய மின்னணு சாதனம்தான் பேஸ்மேக்கர். இது இதய துடிப்பு மிகவும் மெதுவாக இல்லாமல் சீராக துடிப்பதை உறுதி செய்கிறது.

பேஸ்மேக்கர் வழக்கமாக இடது பக்கம் அமைந்திருக்கும் இதயங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டதால், கரீமின் அறுவை சிகிச்சை அசாதாரணமானது மற்றும் கடினமானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்காக மருத்துவர்கள் புதிய சிகிச்சை முறையை பயன்படுத்தினர்.

கரீமும் தனது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நன்றாக இருக்கிறார், விரைவில் அவரின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அவருக்கு இனி மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படாது. நிம்மதியாக தொழுகை செய்ய முடியும் என்று அவரது மருத்துவர் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)