சென்னை தினம்: அட்டைப்பூச்சி, காந்தம் மூலம் சிகிச்சை அளித்த எழும்பூர் கண் மருத்துவமனையின் வரலாறு

- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையின் பரபரப்பான மையப்பகுதியில் அமைந்துள்ள எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை ஒரு மருத்துவ நிறுவனம் மட்டுமல்ல, இந்தியாவின் கண் மருத்துவ வரலாற்றின் வாழும் வரலாறு.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது 1819இல் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை இரண்டு நூற்றாண்டுகளின் மருத்துவ முன்னேற்றங்கள், காலனித்துவ தாக்கங்கள் மற்றும் பார்வை காக்கும் கண்டுபிடிப்புகளின் இடைவிடாத முயற்சியின் சான்றாக நிற்கிறது.
உலகின் முதல் கண் மருத்துவமனையான லண்டனின் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையை மாதிரியாகக் கொண்டு, அதன் அடித்தளங்களை அமைத்த மருத்துவர் ஆர். ரிச்சர்ட்சன் போன்ற முன்னோடி அறுவை சிகிச்சை நிபுணர்களின் பாரம்பரியத்தை இது கொண்டுள்ளது.
கண்களில் இருந்து இரும்புத் துகள்களைப் பிரித்தெடுக்க ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட காந்தங்கள் முதல் இப்போது கைவிடப்பட்ட அட்டைப்பூச்சி சிகிச்சை வரை, இந்த மருத்துவமனையின் வரலாறு பல சுவாரஸ்ய தகவல்களைக் கொண்டுள்ளது. இந்த வரலாற்றின் சுருக்கத்தை, ஒரு புகைப்பட பயணத்தின் மூலம் காணலாம்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை, 200 ஆண்டுக்கால கண் மருத்துவ வரலாற்றின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்தபோது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கண் பாதிப்புகள் அதிகரித்து வருவதை ஆங்கிலேயர்கள் கவனித்தனர்.
ஆகையால் லண்டன் கண் மருத்துவமனை போலவே இந்தியாவிலும் தொடங்க வேண்டும் என்று நினைத்து, கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், RIO-GOH
இந்தியா கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது 1819ஆம் ஆண்டு டாக்டர் ஆர் ரிச்சர்ட்சனால் மெட்ராஸ் கண் மருத்துவமனை (Madras Eye Infirmary) தொடங்கப்பட்டது.
ஈ. ட்ரெச்சர் கோலின்ஸ் (E. Treacher Collins) எழுதிய “மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் வரலாறு மற்றும் பாரம்பரியம் (The History and Traditions of Moorfields Eye Hospital)” என்ற நூலின் முதல் பாகம் பக்கம் 37இல், “கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவராக இருந்தார் ட்ரவர்ஸ்.
கடந்த 1819இல் அதன் மரியாதைக்குரிய இயக்குநர்கள், தாங்கள் ஆண்டு வந்த பெரிய, மக்கள்தொகை அதிகம் கொண்ட மாவட்டங்களில் கண் நோய்களின் பரவல் அதிகம் இருப்பதைக் கவனித்து ட்ரவர்ஸிடம் ஆலோசனை கேட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “லண்டன் கண் மருத்துவமனையின் அபாரமான பலன்களைக் குறிப்பிட்டு அதேபோன்று இந்தியாவில் ஆரம்பிக்கலாம் என்று கூறினார் ட்ரவர்ஸ். அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவரும் ட்ரவர்ஸிடம் கண் மருத்துவம் பயின்றவருமான மருத்துவர் ஆர்.ரிச்சர்ட்சன் மெட்ராஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் மெட்ராஸ் கண் மருத்துவமனையை (Madras Eye Infirmary) நிறுவினார். ஒவ்வோர் ஆண்டும் அதிகமான நோயாளிகள் அந்த மருத்துவமனையை நாடினர். அந்த மருத்துவமனை பலமுறை விரிவாக்கம் செய்யப்பட்டது. அது 1888இல் அரசு கண் மருத்துவமனையாக (Government Ophthalmic Hospital) மாறியது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், RIO-GOH
மருத்துவர் ஆர்.ரிச்சர்ட்சன் மருத்துவமனையின் நிறுவனர் ஆவார். மருத்துவமனை தொடங்கியது முதல் 1824ஆம் ஆண்டு வரை அதன் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.
டாக்டர் ரிச்சர்ட்சன் சென்னைக்கு அனுப்பப்பட்டது போல, 1824ஆம் ஆண்டில் ஜெஃபர்சன் மும்பைக்கும், சி.ஜே.எகர்டன் கொல்கத்தாவுக்கும் கண் மருத்துவமனைகள் தொடங்க அனுப்பப்பட்டனர்.

நீங்கள் மேலே பார்ப்பது 1780களில் பிறந்த மனிதரின் படம். இந்தப் படம் 1829ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரையப்பட்டது. அப்போது அவருக்கு 44 வயது.
உடலில் அளவுக்கு அதிகமான ஐயோடின் காரணமாக, ‘ஒடிமா லிட்ஸ்’ எனப்படும் கண் இரப்பைகள் வீங்கி, மெட்ராஸ் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இவரது பெயர் ஹால்.
இன்று எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் பூட்டப்பட்டு கிடக்கும் 100 ஆண்டு பழமையான ‘எலியட்ஸ் அருங்காட்சியகம்’ இதுபோன்ற பலரது கதைகளை கொண்டுள்ளது.


மருத்துவமனை ஆரம்பித்து 100 ஆண்டுகள் கழித்து, 1919ஆம் ஆண்டில் மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்த கர்னல் எச்.கிர்க்பாட்ரிக், அருங்காட்சியகத்துக்காக அடிக்கல் நாட்டினார்.
வெவ்வேறு காலகட்டங்களில் என்னென்ன கண் பாதிப்புகள் ஏற்பட்டன, அவற்றுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பது எலியட்ஸ் அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பக்கால கண் மருத்துவ சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 1904-1913ஆம் ஆண்டுவரை மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்த கர்னல் ஆர்.எச்.எலியட்டின் பணிகளை நினைவுகூறும் வகையில் அவரது பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்புக்கான நிதி இல்லாததால் இன்று இந்த அருங்காட்சியகம் பூட்டப்பட்டுள்ளது.

கண்களில் இரும்புத் துண்டுகள், துகள்கள் சிக்கிக்கொண்டால் அவற்றை காந்தத்தைக் கொண்டு வெளியே எடுக்கும் முறை இந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
“கண் அறுவை சிகிச்சைகள் வளர்ச்சி பெறாத காலத்தில், இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது. நோயாளிகள் மயக்க மருந்து கொடுத்து படுக்க வைக்கப்படுவர். கண்களிலிருந்து இரும்புத் துகள்கள் வெளியே வருவதற்காக கண்களில் சிறு கீரல் செய்யப்படும்.
பெரிய இரும்புத் தாங்கியில் முக்கோண வடிவிலான கனமான காந்தம் பொருத்தப்பட்டிருக்கும். அந்த காந்தம் நோயாளியின் கண்களுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு, உள்ளே இருக்கும் இரும்புத் துகள்கள் வெளியே இழுக்கப்படும்.
கண்களின் பின்பகுதியில் இரும்புத் துகள்கள் இருந்தால் அவற்றை எடுக்க முடியாது. இந்த சிகிச்சை முறை நான் மாணவியாக இருந்த 90கள் வரை நடைமுறையில் இருந்தது” என்கிறார், எழும்பூர் கண் மருத்துவக் கல்லூரியில் பயின்று, தற்போது அந்த மருத்துவமனையின் இயக்குநராக இருக்கும் தங்கராணி ராஜசேகரன்.

அதேபோல அட்டைப்பூச்சி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், கூறப்படுகிறது.
“கண்களுக்குப் பக்கத்தில் அட்டைப்பூச்சிகள் ஒட்டப்படும், அவை அந்தப் பகுதியில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதன் மூலம் கண்களில் உள்ள அழுத்தம் குறையும். இந்த சிகிச்சைக்காகவே அட்டைப்பூச்சிகள் சிறிய குளம் அமைக்கப்பட்டு, அதில் வளர்க்கப்பட்டன. லேடி லாலி வார்டுக்கு முன்பாக அந்தக் குளம் இருந்தது” என்றும் இயக்குநர் தங்கராணி ராஜசேகரன் கூறுகிறார்.

கடந்த 1919ஆம் ஆண்டு, ரூ.93,120 செலவில் ‘கண் மருத்துவப் பள்ளி’ கட்டி முடிக்கப்பட்டது. ‘எலியட்ஸ் கண் மருத்துவப் பள்ளி’ என்று பெயரிடப்பட்டு 1920ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி திறக்கப்பட்டது என்று மருத்துவமனையின் 200வது ஆண்டு விழாவை ஒட்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட “RIO-GOH BICENTENARY 1819-2019” என்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் மேற்படிப்பு படிக்கும் இடமாக விளங்கியுள்ளது. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலக வரைபடம், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பட்ட மேற்படிப்பைப் பயின்றதாகக் காட்டுகிறது.


வெவ்வேறு நோய் பாதிப்புகளின்போது, கண்களின் திசுக்கள், ரத்த நாளங்கள் எப்படி இருக்கும் என்பதை பீங்கானில் ( porcelain) செய்த கண் மாதிரிகள், விளக்குகின்றன.
“இந்த கண் மாதிரிகளை நுண்ணோக்கியில் (microscope) வைத்துப் பார்த்தபோது, உண்மையாகப் பாதிக்கப்பட்ட கண்கள் எப்படித் தெரியுமோ, அதே மாதிரி தெரிந்தன. ரத்த நாளங்கள், கண் திசுக்களின் நிறம் ஆகியவை மிகவும் தத்ரூபமாக உள்ளன. இதைப் பார்த்தபோது எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது” என்றார் அருங்காட்சியக மறுசீரமைக்கும் குழுவில் பணியாற்றிய உதவிப் பேராசிரியர் மருத்துவர் கீதா பெரியசாமி.


ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. நோயாளிகளின் வார்டுகள், மருத்துவர்கள் தங்கும் அறைகள் இங்கு உள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, கண் அறுவை சிகிச்சைகளும் இங்கு நடைபெற்று வந்தன. தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

மெட்ராஸ் மாகாணமாக இருக்கும்போது, அது ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. நோயாளிகள் தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளைப் பேசுவார்கள் என்பதால், கண் பார்வை பரிசோதிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் எழுத்துகள் தமிழ் மட்டுமல்லாமல் தெங்கிலும் வைக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்துப் பலகைகள் அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக மருத்துவர்கள் கைகளால் எழுதப்பட்ட, நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகள் கண்ணாடிப் பேழைகளுக்குள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
“அனைத்து வெப்பமண்டல நோய்கள் குறித்து, நிபுணத்துவம் மிக்க கண்காணிப்பாளர்களால் எழுதப்பட்ட மருத்துவக் குறிப்புகள், படங்கள், விளக்கப்படங்கள் விலைமதிக்க முடியாத சேமிப்பாகும்” என்று மருத்துவமனையின் 200வது ஆண்டுவிழா ஆவணம் கூறுகிறது.
இந்த மருத்துவமனையின் முதல் இந்திய கண்காணிப்பாளர் திவான் பஹதுர் மருத்துவர் கே.கோமன் நாயர் ஆவார். அவர் 1940ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கண்காளிப்பாளராகப் பணியாற்றினார்.
கடந்த 1948ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கண் வங்கி இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இன்று 470 படுக்கைகள் கொண்ட எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 1000 பேர் வரை தினமும் சிகிச்சைக்காகப் புறநோயாளிகளாக வருகின்றனர். பெரிய, சிறிய என நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












