பிரிட்டிஷ் ஆட்சியை உலுக்கிய மிகப்பெரிய ரயில் கொள்ளை - சந்திரசேகர் ஆசாத் தப்பியது எப்படி?

பட மூலாதாரம், Indian Railways
- எழுதியவர், ரெஹான் பைசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
1925 ஆம் ஆண்டு.. சுதந்திரத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களின் நிதி நிலைமை மோசமடைந்தது. அவர்கள் மீதம் இருந்த ஒவ்வொரு பைசாவையும் சார்ந்து இருந்தார்கள்.
யாரிடமும் சரியான உடைகள் கூட இல்லை. அவர்களுக்கு நிறைய கடன் இருந்தது.
மக்களிடம் பணம் பறிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
கொள்ளையடிக்க வேண்டும் என்றால், அரசின் கஜானாவை ஏன் கொள்ளையடிக்கக் கூடாது என்று அவர்களுக்கு தோன்றியது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இருக்கும் ரயில் பெட்டியில் (கார்டு பெட்டி) வைக்கப்பட்டிருந்த ஒரு இரும்புப் பெட்டியில் வரிப்பணம் இருந்ததைக் கவனித்ததாக ராம் பிரசாத் பிஸ்மில் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
“ஒரு நாள் லக்னெள ரயில் நிலையத்தில், கார்டு பெட்டியிலிருந்து ஒரு இரும்புப் பெட்டியை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் சங்கிலியோ பூட்டுகளோ இல்லை. எனவே அதை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் முடிவு செய்தேன்” என்று அவர் எழுதியிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Sri Ganesh Prakashan
தோல்வியில் முடிந்த முதல் முயற்சி
பிஸ்மில் ராஜேந்திர லஹிரி, ரோஷன் சிங், சசீந்திர பக்ஷி, அஷ்பகுல்லா கான், முகுந்தி லால், மன்மதநாத் குப்தா, முராரி சர்மா, பன்வாரி லால் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகிய ஒன்பது புரட்சியாளர்களை அவர் தேர்ந்தெடுத்தார்.
அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிக்க, பிஸ்மில் லக்னெளவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஜஹான்பூர் ரயில் பாதையில் ஒரு சிறிய நிலையமாக இருந்த காகோரியைத் தேர்ந்தெடுத்தார்.
அனைவரும் முதலில் அந்த இடத்தை பார்ப்பதற்காக காகோரி சென்றடைந்தனர்.
ஆனால், ஆகஸ்ட் 8, 1925 இல், அவர்கள் ரயில் கொள்ளை முயற்சியில் தோல்வியுள்ளனர்
இதுகுறித்து ராம் பிரசாத் பிஸ்மில், “நாங்கள் லக்னெளவில் உள்ள செதிலால் தரம்சாலாவின் வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்தோம். முன்கூட்டியே திட்டமிட்ட நேரத்தில் லக்னெள ரயில் நிலையத்தை ஒவ்வொருவராக அடைய ஆரம்பித்தோம். நாங்கள் பிளாட்பாரத்தில் நுழைந்தவுடன் பிளாட்பாரத்தை விட்டு ஒரு ரயில் புறப்பட்டுச் செல்வதைக் கண்டோம். இது எந்த ரயில் என்று கேட்டோம். இது நாங்கள் ஏறவிருந்த 8 டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் என்று தெரிந்தது. நாங்கள் அனைவரும் 10 நிமிடம் தாமதமாக நிலையத்தை அடைந்தோம். நாங்கள் ஏமாற்றத்துடன் தரம்சாலா திரும்பினோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், indiapost.in
ரயில் சங்கிலியை இழுக்க திட்டம்
மறுநாள் மதியம், அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி, இவர்கள் அனைவரும் மீண்டும் காகோரிக்கு புறப்பட்டனர். அவர்களிடம் இருந்தது.
அஷ்ஃபாக் பிஸ்மிலை சமாதானப்படுத்த முயன்றார், “ராம், மீண்டும் யோசி. இது சரியான நேரம் அல்ல. நாம் திரும்பிச் செல்லலாம்.” என்றார்.
"இப்போது யாரும் பேசக் கூடாது" என்று பிஸ்மில் உரத்த குரலில் திட்டினார். தனது தலைவரை எதுவும் பாதிக்காது என்பதை அஷ்ஃபாக் உணர்ந்த போது, ஒரு ஒழுக்கமான சிப்பாய் போல அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார்.
அனைவரும் ஷாஜஹான்பூரில் இருந்து ரயிலில் ஏறி காகோரிக்கு அருகில் உள்ள முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்திற்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு வாகனத்தின் சங்கிலி இழுக்கப்பட்டு, கார்ட் அறையை அடைந்தது பணம் கைப்பற்றப்படும்.
ராம் பிரசாத் பிஸ்மில் தனது சுயசரிதையில், “எவருக்கும் உடல் ரீதியான தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். முறைகேடாகச் சம்பாதித்த அரசுப் பணத்தை மீட்கவே இங்கு வந்துள்ளோம் என்பதை ரயிலிலேயே அறிவிப்பேன். ஆயுதங்களைப் பயன்படுத்த தெரிந்த நாங்கள் மூவர் மட்டும் கார்டு அறைக்கு அருகில் நின்று யாரும் கேபினை அடையத் துணியக்கூடாது என்பதற்காக இடையிடையே துப்பாக்கிச் சூடு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.''

பட மூலாதாரம், PIB
குறிப்பிட்ட இடத்தில் ரயில் சங்கிலி இழுக்கப்பட வேண்டும்
சில காரணங்களால் சங்கிலியை இழுத்தும் ரயில் நிற்கவில்லை என்றால் என்ன செய்வது என்று சந்திரசேகர் ஆசாத் கேட்டார்.
இந்த சாத்தியத்தை சமாளிக்க, பிஸ்மில் ஒரு தீர்வு கொடுத்தார், “நாங்கள் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ரயிலில் ஏறுவோம். ஒரு முறை சங்கிலியை இழுத்து ரயில் நிற்கவில்லை என்றால், மற்ற குழு அதன் பெட்டியில் உள்ள சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்படுவதை உறுதி செய்யும்.''
ஆகஸ்ட் 9 அன்று, அனைவரும் ஷாஜஹான்பூர் நிலையத்தை அடைந்தனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளிலிருந்து ஸ்டேஷனுக்கு வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் சாதாரண ஆடைகளை அணிந்திருந்தனர், அவர்களது ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர். ரயில் நின்றதும் கீழே இறங்க அதிக நேரம் எடுக்கக் கூடாது என்பதற்காக சங்கிலிக்கு மிக அருகில் இருந்த பெட்டிகளில் இருக்கைகளை பிடித்து அமர்ந்தனர்.
ராம் பிரசாத் பிஸ்மில் தனது சுயசரிதையில், விசில் சத்தம் எழுப்பியவுடன், ரயில் நிலையத்திலிருந்து ரயில் நகர ஆரம்பித்தது என குறிப்பிட்டுள்ளார்.
“நான் கண்களை மூடி காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தேன். ககோரி நிலையத்தின் பெயர் பலகையை பார்த்தவுடனே, என் சுவாசம் வேகமாகி, இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. திடீரென்று பலத்த சத்தம் கேட்டு நாங்கள் முடிவு செய்த அதே இடத்தில் ரயில் நின்றது.''
சங்கிலி சரியாக சரியான இடத்தில் இழுக்கப்பட்டது.
பிஸ்மில் எழுதியிருப்பதாவது, “உடனடியாக என் கைத்துப்பாக்கியை எடுத்து, அமைதியாக இருங்கள் என்று கத்தினேன். பயப்படத் தேவையில்லை. பணத்தை அரசாங்கத்திடம் இருந்து எடுக்க மட்டுமே வந்துள்ளோம். நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தால், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது."

பட மூலாதாரம், Kamal
நகைகள் தொலைந்ததாக கூறி சங்கிலி இழுத்தனர்
ரயில் நிற்கும் முன் இன்னொரு நாடகம் அரங்கேறியது. அஷ்ஃபாக், ராஜேந்திர லஹிரி மற்றும் சசீந்திர பக்ஷி ஆகியோர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.
சசீந்திரநாத் பக்ஷி, ‘எனது புரட்சிகர வாழ்க்கை’ புத்தகத்தில் எழுதியிருப்பதாவது, ‘நான் அமைதியாக அஷ்பாக்கிடம், ‘எனது நகைப் பெட்டி எங்கே?’ என்று கேட்டேன். அஷ்ஃபாக் உடனே பதிலளித்தார், 'ஓ, நாங்கள் அதை ககோரியில் மறந்துவிட்டோம்.'என்றார்
அஷ்ஃபாக் பேசியவுடன், பக்ஷி ரயிலின் சங்கிலியை இழுத்தார். ராஜேந்திர லஹிரியும் மறுபுறம் சங்கிலியை இழுத்தார். மூவரும் வேகமாக இறங்கி ககோரியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சிறிது தூரம் சென்றதும் ரயில் கார்டு தெரிந்தார். சங்கிலியை இழுத்தது யார் என்று கேட்டார்.
பிறகு எங்களை அங்கேயே நிற்கும்படி சைகை காட்டினார்.
பக்ஷி மேலும் எழுதியிருப்பதாவது, “அதற்குள் எங்கள் நண்பர்கள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கி அங்கு வந்துவிட்டார்கள். துப்பாக்கியால் காற்றில் சுட ஆரம்பித்தோம். அப்போது கார்டு, ரயிலை இயக்க பச்சை விளக்கு காட்டுவதை பார்த்தேன். நான் அவர் மார்பில் கைத்துப்பாக்கியை வைத்து அவர் கையிலிருந்து டார்ச்சை பறித்தேன். அவர் கைகளைக் கூப்பி - தயவுசெய்து என் உயிரைக் காப்பாற்றுங்கள் என்றார். நான் அவரைத் தள்ளிவிட்டு தரையில் விழச் செய்தேன்.''

பட மூலாதாரம், Unistarbooks
இரும்பு பெட்டியை உடைத்த அஷ்ஃபாக்
அஷ்ஃபாக் கார்டிடம், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
பிஸ்மில் எழுதியிருப்பதாவது, “எங்கள் சக போராளிகள் அவ்வப்போது வானை நோக்கி தோட்டாக்களை சுடத் தொடங்கினர். பணம் நிரப்பப்பட்ட இரும்பு பெட்டி மிகவும் கனமாக இருந்தது. எங்களால் அதை வைத்து கொண்டு ஓட முடியாது. எனவே அஷ்ஃபாக் அதை சுத்தியலால் உடைக்கத் தொடங்கினார். பல முயற்சிகளுக்குப் பிறகும் அவரால் உடைக்க முடியவில்லை.''
அனைவரும் பதட்டத்துடன் அஷ்ஃபாக்கையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்த ஒரு சம்பவம் அங்கு இருந்த புரட்சியாளர்களின் வாழ்க்கையை மாற்றியது.

பட மூலாதாரம், Photo Division
ரயில் பயணி மீது துப்பாக்கி சூடு
இரண்டு பெட்டிகளுக்கு முன்பு ரயிலில் பயணித்த அகமது அலி, தனது பெட்டியிலிருந்து இறங்கி கார்டு அறையை நோக்கி நகரத் தொடங்கினார். யாராவது இதைச் செய்யத் துணிவார்கள் என்று ரயிலில் இருந்த பயணிகள் எதிர்பார்க்கவில்லை.
உண்மையில், அகமது தனது மனைவி அமர்ந்திருந்த பெண்கள் பெட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். ரயில் நிறுத்தப்பட்டதால், கீழே இறங்கி மனைவியைப் பார்க்க நினைத்தார். ரயிலில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை.
பிஸ்மில் எழுதுகையில், "முழு விஷயத்தையும் புரிந்து கொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை, ஆனால் எனது மற்ற தோழர்களால் விஷயங்களை விரைவாக மதிப்பிட முடியவில்லை. மன்மத் நாத் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார், ஆனால் அவருக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அதிக அனுபவம் இல்லை. அந்த நபர் அருகில் வருவதைக் கண்டவுடன், அவர்கள் அவரை குறிவைத்தனர். நான் எதையும் சொல்ல நினைப்பதற்கு முன், மன்மத் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். அகமது அலி சுடப்பட்டு தரையில் விழுந்தார்.
இதற்கிடையில், அஷ்ஃபாக் பெட்டியை உடைப்பதில் மும்முரமாக இருந்தார், ஆனால் அவரால் முடியவில்லை. இறுதியாக பிஸ்மில் சுத்தியலை எடுத்து பெட்டியின் பூட்டை முழு பலத்துடன் அடித்தார். பூட்டு உடைந்து கீழே விழுந்தது. பணம் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு தாள்களில் கட்டப்பட்டது, ஆனால் அதற்குள் மற்றொரு சிக்கல் எழுந்தது.
தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. இந்த காட்சியை பார்த்ததும் எதிரே வந்த ரயிலின் ஓட்டுனருக்கு சந்தேகம் வந்துவிடுமோ என அனைவரும் பயந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ரயிலில் இருந்த பயணிகளும் தங்கள் இடங்களை விட்டு நகரத் தொடங்கினர்.
அந்த நேரத்தில் எந்த பயணியும் ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடலாம் ஆனால் இப்படி நினைக்க யாருக்கும் துணிவில்லை. இதற்கிடையில், பிஸ்மில் தனது துப்பாக்கியை காற்றில் அசைத்துக்கொண்டே இருந்தார்.
மற்றவர்களை ஆயுதங்களை மறைக்கச் சொன்னார். அவர் அஷ்ஃபாக்கை தனது சுத்தியலை கீழே வீசுமாறு கூறினார். அந்த ரயில் பஞ்சாப் மெயில். நிற்காமல் முன்னே கடந்து சென்றது.
இந்த ஆபரேஷனை செய்து முடிக்க அரை மணி நேரம் கூட ஆகவில்லை.
பிஸ்மில், “ஒரு நிரபராதியின் உயிரிழப்புக்காக அனைவரும் மிகவும் வருந்துவதை நான் உணர்ந்தேன். அவர் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் அவரது தவறு. ஒரு அப்பாவியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக மன்மத் மிகவும் சீற்றமடைந்தார். அவரின் கண்கள் வீங்கி சிவந்து போயிருந்தன. அவர் அழுது கொண்டிருந்தார்.
பிஸ்மில் முன் வந்து மன்மத்தை அணைத்துக் கொண்டார்.

பட மூலாதாரம், Social Media/X
நாடு முழுவதும் பேசப்பட்ட கொள்ளை சம்பவம்
இந்தக் கொள்ளை சம்பவம் இந்தியா முழுமைக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேசத்தில் ரயிலில் வெற்றிகரமாக கொள்ளை நடந்ததாக செய்தி பரவியவுடன், காரணத்தை மக்கள் கேட்க ஆரம்பித்தனர்.
இந்தத் கொள்ளையில் மிகச் சிலரே ஈடுபட்டுள்ளனர் என்பதும், அரசின் கஜானாவைக் கொள்ளையடிப்பது மட்டுமே இதன் நோக்கம் என்பதும் மக்களுக்குத் தெரிந்தவுடன், எங்களின் துணிச்சலால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டனர் என்று பிஸ்மில் எழுதுகிறார். ரயிலில் அரசுப் பணத்தைத் தவிர வேறு எதையும் நாங்கள் கொள்ளையடிக்கவில்லை என்பதும் அவர்களுக்குப் பிடித்திருந்தது.
பிஸ்மில் எழுதியிருப்பதாவது, “இந்தியாவின் பெரும்பாலான செய்தித்தாள்கள் எங்களை நாட்டின் ஹீரோ என்று அழைத்தன. அடுத்த சில வாரங்களில் எங்களுடன் இணைவதில் இளைஞர்களிடையே போட்டி ஏற்பட்டது. இந்த சம்பவத்தை மக்கள் சாதாரண கொள்ளையாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது எடுத்துக் கொள்ளப்பட்டது."

பட மூலாதாரம், Social Media/X
காலையில் நாளிதழ்களில் வந்த கொள்ளைச் செய்தி
அங்கிருந்து புறப்படுவதற்கு முன், அனைவரும் உடமைகள் எதையும் விட்டு செல்லவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். இவ்வளவு உழைத்தும் அந்த இரும்புப் பெட்டியில் இருந்து ஐயாயிரம் ரூபாய்தான் கிடைத்தது.
கோமதி நதிக்கரையில் சில மைல்கள் நடந்து லக்னெள நகருக்குள் நுழைந்தனர்.
மன்மத் குப்தா 'They Lived Dangerously' என்ற புத்தகத்தில், “நாங்கள் லக்னெளவிற்குள் நுழைந்தோம். ஆசாத் பணம் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் பிஸ்மிலிடம் ஒப்படைத்தார். நாம் ஏன் பூங்கா பெஞ்சுகளில் தூங்கக்கூடாது என்று ஆசாத் பரிந்துரைத்தார். இறுதியாக பூங்காவிலேயே ஒரு மரத்தடியில் கண்களை மூட முயற்சித்தோம். விடிந்தவுடன், பறவைகள் சிலிர்க்க ஆரம்பித்தன, நாங்கள் கண் விழித்தோம்.'' என குறிப்பிட்டுள்ளார்
பூங்காவை விட்டு வெளியே வந்தவுடனே, 'ககோரியில் கொள்ளை, ககோரியில் கொள்ளை' என்று செய்தித்தாள் வியாபாரியின் சத்தம் கேட்டது. அவர்கள் ஒருவரையொருவர் கண்களில் பார்த்துக் கொண்டனர். சில மணி நேரத்தில் இந்த செய்தி எங்கும் பரவியது.

பட மூலாதாரம், People's Publishing House
முதல் ஆதாரமாக மாறிய சிறிய தாள்
அவர்கள் அனைவருக்கும் கொள்ளை நடத்திய இடத்தில் எதையும் விட்டுவிட்டு வரவில்லை என்னும் நம்பிக்கை இருந்தது. ஆனால் ரயிலின் அருகே நடக்கும் குழப்பங்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரு தாளை அங்கேயே விட்டுச் சென்றது அவர்களுக்கு தெரியாது. அந்தத் தாளில் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் அடையாளம் இருந்தது.
இங்கிருந்து கொள்ளையில் ஈடுபட்ட சிலருக்கு ஷாஜகான்பூருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உணர்ந்தனர். ஷாஜஹான்பூரில் சலவை செய்பவரைக் போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்தத் தாள் இந்துஸ்தான் குடியரசுக் கட்சியின் (HRA) உறுப்பினருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
ராம் பிரசாத் பிஸ்மில் எழுதியிருப்பதாவது, “துரதிர்ஷ்டவசமாக, ஒரு அமைதியான விஷப் பாம்பு எங்களிடையே வாழ்ந்து வந்துள்ளது. எங்கள் அமைப்பில் நான் கண்மூடித்தனமாக நம்பியவருக்கு அவர் மிக நெருங்கிய நண்பர். ககோரி குழுவின் கைதுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த அமைப்பின் அழிவுக்கும் இந்த நபர்தான் காரணம் என்பதை நான் பின்னர் அறிந்தேன்.''
பிஸ்மில் இந்த நபரின் பெயரை தனது சுயசரிதையில் குறிப்பிடவில்லை, ஆனால் பிராச்சி கார்க் தனது புத்தகமான ‘ககோரி, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை உலுக்கிய ரயில் கொள்ளை’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“பன்வாரி லால் பார்கவா இந்துஸ்தான் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். ககோரி கொள்ளையில் அவரது பங்கு ஆயுதங்களை சப்ளை செய்வதாகும். பின்னர், விசாரணையில், மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காகவும், அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட நிதி உதவிக்கு ஈடாகவும் அவர் அரசாங்க சாட்சியாக ஆனார்.'' என குறிப்பிட்டுள்ளார் பிராச்சி கார்க்

பட மூலாதாரம், Srishti Publishers
சந்திரசேகர் ஆசாத் தவிர அனைவரும் கைது செய்யப்பட்டனர்
ககோரி கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான விளம்பரங்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும், காவல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டன.
ககோரி சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குள், அதில் பங்கு பெற்ற அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன.
இந்த நடவடிக்கையில் 10 பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர், ஆனால் 40 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அஷ்பக், ரோஷன் சிங், ராஜேந்திர லஹிரி, பனாரசி லால் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். சந்திரசேகர் ஆசாத்தை மட்டும் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
ராம் பிரசாத் பிஸ்மில் இறுதியாக கைது செய்யப்பட்டார்.
வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 1927 இல் அறிவிக்கப்பட்டது. அஷ்ஃப்க் உல்லா கான், ராஜேந்திர லஹிரி, ரோஷன் சிங் மற்றும் ராம் பிரசாத் பிஸ்மில் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
இந்த புரட்சியாளர்களுக்கு ஆதரவாக மதன் மோகன் மாளவியா, மோதிலால் நேரு, லாலா லஜபதிராய், ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் களம் இறங்கினர்.
அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு மத்திய சட்டமன்றம் வைஸ்ராயிடம் முறையிட்டது ஆனால் அவர் இந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

பட மூலாதாரம், @bjp4india
தூக்கிலிடப்பட்ட பிஸ்மிலும் அஷ்ஃபக்கும்
டிசம்பர் 19, 1927 அன்று கோரக்பூர் சிறையில் ராம் பிரசாத் பிஸ்மில், ரோஷன் லால் மற்றும் ராஜேந்திர லஹிரி ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அவர் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சுயசரிதையை முடித்தார்.
அதே நாளில் அஷ்ஃபக் பைசாபாத் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
மன்மத்நாத் குப்தாவுக்கு இன்னும் 18 வயது ஆகாததால், அவருக்கு 14 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Ananya Publications
அவர் 1937 இல் விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு அரசுக்கு எதிராக எழுதத் தொடங்கினார்.
அவர் 1939 இல் மீண்டும் கைது செய்யப்பட்டார் மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு வருடம் முன்பு 1946 இல் விடுவிக்கப்பட்டார்.
அந்தமான் செல்லுலார் சிறையிலும் சிறிது காலம் இருந்தார். அக்டோபர் 26, 2000 அன்று அவரின் வாழ்க்கை பயணம் முடிந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












