பெண் சிங்கம்தான் வேட்டையாடும் என்றால் ஆண் சிங்கம் என்ன செய்யும்?

உலக சிங்க தினம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

சிங்கம், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வீரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்படும் ஓர் உயிரினம். ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற ரஜினியின் வசனம்கூட அத்தகைய கம்பீரத் தொனிக்காக வர்ணிக்கப்பட்டதுதான்.

ஆனால், உண்மையில் சிங்கம் சிங்கிளாக வராது, பெரும்பாலும் கூட்டமாகத்தான் வரும் என்கிறார் குஜராத்தின் கிர் காட்டில் உள்ள சிங்கங்களை ஆய்வு செய்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம். அதிலும் ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களே அதிகமாக வேட்டைக்குச் செல்லும் என்றும் கூறுகிறார் அவர்.

இப்படி சிங்கம் குறித்து இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கின்றன. அவை குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடம் விரிவாகப் பேசினோம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் சிங்கங்களை எங்கே பார்க்கலாம்?

சிங்கங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே எங்கெல்லாம் வாழ்கின்றன தெரியுமா? இல்லை, இல்லை. ஆசியாவில் எங்கே வாழ்கிறது தெரியுமா?

ஆம், எங்கெல்லாம் எனப் பண்மையில் கேட்பதைவிட எங்கே என ஒருமையில் கேட்பதே சரியாக இருக்கும். ஏனெனில், சிங்கங்கள் ஆசியாவிலேயே ஒரேயொரு பகுதியில் மட்டும்தான் காட்டில் வாழ்கின்றன.

பல்வேறு நாடுகளில் பூங்கா போன்ற அடைப்பிடங்களில் அவை காணப்பட்டாலும், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள கிர் காடுகளைத் தவிர, ஆசியாவில் வேறு எங்குமே சிங்கம் காட்டில் இல்லை.

சிங்கம் தனித்து வாழுமா? சமூகமாக வாழுமா?

உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

சிங்கம் யானைகளைப் போல் கூட்டமாக வாழும் சமூக உயிரினம்தான் என்கிறார் முனைவர்.ரவி செல்லம்.

ஆனால் அவரது கூற்றுப்படி, சிங்கத்தின் சமூகக் கட்டமைப்புக்கும் யானைகளின் சமூகக் கட்டமைப்புக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.

யானை மந்தையைப் பொறுத்தவரை, ஒரு மந்தையில் இருப்பவை அனைத்துமே பெண் யானைகள்தான். ஆண் யானைகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மந்தையோடு இணைகின்றன. பிற காலகட்டங்களில் ஆண் யானைகள் தனித்தோ அல்லது 'சிங்கிள்’ யானைகள் ஒரு சில இணைந்து கூட்டமாகவோ சுற்றித் திரியும், இருப்பினும் அந்தக் கூட்டம் ஒரு மந்தையாகக் கருதப்படாது.

சிங்கக் கூட்டத்திலும் பெரும்பான்மையாக பெண் சிங்கங்களே இருக்கும். ஆனால், அவற்றின் கூட்டத்திலேயே சில ஆண் சிங்கங்களும் இருக்கும் என்கிறார் முனைவர்.ரவி செல்லம்.

உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?

பட மூலாதாரம், Dr.Ravi Chellam

“ஆண் சிங்கங்கள் ஒரு கூட்டத்தில் இருக்கும். ஆனால், அவற்றின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். ஒரு கூட்டத்தில் இருக்கும் அனைத்து பெண் சிங்கங்களும் ஒன்றோடு ஒன்று ரத்த உறவு கொண்டவையாகவே இருக்கும். ஆனால், ஆண் சிங்கங்கள் அவை இருக்கும் கூட்டத்தின் பெண்களுடன் ரத்த உறவு கொண்டவையாக இருக்காது. இருப்பினும், அந்த ஆண் சிங்கங்கள் சகோதரர்களாக இருக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் அவர்.

அதாவது, ஒரு கூட்டத்தில் பிறக்கும் பெண் சிங்கம், அதே கூட்டத்தில், தாய், பாட்டி, சகோதரி ஆகியோருடன் இணைந்து தொடர்ந்து வாழும். ஆனால் ஆண் சிங்கமாக இருந்தால், “அது இனப்பெருக்க வயதை அடையும்போது கூட்டத்தில் இருந்து விரட்டப்படும். அதற்குப் பிறகு அது வேறொரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்துடன் சண்டையிட்டுத் தனது இருப்பைச் சம்பாதிக்க வேண்டும்.”

“பிறகு அந்தக் கூட்டத்தில் 4-5 ஆண்டுகள் இருந்த பிறகு, வேறு இளம் ஆண் சிங்கம் அதன் இடத்தை நிரப்ப வரும்போது, வயதான சிங்கத்துடன் நடக்கும் மோதலில் வீழ்த்தப்பட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும். சில நேரங்களில் அந்தச் சண்டையில் அவை கொல்லவும் படலாம். ஒருவேளை பிழைத்தால், அதற்குப் பிறகு அந்த ஆண் சிங்கம் இறுதி வரை வேறு கூட்டத்தில் இணைய முடியாது,” என்று கூறுகிறார்.

ஆண் சிங்கம் உண்மையில் என்ன செய்யும்? அதன் வேலை என்ன?

உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஆண் சிங்கங்கள் சில நேரங்களில் ஒன்று சேர்ந்து சுற்றித் திரிந்தாலும்கூட, அந்தக் கூட்டம் ஓர் ஒருங்கிணைந்த சமூகக் குழுவாக இருப்பதில்லை.

ஒழுங்கமைக்கப்பட்ட சமூகக் குழுவாக இருக்கும் சிங்கக் கூட்டத்தில் பெண் சிங்கங்களே அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட “சிங்கக் கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தின் முக்கியமான வேலை, அந்தக் கூட்டத்தின் எல்லையைப் பாதுகாப்பதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும்தான்” என்கிறார் முனைவர். ரவி செல்லம்.

வேட்டையைப் பொறுத்தவரை, சிங்கம் தனியாக வாழும்போது அவை கட்டாயம் வேட்டையாடித்தான் சாப்பிட்டாக வேண்டும். ஆனால், சிங்கக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அவை பெரும்பாலும் பெண் சிங்கம் வேட்டையாடும் இரையைத்தான் சார்ந்திருக்கும் என்கிறார் அவர்.

ஆசியாவைவிட ஆப்பிரிக்காவில் சிங்கங்கள் வேட்டையாட, ஒட்டகச் சிவிங்கி, காட்டெறுமை, அளவில் சிறிய யானைகள் போன்ற பெரிய இரை உயிரினங்கள் நிறைய உள்ளன. அத்தகைய வேட்டைகளின்போது ஆண் சிங்கங்கள் உதவுகின்றன.

உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

“பெண் சிங்கத்தைவிட ஆண் சிங்கத்தின் வாய் பெரிதாக இருக்கும், எடையும் கூடுதலாக இருக்கும். ஆகவே இரையை நீண்டநேரம் இறுகப் பற்றித் தொங்கியபடி கீழே சாய்ப்பதற்கு அவற்றால் முடியும். இருப்பினும், அந்த இரையைக் கண்காணித்து, சுற்றி வளைத்து சிக்க வைப்பது என்னவோ பெண் சிங்கமாகத்தான் இருக்கும்,” என்கிறார் ரவி செல்லம்.

இருப்பினும் இந்தியாவிலுள்ள சிங்கங்களைப் பொறுத்தவரை இந்தப் பழக்கம் சற்று மாறுபடுவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆப்பிரிக்க காடுகளில் புல்வெளிப் பரப்பு அதிகமாக இருக்கும். அங்கு அளவில் பெரிதாக இருக்கும் ஆண் சிங்கம் மறைந்திருந்து வேட்டையாடுவது கடினம். ஆனால், “இந்தியக் காடுகளின் தன்மை வேறுபட்டது. இங்கு மரங்களும் புதர்களும் உள்ளன. அவற்றில் அவை மறைந்திருந்து தாக்குவதற்கான சூழல் உள்ளது. அதோடு, இங்கு மனிதர்களுக்கு மிக நெருக்கமாக வாழ்வதால், கால்நடைகளும் எளிதாகக் கிடைக்கின்றன.

கால்நடைகளைப் பொறுத்தவரை, மனிதத் தலையீடுகளின் காரணமாகப் பெண் சிங்கங்கள் அவற்றை வேட்டையாடத் தயங்கும். ஏனெனில், ஒருவேளை அவை ஆபத்தில் சிக்கிவிட்டால் அவற்றின் குட்டிகள் அநாதையாக்கப்படும்,” என்கிறார் ரவி செல்லம்.

இந்தியாவில் எத்தனை சிங்கங்கள் உள்ளன?

உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டில் 674 சிங்கங்கள் வாழ்கின்றன. இது 2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட 27% சதவீதம் அதிகம். இருப்பினும், இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிங்கங்கள் கிர் காட்டுக்கு வெளியேதான் வாழ்கின்றன.

குஜராத்தில் சிங்கங்கள் 2015ஆம் ஆண்டில் சுமார் 22,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவி வாழ்ந்தன. அந்தப் பரப்பளவு 2020இல் அவை 30,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

இவற்றில், 51.04% சிங்கங்கள் காடுகளுக்கு உள்ளேயும், 47.96% சிங்கங்கள் காட்டுப் பகுதிகளுக்கு வெளியேயும் பதிவு செய்யப்பட்டதாக சிங்கங்கள் கணக்கெடுப்பு தொடர்பான குஜராத் மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதிலும், காடுகளுக்கு வெளியேயுள்ள பகுதிகளில், 13.27% விவசாய நிலப் பகுதிகளிலும் 2.04% மனித குடியிருப்புப் பகுதிகளிலும், 0.68% குவாரி, தொழிற்சாலை பகுதிகளிலும் காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கம் இந்தியாவில் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் சிங்கங்கள் சந்திக்கும் இரண்டு முக்கியப் பிரச்னைகளாக வாழிடக் குறைபாடு மற்றும் தொற்றுநோய்ப் பரவலைக் குறிப்பிடுகிறார் முனைவர்.ரவி செல்லம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 555 சிங்கங்கள் இறந்துள்ளதாக மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு கூறியது. கடந்த 2019 ஆண்டில் 113 சிங்கங்களும், 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் முறையே, 124, 105, 110, 103 சிங்கங்களும் உயிரிழந்ததாக மத்திய சுற்றுச்சூழல், காடு, காநிலை மாற்ற அமைச்சகத்தின் அப்போதைய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே கூறினார்.

இவற்றில் பாதியளவு சிங்கங்கள் கெனைன் டிஸ்டம்பர், பேபியோசிஸ் போன்ற தொற்றுநோய் பாதிப்புகளால் உயிரிழந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுபோக, மனித – காட்டுயிர் எதிர்கொள்ளல் காரணமாகவும் சிங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் அதற்கான சான்றாக இருக்கிறது.

உலக சிங்க தினம்: பெண் சிங்கம்தான் வேட்டைக்குச் செல்லுமா? ஆண் சிங்கத்தின் வேலை என்ன?

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, சௌராஷ்டிரா பகுதியிலுள்ள மஹுவா என்ற நகரத்தில் இருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே வேலியைத் தாண்ட முயலும் சிங்கங்கள்.

குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள மஹுவா என்ற நகரத்தில் இருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே மூன்று சிங்கங்கள் இருப்பதை அந்தப் புகைப்படம் காட்டுகிறது. அவை, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வேலியைத் தாண்ட முயன்று கொண்டிருப்பதை அந்தப் புகைப்படத்தின் மூலம் அறிய முடிகிறது.

இப்படியாக வாழ்விடப் பற்றாக்குறை, தொற்றுநோய் அபாயம், மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் போன்ற பிரச்னைகள் சிங்கங்களின் இருப்புக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்குத் தீர்வாக கிர் காட்டில் வாழும் சிங்கங்களில் ஒரு பகுதியை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு இடம் மாற்ற வேண்டுமெனக் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அது இன்னும் மேற்கொள்ளப்படாதது சிங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதில் தடையாக இருப்பதாக வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)